Published:Updated:

ஸ்டார்ட்அப்... சக்சஸ்! - சிறிய மாற்றம் செய்தால் பெரிய வருமானம்!

ஸ்டார்ட்அப்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார்ட்அப்

`பிராஃபிட் அனால்டிகா' காஜா மைதீன்

ஸ்டார்ட்அப்... சக்சஸ்! - சிறிய மாற்றம் செய்தால் பெரிய வருமானம்!

`பிராஃபிட் அனால்டிகா' காஜா மைதீன்

Published:Updated:
ஸ்டார்ட்அப்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார்ட்அப்

தொழில்முனைவோரே... உங்களுக்கு நீங்களே சிறை எழுப்பாதீர்கள்!

சொந்தமாக பிசினஸ் செய்கிறவர்களைப் பார்த்திருக்கிறோம். ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் செல்லும் பலரை அன்றாட வாழ்வில் காண்கிறோம். இந்தக் கட்டுரையைப் படிக்கும் நீங்களும் இவர்களில் ஒருவராக இருக்கலாம். ஆனால், தன் சொந்த தொழிலிலேயே தனக்கு சிறை எழுப்பிக்கொண்ட தொழில்முனைவோரை அறிவீர்களா? சிலர் மாதம் தோறும் மிகவும் குறைந்த வருமானத்தையே தங்கள் சிறிய அல்லது நடுத்தரத் தொழிலிலிருந்து எடுத்துக்கொண்டு தமக்கான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ஏற்கெனவே பணிபுரிந்த நிறுவனத்தில் பெரிய அளவில் சலிப்படைந்தவர்கள்... ஒரு பெரிய கனவுடன் புதிய நிறுவனத்தைச் சிறிய அளவில் தொடங்கியவர்கள்... எந்தவொரு காரணத்துக்காக பனிபுரிந்த நிறுவனத்திலிருந்து வெளியே வந்தார்களோ, அதே தவற்றை மீண்டும் செய்து சிறிய வருமானத்துக்குள்ளேயே உழன்றுகொண்டு இருப்பவர்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தண்ணீரில் கழுத்துப் பகுதி மேலே இருப்பது போல இவர்கள் வாழ்க்கைச் சூழலில் நீந்திக்கொண்டிருப்பார்கள். இவர்களால் முழுவதுமாக வெளியே வந்து, பெரிய அளவிலான பொருளாதார சுதந்திரத்தை அடைய முடியாது. ஆனால், தண்ணீரில் மூழ்கும் நிலையிலே ஓடிக்கொண்டு இருப்பார்கள். இதை எப்படித் தவிர்ப்பது?

ஸ்டார்ட்அப்... சக்சஸ்! - சிறிய மாற்றம் செய்தால் பெரிய வருமானம்!

பெண்களால் வாய்க்கு ருசியாக சமைக்க முடியும் என்றால், அவர்களால் உணவகம் தொடங்கி சிறப்பாக நடத்த முடியும் என்று அர்த்தம் கொள்ள முடியாது. இதனால்தான் சிறிய தொழில்கள் பலவும் வெற்றிபெற முடியாமல் போகின்றன. அதனால் தொழில்முனைவோர் சிலர் சோர்வடைந்துபோய் மீண்டும் வேலைக்கே போகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

ஒரு தொழில்முனைவோராக உங்களுக்கு தொழில்நுட்ப விஷயங்களில் ஞானம் இருக்கலாம். குறிப்பிட்ட துறையில் பல வருட அனுபவமும் இருக்கலாம். ஆனால், இந்தக் காரணங்கள் மட்டுமே ஒரு தொழிலை வெற்றியடையச் செய்யாது. இதனால்தான் சொல்கிறேன்... பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்த பலர் வெளியே வந்து தங்களுக்கென ஒரு சிறையைக் கட்டி அதில் அடைபட்டுக்கொள்கிறார்கள் என்று.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெரிய நிறுவனம் செய்வதை அல்லது நீங்கள் அங்கு அறிந்ததை மட்டுமே நோக்கமாக கொள்ளாமல், உங்கள் அனுபவத்தின் மூலம் குறிப்பிட்ட துறையில் உள்ள ஏதோ வொரு பிரச்னையைத் தீர்ப்பதற்கான தீர்வை உங்களால் கொடுக்க முடியுமா? அப்படி யானால் நீங்கள்தான் வெற்றியாளர்!

உங்கள் அனுபவத்தைப் பயன்படுத்துங்கள்... ஸ்டார்ட்அப் மாடல் பற்றி நிறையவே யோசியுங்கள். உங்கள் யோசனைகளைச் சரியான முறையில் செயல்படுத்தினால், இன்னமும் குறைந்த வருமானத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கவேண்டிய அவசியமில்லை. உண்மையில், கோடிக்கணக்கான பணத்தை உங்கள் யோசனையின்மீது முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்!

சூரியனுக்குக் கீழே இவ்வுலகில் எதுவும் புதிதாக இல்லை!

  • ஏற்கெனவே நான் பிசினஸ் செய்து கொண்டிருக் கிறேன். என்னால் ஸ்டார்ட்அப் போல புதுமையைப் புகுத்த முடியுமா?

  • என் தொழிலில் ஒரு புதுமையும் இல்லை.

  • பல வருடங்களாக விற்றதையே விற்கிறேன். இதில் என்ன புதுமை இருக்கிறது?

  • ஏதோ வாழ்க்கை வண்டி ஓடுகிறது. எனக்கென்று சில வாடிக்கையாளர்கள் உள்ளனர். சிறிய அளவே வியாபாரம் என்றாலும் போதும் என்ற மனநிலையிலேயே உள்ளேன். நிறைய வருமானம் கிடைத்தால் சந்தோஷம்தான். ஆனால், அதற்கு வழி இல்லையே...

இப்படி, ஸ்டார்ட்அப் பிசினஸ் மாடலுக்கேற்ற வகையில் தொழிலில் புதிய அம்சங்கள் இல்லை என வருத்தப்படுகிறீர்களா? ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்... இவ்வுலகில் சூரியனுக்கு கீழே எதுவுமே புதிது இல்லை. வெகுசில தொழில்களை வேண்டுமானால் இவ்வுலகில் புதிது என்று அரைமனதோடு ஒப்புக்கொள்ளலாம். பெரும்பான்மையான தொழில்களில் புதுமை என்பது அவசியமும் இல்லை என்பதே உண்மை. பின்வரும் இரண்டு கேள்விகளுக்கு உங்களால் விடை அளிக்க முடியுமென்றால், உங்கள் தொழிலையும் ஸ்டார்ட்அப் போலவே கவர்ந்து இழுக்கும் தொழிலாக மாற்ற முடியும்!

1. ஏன் என் பொருளை அல்லது சேவையை வாங்க வேண்டும்?

2. ஏன் என்னிடம் அதை வாங்க வேண்டும்?

இந்தக் கேள்விகளுக்குத் தெளிவான பதிலை உருவாக்குங்கள். உங்களால் பதில் தர இயலவில்லை அல்லது காரணம் இல்லை என்றால், நீங்கள் சராசரி வயிற்றுப் பிழைப்புக்குத் தொழில் செய்பவரே. தவறாக நினைக்காதீர்கள். ஏன் இந்தக் கடுமையான வார்த்தை என்று வருத்தப்படாதீர்கள். நீங்கள் தோல்வியடைவதை நான் விரும்பவில்லை. தோல்வியின் வலி என் வார்த்தைகளைவிட கடுமையாக இருக்கும்தானே?

  • இந்தத் தொழிலில் நாங்கள்தான் சிறந்தவர்கள்.

  • எங்கள் பொருளில் உயர்ந்த தரம் உள்ளது.

இப்படி பலர் சொல்வதுண்டு. இந்தப் பதில்களும் எனக்கு மிகப்பெரிய கவலையையே அளிக்கிறது. இன்னும் எவ்வளவு காலம் இதையே நம்பிக்கொண்டு இருக்கப்போகிறீர்கள்? உங்கள் மனநிலையை மாற்றுங்கள். புதிது என்பதால், உலகில் இல்லாத ஒரு பொருளை உருவாக்குங்கள் என்று சொல்ல வரவில்லை. ஏதோ ஒரு நிலையில் புதுமையைப் புகுத்துவதே ஸ்டார்ட்அப்பின் அடிப்படை. பொருளை பேக் செய்வதில், அதைக் கொண்டுசேர்க்கும் முறையில், டெலிவரிக்குப் பிந்தைய சேவையில்... இப்படி. `புதிது' என்பது ஒட்டுமொத்தமாக ஒரு பொருளாகவோ, சேவையாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. சிறிய மாற்றம் செய்தால் பெரிய வருமானத்துக்கு வழி வகுக்கும்... அவ்வளவுதான்!

வாடிக்கையாளர்களைக் குழப்ப வேண்டாமே!

போட்டியாளர்கள் மூலமாக தங்கள் தொழிலுக்குப் பெரிய அச்சுறுத்தல் இருப்பதாகவே தொழில்முனைவோர் பலர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. வாடிக்கையாளரைக் குழப்புவதன் மூலமே பெரும்பாலான தொழில்முனைவோர் புதிய வாடிக்கையாளர்களை இழக்கின்றனர்.

வாடிக்கையாளரால் மூன்று முடிவுகள் மட்டுமே எடுக்க முடியும்.

1. பொருளையோ, சேவையையோ உங்கள் நிறுவனத்திடமிருந்து பெறுவது.

2. பொருளையோ, சேவையையோ உங்கள் போட்டியாளர் நிறுவனத்திடமிருந்து பெறுவது.

3. வாடிக்கையாளர் ஒன்றும் செய்யாமல் இருப்பது.

இதை தவிர வேறு எதுவும் நடைபெறாது தானே?

அதிகமான மாடல்கள் அல்லது சேவைகள், தேவைக்கதிகமான தகவல்கள் ஆகியவை வாடிக்கையாளர்களைக் குழப்பக்கூடும். இதன்மூலம் விற்பனையை இழக்க நேரிடும். வாடிக்கையாளரைக் குழப்புவது ஸ்டார்ட்அப் தொழில்முனைவோருக்கு ஏற்றதல்ல.

உங்களின் பொருள் அல்லது சேவையை அனைவருக்கும் விற்க முயலாதீர்கள்!

உங்கள் பொருளோ, சேவையோ யாருக்கு உகந்தது என்றால், `அனைவருக்குமேதான்' என்று பதிலளிப்பதே தொழில்முனைவோர் பலருக்கும் வழக்கம். `என் தயாரிப்பு எல்லோருக்கும் ஏற்றது' என்பது சொல்வதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். உண்மையில் இது ஒரு மிகப்பெரிய தவறு. அனைத்து வாடிக்கையாளர்களையும் திருப்திப்படுத்தும் முயற்சி என்பது எந்த ஒரு பகுதியையும் முழுமையாகத் திருப்திபடுத்த முடியாததாகவும் இருக்கக்கூடும். குறுகிய ஒரு பகுதி மக்களை - அவர்களது பிரச்னைகளைக் குறிவைத்து - அவற்றைச் சரி செய்ய (தீர்வு) முயற்சி செய்யுங்கள். இதுவே நீங்கள் வெற்றியை நோக்கி எளிதாகச் செல்ல உதவும்.

வளர்ந்த, மிகப்பெரிய நிறுவனங்கள் செய்வதையே ஸ்டார்ட்அப் நிறுவனமும் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒரு குறிப்பிட்ட மார்க்கெட்டில், அதன் சரியான இலக்கு வாடிக்கையாளர்களின் பிரச்னைகளைத் தீர்த்து, பின்னர் படிப்படியாக இந்தியாவின் இதர பகுதிகளுக்கும், மற்ற நாடுகளுக்கும் எடுத்துச்செல்வது என்பதே ஸ்டார்ட்அப் தொழிலின் அடிப்படை யுக்தி!

ஸ்டார்ட்அப் தொடங்க விரும்புவோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் அடுத்தடுத்த இதழ்களில்..

பதில்கள் மாறிவிட்டன!

ஒரு முறை விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தன் மாணவர்களுக்கு கேள்வித்தாள்களை வழங்கிக் கொண்டிருந்தார். அவரின் உதவியாளரோ கேள்வித்தாளைப் பார்த்ததும் மிகவும் அதிர்ச்சியடைந்தார். அது அப்படியே கடந்த ஆண்டின் கேள்வித்தாளாக இருந்ததுதான் காரணம். இந்த விஷயத்தை எப்படி அந்த மாமேதையிடம் தெரிவிப்பது என்று குழம்பிப்போய் சில நிமிடங்கள் மவுனம் காத்தார் உதவியாளர். மறதியின் காரணமாக நடைபெற்ற இந்த விஷயத்தை நிச்சயம் சொல்லிவிட வேண்டும் என்ற உந்துதலில் மிகவும் தயங்கியபடியே, `சென்ற வருடத்திலே கேட்கப்பட்டவை இந்தக் கேள்விகள்... ஒன்றுகூட மாறவில்லை' என்றார். ஐன்ஸ்டீன் சிரித்தவாறே, `அதனால் என்ன...பதில்கள்தாம் இப்போது மாறிவிட்டனவே' என்றார். ஐன்ஸ்டீனின் புத்திக்கூர்மையை எண்ணி உதவியாளர் வாயடைத்து நின்றார். இந்த சம்பவம் ஸ்டார்ட்அப் தொழில்முறைக்கு அப்படியே பொருந்தும்.

எவ்வளவோ மாற்றங்கள் இன்டர்நெட் மூலம் நடந்துவிட்டன. சில வருடங்களுக்கு முன்பு வரை `யெல்லோ பேஜஸ்' புத்தகத்தில் விளம்பரம் சொல்வோம். தலையணை அளவில் இருக்கும் அந்தப் புத்தகம். அதில் நமது துறைக்கான பகுதியில் கறுப்பு வெள்ளையாகவோ, வண்ணமாகவோ பணத்துக்கேற்ற அளவில் விளம்பரம் கொடுத்தோம்.

ஸ்டார்ட்அப்... சக்சஸ்! - சிறிய மாற்றம் செய்தால் பெரிய வருமானம்!

அன்று நம் போட்டியாளர் நம் தெருவிலோ, அடுத்த தெருவிலோ இருந்தார். இப்போது சென்னை அமைந்தகரையில் உள்ள நிறுவனத்துக்கு ஒரு போட்டியாளர் அமெரிக்கா

வில் உள்ளார். இன்டர்நெட் வளர்ச்சியின் உச்சத்தை ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் உணர வேண்டும். அண்ணாநகரில் உள்ள வாடிக்கையாளர் நம் பொருளில் திருப்தி இல்லை என்றால் அமெரிக்க கம்பெனிக்கு ஆர்டர் செய்துவிடுவார். இதை நான் பயமுறுத்துவதற்காகச் சொல்லவில்லை. வளர்ச்சியின் உச்சத்தை உணர வேண்டும் என்பதற்காகவே குறிப்பிடுகிறேன். இதே வாய்ப்பு உங்களுக்கும் கிடைக்கும். அமெரிக்க வாடிக்கையாளருக்கு நீங்கள் பொருளோ, சேவையோ அளிக்க முடியும்.

இனி போட்டி என்பது உலக அளவில் தான். புதிய சிந்தனைகள் இல்லையென்றால் வரும் காலங்களில் தொழில் செய்வது எளிதாக இருக்கப்போவதில்லை.

பெண்களுக்கு இயற்கையிலேயே செயல்களைக் கூர்ந்து கவனிக்கும் தன்மை உள்ளது. இந்தக் கவனித்தலை ஒரு தீர்வாகச் சிந்தித்தால், புதிய பொருளோ, சேவையோ உதயமாகும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism