Published:Updated:

ஸ்டார்ட் அப்... சக்சஸ்: இந்தியா டு இங்கிலாந்து ஸ்டார்ட்அப் வாய்ப்புகள்!

ஸ்டார்ட் அப்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டார்ட் அப்

`பிராஃபிட் அனால்டிகா’ காஜா மைதீன்

ரு ஸ்டார்ட்அப் ஐடியா இருந்தால் போதும், இங்கிலாந்து உங்களை இனிதே வரவேற்கிறது. ஆம், புதிய ஸ்டார்ட்அப் தொழில்களை உற்சாகப்படுத்தும்விதமாக எந்தவித பிரத்யேக முதலீட்டு பணமும் (Investment Fund) இல்லாமல் தொழில்முனைவோரை வரவேற்கும்விதமாக 2019-ம் ஆண்டு, இந்தத் திட்டத்தை இங்கிலாந்து அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

கீழ்க்கண்ட வகையில் உங்கள் ஸ்டார்ட்அப் ஐடியா தேர்ச்சி பெற வேண்டும்.முதலாவதாக, புதிய தொழில் ஸ்டார்ட்அப் ஐடியாவாக இருக்க வேண்டும். ஏற்கெனவே சந்தையில் உள்ள தொழிலாக இருக்கக் கூடாது. மேலும் சாத்தியப்படும் (Viable) ஐடியாவாகவும், வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புள்ள தொழில்முறையாக (Potential Growth) இருப்பதும் அவசியம்.

காஜா மைதீன்
காஜா மைதீன்

அவ்வாறு தயாரான ஐடியாவை ஒரு முழு பிசினஸ் திட்டமாகத் தயாரித்து இங்கிலாந்து அரசு அனுமதி அளித்துள்ள ஒப்புதல் நிறுவனங்கள் (Endosement Bodies) ஏதாவது ஒன்றில் உங்கள் தொழில்முறை புதுமையானது, சாத்தியமானது மற்றும் விரிவுபடுத்தக்கூடியது என சான்று பெற வேண்டும்.

அந்த ஒப்புதல் நிறுவனத்தினர் உங்கள் தொழில் முறையை ஆராய்ந்து, முதலீட்டுக்கு ஏற்ற திட்டமா என உறுதி செய்வார்கள். அவர்கள் சிறந்த திட்டம் என்று சான்று வழங்குவதுடன் தேவைப்படும் முதலீட்டையும் தொழிலைத் தொடங்குவதற்கு தேவையான வசதிகளையும் வழி வகுப்பார்கள்.தேவை எனில், உங்களுக்குத் துணையாகத் தொழிலை முன்னெடுத்துச் செல்ல சிறந்த இணைத் தொழில்முனைவோரையும் பணியில் அமர்த்தித் தருவார்கள்.

உங்கள் தயாரிப்பை மேம்படுத்துவதைத் தவிர, வேறொன்றும் சிறந்ததாகக் கருதப்பட மாட்டாது.- ஜோயல் போல்ஸ்கி இணை நிறுவனர் Stack Exchance

ஒப்புதல் நிறுவனம் (Endosement Body) அளிக்கும் கடிதத்துடன், மூன்று மாதங்களுக்குள் ஸ்டார்ட்அப் விசா அப்ளை செய்ய வேண்டும்.ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் ஒன்றுக்கு மேற்பட்டவராக இருந்தால், ஒப்புதல் கடிதம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகப் பெற வேண்டும்.ஒவ்வொரு ஒப்புதல் நிறுவனமும் 25 அனுமதிக் கடிதங்களை ஒரு வருடத்துக்கு வழங்கலாம் என இங்கிலாந்து அரசு நிர்ணயம் செய்துள்ளது.இந்த ஒப்புதல் கடிதம் பெற, தொழில்முனைவோர் எந்தவிதக் கட்டணமும் செலுத்த வேண்டிய தில்லை. இது உங்கள் தொழில் திட்டத்தின் சிறப்பை அடிப்படையாக வைத்தே உங்களுக்கு அளிக்கப்படுகிறது. தேவையேற்படின் ஒப்புதல் கடிதம் வழங்கும் நிறுவனம் காணொலிக் காட்சி மூலம் உங்களைத் தொடர்புகொண்டு கூடுதல் விளக்கத்தையும் விவரங்களையும் பெறலாம்.


ஸ்டார்ட் அப்... சக்சஸ்: இந்தியா டு இங்கிலாந்து ஸ்டார்ட்அப் வாய்ப்புகள்!

அரசிடமிருந்து ஸ்டார்ட்அப் விசா பெறுவதற்கு பிரிட்டன் பவுண்டு 365, அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக 35,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் குடும்ப உறுப்பினர்களையும் உடன் அழைத்துச்செல்லலாம். விசா கட்டணம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக செலுத்தப்பட வேண்டும். இந்த ஸ்டார்ட்அப் விசா இரண்டு வருடத்துக்கானது. இந்த இரண்டு வருடங்களும் இங்கிலாந்தில் தங்கி தொழிலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லலாம். இந்த விசாவில் கால நீட்டிப்பு கிடையாது. ஆனால், அடுத்த நிலையான புதிய கண்டுபிடிப்பாளர் (Innovator) என்ற விசாவாக மாற்றிக்கொள்ளலாம். இது அடுத்த மூன்று வருட காலத்துக்குச் செல்லுபடியாகும். மூன்று வருடங்கள் முடிந்த பிறகு இங்கிலாந்தில் நிரந்தரமாக தங்கியிருப்பதற்கோ அல்லது குடியுரிமைக்கோ விண்ணப்பிக்கலாம்.

விசா அனுமதி பெற, ஒப்புதல் கடிதத்துடன் ஆங்கில அறிவு, சி.இ.எஃப்.ஆர் (CEFR- Common European Framework of Reference Level B-2) தேர்ச்சி பெற்ற சான்றிதழ் இணைக்க வேண்டும். இந்தத் தேர்வில் ஆங்கிலம் படிப்பது, எழுதுவது, பேசுவது மற்றும் கேட்கும் திறன் சோதிக்கப்படும். இதற்குப் பயிற்சி வகுப்பில் கலந்து பயிற்சியும் பெறலாம்.

இந்தியத் தொழில்முனைவோர் எளிதாகவே தேர்ச்சி பெறுகிறார்கள் என அறிக்கைகள் கூறுகின்றன. அதனால் பயம்கொள்ள தேவையில்லை. சிறிய பயிற்சி இருந்தால் போதும்.பல தனியார் நிறுவனங்களும் பிரிட்டிஷ் கவுன்சிலும் ஆங்கில சிறப்புப் பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன. ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் நோக்கத்தை நோக்கி ஓடுங்கள்...பணத்தை நோக்கி அல்ல!பணம் அதுவாகவே உங்களைத் தொடர்ந்து வரும்!- டோனி ஹிசியா இணை நிறுவனர் ZAPPOS

ஆறு மாதங்களுக்கு மேல் காலாவதி தேதி உள்ள பாஸ்போர்ட் மற்றும் 945 பவுண்டு, அதாவது சுமார் 90,000 ரூபாய் மூன்று மாதங்களுக்கும் மேலாக உங்கள் வங்கிக் கணக்கில் இருந்ததற் கான சான்று ஆகியவற்றை விசா அனுமதி பெறும்போது இணைக்க வேண்டும்.`காசநோய்’ இல்லை என்ற சான்று அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் பெறவேண்டியதும் இங்கிலாந்து விசா பெறுவதற்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அப்புறம் என்ன... ஓர் அற்புதமான ஸ்டார்ட் அப் ஐடியா உங்களின் வாழ்க்கையையும் சமுதாயத்தையும் வளமாக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தக் கொரோனா காலங்களில் அனைத்து அரசுகளும் பொருளாதாரத்தைப் பலவகையில் முடுக்கிவரும் முயற்சியில் இறங்கியுள்ளன. அதிகப்படியான முதலீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அனுமதி எளிதாகவும் விரைவாகவும் உள்ளதை தொழில்முனைவோர் பயன்படுத்திக்கொள்ள, இது ஒரு நல்ல சிறந்த வாய்ப்பாகும்.

ஒப்புதல் அளிக்கும் நிறுவனங்கள்(Business Endorsing Bodies)


ஸ்டார்ட் அப்... சக்சஸ்: இந்தியா டு இங்கிலாந்து ஸ்டார்ட்அப் வாய்ப்புகள்!

மேலும் விவரங்களுக்கு www.gov.uk ஆங்கில பயிற்சி மற்றும் இங்கிலாந்து பற்றிய விவரங்களுக்கு... www.britishcouncil.in