Published:Updated:

“லோக்கல் பிராண்ட்தானேன்னு கேட்டாங்க, ஜெயிச்சுக் காட்டினேன்!”

அபிராமி
பிரீமியம் ஸ்டோரி
அபிராமி

எல்லா பெரிய பிராண்டும் ஆரம்பத்துல லோக்கல் பிராண்டாதான் தன் பயணத்தை ஆரம்பிச்சாங்க

“லோக்கல் பிராண்ட்தானேன்னு கேட்டாங்க, ஜெயிச்சுக் காட்டினேன்!”

எல்லா பெரிய பிராண்டும் ஆரம்பத்துல லோக்கல் பிராண்டாதான் தன் பயணத்தை ஆரம்பிச்சாங்க

Published:Updated:
அபிராமி
பிரீமியம் ஸ்டோரி
அபிராமி

``எங்களோட ஊட்டச்சத்து பவுடர் கம்பெனி தொடங்கிய காலத்தில், `லோக்கல் புராடக்ட்தானே?’னு மதிக்காம பார்த்தாங்க. பெரிய நிறுவனங்களோட மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருள்கள்தான் தரமானதுன்னு நினைச்சுப் பேசுவாங்க. அந்தப் பேச்சுகள்தான், சென்னையில் தயா ராகும் எங்களோட ஊட்டச்சத்து பவுடரை சக்சஸ் ஆக்கணும்னு உத்வேகம் கொடுத்தது’’ - பல லோக்கல் பிராண்ட் தொழில்முனை வோர் சந்திக்கும் பிரச்னையைக் குறிப்பிட்டு ஆரம்பித்தார், சென்னையைச் சேர்ந்த அபிராமி.

நியூட்ரிஷனிஸ்ட் அபிராமி, பத்து வருடங்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் டயட்டீஷியன், சீனியர் டயட்டீஷியன், தலைமை நியூட்ரிஷனிஸ்ட் எனப் பணியாற்றியவர். ஏழு வருடங்களுக்கு முன் நியூட்ரி பவுடர்கள் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கியவர், இன்று அதில் மாதம் லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் தொழில்முனைவோர். நாம் படித்துக்கொள்ள பல பிசினஸ் பாடங்கள் இருக்கும் அவர் பயணத்தை பகிர்ந்து கொண்டார்.

“சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை. அங்குள்ள அரசுப் பள்ளி யில படிச்சேன். சென்னை, டபிள்யூ.சி.சி கல்லூரியில் ஹோம் சயின்ஸும், சென்னை, ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் க்ளினிக்கல் நியூட்ரிஷன்ல டிப்ளோமாவும், உளவியல்ல முதுகலைப் படிப்பை தொலை தூரக் கல்வியிலும் முடிச்சேன். திருமணத்துக்கு முன் மருத்துவமனைகள்ல நியூட்ரிஷனிஸ்டாக வேலை செய்தப்போ நோயாளிகள் பலர், `மருத்துவமனையில் அட்மிஷன்ல இருக்கும் போது நீங்க பரிந்துரைக்குறபடி சாப்பிட்டா உடம்பு நல்லாயிருக்கு. வீட்டுக்குத் திரும்பின தும் அதைப் பின்பற்ற முடியுறதில்ல. ஏதாச்சும் சத்துமாவு தயாரிச்சுக் கொடுக்க முடியுமா?’னு கேட்பாங்க. அதையே நாம ஏன் பிசினஸா பண்ணக் கூடாதுனு யோசிச்சப்போ வீட்டுல, ’பெண்களுக்கு உற்பத்தி, வியாபாரம் எல்லாம் சரியா இருக்காது’னு சொல்லிட்டாங்க. திருமணத்துக்குப் பின் கணவர் சுரேஷ் பாபு வுடன் குவைத் போனேன். இந்தியா போலவே அங்க நான் பார்த்த பல நியூட்ரி புராடக்ட்களும் திருப்திகரமா இல்லைனு புரிஞ்சப்போ, `நாம செய்யலாம் தைரியமா, நிச்சயமா இதை யெல்லாம்விட தரமா இருக்கும்’னு நம்பிக்கை கிடைச்சது.

ஆரம்பத்தில், நான் பார்த்துப் பார்த்து பண்ணின நியூட்ரி பவுடரை நானே சாப்பிடத் தொடங்கினேன். அந்த நேரத்தில் நான் இரண்டாவது முறை கருவுற்றப்போ, கர்ப்ப காலம் முழுக்க என் தயாரிப்பை சாப்பிட்டேன். மகள் பிறந்தப்போ, தாய்ப்பாலுக்கு அடுத்து முதல் திட உணவா நான் தயாரிச்ச நியூட்ரி பவுடரைத்தான் கொடுத்தேன். அந்தளவுக்கு என் தயாரிப்பை நான் நம்பினேன். 2015-ம் வருஷம் அதை தொழிலா ஆரம்பிச்சேன். கணவர், தொழிலில் என் கற்றலுக்காக எனக்கு கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுத்து, வீட்டு வேலைகளில் உதவி செய்து, குழந்தைகளைப் பார்த்துனு சப்போர்ட் பண்ணினார். பெற் றோர் என் கூடவே தங்கி உறுதுணையா இருந் தாங்க. பொருளாதார ரீதியா என் சகோதரி குடும்பம் உதவினாங்க. இப்போ இத்தனை பேர் நம்பிக்கையும் என் தோள்ல. ஜெயிச்சே ஆகணும்னு வேலைகளைப் பார்த்தேன்’’ என்றவரை உழைப்பு உயர்த்தியிருக்கிறது.

அபிராமி
அபிராமி

``எங்களோட ‘விஜயம் நியூட்ரி புராடெக்ட்' (Vijeyam Nutri Product) கம்பெனியை 2015-ம் ஆண்டு தொடங்கினோம். ஆரம்பத்தில் மாசம் 5 கிலோ, பிறகு 50, 100 கிலோனு முன்னேறி னோம். பிசினஸ் பிக் அப் ஆனதும் லோன் வாங்கி சில மெஷின்களை வாங்கினோம். இப்போ மாசம் 500 கிலோ வரை உற்பத்தி செய்றோம்; ஒரு லட்சம் சம்பாதிக்கிறோம். நிறமூட்டி, கெமிக்கல்னு எதுவும் சேர்க்காம இயற்கை முறையில் தயாரிக்கிறதால எங்க நியூட்ரி பவுடர்களுக்கு மருத்துவமனைகள்ல நல்ல வரவேற்பு.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதா செரிமானமாகக்கூடிய பவுடர், குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்கு அடுத்து முதல் உணவா கொடுக்கக்கூடிய பவுடர், அதிக புரத தேவை உள்ளவர்களுக்கான பிரத்யேக புரொட்டீன் பவுடர், சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்களுக்கான பிரத்யேக பவுடர்னு பல வகைகளை, அதற்குரிய கவனம் கொடுத்துத் தயாரிக்கிறோம்’’ என்றவர் தன் தயாரிப்புகளுக்காக இந்தியாவுக்கான உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத் தின் (fssai) தரச் சான்றைப் பெற்றுள்ளார்.

``தொழில் என்றால் சிக்கல்கள் இல்லாமலா? நானும் ஏகப்பட்டதை சந்திச்சேன். ஆரம்பிச்ச ஒரு வருஷத்துல, `உங்க பொருள் நல்லா இருக்கு, நாங்க இந்தியா முழுக்க விநியோகம் செய்றோம்’னு சொல்லி ஒரு பெரிய ஆர்டர் வர, நாங்க தயாரிப்பை அதிகரிக்க, ஆனா அந்த ஆர்டர் முன் பணமெல்லாம் கொடுத்த பின்னாடி கேன்சல் ஆகிடுச்சு. மார்கெட்டிங்கில் மொத்த கவனத்தையும் திருப்பி அதை யெல்லாம் விற்று முடிச்சோம். ஜி.எஸ்.டி வந்தப்போ அந்த நுணுக்கங்களைக் கத்துக்கிட்டு விலை நிர்ணயம் செய்வது கடினமா இருந்தது. சென்னை வெள்ளத்தில் புராடக்ட்கள் வீணானது, கோவிட் சூழல்ல தொழில் மந்தம்னு நிறைய தடைகள். ஒவ்வொரு முறையும், பிசினஸ்ல வர்ற லாபத்தை சந்தோஷமா எடுத்துக்கும்போது, தடைகளையும் கடந்து தான் ஆகணும்னு எனக்கு நானே சொல்லிப்பேன். இன்னிக்கு நான் ஒரு வெற்றியாளர்’’ என்றவர்,

‘`லோக்கல் பிராண்ட்தானே என்ற கேள்வி யால சோர்ந்துபோகுற தொழில்முனைவோர் களுக்கு நான் சொல்ல நினைக்கிறது இதுதான். எல்லா பெரிய பிராண்டும் ஆரம்பத்துல லோக்கல் பிராண்டாதான் தன் பயணத்தை ஆரம்பிச்சாங்க’’ - பிசினஸ் மந்திரம் சொல்லி பை சொல்கிறார் அபிராமி.

மேக் இன் லோக்கல்!