Published:Updated:

வீல்சேர்ல முடங்கினாலும் சொந்தக்கால்ல நின்னு ஜெயிச்சுட்டேன்! - ‘ஊறுகாய் செஃப்’ தீஜா

எங்க ஊறுகாய்க்கு நல்ல வரவேற்பு இருக்குறதால, யாருமே முயற்சி பண்ணிப் பார்க்காத ஃப்ளேவர்கள்லயும் ஊறுகாய் தயாரிக்குறேன்.

பிரீமியம் ஸ்டோரி

நம் உள்ளம் உறுதியுடன் இருந்தால், விதியின் விளையாட்டு எப்படி இருப்பினும் அதை எதிர்த்துப் போராடி வாழ்க்கையில் நிச்சயம் கரை சேரலாம் என்பதற்கு உதாரண மனுஷியாகத் திகழ்கிறார் தீஜா சதீசன். கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவரை, வீல்சேரில் வீடே கதியாய் முடக்கிப்போட்டது போலியோ பாதிப்பு. ஆனால், தனது சமையல் ஆர்வத்தையே ஊன்றுகோலாகப் பிடித்து, பல பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வெற்றியாளராக மாறியிருக்கிறார் இவர்.

சொந்த ஊரில் ‘ஊறுகாய் செஃப்’ என்று அன்போடு அழைக்கப்படும் தீஜா, 70-க்கும் மேற்பட்ட ஊறுகாய் வகைகளைத் தயாரித்து, ஆன்லைனில் விற்பனை செய்து, மாதம்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறார். ‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்’ என்று ஆமோதித்துப் பாராட்ட வைக்கிறது தீஜாவின் அசாத்திய தன்னம்பிக்கை.

வீல்சேர்ல முடங்கினாலும் சொந்தக்கால்ல நின்னு ஜெயிச்சுட்டேன்! - ‘ஊறுகாய் செஃப்’ தீஜா

“மூன்றரை வயசுல எனக்கு ஏற்பட்ட கடுமையான காய்ச்சல், போலியோ பாதிப்பை ஏற்படுத்திடுச்சு. வீல்சேர்ல என்னை ஏத்தி இறக்குறது பெற்றோருக்குச் சிரமமா இருந்த தால வீட்டுலேயே முடங்கினேன். நான் ஸ்கூலுக்கே போனதில்ல. தினமும் ஸ்கூல் முடிஞ்சு வந்ததும் என் அக்காதான் எனக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பாங்க. அப்படித் தான் எழுதப் படிக்கக் கத்துகிட்டேன். வறுமையை சமாளிக்கவும், குடும்பத்துக்கு ஒத்தாசையா இருக்கவும், குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்தேன். ஜுவல் மேக்கிங்ல எனக்கு ஆர்வம் அதிகம். அதையே ஆன்லைன்ல விற்க ஆரம்பிச்சு, பிறகு டிரஸ் விற்பனையும் செஞ்சு சம்பாதிச்சேன்” என்று வாழ்க்கையில் காலூன்ற ஆரம்பித்த கதை சொல்லும் தீஜாவுக்கு, இன்னும் சில கடுமை யான சோதனைகளைக் கொடுத்திருக்கிறது விதி.

சகோதரி திருமணமாகிச் சென்ற நிலையில், லாரி க்ளீனராக இருந்த அப்பாவும் புற்று நோயால் பாதிக்கப்பட்டுப் படுக்கையில் முடங்க, தன்னைக் கவனித்துக்கொள்ளவே சிரமப்பட்ட தீஜாவின்மீது மொத்த குடும்ப பாரமும் இறங்கியது. கலங்கி உட்காராமல் உழைக்கத் தயாரானவர், சமையல்திறனால் முன்னேறிய விதம் அபாரமானது.

வீல்சேர்ல முடங்கினாலும் சொந்தக்கால்ல நின்னு ஜெயிச்சுட்டேன்! - ‘ஊறுகாய் செஃப்’ தீஜா

“வீட்டுலயே முடங்கியிருந்ததால, அம்மா வுக்குச் சமையல் வேலைகள்ல ஒத்தாசையா இருப்பேன். நல்லா சமைக்குற அளவுக்கு என் ஆர்வத்தை வளர்த்துகிட்டேன். வீல்சேர்ல இருந்தபடியே நான் சமையல் செய்யுறதுக்காக வீட்டுல அடுப்படியோட உயரத்தையும் குறைச்சு வெச்சிருந்தாங்க. இந்த நிலையில, குடும்பத்தைக் காப்பாத்த வழி தெரியாம தவிச்சு நின்னப்போ, என் நண்பர் நெளஷாத் கான், ‘நீ ஏன் வீட்டிலிருந்தே சமைச்சு விற்பனை செய்யக்கூடாது?’ன்னு ஐடியா கொடுத்தார். என்னால பலருக்கும் ஒரே நேரத்துல சாப்பாடு செய்யுற தெல்லாம் கஷ்டம். அதனால, அஞ்சாயிரம் ரூபாய் முதலீட்டுல சோதனை முயற்சியா, மாங்காய், வெள்ளைப்பூண்டு, எலுமிச்சை, நெல்லிக்காய்ல ஊறுகாய் தயாரிச் சோம்.

கடைகள்ல கொண்டுபோய் சப்ளை செய்ய ஆளில்லை. தனியா கடை வெக்கவும் வசதியில்ல. அதனால, ‘Nymitra the heart of taste’ங்கிற என்னோட ஃபேஸ்புக் பேஜ்ல ஆர்டர் பிடிச்சு கூரியர் பண்ணுவேன். ஒருசில ஆர்டர்களாவது வராதான்னு காத்திருந்த காலமும் உண்டு.

‘உன்னோட உடல்நிலைக்கு இதெல்லாம் தேவைதானா?’ன்னு ஏளனமா சிலர் பேசினாங்க. அவங்க யாருமே என் குடும்ப கஷ்டத்துக்குத் தோள்கொடுக்கப் போற தில்லையே? அதனால, ஜெயிச்சாகணும்னு ரொம்பவே வைராக்கியமா இருந்தேன். மக்களைக் கவரணும்னு புதுப்புது ஃப்ளேவர்கள்ல ஊறுகாய் தயாரிச்சேன். படிப்படியா ஆர்டர்கள் வரத்தொடங்கி, இப்போ ஒவ்வொரு மாசமும் சில நூறு கிலோ ஊறுகாய் விற்பனையாகுது” என்கிற தீஜாவின் வார்த்தைகளில் சவால்களைக் கடந்து சாதித்த பெருமிதம்.

செர்ரி, பேரீச்சை, மிளகு, எலுமிச்சை - பேரீச்சை, பேரீச்சை - பூண்டு, கேரட், பீட்ரூட், முருங்கை, அன்னாசி, கிரீன் ஆப்பிள், திராட்சை, வாழைப்பழம், சின்ன வெங்காயம் உட்பட பல்வேறு வித்தியாசமான ஃப்ளேவர்களில் ஊறுகாய் தயாரிக்கிறார். விரைவிலேயே புது நிறுவனம் தொடங்கி, மேலும் சிலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கவிருக்கிறார்.

வீல்சேர்ல முடங்கினாலும் சொந்தக்கால்ல நின்னு ஜெயிச்சுட்டேன்! - ‘ஊறுகாய் செஃப்’ தீஜா

“எங்க ஊறுகாய்க்கு நல்ல வரவேற்பு இருக்குறதால, யாருமே முயற்சி பண்ணிப் பார்க்காத ஃப்ளேவர்கள்லயும் ஊறுகாய் தயாரிக்குறேன். இது தவிர, மசாலா வகைகள், ரெடிமேட் சாத மிக்ஸ், புட்டு மாவும் விற்பனை செய்யுறோம். வீல்சேர்ல உட்கார்ந்தபடி சமையல் வேலைகளைச் செஞ்சுடுவேன். அம்மா வும் என் அக்காவும் எனக்கு உதவியா இருக்காங்க. நண்பர் நெளஷாத் கான் என் தொழில் பார்ட்னரா இருக்கார். மாசத்துக்கு 2 – 3 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்குது. செலவுகள்போக எனக்குனு 70 - 80 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். என்னால நடக்க முடியாத வருத்தத்தைவிட, என் சொந்தக்கால்ல நின்னு சுயமா வாழுறதே சந்தோஷமாவும் பெருமை யாவும் இருக்கு. கடனையெல்லாம் அடைச்சுட்டு அம்மாவை சந்தோஷமா பார்த்துக்கணும்; என்னோட உணவுப் பொருள்களை பல தரப்பட்ட மக்களும் ருசிக்கணும்; எல்லாப் பகுதிகள்லயும் எங்க உணவுகள் விற்பனையாக ணும்னு ஆசைப்படுறேன். அதுக்காக நம்பிக்கை யோடு உழைக்குறோம்” என்று முடிக்கும் தீஜாவின் வெற்றி, ‘விழுவதெல்லாம் எழுவதற்கே!’ என்ற நம்பிக்கையை நமக்கும் கடத்துகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு