என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

பிசினஸ்ல சாதிக்க ரெண்டு விஷயங்களே போதும்! - நம்பிக்கையூட்டும் வெற்றித் தம்பதியர்

முரளி – நாராயணி தம்பதியர்
பிரீமியம் ஸ்டோரி
News
முரளி – நாராயணி தம்பதியர்

கார்பென்டர் வெச்சு செய்யுற மரத்தாலான அலமாரி அல்லது மெட்டலால் செய்யப்பட்ட அலமாரிதான் (Slotted angle racks) அப்போ பிரபலமா இருந்துச்சு.

திறமை, புதுமை, விடாமுயற்சி... இவையெல்லாம் இணைந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணம் முரளி – நாராயணி தம்பதியர். மாதச் சம்பள வாழ்க்கைமுறையை உதறித்தள்ளி துணிச்சலுடன் பிசினஸில் இறங்கியவர்கள், கோடிகளில் வருமானம் ஈட்டி அசத்துகின்றனர்.

மருத்துவமனை, மெடிக்கல் ஷாப்புகளில் சிறு சிறு ரேக்குகளால் நிறைந்த கபோர்டுகளில் மருந்து, மாத்திரைகளைச் சேகரித்து வைக்கும் தொழில்நுட்பம் (Space saving storage system) பிரபலமடைந்து வருகிறது. இடத்தேவையைக் கணிசமாகக் குறைக்கும் இந்தப் பயன்பாட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். சென்னையிலுள்ள இவர் களின் இயற்கை அங்காடியில், இந்தத் தம்பதி யரைச் சந்தித்தோம்.

“கணவருக்கு மெக்கானிக்கல் இன்ஜினீயர் வேலையில நிறைவான மாத வருமானம் கிடைச்சது. எல்லாத் தேவைகளும் பூர்த்தி யானாலும், ‘இது மட்டும்தான் வாழ்க் கையா?’ன்னு எங்களுக்குள் எழுந்த கேள்விக் கான தேடலுக்கு, பிசினஸ் ஆர்வம் பதிலா அமைஞ்சது. வேலை விஷயமா தைவான் நாட்டுக்குப் போன இவர் அங்கே பிரபலமா இருந்த ‘ஸ்பேஸ் சேவிங் ஸ்டோரேஜ்’ தொழில் நுட்பத்தைத் தெரிஞ்சுகிட்டு வந்தார். அதை நம்ம நாட்டுல அறிமுகப்படுத்தினா பெரிய வரவேற்பு கிடைக்கும்னு தோணுச்சு.

கார்பென்டர் வெச்சு செய்யுற மரத்தாலான அலமாரி அல்லது மெட்டலால் செய்யப்பட்ட அலமாரிதான் (Slotted angle racks) அப்போ பிரபலமா இருந்துச்சு. கறையான் தொந்தரவு, துருப்பிடிக்கிறதுனு இந்த ரெண்டு முறையிலும் பராமரிப்புச் செலவு அதிகரிப்பதோடு, ஆயுட் காலமும் குறைவாகவே இருக்கும். இதற்கெல் லாம் தீர்வு தரும் இந்தத் தொழில்நுட்பம், மத்த துறையினரைவிடவும் மருத்துவத்துறைக்குத் தான் பெரிதும் உதவும். அதனால, இதை பிசினஸா செய்யும் திட்டத்துடன், பெரும் நம்பிக்கையுடன் ரிஸ்க் எடுத்தோம். 2005-ம் வருஷம் இவர் வேலையை விட்டுட்டார்” என்று கணவரைப் பார்க்கிறார் நாராயணி.

பிசினஸ்ல சாதிக்க ரெண்டு விஷயங்களே போதும்! - 
நம்பிக்கையூட்டும் வெற்றித் தம்பதியர்

“டாக்டர்கள் உட்பட மருத்துவத் துறையினர் பலரையும் சந்திச்சு எங்களோட ஐடியாவைச் சொன்னோம். பலரும் நம்பிக்கையா பேசினாங் களே தவிர, இந்த புராஜெக்ட்டை செயல்படுத்த யாருமே முன்வரல. ரெண்டு வருஷம் ரொம்பவே போராடினோம். பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு புராஜெக்ட் பிளானிங் குடன் ஆர்டர் கேட்கவும், பேங்க் லோனுக்கும் ஏறி இறங்கினோம். வருமானம் இல்லாத அந்தக் காலகட்டம் பெரும் சவாலா இருந்துச்சு. விடாமுயற்சிக்குப் பலனா, சென்னையில ஒரு மெடிக்கல் ஷாப்புக்கு இந்தத் தொழில்நுட்பத்தை முதல்ல அமைச்சுக் கொடுத்தோம். பிறகு, அந்த ஷாப்பை மாடலா காட்டி புதுப்புது ஆர்டர் களைப் பிடிச்சோம்.

நாங்களே டிசைன் பண்ணி, வெளிநாட்டு கம்பெனி மூலமா உபகரணங்களைத் தயாரிச்சு இறக்குமதி செஞ்சோம். மருத்துவத் துறைக் கண்காட்சிகள்ல கலந்துகிட்டு ஸ்டால் போட்டோம். பிசினஸ் வேக மெடுத்துச்சு. அந்த நேரத்துல மனைவியும் என்னுடன் பிசினஸ்ல முழுமையா இறங்கிட்டாங்க. இந்த நிலையில 2013-ல் அமெரிக்காவுல ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலால, இனி உள்நாட்டுலயே உற்பத்தியைத் தொடர வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுச்சு. இந்தியாவுல இது புது தொழில்நுட்பங்கிறதால, நம்ம தேவைக்கு ஏத்த மாதிரி வடிவமைப்புல மாற்றங்கள் செஞ்சு, அதைச் சரியான முறையில செய்து முடிக்க மூணு வருஷங்கள் மெனக்கெட்டோம். எங்க டிசைனிங்கை சில தயாரிப்பு நிறுவனங்கள்கிட்ட கொடுத்து உபகரணங்களை வடிவமைக்கிறோம்” என்கிற முரளி இடைவெளி விடுகிறார்.

பிசினஸ் களத்தில் புதுப் புது கிளைகளைப் பரப்பிய கதையை விவரிக்கும் நாராயணி, “மருத்துவத் துறையில தொழில்நுட்பத்தின் தேவை எக்கச்சக்கமா இருக்கு. அதைப் பத்தி தெரிஞ்சு கிட்டப்போ ஆச்சர்யமா இருந்தது. இதுல எங்களோட பங்களிப்பை எப்படியெல்லாம் கொடுக்க முடியும்ங்கிற தேடல்ல இறங்கினோம். முதல்கட்டமா பார்மசி தொடர்பான எல்லா வேலைகளையும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்துல செய்யும் புராஜெக்ட்டை வேலூர் சி.எம்.சி ஆஸ்பத்திரியில செய்து கொடுத்திருக் கோம். இந்த வேலைகளையெல்லாம் Shuter, Dclutter-ங்கிற தனித்தனி பிராண்டு பெயர்ல செய்றோம். ஆஸ்பத்திரியில நோயாளிகளின் பயன்பாட்டுக்கான துணிகளின் லைஃப் சைக்கிளைக் கண்காணிக் கிறது, இருந்த இடத்துல இருந்தே ஸ்டோர் ரூம் பொருள்களின் இருப்பைத் தெரிஞ்சுக்கிறது, மருத்துவ ஆவணங்கள் எல்லாத்தையுமே ஒரே இடத்துல சேகரிக்கும் சிஸ்டம்னு பல்வேறு புராஜெக்டுகளை அடுத்தடுத்து செய்துகொடுக்க இருக்கோம்.

பிசினஸ்ல சாதிக்க ரெண்டு விஷயங்களே போதும்! - 
நம்பிக்கையூட்டும் வெற்றித் தம்பதியர்

போன வருஷம் கொரோனா வந்தபோது பாரம்பர்ய உணவுகள் குறித்த விழிப்புணர்வு அதிகரிச்சது. நம்ம உணவு முறை ஆரோக்கியமா இருந்தா, கொரோனா மாதிரியான எத்தகைய நெருக்கடிகளையும் அச்ச மில்லாம கடந்துபோகலாம். நாங்க இயற்கை வாழ்வியல் முறைகளைக் கடைப்பிடிக்கிறதால, இது தொடர்பா எங்ககிட்ட பலரும் ஆலோசனை கேட்டாங்க. அதுல இருந்தே ஐடியா பிடிச்சு, வெகுஜன மக்களுக்கும் உதவும் நோக்கத்துலதான் ‘வெஜ் அண்டு மோர்’ என்ற இந்த ஸ்டோரைத் தொடங்கினோம். இயற்கை விவசாய முறையில விளைவிச்ச உணவுப் பொருள் களுடன், மண்பாண்டப் பாத்திரங்கள், மரத்தினாலான விளையாட்டுச் சாமான்கள்னு பாரம்பர்யம் சார்ந்த பொருள்களை மட்டுமே விற்பனை செய்யுறோம். குல்ஃபி ஐஸ்க்ரீமுக்கான வரவேற்பு இளைஞர்களிடம் எப்போதுமே இருக்கும். இதையே பிசினஸா மாத்தும் யோசனையும் லாக்டெளன் நேரத்துலதான் ஏற்பட்டுச்சு. இளநீர் மற்றும் அதுக்குள்ள இருக்கும் தேங்காயுடன் பால் மட்டும் சேர்த்து 38 ஃப்ளேவர்கள்ல குல்ஃபி ஐஸ்க்ரீம் தயாரிச்சு விற்கிறோம்” என்கிறார் உவகையுடன்.

‘ஸ்பேஸ் சேவிங் ஸ்டோரேஜ்’ தொழில்நுட்பத்தை இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங் களில் வடிவமைத்துக் கொடுத் துள்ளனர். இந்த வகையில், தமிழகத்தில் பிரபலமான மருத்துவ மனைகள் பலவும் இவர்களின் வாடிக்கையாளர்கள். 40-க்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பவர்கள், ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் வர்த்தகம் செய்கின்றனர்.

“நாங்க செய்துகொடுக்கும் தொழில்நுட்பங்கள் ஸ்டார் ஹோட்டல் உள்ளிட்ட பல தரப்பட்ட துறையினருக்கும் உதவும். ஆனா, ஹெல்த் கேர் துறைக்கு மட்டுமே அதிக கவனம் கொடுக்கிறோம். இந்தியாவுல இந்தத் துறையில எங்களைத் தவிர வேறு யாருமே பிரபலமாகல. இதுதான் எங்களோட பெரிய வெற்றியா கருதுறோம். மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த நாங்களும் பிசினஸ் களத்துல ஓரளவுக்குப் பெயர் எடுத்திருக்கிறது விவரிக்க முடியாத நிறைவு. புதுப்புது தொழில் வாய்ப்புகளுடன், மக்களுக்குப் பயன்தரும் தொழில் நுட்பங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவோம். நேரங்காலம் பார்க்காம உழைக்கணும்; எத்தகைய சவால்களையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளணும். இந்த ரெண்டு விஷயங்களையும் கடைப்பிடிச்சா, பிசினஸ்ல யார் வேணாலும் ஜெயிக்கலாம்”

- பெருமிதச் சிரிப்புடன் விடை பெறும் இந்தத் தம்பதியர், உழைப்பால் உள்ளம் கவர்கின்றனர்.