Published:Updated:

ஆண்டுக்கு 75 கோடி ரூபாய்... கடல் கடக்கும் தென்னை நார்!

 தென்னை நார்க்கட்டியுடன் செந்தில் பிரபு, ஆனந்தி...
பிரீமியம் ஸ்டோரி
தென்னை நார்க்கட்டியுடன் செந்தில் பிரபு, ஆனந்தி...

கலக்கும் பிசினஸ் தம்பதி

ஆண்டுக்கு 75 கோடி ரூபாய்... கடல் கடக்கும் தென்னை நார்!

கலக்கும் பிசினஸ் தம்பதி

Published:Updated:
 தென்னை நார்க்கட்டியுடன் செந்தில் பிரபு, ஆனந்தி...
பிரீமியம் ஸ்டோரி
தென்னை நார்க்கட்டியுடன் செந்தில் பிரபு, ஆனந்தி...

படங்கள்: இ.பிரவின் குமார்

“கல்யாணத்துக்கு அப்புறமா, புகுந்த வீடு, குடும்ப பொறுப்புனு இனிஷியலோடு தன் அடையாளங்களையும் மாத்திக்கிற பெரும்பாலான பெண்களைப்போலத்தான் நானும் இருந்தேன். என் ரெண்டு பிள்ளைகளும் ஸ்கூல் போக ஆரம்பிச்ச நிலையில, எனக்கான அடையாளம் என்னன்னு யோசிச்சப்பதான் பிசினஸ் பண்ணலாங்கிற எண்ணம் ஏற்பட்டுச்சு. இந்த ஏற்றுமதி தொழில் ஆரம்பத்துல மலைப்பாதான் இருந்துச்சு. இப்போ எல்லா வேலைகளும் எனக்கு அத்துப்படி!” - சுயதொழிலுக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொண்ட முன்னுரை சொல்கிறார் ஆனந்தி.

சென்னையைச் சேர்ந்த இவர், தென்னை நார்க்கழிவுகளைக் கட்டிகளாக மாற்றி (Coir Pith) ஏற்றுமதி செய்யும் தொழில்முனைவோர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சில லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்த இந்தத் தொழிலை, இப்போது ஆண்டுக்கு 75 கோடிக்கும் மேல் வர்த்தகம் செய்யும் ஏற்றுமதி நிறுவனமாக உயர்த்தியிருக் கிறார். ‘Saanvi Agricultural Products’ என்ற பெயரிலான நிறுவனத்தைத் தன் கணவர் செந்தில் பிரபு மற்றும் மாமி யாருடன் இணைந்து நிர்வகிக்கிறார் இவர்.

சென்னையை அடுத்த எண்ணூர் துறைமுகத்துக்கு அருகிலிருக்கும் வல்லூர் கிராமம். அங்குள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றில் மலைபோல குவிக்கப் பட்டிருக்கின்றன தென்னை நார்க் கட்டிகள். பெரிய கன்டெய்னர் ஒவ்வொன்றிலும் அவை 25 டன் அளவுக்கு நிரப்பப்பட்டு, ராட்சத ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் கப்பலுக்குக் கொண்டு செல்வதற்கான பணிகள் நடந்துகொண்டிருந்தன. அந்தச் சூழல் கண்களை விரிய வைக்க, தங்களின் வெற்றிக்கதை சொல்லும் இவர்களின் வளர்ச்சி, நமக்கு ஆர்வத் தைக் கூட்டுகிறது.

செந்தில் பிரபு, ஆனந்தி
செந்தில் பிரபு, ஆனந்தி

“ஆனந்தி இன்ஜினீயர்; நான் எம்.பி.ஏ பட்டதாரி. உணவு மற்றும் விவசாயம் சார்ந்த விஷயங்கள்ல எங்களுக்கு ஆர்வம் அதிகம். பொள்ளாச்சி சுற்று வட்டாரப் பகுதிகள்ல தென்னை மதிப்புக்கூட்டல் தொழில் அதிகமா நடக்கும். அங்கு, தென்னை மட்டையி லேருந்து நாரைப் பிரிச்செடுத்த பிறகு, வீணாகிற துகள்களை முன்பெல்லாம் தீயிட்டு எரிச்சுடுவாங்க. தென்னை நார்க்கழிவை டாலரா மாத்த முடியும்னு தெரிஞ்சுகிட்டப்போதான் பிசினஸ் ஐடியாவைப் பிடிச்சோம். முதல்ல ஒரு வருஷம் ஆனந்தி மட்டும்தான் தொழிலை கவனிச்சுக்கிட்டாங்க. பிறகு, வேலையை விட்டுட்டு நானும் பிசினஸ்ல இறங்கினேன். ஆரம்பத்துல மாசத்துக்கு அஞ்சு கன்டெய்னர் வரைக்கும் தான் ஏற்றுமதி செய்ய முடிஞ்சது. இரவு பகல் பார்க்காம உழைச்சோம்; மெனக்கெட்டோம். படிப்படியா அதிகரிச்சு இப்போ மாசத்துக்கு 150 கன்டெய்னர் வரை ஏற்றுமதி செய்யுறோம்” - தொழிலில் நுழைந்த அத்தியாயம் சொல்கிறார் செந்தில் பிரபு. ஆனந்தி தொடர்கிறார்...

“தென்னையிலேருந்து கிடைக்கிற எல்லா பொருள்களையுமே காசாக்கலாம். நம்மூர்ல உபரியா இருக்கிறதால, தென்னை மட்டை யோட அருமை பலருக்கும் தெரியுறதில்லை. இதை அரைச்சு தூளா கிடைக்கிற நார்க்கழிவை கோயம்புத்தூர் வட்டாரத்துல ‘மஞ்சி’னு சொல்லுவோம். நர்சரிகள்லயும், மொட்டை மாடி செடி வளர்ப்புலயும்தான் இவை அதிகமா பயன்படுத்தப்படுது. மேலும், கால் நடைக் கழிவுகளுடன் தென்னை நார்க்கழிவு களையும் சேர்த்து உரம் தயாரிப்பாங்க. எண்ணெய் உற்பத்திக்கூடங்கள்ல தரை வழுக்காம இருக்க இந்தக் கழிவுகளைக் கொட்டி வைப்பாங்க. வெளிநாடுகள்ல பசுமைக்குடிலுக்குள்ளாற மணலுடன் கலந்து அல்லது மணலுக்கு மாற்றா விவசாயத்துல இந்த நார்க்கழிவுகளை அதிக அளவுல பயன் படுத்துறாங்க. எனவே, முதல்ல சீனா மற்றும் கொரியாவுக்கு ஏற்றுமதி செஞ்சோம். வர்த்தக வாய்ப்புகள் அதிகரிச்சு, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஜப்பான், கனடா, இஸ்ரேல், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட 18 நாடு களுக்கும் இப்போ ஏற்றுமதி பண்ணிட்டிருக் கோம்” என்று பூரிக்கிறார் ஆனந்தி.

உரித்த தென்னை மட்டையை மொத்தமாகக் கொள்முதல் செய்து, பொள்ளாச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களிலுள்ள தங்களின் உற்பத்திக் கூடங்களில் தென்னை நார்க்கட்டிகளைத் தயாரிக்கின்றனர். பின்னர், அவற்றைச் சென்னைக்குக் கொண்டுவந்து ஏற்றுமதி செய்கின்றனர்.

“தேங்காய் மட்டையைத் தூளா மாத்துறது மட்டுமில்லாம, அவற்றைச் சின்னச் சின்ன சிப்ஸாவும் மாத்தி தலா அஞ்சு கிலோ கட்டிகளா தயாரிக்கிறோம். தூள் மற்றும் சிப்ஸ் ரெண்டையுமே உப்புத்தன்மையில்லாத நீர்ல கழுவி, திறந்தவெளியில கொட்டி வெயில்ல ஒருநாள் காயவைப்போம். கல், மணல் உட்பட எவ்வித பொருள்களும் இல்லாம 20 சதவிகித ஈரப்பதத்துடன் இருக்கிற நார்க்கழிவுகள்தான் கட்டிகளா மாத்த உகந்தவை. இடத்தேவையைக் குறைக்கவே, நார்க்கழிவுகள் அதிக அழுத்தம் கொடுத்து கட்டியா மாத்தப்படுது. தேவைக்கு ஏற்ப, தண்ணியில சேர்த்தா ஒவ்வொரு கட்டியும் பல மடங்கு விரிவடையும்.

காத்தோட ஈரப்பதத்தாலகூட இந்தக் கட்டிகள் விரிவடைய ஆரம்பிச்சுடும். மேலும், கடல் வழிப் பயணத்துல உப்புக்காத்தால கட்டிகள் சேதாரம் ஆகவும் வாய்ப்பிருக்கு. எனவே, தேங்காய் நார்க்கட்டிகளைச் சென்னைக்குக் கொண்டு வந்ததுமே, உடனடியா பாலித்தீன் கவரால பேக்கேஜிங் பண்ணிடுவோம்.

 தென்னை நார்க்கட்டியுடன் செந்தில் பிரபு, ஆனந்தி...
தென்னை நார்க்கட்டியுடன் செந்தில் பிரபு, ஆனந்தி...

வெயில் அதிகமா தேவைப்படுற தொழில் இது. மழை உள்ளிட்ட இடர்களால ஏற்றுமதி தடைப்படக் கூடாதுனு 100 கன்டெயினருக் கான நார்க்கட்டிகளை எப்போதுமே இருப்பு வெச்சிருப்போம். தென்னை மட்டையை அரைக்கிறப்போ சேதாரமாகிற தேங்காய் நார்களைப் பயன்படுத்தி கால்மிதி, செடி வளர்ப்புக்கான தொட்டிகளையும் தயாரிக் கிறோம். மேலும், செடி வளர்ப்புக்கான பைகள், உபகரணங்களையும் விற்பனை செய்யுறோம். தேங்காய் நார்க்கழிவானது ஆறு மடங்கு நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. இதிலேருந்து அவ்வளவு சீக்கிரத்துல நீர் ஆவியாகாது.

நீர் மேலாண்மைக்காக விவசாயத்துல இந்த நார்க்கழிவுகளுக்கான வரவேற்பு நம்மூர்லயும் இப்போ அதிகரிச்சுகிட்டு வருது. அதனால, எல்லாவிதமான வியாபார வாய்ப்புகள்லயும் கவனம் செலுத்துறதோடு, 150-க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கிறோம்” தங்களின் வளர்ச்சியைப் பெருமிதத்துடன் அடுக்கு கிறார் ஆனந்தி.

“நாங்க ஏற்றுமதி செய் யுற பொருள்கள், கடல் போக்குவரத்துல பல்வேறு தடைகளைக் கடந்துதான் உரிய இடத்துக்குப் போய்ச் சேரும். அதுபோல, மூலப்பொருளைச் சேகரிக் கிறதுல ஆரம்பிச்சு எங்களுக்கு வர வேண்டிய தொகையை வாங்குற வரைக்கும் எக்கச்சக்க சவால்களை நாங்களும் எதிர்கொள்ள வேண்டியதா இருக்கும். அடுத்த அஞ்சு வருஷத்துல இன்னும் பல மடங்கு வளர்ச்சியை நோக்கிப் போகணும்னு பிளான் வெச்சிருக் கோம்” நம்பிக்கையுடன் கூறுகிறார் செந்தில் பிரபு.

“பிசினஸ்ல எனக்குப் பெரிய பக்கபலமே என் மாமியார் பரமேஸ்வரியும் என் அண்ணன் செந்தில்நாதனும்தான். கோயம்புத்தூர்ல வசிக்கிற என் மாமியார், உள்ளூர் விற்பனை யைக் கவனிக்கிறாங்க. நாங்க குடும்பமா வேலை செஞ்சு, பல குடும்பங்களுக்கும் வேலைவாய்ப்பு கொடுக்க ஆவலுடன் இருக் கோம்” என்று எதிர்கால கனவுகளுடன் முடிக்கிறார் ஆனந்தி.