Published:Updated:

“வீடு தேடிவந்த சர்வதேச பிரபலம் கேட்ட கேள்வியும் என் பதிலும்...” - நிஷா அகர்வாலின் வெற்றிக் கதை

நிஷா அகர்வால்
பிரீமியம் ஸ்டோரி
நிஷா அகர்வால்

சக்சஸ்வுமன்

“வீடு தேடிவந்த சர்வதேச பிரபலம் கேட்ட கேள்வியும் என் பதிலும்...” - நிஷா அகர்வாலின் வெற்றிக் கதை

சக்சஸ்வுமன்

Published:Updated:
நிஷா அகர்வால்
பிரீமியம் ஸ்டோரி
நிஷா அகர்வால்

“உங்களைச் சந்திக்க விருப்பப் படுகிறேன். நாளைக்கு நேரம் கிடைக்குமா?”

- சர்வதேச பெண் பிரபலம் ஒருவரிடமிருந்து மெயில் வழியே வந்த இந்தத் தகவலை அறிந்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கினார் நிஷா அகர்வால். அடுத்த நாள் அவருடன் ஒருமணிநேர சந்திப்பு நடந்துள்ளது. அதுவே தனது பிசினஸ் பயணத்தில் பெருமிதத் தருணம் என்று சிலாகிக்கும் நிஷா, பிளாக் பிரின்டிங் ஆடைகளைத் தயாரிக்கும் தொழில்முனைவோர். குறைந்த முதலீட்டில் சுயதொழில் தொடங்கி, ‘Aeshaane’ என்ற தனது நிறுவனத்தின் மூலம் ஏற்றுமதியில் கலக்கிக்கொண்டிருக்கும் சென்னைப் பெண்.

“பெப்சிகோ நிறுவன முன்னாள் தலைவரும் அமேஸான் நிறுவன இயக்குநர்களில் ஒருவருமான இந்திரா நூயிதான் அந்தப் பிரபலம்”

- சஸ்பென்ஸ் உடைத்து தனது வெற்றிக்கதையைப் பகிரும் நிஷாவின் முகத்தில் உற்சாகம் கரைபுரள்கிறது.

“என் பாட்டி சிறப்பா துணி தைப்பாங்க. அதைப் பார்த்து ஃபேஷன் துறைமீது சின்ன வயசுலயே எனக்கு ஆர்வம் வந்தது. ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா நிறுவனங்கள்ல ஏர்ஹோஸ்டஸா அஞ்சு வருஷங்கள் வேலை செஞ்சேன். கல்யாணத்துக்குப் பிறகு, டெய்லரிங் உட்பட ஃபேஷன் துறை பயிற்சி வகுப்புகள் பலவற்றுக்கும் போனேன். ஒருகட்டத்துல பிசினஸ் ஆர்வம் ஏற்படவே, மாமியாரும் ஊக்கம் கொடுத்தாங்க. ஜார்கண்ட் மாநிலத்தில் கர்சாவன் பகுதியில பட்டுப்புழுக்களைக் கொல்லாமலும், மல்பெரி இலைகளுக்குப் பதிலாக இயற்கையாக காடுகளில் வளரும் ஆமணக்குச் செடிகளின் இலைகளைப் பயன்படுத்தியும் வித்தியாசமான முறையில் பட்டு நூல் தயாரிக்கப்படுவதைக் கேள்விப்பட்டேன். அங்கும், மேற்கு வங்காள மாநிலத்துல பிளாக் பிரின்டிங் தொழில் கூடங் களுக்கும் மாமியாருடன் போய் அனுபவங்கள் கற்றேன்.

நிஷா அகர்வால்
நிஷா அகர்வால்

2008-ல் என் சேமிப்புப் பணம் 30,000 ரூபாய்ல வீட்டிலேயே சின்ன யூனிட் தொடங்கினேன். நம்ம பிசினஸ் எதுவா இருந்தாலும், அதில் ஏதாச்சும் புதுமைகளைக் கடைப்பிடிச்சால்தான் தனித்தன்மையுடன் புகழ்பெற முடியும். அதன்படி, துணிகளில் பிளாக் பிரின்டிங் டிசைன்கள் அதிகம் இல்லாம, குறைவான அளவிலும் வித்தியாசமாகவும் இருக்கும்படி வடிவமைச்சேன். வெளியிடத்துல பிளெயின் துணிகளை வாங்கி, பிரின்டிங் செய்து புடவைகளாக விற்பனை செஞ்சேன். ஆரம்பத்துல செலவுகளைக் குறைக்க மரக்கட்டை அச்சுகளுக்குப் பதிலாக உருளைக் கிழங்கில் பல்வேறு டிசைன்களைச் செஞ்சு பயன்படுத்தினேன். ரெண்டு ஊழியர்களுடன் நானும் எல்லா வேலைகளையும் செய்தேன். குறைவான அளவிலேயே விற்பனை நடந் தாலும் நம்பிக்கையுடன் புது ஆர்டர்களுக்கு விண்ணப்பிச்சேன். பாரிஸ் நகரத்துல நடந்த கண்காட்சியில் ஸ்டால் போட்டது திருப்பு முனையா அமைஞ்சது” என்பவருக்கு அடுத்தடுத்து வெளிநாட்டு ஆர்டர்கள் கிடைத்திருக்கின்றன.

“வெளிநாட்டுப் பெண்கள் பலரும் புடவை தவிர வேறு எந்த உடை அணிந்தாலும் துப்பட்டாவைப் பயன்படுத்துவாங்க. அவை கைவேலைப்பாடுகளில் வித்தியாசமான டிசைன்களில் இருப்பதை அதிகம் விரும்புவாங்க. அவங்களுக்காகத் துப்பட்டா தயாரிப்பில் தனி கவனம் செலுத்தினேன். பிரான்ஸ் நிறுவனம் ஒன்றைத் தொடர்ந்து, லண்டனிலுள்ள புகழ்பெற்ற விக்டோரியா அண்டு ஆல்பர்ட் மியூசியத்தின் விற்பனைக் கூடத்துக்கான ஆர்டர் கிடைச்சது. இந்த ரெண்டு இடங்களுக்கும் பல வருஷமா துப்பட்டா துணிகளை ஏற்றுமதி செய்யுறேன். பலவகையான ரெடிமேட் ஆடைகளையும் விற்பனை செய்யுறேன். பட்டுப்புழுவின் கூட்டிலிருந்து தயாரிக்கும் கக்கூன் நகைகளுடன், உதிரி துணிகளில் கைவேலைப்பாடுகளுடன் நெக்லஸ், வளையல், மோதிரம் உட்பட பலவகையான நகைகளைச் செய்து விற்கிறேன். சில மாதங்களா காட்டன் மாஸ்க்கும் ஏற்றுமதி செய்யுறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாலு வருஷங்களுக்கு முன்பு சென்னை பெருங்குடியில உற்பத்திக் கூடத்தைத் தொடங்கினேன். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகிட்டே, நீலாங்கரையிலுள்ள என் வீட்டில் பொட்டிக் வெச்சு ரீடெய்ல் விற்பனையும் செய்யுறேன். எக்கோ ஃபிரெண்ட்லி டையிங்தான் பயன்படுத்துறேன். ‘குளோபல் ஆர்கானிக் டெக்ஸ்டைல் ஸ்டாண்டர்டு’ என்ற அமெரிக்க நிறுவன சான்றிதழ் வாங்கி, என் தயாரிப்புகள் இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்து விற்பனை பண்றேன். வெளிநாட்டு கண்காட்சிகளில் தொடர்ந்து பங்கேற்று புதிய தொழில் வாய்ப்புகளை வசப்படுத்துறேன்” என்கிறார் புன்னகையுடன்.

 இந்திரா நூயி மற்றும் தன் மகளுடன்...
இந்திரா நூயி மற்றும் தன் மகளுடன்...

ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிஷா, 15 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கிறார். ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் டர்ன் ஓவர் ஈட்டி அசத்துபவருக்கு, குஷ்பு, சுஹாசினி, ரேவதி, ஷபானா ஆஸ்மி உட்பட பல்வேறு செலிபிரிட்டி வாடிக்கையாளர்களும் இருக்கின்றனர்.

இந்திரா நூயி உடனான சந்திப்பு குறித்துப் பேசுகையில் நிஷாவின் முகத்தில் உற்சாகம் அதிகரிக்கிறது. “கடந்த ஆண்டு இந்திரா மேடம் சென்னை வந்தப்போ, என் வாடிக்கையாளர் அவருக்கு துப்பட்டாவைப் பரிசாகக் கொடுத்திருக்காங்க. அது அவங்களுக்குப் பிடிச்சுப்போக, நீலாங்கரையில் என் வீட்டிலுள்ள பொட்டிக்கில் ஷாப்பிங் செய்ய தனியாவே வந்தாங்க. தனக்கும் தன் மகள்களுக்கும் நிறைய துப்பட்டாவை வாங்கினாங்க. ‘எல்லோரும் பண்ற மாதிரி இல்லாம வித்தியாசமான தயாரிப்புகளைப் பெரிசா விளம்பரம் இல்லாம விற்கறீங்க. உங்களைப் பத்தி நிறைய விவரங்களைத் தெரிஞ்சுகிட்டுதான் இங்க வந்தேன்’னு சொன்னாங்க.

‘பெண்களுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கும். எந்த விஷயத்துக்கு முன்னுரிமை கொடுப்பீங்க?’ன்னு கேட்டாங்க. ‘குடும்பத்துக்குப் பிறகுதான் தொழில் உட்பட மற்ற விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுப்பேன். தனித்தனி துறையில் இருந்தாலும் நாங்க கூட்டுக்குடும்பமாதான் இருக்கோம்’னு சொன்னேன்.

‘பெண்களுக்குக் குடும்பத்தினரின் ஊக்கமும் சுதந்திரமும் தேவை. அதனாலதான் பிடிச்ச தொழிலை உங்களால மகிழ்ச்சியா பண்ண முடியுது. இன்னும் பெரிசா சாதிங்க’ன்னு வாழ்த்தினாங்க. ‘நான் உங்களின் பெரிய ரசிகை. என்னைத் தேடி வந்தமைக்கு நன்றி’ன்னு நான் சொல்ல, அதிர்ந்து சிரிச்சவங்க என்னைக் கட்டித் தழுவிட்டு கிளம்பினாங்க. நிறைய புது முயற்சிகளுக்குத் திட்டமிட்டிருக்கேன். எல்லாம் சரியாக நடக்கும்னு நம்பறேன்”

- நிஷாவின் வார்த்தைகளில் நம்பிக்கை சுடர்விடுகிறது.