Published:Updated:

மணக்கும் மரச்செக்கு எண்ணெய் பிசினஸ்... மாஸ் காட்டும் தாரா!

தாரா
பிரீமியம் ஸ்டோரி
News
தாரா

வெற்றியின் இலக்கு

தேடல் இருந்தால் இலக்கை எட்டலாம் எளிதாக என்பதை உண்மையாக்கியிருக்கிறார் தாரா. விடாமல் துரத்திய பிசினஸ் கனவை நனவாக்கி, வெற்றியும் பெற்றிருப்பவர் பி.இ பட்டதாரி. மரச்செக்கு எண்ணெய் தயாரித்து, ஆன்லைன் மூலம் விற்பனை செய்துவரும் தாரா, சென்னை, நீலாங்கரையைச் சேர்ந்தவர். மாதம் 12 லட்சம் ரூபாய்வரை வருமானம் ஈட்டுபவர் தன் வெற்றிக்கதையைப் பகிர்ந்து கொள்கிறார்.

``பி.இ முடிச்சுட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துட்டு இருந்தேன். குடும்பம், குழந்தைகள்னு பொறுப்புகள் வந்ததால் வேலையை விட்டுட்டேன். வீட்டிலிருந்தே சில நிறுவனங்களுக்கு மொழி பெயர்ப்பு வேலைகள் செய்து கொடுத்துக்கிட்டு இருந்தேன். பிசினஸ் ஆரம்பிக்கணும்கிறது என்னுடைய நீண்ட நாள் கனவு. 50,000 ரூபாய் முதலீட்டில் புடவை பிசினஸ் ஆரம்பிச்சேன். லாபம் இருந்தாலும், பெரிசா திருப்தி இல்லை. அடுத்தகட்ட வளர்ச்சிக்காக, மக்களிடம் தேவை, வரவேற்பு இருக்கும் 10 தொழில்களைப் பட்டியலிட்டேன். அதுலேருந்து செக்கு எண்ணெய் தொழிலைத் தேர்வு செய்தேன்'' என்கிற தாரா அந்த பிசினஸ் தொடங்கியது பற்றி விவரிக்கிறார்.

``எண்ணெய் பிசினஸில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தேன். உறவினர் ஒருவர் ஈரோட்டில் செக்கு எண்ணெய் பிசினஸ் பண்றாங்க. அவங்ககிட்டருந்து 100 பாட்டில்கள் எண்ணெய் வாங்கி பிசினஸை ஆரம்பிச்சேன். முகநூல், வாட்ஸ்அப் மூலம் விற்பனையைத் தொடங்கினேன். உறவினர்கள், நண்பர்கள் சப்போர்ட் பண்ணாங்க. என்கிட்ட எண்ணெய் வாங்கும் ஒவ்வொருவரிடமும் நிறை குறைகளைக் கேட்பேன். பிசினஸில் வாடிக்கை யாளர்களைப் பெறுவதில் உள்ள கவனம் வாடிக்கையாளர்களைத் தக்கவைப்பதிலும் இருக்கணும். அதனால் என்னிடம் எண்ணெய் வாங்கும் வாடிக்கையாளர்களுக்குக் குறிப்பிட்ட நாளுக்கு ஒருமுறை எண்ணெய் குறித்த தகவல் களை அனுப்புவேன். அதனால் அடுத்தடுத்த முறை என்கிட்டயே வாங்க ஆரம்பிச்சாங்க.

மணக்கும் மரச்செக்கு எண்ணெய் பிசினஸ்... மாஸ் காட்டும் தாரா!

ஆர்டர்கள் அதிகரிக்கவே, நானே செக்கு மூலம் எண்ணெய் எடுக்கலாம்னு முடிவு பண்ணினேன். நிறைய இடங்களுக்குப் பயணம் செய்து செக்கு எண்ணெய் விற்பனை செய்யுறவங்ககிட்ட எண்ணெய்கள் வாங்கி ட்ரையல் பார்த்தேன். மற்ற பிராண்டுகளில் இருக்கும் எந்தக் குறையும் என்னோட பிராண்டில் இருக்கக் கூடாதுன்னு கவனமாக இருந்தேன். எண்ணெய் தயாரிப்புக்கு தேவை யான எல்லாப் பொருள்களையும் நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்தேன். அதனால எண்ணெயோட உற்பத்திச் செலவைக் குறைக்க முடிஞ்சுது. மரச்செக்கு வெச்சிருக்கிறவங்ககிட்ட கொடுத்து எண்ணெய் ஆட்டினேன். பிளாஸ்டிக் பாட்டில்கள் தவிர்த்து, ஸ்டீல் பாட்டில்களில் எண்ணெயை விற்க ஆரம்பிச்சேன். செலவுகள் போக ஒரு லிட்ட ருக்கு 30 ரூபாய்வரை லாபம் கிடைச்சுது'' என்பவர் உற்பத்தியில் உள்ள சவால்கள் பற்றிப் பேசினார்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``உற்பத்தி செலவு அதிகம் என்பதால் செக்கு எண்ணெயின் விலை அதிகமாகத்தான் இருக்கும். ஒரு கிலோ எள் 100 ரூபாய். ஒரு லிட்டர் எண்ணெய்க்கு ரெண்டரை கிலோ எள் தேவை. எள்ளின் அடக்க விலை

250 ரூபாய். 15 ரூபாய்க்கு கருப்பட்டி சேர்ப்போம். எண்ணெய் ஆட்டும் கூலிக்குப் பதிலாக பிண்ணாக்கினை எடுத்துப்பாங்க. பாட்டில், லேபிள் செலவுகள் எல்லாம் சேர்த்து ஒரு லிட்டர் நல்லெண்ணெய் 350 ரூபாய்க்கு விற்றால்தான், குறைந்த அளவிலாவது லாபம் கிடைக்கும்.

மெஷின் செக்கில் எண்ணெய் ஆட்டும்போது இரும்பு உலக்கை வேகமாக எண்ணெயைப் பிழியும். அந்த வெப்பத்தில் எண்ணெயின் தன்மையே மாறிடும். அதனால் மெதுவாகச் சுற்றும் வாகை மர உலக்கைதான் பயன்படுத்து றோம். இதனால் விதையில் இருக்கும் எண்ணெயின் தன்மை அப்படியே இருக்கும். ஆனால், ஒரு லிட்டர் எண்ணெய் எடுக்கவே அரை மணிநேரம் செக்கு சுற்ற வேண்டியிருக்கும். அதனால் மின்சாரக் கட்டணம் அதிகமாகும். அந்தச் செலவும் எண்ணெயின் உற்பத்தி விலையில்தான் அடங்கும் என்பதால், குறைந்த விலையில் எண்ணெய் விற்க வாய்ப்பே இல்லை. கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் என ஒவ்வொன்றுக்கும் இதே போன்று தனித்தனி உற்பத்திக் கணக்கு இருக்கு. மொத்த உற்பத்தியாளர்கள் யாராலும் இதைவிட குறைந்த விலைக்கு செக்கு எண்ணெயை விற்க முடியாது'' என்பவர் தொழிலின் சவால்களைப் பகிர்கிறார்.

மூன்று வருடங்களுக்கு முன் 100 லிட்டர் எண்ணெய் விற்பனையில் ஆரம்பித்த இவரது பிசினஸ் இப்போது மாதம் 4,000 லிட்டர் விற்பனையை எட்டியுள்ளது. சென்னை, ஈரோட்டில் இரண்டு யூனிட்டுகள் செயல் படுகின்றன. மாதம் 12 லட்சம் ரூபாய்க்கும் மேலாக வருமானம் பார்க்கிறார். ஆறு பெண்களுக்கு வேலைவாய்ப்பும் தந்திருக்கிறார்.

``செக்கு எண்ணெய் வாங்கும்போது நிறம், வாசனை, எண்ணெயின் திரவத்தன்மை எல்லாம் பார்த்து வாங்குவது நல்லது. ஆன்லைன் விற்பனை தவிர்த்து இயற்கை அங்காடி, சூப்பர் மார்க்கெட், வெளிநாட்டு ஆர்டர் என நிறைய வாய்ப்புகள் இருப்பதால் செக்கு எண்ணெய் பிசினஸைக் குறைந்த முதலீட்டில் உங்கள் தொழிலாகவும் மாத்தலாம். ஆன்லைன் பிசினஸ் தொடங்கும்போது கடை வாடகை, மின்சார கட்டணம் எதுவுமில்லாம வாய்வழி விளம்பரங்கள் மூலமாகவே பிசினஸை வளர்த்தெடுக்க முடியும்...''

- நம்பிக்கையளிக்கும் வார்த்தைகள் பகிர்கிறார் தாரா.