Published:Updated:

“ஓவியத்திலும் ஈட்டலாம் கோடி வருமானம்!” - உற்சாக உஷாப்ரியா

உஷாப்ரியா
பிரீமியம் ஸ்டோரி
News
உஷாப்ரியா

ஒளிதந்த ஓவியங்கள்

“டிஜிட்டல் ஓவியங்கள் பிரபலமானாலும்கூட கை வேலைப்பாடுகளுடன்கூடிய தஞ்சாவூர் ஓவியங்களுக்கான வரவேற்பும் கணிசமா அதிகரிச்சுட்டேதான் இருக்கு. ஒரிஜினல் தஞ்சாவூர் ஓவியத்துல செம்பு உட்பட எந்த உலோகமும் சேர்க்கப்படாத தூய தங்கம் குறிப்பிட்ட அளவில் சேர்க்கப்பட்டிருக்கும். வருஷம் கூடக்கூட கலைநயமிக்க அந்த ஓவியங்களின் மதிப்பும் உயரும். எனவேதான், அத்தகைய ‘ஆன்டிக்’ ஓவியங்கள், கண்காட்சிகளில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படுது. கை வேலைப்பாடுகளுடன்கூடிய கலைநயமிக்க ஓவியங்களுக்கு எப்போதுமே மவுசு குறையாது”

- ஓவிய ஆர்வத்தையே தனது அடையாளமாக மாற்றிக்காட்டி ஜெயித்திருக்கும் உஷாப்ரியாவின் அனுபவ வார்த்தைகள் இவை. சில ஆயிரங்களில் மட்டுமே முதலீடு செய்து, கோடிகளில் வருமானம் ஈட்டும் தொழில்முனைவோராக உயர்ந்திருக்கிறார்.

“காலேஜ் படிக்கிறப்போ ஓவியம் கத்துகிட்டேன். கல்யாணத்துக்குப் பிறகு, குழந்தைகளைக் கவனிச்சுகிட்டு இல்லத்தரசியா இருந்தேன். மகள்கள் இருவரும் ஸ்கூல் போக ஆரம்பிச்சதும், ஓய்வுநேரத்தைப் பயன்படுத்திக்க தஞ்சாவூர், மியூரல், கேன்வாஸ்னு பலதரப்பட்ட ஓவியங்களைக் கத்துக்க, நான் வசிக்கும் திருப்பூர், கோயம்புத்தூர், சென்னைனு பல ஊர்களில் கத்துக்கிட்டேன். கூடவே வீட்டுல பயிற்சி வகுப்புகளும் எடுத்தேன். இளைஞர்கள், இல்லத்தரசிகள்னு ஏராளமானோர் என்கிட்ட ஓவியம் கத்துக்க வந்தாங்க. ரெண்டு வருஷங்களுக்குப் பிறகு, பெயின்டிங் ஆர்டர்கள் வந்தன. கடவுள் உருவங்களை வரைஞ்சு கொடுத்த முதல் ஆர்டர்ல 20,000 ரூபாய் லாபம் கிடைச்சது.

படிப்படியா ஆர்டர்கள் அதிகரிக்கவே, ஓவியத் தொழில்ல இருக்கும் விற்பனை வாய்ப்புகள் பத்தி தெரிஞ்சுகிட்டேன். பெரிய ஆர்டர்களுக்கு பாதித்தொகை அட்வான்ஸா கொடுத்திடுவாங்க. அதனால, ஆரம்பகட்ட விற்பனை வாய்ப்புகளுக்கு 15,000 ரூபாய்தான் முதலீடாகத் தேவைப்பட்டுச்சு. வீட்டில் இருந்தபடியே நிறைவாகச் சம்பாதிச்சேன். ஒருகட்டத்துல வகுப்புகள் எடுக்கவும், ஓவியம் வரைஞ்சு டிஸ்பிளே வைக்கவும் வீட்டில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுச்சு. அடுத்து என்ன பண்றதுன்னு குழப்பம். ‘தனியா பிசினஸ் பண்றது உன் கனவு. அதைச் செயல்படுத்த இதுதான் சரியான தருணம். கடவுள் பார்த்துபார்’னு கணவர் ஊக்கம் கொடுத்தார்”

 “ஓவியத்திலும் ஈட்டலாம் கோடி வருமானம்!” - உற்சாக உஷாப்ரியா

– மகிழ்ச்சியுடன் கூறுபவர், ‘சித்ரமயி ஆர்ட் லாஞ்ச்’ என்ற பெயரில் விற்பனை ஷோரூம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்.

“ஈரோட்டுல என் தோழி ஒருவரும் ஓவியம் வரைஞ்சு விற்பனை செய்றாங்க. எனக்கு வரும் ஆர்டர்களுக்கான டிசைன்களையெல்லாம் அவங்க நிறுவனத்தில் கொடுத்து வரைஞ்சு வாங்குவேன். அதுக்காக வாரம் ஒருமுறை அவங்க யூனிட்டுக்குப் போவேன். மற்ற நேரங்கள்ல ஷோரூமை கவனிச்சுகிட்டு, நானும் பெயின்டிங் பண்ணுவேன். நேரப் பற்றாக்குறையால் பயிற்சி வகுப்புகளை நிறுத்தினேன். ஆர்டர்கள் கிடைச்சாலும், நிலையான விற்பனை வாய்ப்புகள் அப்போ இல்லை. ஷோரூம் தேடிவந்து வாங்குறவங்களோட எண்ணிக்கையும் குறைவாகவே இருந்துச்சு. அதனால, பத்து வருஷத்துக்கு முன்பு டிரெண்டிங்கா இருந்த டெரகோட்டா நகைகள் செய்யக் கத்துக்கிட்டேன். நிறைய டிசைன்களுடன் அந்த நகைகளை பெயின்டிங் ஷோரூம்ல விற்பனை செஞ்சேன். அதை வாங்க வந்த பலரும் பிடிச்ச ஓவியங்களையும் வாங்கினாங்க.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கடவுள் சிலைகள் உட்பட பூஜை ரூமுக்கான அழகிய வேலைப்பாடுகள், ரிட்டன் கிஃப்ட், வீட்டு இன்டீரியர் அலங்காரப் பொருள்களையும் டிசைன் பண்ணி வெளியில் ஆர்டர் கொடுத்து வாங்கி விற்பனை செஞ்சேன். ஓவியக் காட்சிகள்ல கலந்துகிட்டு ஸ்டால் போட்டேன். இதுபோன்ற பல யுக்திகளும் தொழில் வளர்ச்சிக்கு உதவின. தரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த அதேவேளையில், தொடக்கத்துல அதிக லாபம் எதிர்பார்க்கலை. கடந்த நாலு வருஷத்துல தொழில் நல்லா பிக்அப் ஆகிடுச்சு. அதிக அளவில் கடவுள் உருவங்களுடன், குழந்தைகள், தம்பதியர், பிரபலங்கள்வரை பல தரப்பட்ட உருவங்களையும் சில அடி முதல் பிரமாண்டமான அளவில் தேவைக்கு ஏற்ப வரைஞ்சு கொடுக்கறேன். 3டி சுவர் ஓவியங்கள், தஞ்சாவூர், மியூரல் உட்பட எல்லா வகையான ஓவியங்களையும் விற்பனை செய்றேன்” என்கிறார் பெருமிதத்துடன்.

சென்னை, திருப்பூரில் விற்பனை நிலையங்களை வைத்திருக்கும் உஷாப்ரியா, நேரடியாக 10 பேருக்கும், மறைமுகமாக 40 பேருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கிறார். பல மாநிலங்களுக்கும் சில வெளிநாடுகளுக்கும் ஓவியங்களை விற்பனை செய்பவர், ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக டர்ன் ஓவர் ஈட்டுகிறார்.

 “ஓவியத்திலும் ஈட்டலாம் கோடி வருமானம்!” - உற்சாக உஷாப்ரியா

“கொரோனாவால் விற்பனையில் சறுக்கல் ஏற்பட்டாலும் அதையும் சமாளிச்சுட்டேன். இப்ப மறுபடியும் அதிக அளவில் ஆர்டர்கள் வர ஆரம்பிச்சுட்டதால, முன்பைவிட அதிக உத்வேகத்துடன் தொழில்ல கவனம் செலுத்தறேன். வீட்டு வேலைகளை முடிச்சுட்டு வேலைக்குப் போற மாதிரிதான் பிசினஸுக்கு நேரம் ஒதுக்குவேன். லாபத்தைத் தொழில்லயே முதலீடு செய்றேன். கணவர் ஹோட்டல் பிசினஸ் பண்றார். இருவரும் தொழிலைத் தனித்தனியே வெற்றிகரமா நடத்திட்டிருக்கோம். எனக்கிருந்த ஓவிய ஆர்வத்தை மத்தவங்களுக்கும் கத்துக்கொடுக்க ஆரம்பிச்சதாலதான், என்னுடைய பிசினஸ் திறமையும் வெளிப்பட்டுச்சு. நம்ம ஒவ்வொருத்தருக்கும் ஏதாச்சும் ஒரு விஷயத்துல ஆர்வமும் திறமையும் இருக்கும். அதைச் சரியா அடையாளம் கண்டு முறையான அனுபவத்துடன் வியாபார வாய்ப்புகளாக மாத்தினா, நிச்சயம் தொழில்முனைவோராக ஜெயிக்கலாம்”

- வண்ணப் புன்னகையுடன் கூறும் உஷா ப்ரியாவின் வெற்றி அனுபவங்கள் உத்வேகம் கூட்டுகின்றன!