Published:Updated:

``பனை, தென்னையிலிருந்து சர்க்கரை... புது ரூட்டு... நாலு லட்சம் வருமானம்!'' - உஷாராணியின் `மாத்தியோசி' கதை

பதநீர் மற்றும் தென்னைத் தெளுவுகளைச் சேகரித்து அதிலிருந்து பனை சர்க்கரை மற்றும் தென்னஞ் சர்க்கரை பொருள்கள் தயார் செய்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வரும் உஷாராணியின் மாத வருமானம், 4 லட்சம் ரூபாய். அவரிடம் பேசினோம்.

பனை
பனை

"ரசாயனக் கலப்பிடம் இல்லாத, இயற்கையான முறையில் தயாரிக்கப்படுற உணவுப் பொருள்களுக்கான வரவேற்பும் அதன் உற்பத்தி சார்ந்த தேவைகளும் பெருகிக்கிட்டே இருக்கு. உண்மையைச் சொல்லணும்னா தமிழ்நாட்டில் இயற்கைப் பொருள்கள் கொட்டிக்கிடக்கு. அதைச் சரியான முறையில் பதப்படுத்தி மதிப்புக்கூட்டல் செய்து பிசினஸாக மாற்றினால் நமக்குதான் சக்சஸ்!" எனப் பேச்சை ஆரம்பித்தார் சென்னையைச் சேர்ந்த உஷாராணி. பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து எடுக்கக்கூடிய பதநீர் மற்றும் தெளுவுகளிருந்து மாதம் நான்கு லட்சம் ரூபாய் சம்பாதிப்பது எப்படி என்றும், இயற்கையோடு இயைந்த இந்தத் தொழிலில் உள்ள சாதக பாதகங்களையும் நம்மிடம் பகிர்ந்தார்.

கருப்பட்டி
கருப்பட்டி

''என் கணவர் ஐடி துறையில் வேலைபார்க்கிறார். நான் கணிதத்தில் எம்.ஃபில் முடிச்சிருக்கேன். முனைவர் படிப்புக்காக முயன்றப்போ, முதல் முறை வாய்ப்பு கிடைக்கல. அதனால ஏதாவது பிசினஸ் தொடங்கலாம்னு தோணுச்சு. சென்னையைப் பொறுத்தவரை இயற்கைப் பொருள்களுக்கான மதிப்பு அதிகம். அதனால எங்க சொந்த ஊரான திருச்செங்கோட்டில் இருந்து மொத்தமாகக் கருப்பட்டி வாங்கிட்டு வந்து எங்க பகுதியில் உள்ள கடைகள் மற்றும் தெரிந்தவர்கள், நண்பர்களுக்கு ஆர்டரின் பேரில் விற்பனை செய்துட்டு இருந்தேன். ஒரு கிலோவுக்கு இவ்வளவு லாபம்னு கிடைச்சது. வெளிமாநிலங்களில் இருந்தும் ஆர்டர்கள் வரத்தொடங்குச்சு.

நாங்க கருப்பட்டி விற்பனை செய்யும் இடங்களில், அதைப் பற்றி மக்கள் என்ன சொல்றாங்கனு கேட்டுத் தெரிஞ்சுப்போம். அப்போ, கருப்பட்டியில் மண், தூசிகள் இருக்குனு சில குறைகள் தெரியவந்துச்சு. அதன் பின் கருப்பட்டியை மொத்தமாக வாங்கி உடைத்து, சலித்து, தூசிகள் நீக்கி, பவுடராக்கி, பாக்கெட்டில் போட்டு விற்பனை செய்ய ஆரம்பிச்சோம். அப்போதும் சில குறைகளை முழுவதும் நிவர்த்தி செய்ய முடியல. குறிப்பா, வெயிலின் தாக்கம் குறையத் தொடங்கிற சீஸன்ல கருப்பட்டி உருகத்தொடங்கிடும். இவ்வளவு விலை கொடுத்து வாங்கி இப்படி உருகினா என்ன பண்ண முடியும்னு நிறைய மக்கள் ஆதங்கப்பட்டாங்க.

ஒரு பனை மரத்திலிருந்து ஒரு நாளைக்கு 3 லிட்டரிருந்து 5 லிட்டர் வரைதான் பதநீர் கிடைக்கும். 70 லிட்டர் பதநீர் இருந்தால்தான் 10 கிலோ கருப்பட்டி அல்லது சர்க்கரை கிடைக்கும்.
உஷாராணி

பொதுவாக ஊரிலிருந்து வாங்கிட்டு வரும் கருப்பட்டியை ஆர்டர்கள் வரும் வரை, நான் ஒரு மர ரேக்கில் வைத்து, ரெண்டு, மூன்று சாக்குகள் போட்டு கதகதப்பிலேயே வெச்சிருப்பேன். ஆனா சென்னையில் மழை வெள்ளம் வந்தப்போ தட்பவெட்ப நிலை மாற்றம் ஏற்பட்டு எல்லாக் கருப்பட்டியும் உருகி வீணாகிடுச்சு. பாகு மாதிரி உருகிப்போன கருப்பட்டியைப் பயன்படுத்த முடியாம, அவ்வளவு கருப்பட்டியையும் அள்ளிக் குப்பையில் போடவேண்டியதாகிடுச்சு. அதுல பல லட்ச ரூபாய் நஷ்டம். இதுக்கு மேல இந்த பிசினஸ்ஸைத் தொடரணுமான்னு சோர்ந்து போயிட்டேன். அப்போ என் கணவர்தான் ஊக்கம் கொடுத்து பக்கபலமா நின்னார். நஷ்டம் வராத அளவுக்கு கருப்பட்டியை வேற எப்படி மதிப்புக்கூட்டி விற்கலாம்னு யோசினு அவர் சொன்ன அறிவுரைதான், அடுத்தகட்டத்தை நோக்கி என்னை யோசிக்க வெச்சது.

பனையிலிருந்து கருப்பட்டி எடுப்பதற்கு பதிலா சர்க்கரை எடுக்கலாம்னு ஐடியா வந்துச்சு. பனை சர்க்கரை என்பது புதிய கான்செப்ட் என்பதால் மக்களிடம் நல்ல ரீச் இருக்கும்னு நம்பி களத்தில் இறங்கினோம். பிசினஸ் ஆரம்பிக்கிறதுக்காக பேங்க்கில் லோன் அப்ளை செய்தோம், கிடைக்கல. அதனால என்னுடைய நகையை விற்று, பனை சர்க்கரை செய்யத் தேவையான மெஷின்கள், கொப்பரைகள், சோலார் அறைகள் போன்றவற்றை ஏற்பாடு செய்து திருச்செங்கோட்டில் ஒரு யூனிட் ஆரம்பிச்சேன். புதிய முயற்சி என்பதால் இதிலும் நிறைய நஷ்டங்கள் வந்துச்சு.

பனை வெல்லம்
பனை வெல்லம்

ஆரம்பத்தில் பாகு எடுக்கிற பக்குவம் எல்லாம் எனக்குத் தெரியாது என்பதால் வேலைக்கு ஆள் போட்டு பாகு எடுத்து சர்க்கரை பண்ணிட்டு இருந்தோம். அதன் பின் எங்க பாட்டிகிட்டயிருந்து பதநீரைக் காய்ச்சி பாகு எடுக்கும் பதத்தைக் கத்துக்கிட்டேன். ஆரம்பத்தில் சரியான பதம் வராமல் பொருள்கள் வீணாச்சு. ஆனா அதைப்பற்றி கவலைப்பட்டா அடுத்தவர்களை நம்பியேதான் பிசினஸ் செய்ய வேண்டியிருக்கும், நம்ம தொழிலின் அடிப்படையை நாம தெரிஞ்சுக்கிட்டாதான் அடுத்தடுத்த வளர்ச்சி இருக்கும் என்பதால சிரமப்பட்டு கத்துக்கிட்டேன். மூணு வருஷ நஷ்டங்களுக்குப் பின் இப்போதுதான் வியாபாரம் சீரா போயிட்டிருக்கு'' என்றவர், பனை சர்க்கரை தயாரிப்புப் பணிகளை விளக்கினார்.

''ஒவ்வொரு வருஷமும் ஜனவரியிலிருந்து ஜுன் மாதம் வரைதான் பனை மரத்திலிருந்து பதநீர் எடுக்கும் முடியும் என்பதால் அந்த நேரத்தில் நான் சென்னையில இருந்து திருச்செங்கோட்டுக்குப் போயிருவேன். அங்க சில பனந்தோப்புகளையும் சில மரங்களையும் குத்தகைக்கு எடுத்துருக்கோம். அன்றாடம் கிடைக்கும் பதநீரை மூன்று அடுக்கு முறையில் வடிகட்டி அதன் பின் பாகு காய்ச்சி ஒரு மணிநேரம் சோலார் வெப்பத்தில் வெச்சு பனஞ் சர்க்கரை தயார் செய்து வெச்சிருவோம். சமயத்தில் பாகு மட்டும் காய்ச்சி வெச்சு தேவையானபோது சர்க்கரை ரெடி பண்ணிப்போம். பதநீரை எடுத்த நாலு மணிநேரத்துக்குள்ள பாகு காய்சிடணும், இல்லைன்னா பதநீர் புளிச்சுப் போயி வீணாயிடும். திருச்செங்கோட்டில் தயார் செய்த சர்க்கரைகளை பேக் செய்து ஆர்டர்களின் பெயரில் சென்னையிலிருந்து மும்பை வரை விற்பனை செய்துட்டிருக்கோம்'' என்ற உஷா பதநீர் தொடர்ந்து கிடைப்பதில் உள்ள சிக்கல்களை பற்றிப் பேசினார்.

கருப்பட்டி
கருப்பட்டி

''கிராமங்களில் இருந்த நிறைய பனை மரங்களை வெட்டிட்டாங்க. அதனால் பதநீர் அதிகளவு கிடைக்கிறது இல்ல. ஒரு பனை மரத்திலிருந்து ஒரு நாளைக்கு 3 லிட்டரிலிருந்து 5 லிட்டர் வரைதான் பதநீர் கிடைக்கும். 70 லிட்டர் பதநீர் இருந்தால்தான் 10 கிலோ கருப்பட்டி அல்லது சர்க்கரை கிடைக்கும். அதனால் மரங்களை குத்தகைக்கு எடுக்கும்போதே அதன் செழுமையைப் பார்த்துதான் குத்தகைக்கு எடுப்பேன். பதநீர்த் தட்டுப்பாடு ஒரு புறம் இருக்க, பதநீர் இறக்குறது நிரந்தரத் தொழிலாக இல்லாததால் பதிநீர் இறக்கும் வேலையைச் செய்ய வேலையாட்கள் கிடைக்கிறதும் சிரமமா இருக்கு'' என்றவர், தென்னை சர்க்கரை ரூட் பிடித்தது பற்றிப் பேசினார்.

''பனை சர்க்கரையில் கிடைச்ச அனுபவத்தை வெச்சு அதன் பின் தென்னை தெளுவைச் சேகரித்து சர்க்கரை எடுக்கிற முடிவுக்கு வந்தோம். அதற்காக மரங்களை குத்தகைக்கு எடுத்தோம். தென்னை தெளுவு வருடம் முழுவதும் கிடைக்கும் என்பதால மரம் ஏறுபவர்கள் நிரந்தர வருமானத்துக்காக எங்களைத் தேடி வர ஆரம்பிச்சாங்க.

உஷா ராணி
உஷா ராணி

காலையில 4 மணிக்கெல்லாம் தெளுவை தென்னை மரத்தில் இருந்து எடுத்து வடிகட்டி, பாகு காய்ச்சி, சூடுபடுத்தி சர்க்கரை ஆக்கும் பணிகள் பரபரப்பாக நடக்க ஆரம்பிச்சிடும். வெளிநாடுகளில் தென்னஞ் சர்க்கரைக்கு உண்மையில் நல்ல வரவேற்பு இருக்கு'' என்றவர்,

''பல தோல்விகளுக்குப் பின் இப்போ மாதம் நான்கு லட்சம் வரை வருமானம் கிடைக்குது. எங்க யூனிட்ல 20 பேர் வேலை பார்த்துட்டிருக்காங்க. பனை மரங்களோட அழிவைத் தடுக்கிறதில் நாங்களும் பங்காற்றியிருக்கோம்னு நினைக்கும்போது நிறைவா இருக்கு. மேலும், சில பனங்கன்றுகளையும் நட்டு வளர்க்க ஆரம்பிச்சிருக்கோம்.

கணவருக்கு வேலை சென்னையில் என்பதால சென்னைக்கும் திருச்செங்கோட்டுக்கும் மாறி மாறிப் பயணம் செய்து பிசினஸைக் கவனிச்சுக்கிறேன். என்னுடைய இந்த வெற்றி என் கணவர் சரவணபவன் கொடுத்த நம்பிக்கை!" என்கிறார் உஷாராணி உற்சாகத்துடன்.