Published:Updated:

நாம உழைச்சாதான் நமக்குச் சாப்பாடு! - வெங்கடேஸ்வரி

வெங்கடேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
News
வெங்கடேஸ்வரி

உழைக்கும் கரங்கள்

“பொம்பளைப் புள்ளையைப் போய் மீன் விக்க விட்டிருக்கியே... உனக்குக் கேவலமா இல்லையான்னு அம்மாவை உறவுக்காரங்க திட்டுவாங்க. அதை வெச்சு அம்மாவுக்கும் எனக்கும் வாக்குவாதம் வர்றப்ப ‘பேசுவறங்க வந்து நமக்குச் சோறு போடப்போறதில்லை. நாம உழைச்சாதான் சாப்பாடு’ன்னு சொல்லி அம்மா வாயை அடைப்பேன்’’ என்று சிரிக்கிற வெங்கடேஸ்வரி, உழைப்பின் அர்த்தத்துக்கு உதாரணமாகத் திகழ்கிறார். காலையில் மீன் வியாபாரம், மாலையில் ஃபேன்ஸி நகைகள் வியாபாரம், விழாக்காலங்களில் பெயின்டர் வேலை என்று சுழன்று சுழன்று உழைக்கிறார் புதுக்கோட்டை காமராஜபுரத்தைச் சேர்ந்த 24 வயது வெங்கடேஸ்வரி.
வெங்கடேஸ்வரி
வெங்கடேஸ்வரி

அதிகாலை 3:30 மணி. ஆண்களே பெருவாரியாக சூழ்ந்திருந்த சந்தைப் பேட்டை மீன் மார்க்கெட் ஏலகளத்தில், பெரும் குரலெடுத்து, தன் பங்குக்கு ஏலத்தில் ஈடுபட்டிருந்தார் வெங்கடேஸ்வரி. ஏலத்தில் எடுத்த மீன்களோடு சைக்கிள் மிதிக்க தயாரானவரிடம் பேசினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“பிறந்து வளர்ந்தது எல்லாமே காமராஜ புரத்துலதான். அப்பா மீன் வியாபாரத்துல இருந்தாலும் வறுமைக்கு மட்டும் எங்க வீட்ல பஞ்சமேயில்லைன்னு சொல்லலாம். வறுமையை சரிகட்ட வேலைக்குப் போக அம்மா முயற்சி செய்தபோதெல்லாம், வேண்டாம்னு அப்பா தடுத்தார். வறுமையினால படிக்க முடியலை. சின்ன வயசுலேயே எனக்குக் கல்யாணத்தையும் பண்ணி வெச்சுட்டாங்க. கடன் தலைக்கு மேல போன ஒரு நிலையிலதான் அப்பா காலமானார். இருந்தவரைக்கும் எங்களை நல்லா பார்த்துகிட்ட அப்பா, எங்களுக்குன்னு பெருசா எதையுமே சேர்த்து வெக்கலை. அப்பா இறப்புக்குப் பிறகு, கடன்காரங்களோட நெருக்கடி அதிகமாச்சு.

வெங்கடேஸ்வரி
வெங்கடேஸ்வரி

அப்பா தொழிலை தலையில சுமக்க அம்மா முடிவெடுத்தாங்க. தன் தாலியை அடகு வெச்சு தலையில அன்னக்கூடையை சுமந்தாங்க. மீன் விக்கணும்னா சாதாரணம் இல்லயே... தலையில கூடையை வெச்சுக் கிட்டு ரொம்ப தூரம் நடக்கணும். அதுவரைக்கும் வேலைக்குப் போகாத அம்மாவால அதைச் செய்ய முடியலை. உடம்புக்கு முடியாம படுத்துக்கிட்டாங்க” என்கிறவர், அம்மாவுக்குப் பதிலாக தான் களத்தில் இறங்கிய கதையையும் சொல்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘நான் மீன் விக்கப்போறேன்னு சொன்னதும் புகுந்த வீடு, சொந்தக் காரங்கன்னு பலரும் கடுமையா எதிர்த் தாங்க. என் முடிவுல நான் உறுதியா நின்னதைப் பார்த்த என் வீட்டுக்காரர் என் நிலைமையைப் புரிஞ்சுகிட்டார். காமராஜ புரத்துலதான் நான் மீன் விற்க ஆரம்பிச்சேன். ஓரளவுக்குப் பரிட்சயமான ஏரியாங்கிறதால, மீன் விற்கிறதுல எனக்குப் பெருசா கஷ்டம் தெரியலை. சைக்கிள்ல `மீனு மீனு, நண்டு, இறால்'னு சத்தம் போட்டுக்கிட்டே ஏரியாவுக் குள்ள போவேன். சிலர் என்னை பார்த்து கிண்டல் பண்ண ஆரம்பிச்சாங்க. எங்க கடன் தீரணுமே... அதனால அதையெல்லாம் கண்டுக்கவே மாட்டேன். ஆரம்பத்துல இந்த ஏரியாவுல மீன் விக்கிற அண்ணனுங்க என்னை எதிரி மாதிரி பார்த்தாங்க. அவங்க வியாபாரத்தைக் கெடுத்து ஒருபோதும் நான் வியாபாரம் பண்ண மாட்டேங்கிறதை என் செயல்கள் மூலமா உணர்ந்ததுக்கு அப்புறமா எனக்கு ரொம்ப சப்போர்ட் செய்தாங்க” என்கிறவர், தொழிலில் இழப்புகளைச் சந்திக்காமல் இல்லை.

வெங்கடேஸ்வரி
வெங்கடேஸ்வரி

‘‘திங்கள் வெள்ளிக் கிழமைகள்ல மீன் அவ்வளவா விக்காது. அதேமாதிரி, எல்லா நேரமும் மீன் விக்கவும் செய்யாது. அதை ஐஸ்ல வெச்சு, என்னை நம்பி வாங்குறவங்களுக்கு நான் கெடுதல் பண்ணினதில்லை. அப்படியே தூக்கிக் கொட்டதான் செய்வேன். சூழ்நிலையை உணர்ந்த பிறகு, ஏலத்துல நல்லா விக்கிற மீன், நண்டுகளை மட்டும் தான் வாங்கிக்கிட்டு வருவேன். `சுத்தம் பண்ணி கொடுங்க'ன்னு கேட்கிறவங்களுக்கு எவ்வளவு நேரமானாலும் சுத்தம் பண்ணி கொடுத்துட்டுதான் மறுவேலை பார்ப்பேன். பேரம் பேசுறவங்ககிட்ட எனக்கு இதனால எவ்வளவு வருமானம் கிடைக்கும்கிறதை பட்டுன்னு சொல்லிடுவேன். அதுக்குப் பிறகு பேரம் பேச மாட்டாங்க’’ என்று சைக்கிளை மிதித்தபடி வியாபாரத்துக்குக் கிளம்புகிறார் வெங்கடேஸ்வரி.

மதியம் இரண்டு மணி அளவில் வீட்டுக்கு வந்த வெங்கடேஸ்வரியோடு மீண்டும் பேச ஆரம்பித்தோம். “மீன் வியாபாரம் முடிஞ்சதும் மதிய நேரம் சும்மாதானே இருக்குது. என்ன பண்ணலாம்னு யோசிச்சப்பதான் கவரிங் நகைகள் விற்கலாமேங்கிற ஐடியா வந்தது. வீட்டை விட்டு வெளியே போக முடியாதுங்கிற பெண்கள்தான் என் டார்கெட். ஓரளவுக்கு கையில பணம் வந்ததும் கவரிங் நகை, வளையல் எல்லாத்தையும் வாங்கினேன். மதியம் நாலு மணிக்கு மேல கிளம்பினா வீட்டுக்கு வர ராத்திரி எட்டு மணி ஆகிடும். பிசினஸ் இப்போ நல்லா போகுது. இதுபோக வொயர் கூடை பின்னுறது, தையல்னு பல வேலைகளைக் கத்துவெச்சிருக்கேன். அப்பா இறந்த இந்த ஒன்றரை வருஷத்துல, கடன் எல்லாம் பாதிக்குப் பாதி அடைச்சுட்டேன். என் ரெண்டு பொண்ணுங்களையும் நல்லா படிக்க வைக்கணும், அம்மாவை நல்லா பார்த்துக்கணும். இதுதான் என்னோட ஆசை’’ என்றபடி சைக்கிளை மிதிக்க ஆரம்பிக்கிறார் வெங்கடேஸ்வரி.