Published:Updated:

லாக்டௌன்... குக்கீஸ் மாவு பிசினஸில் கலக்கும் இளம்பெண்!

குக்கீஸ்
குக்கீஸ்

குக்கரில் பேக் செய்வோருக்குத் தகுந்தவாறும் குக்கீஸ் மாவு தயாரித்தேன்.

கொரோனா லாக்டௌனால் வேலை பறிபோனவர்கள், தொழிலைத் தொலைத்தவர்கள் பலர். வாழ்வாதாரம் முடங்கும்போது, மனதில் அச்சமும் பதற்றமும் சூழ்ந்துகொள்ளும்தான். ஆனால், அதற்குத் தீனி போடாமல் மாற்றி யோசிப்பவர்கள், உலகமே பொருளாதார வீழ்ச்சியில் இருக்கும்போதும் தங்கள் வருமானத்தை ஸ்திரப்படுத்திக்கொள்ளும் சாமர்த்தியசாலியாகிறார்கள்.

'செஞ்சிட்டிருந்த வேலை போயிடுச்சுதான். ஆனாலும், இந்தக் கொரோனாவோடு வாழும் நாள்களில் மக்களுக்குத் தேவைப்படும் ஒரு தொழிலை நாம செஞ்சா, வெற்றி ஏன் மிஸ் ஆகப் போகுது?' என்ற நம்பிக்கையுடன், மாற்றுவழிப் பாதைகள் கண்டடைந்த பெண்கள் பலர். அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் அஸ்வினி.

Cookies
Cookies

லாக்டௌனில் கேக், குக்கீஸ் செய்யாத வீடுகள் எட்டாவது அதிசயம். 'எல்லாரும் இப்போ பேக் செய்றாங்க. அவங்களுக்கு ரெடி டு குக் மிக்ஸை நாம செய்துகொடுத்தா என்ன?' என்று யோசித்த சென்னையைச் சேர்ந்த அஸ்வினி ஶ்ரீனிவாசன், ‘the dough co'-ஐ கண்டடைந்திருக்கிறார். 25 வயது இளம் எனர்ஜி.

''இன்ஜினீயரிங் படிச்சிட்டு ஒரு போட்டோகிராபி நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மற்றும் மேனேஜ்மென்ட் வேலைபார்த்தேன். அப்புறம் நண்பரோடு சேர்ந்து '80 டிகிரிஸ் ஈஸ்ட்' என்ற கஃபேயை தொடங்கினேன்.

லாக்டௌனால் அதை இப்போது திறக்க முடியவில்லை. பேக்கிங்ல போன வருஷம் ஒரு டிப்ளோமா முடிச்சேன். அது இந்த லாக்டௌனில் என் தொழிலாகியிருக்கு. குக்கீஸ் செய்ய நினைக்கிறவங்களுக்கு ரெடிமேடு குக்கீஸ் மாவு உருண்டைகளை பாக்கெட் செய்து விற்கிறேன். அந்த மாவை ஓவன்ல வெச்சா போதும், குக்கீஸ் ரெடி. குக்கரிலும் செய்யலாம். தொழிலைத் தொடங்கின ரெண்டே வாரத்துல 100 பாக்கெட் விற்பனை ஆகிடுச்சு.

குழந்தைகள் இருக்கும் வீட்டிலிருந்து அதிக ஆர்டர்கள் கிடைக்கின்றன.
the dough co நிறுவனர் அஸ்வினி ஶ்ரீனிவாசன்

இந்த ஐடியா எனக்கு வரக் காரணம், எங்க வீட்டு 4 வயசு வாண்டு, என் அண்ணன் பையன். அவனுக்கு குக்கீஸ் செய்துகொடுத்த மாவு மீதமாகி ஃபிரிட்ஜில் வைத்தேன். வைத்ததையும் கிட்டத்தட்ட மறந்தே போயிட்டேன். சுமார் ஒரு வாரம் கழித்து ஃபிரிட்ஜில் எதேச்சையாக குக்கீஸ் மாவைப் பார்த்தேன்.

அதை மீண்டும் எடுத்து குக்கீஸ் செய்துபோது, சுவை மாறாமல் அப்படியே வந்தது. அப்போதான், இந்த ஐடியா ஸ்பார்க் ஆச்சு. வெளிநாடுகளில் குக்கீஸ் மாவு செய்து விற்பனை செய்வது ரொம்ப பிரபலம். ஆனால் இந்தியாவில் இன்னும் பிரபலமாகவில்லை. இங்கேயும் அதை விற்கலாமேனு நினைச்சு தொடங்கியதுதான், ‘the dough co'.

Aswini Srinivasan
Aswini Srinivasan

லாக்டௌன் நேரத்தில் வீட்டிலிருந்தபடியே குக்கீஸ் செய்வதற்கான மூலப்பொருள்களை மிக்ஸ் செய்வது, குக்கீஸ் மாவின் பதம் சரியாக இருக்கிறதா என்பதை அறிய குக்கீஸ் செய்து பார்ப்பது என தொழில் தொடங்குவது குறித்த பல விஷயங்களை முயற்சி செய்து பார்த்தேன். என் அம்மா குக்கரில்தான் பேக் செய்வார். அதனால் குக்கரில் பேக் செய்வோருக்குத் தகுந்தவாறும் குக்கீஸ் மாவு தயாரித்தேன்.

பொதுவாகவே, குக்கீஸ் செய்யும்போது அதற்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் தேடித் தேடி வாங்குவது, பொருள்களின் அளவு, மாவின் பதம் இதுபோன்ற விஷயங்கள்தான் அதிக டென்ஷன் கொடுக்கும். அந்த விஷயங்களை எளிதாக்கிவிட்டால் குக்கீஸை விரும்பும் அனைவராலும் அவர்களாகவே குக்கீஸ் செய்து சாப்பிட முடியும். எங்கள் நிறுவனத்தில் தயாரித்து விற்கும் மாவைக் கொண்டு சில நிமிடங்களில் குக்கீஸ் தயாரித்துவிடலாம்.

Cookies Dough
Cookies Dough

பெற்றோர் தங்கள் குழந்தைக்கு ஆரோக்கியமான, ஃபிரெஷ்ஷான மற்றும் பிரிஸர்வேட்டிவ் சேர்க்காத உணவுகளைக் கொடுக்கவே விரும்புகின்றனர். நான் தயாரித்து அளிக்கும் மாவில் பிரிஸர்வேட்டிவ் எதுவும் சேர்ப்பதில்லை. அதனால் குழந்தைகள் இருக்கும் வீட்டிலிருந்து அதிக ஆர்டர்கள் கிடைக்கின்றன.

ரெண்டு ஃபிளேவர்களில் குக்கீஸ் மாவு உருண்டைகளைத் தயாரிக்கிறேன். விரைவில் ஆர்கானிக் குக்கீஸ் மாவு தயாரித்து விற்பனை செய்யவும் திட்டமிட்டிருக்கிறேன். கொரோனா பெருந்தொற்று நேரம் என்பதால் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி ஆரோக்கியமான முறையில் மாவு தயாரித்து விற்பனை செய்கிறோம்.

cookies
cookies

ஆர்டரின் பேரில்தான் செய்கிறேன் என்பதால் ஃப்ரெஷ்ஷாவும், 30 நாள்கள்வரை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்த ஏதுவாகவும் இருக்கும். மாவு தயாரிச்ச ஒன்றரை மணி நேரத்தில் கஸ்டமரை அடையணும் என்பதால், சென்னையில் மட்டும்தான் விற்பனை. உங்க லாக்டௌன் பேக்கிங் கிச்சன் சுலபமாக இது நல்ல ஐடியால்ல?!" தம்ஸ்-அப் காட்டுகிறார் அஸ்வினி.

அடுத்த கட்டுரைக்கு