Published:Updated:

2K kids: வேலை, பிரேக், ஓவர்டைம்... ‘தறி’ துர்காவின் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ அனுபவங்கள்!

ஓ.க.ஸ்ரீதேவி

பிரீமியம் ஸ்டோரி

கொரோனா லாக்டௌன், ஐ.டி முதல் பல்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் `வொர்க் ஃப்ரம் ஹோம்' பணிச்சூழலை அறிமுகப் படுத்தியது. ஆனால், பல வருடங்களுக்கும் மேலாகப் பெண்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் பணிவாய்ப்பை வழங்கிவரும் துறை நெசவு. இப்போதும் வீட்டிலேயே தறி போட்டு கூலிக்கு நெய்துகொடுக்கும் பெண்கள் பலர். அவர்களில் ஒருவரான துர்காவிடம் பேசினோம்.

2K kids: வேலை, பிரேக், ஓவர்டைம்... ‘தறி’ துர்காவின் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ அனுபவங்கள்!

மதுரை வண்டியூரைச் சேர்ந்த துர்கா, தன் வீட்டிலேயே கூலி அடிப்படையில் நெசவு செய்துகொடுக்கும் தொழிலாளி. தன் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ அனுபவங் களைப் பகிர்ந்துகொண்டார்.

டிரெயினிங்

‘`நான் முதல்ல பாவு புனையத்தான் கத்துக்கிட்டேன். எட்டு வயசுலருந்தே தறியில நெய்ய ஆரம்பிச்சுட்டேன். முதன்முதலா நெய்தது, நாலு கெஜம் துண்டு. அடுத்து கொஞ்சம் கொஞ்சமா ஜரிகை புடவை நெய்யத் தொடங்கினேன். அப்போ எல்லாம் எங்க வீட்ல தறி இருக்காது. வேற ஒருத்தவங்க வீட்டுக்குத் தான் போகணும். அவங்க கொடுக்குற சம்பளத்துக்கு நெய்துகொடுத்துட்டு வருவேன்.

வொர்க் ஷெட்யூல்

தினமும் வீட்டு வேலைகளையெல்லாம் முடிச்சு வெச்சுட்டு, நெசவை ஆரம்பிப் பேன். கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி நான் வீட்டு வேலைகளை செய்ய மாட்டேன். ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் வீட்ல வேலைகளையும் செஞ்சுட்டு, தறியையும் நெய்யுறது கஷ்டமாத்தான் இருந்துச்சு. அதுக்கப்புறம் பழக்க மாகிருச்சு.

புரொடக்டிவிட்டி

இப்போ நான் நெய்து கொடுக்குறது எல்லாம் கோடம்பாக்கம் காட்டன் புடவைகள். வேற வேலை எதுவும் பார்க்காம தறி வேலை மட்டுமே பார்த்தா, ரெண்டு நாள்ல ஒரு சேலையை முடிச்சிடுவேன். இல்லனா மூணு நாலு நாளாகும். எட்டு புடவைகள் நெய்தா 5,000 ரூபாய் கிடைக்கும். இந்தக் கொரோனா காலத்துல கணவரும் வீட்டுலேயே இருந்த தால எனக்கு உதவினாரு.

பிரேக்

வீட்டுல இருந்துட்டேதானே வேலை பார்க்குறோம், அதனால ஈஸினு எங்களைப் பார்க்கும் பலரும் நெனைப்பாங்க. ஆனா, என்னதான் வீட்டுல இருந்துட்டே வேலை பார்த்தாலும் பொழுதுபோக்குக்கு அப்பப்போ ஏதாச்சும் பண்ணிக்கணும். நான் ரேடியோ கேட்டுட்டேதான் தறி நெய்வேன். ஆனாலும், தறியிலயும் கவனம் சிதறாது. என் கை, காலு, கண்ணுயெல்லாம் ‘அய்யோ எங்களைக் கொஞ்சம் விடேன் துர்கா’னு என்னைக் கேட்கும்போது, சட்டுனு எழுந்து போய் கொஞ்சம் நடந்துட்டு, ரிலாக்ஸ் பண் ணிட்டு, மறுபடியும் வந்து உக்காருவேன்.

2K kids: வேலை, பிரேக், ஓவர்டைம்... ‘தறி’ துர்காவின் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ அனுபவங்கள்!

ஓவர் டைம்

ஓர் எடத்துக்குப் போய் வேலைபார்க்கணும்னா, அதுக்குப் போய், வர பயண நேரம் ஆகும். வீட்டுலயிருந்தே வேலைபார்க்கும்போது, அந்த நேரத்தையும் நாம வேலையில போடலாமேனு நெனச்சு, பல நாள்கள்ல நைட்டும் தறி நெய்வேன்.

சொல்லப்போனா, காலை யில வீட்டு வேலை, வீட்டுக்கு யாராச்சும் வந்து, போகனு நமக்குப் பிற தொந்தரவுகள் இருக்கும். நைட் வேலை பார்த்தா இப்படி எந்தத் தொந்தரவும் இல்லாம நிம்மதியா தறி நெய்யலாம். அதனால எனக்குப் பகலை விட, நைட் வேலைபார்க்கிறது பிடிக்கும். தவிர, பிளவுஸுக்கு காஜா போடுற வேலையையும் பார்த்துக்கொடுக்குறேன்.

க்வாலிட்டி கன்ட்ரோல்

நெசவுத் தொழில்ல பொறுமையும் கவனமும் ரொம்ப அவசியம். ஒவ்வொரு நூலையும் பார்த்துப் பார்த்து செய்யணும். சின்னதா ஏதாச்சும் பிசகினாகூட முதலாளிங்க அதை திருப்பி அனுப்பிடுவாங்க.''

துர்கா சொன்ன ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ அனுபவங்கள், வீட்டிலிருந்து பணிபுரியும் அனைவருக்கும் பொருந்து கிறதுதானே..?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு