
நாணயம் எம்ப்ளாய்மென்ட்! - 3ஞா.சக்திவேல் முருகன்
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் கவர்ச்சிகரமான வேலை ‘டேட்டா அனாலிஸ்ட்’ வேலை என்று சொல்லி இருக்கிறது ஹார்வர்டு பிசினஸ் ரிவியூ ஜர்னல். கிளாஸ்டோர் நிறுவனமும் 2016-ம் ஆண்டின் மிகச் சிறந்த வேலை என்று இதனைச் சொல்லி இருக்கிறது. ‘அல்டைம்டிரிக்’ தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனத்தில் இயக்குநராக இருக்கும் மகேஷ் வெங்கட்ரமணி, ‘‘எனக்குத் தெரிந்த இளைஞர் ஒருவர் ஒரு ஐடி நிறுவனத்தில் ரூ.5 லட்சம் ஆண்டு வருமானம் பெற்றுக்கொண்டிருந்தார். கடந்த ஆண்டு ரூ.50 லட்ச ரூபாய் ஆண்டு வருமானம் பெறும் வேலைக்குச் சென்றிருக்கிறார். அவருக்குக் கிடைத்திருக்கும் வேலை டேட்டா சயின்டிஸ்ட். அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்த வேலைக்கு மிகப் பெரிய தேவை இருக்கும்” என்கிறார். டேட்டா அனலிஸ்ட் வேலை தொடர்பான விவரங்களை அவர் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

‘‘மெக்கன்ஸே குளோபல் இன்ஸ்டியூட் நிறுவனம், ‘2018-ம் ஆண்டு அமெரிக்காவில் மட்டும் 1,40,000 பேரில் இருந்து 1,90,000 பேர் வரை டேட்டா அனலிஸ்ட் வேலைக்காக தேவைப்படுவார்கள்’ என்று சொல்லி இருக்கிறது. இந்தியாவில் இதற்கு இரண்டு மடங்கு அளவுக்கு அதிக அளவில் தேவை இருக்கிறது.
இந்தியாவில் இப்போதுதான் ‘டிஜிட்டல் இந்தியா’ வேகமெடுத்திருக்கிறது. இனிவரும் நாட்களில் இன்னும் நிறைய பேர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்றவற்றுக்கு மாறிய பின் டேட்டா அனலிஸ்ட்களுக்கான தேவை அதிகமாகும். டேட்டா அனலிஸ்ட்கள் அமெரிக்காவில் சராசரி ஆண்டு சம்பளமாக 1,16,840 டாலர் பெறுகிறார்கள்.
அதாவது, ஆண்டுக்கு 79 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்குகிறார்கள். ஃபேஸ்புக் நிறுவனம் 1,33,841 டாலரும், ஆப்பிள் நிறுவனம் 1,49,963 டாலரும், ட்விட்டர் நிறுவனம் 1,34,861 டாலரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 1,19,129 டாலரும், லிங்க்டுஇன் நிறுவனம் 1,38,798 டாலரும், ஐபிஎம் நிறுவனம் 1,10,823 டாலரும் ஆண்டு சம்பளமாக வழங்குகின்றன. அமெரிக்காவில் டேட்டா சயின்டிஸ்ட்களுக்கு நிறுவன செயல் அதிகாரிகளுக்கு இணையான சம்பளம் தரப்படுகிறது” என்கிறார்.
என்ன வேலை?
இணையத்தில் கோடிக்கணக்கான தகவல்கள் இருக்கின்றன. சரியான சமயத்தில் சரியான தகவலை எடுத்துத் தருவதும், அந்தத் தகவல்களின் அடிப்படையில் தகுந்த முடிவெடுக்க உதவி செய்வதும்தான் டேட்டா அனலிஸ்ட்டுக்கான வேலை. இவர்கள், இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்களை சீரமைத்து, ஒழுங்குப்படுத்தி, பகுப்பாய்வின் மூலம் பல விவரங்களைப் பெறலாம்.
இந்த விவரங்களைக் கொண்டு வாடிக்கையாளர்களின் மனநிலையையும், அவர்கள் எதனை நோக்கி செல்கிறார்கள் என்பதையெல்லாம் தெரிந்துகொண்டு, அதற்கு தகுந்தாற்போல் நிறுவனங்கள் முடிவெடுக்க முடியும். இதன் மூலம் விற்பனையைக் கூட்டவும், தேவையான பொருட்களை மட்டும் உற்பத்தி செய்தும், தேவையில்லாத பொருட்களை உற்பத்தி செய்வதைக் குறைத்து தயாரிப்புச் செலவைக் குறைக்கவும், விற்பனையை அதிகரிக்கவும் முடியும்.

வாடிக்கையாளர்களைக் கவரவும், அவர்கள் எந்த பொருட்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள் என்பது குறித்தும் இதன் மூலம் அறியலாம். டிராவல்ஸ் நிறுவனத்திலிருந்து நாசா நிறுவனம் வரை டேட்டா அனலிஸ்ட் பணிக்கு தேவைகள் இருக்கின்றன. சுகாதாரம், உற்பத்தி நிறுவனங்கள், சில்லறை வர்த்தகம், கல்வி, பொது நிர்வாகம் மற்றும் பொருளாதார நிறுவனங்களிலும் தேவை இருக்கிறது.
குறிப்பாக, பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களிலும், வர்த்தக நிறுவனங்களிலும், வங்கிகளிலும் டேட்டா அனலிஸ்ட்களின் தேவை அதிகமாக இருக்கிறது. இந்தத் தேவையை உணர்ந்து, தேசிய பங்குச் சந்தை தனியார் நிறுவனத்துடன் இணைந்து ‘பிசினஸ் அனாலிட்டிக்ஸ்’ என்ற கோர்ஸை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
என்ன செய்ய வேண்டும்?
இந்த டேட்டா அனலிஸ்ட் பணிக்கு நீங்கள் எந்தப் படிப்பு படித்திருந்தாலும் சேரலாம். என்றாலும், கொஞ்சம் கம்ப்யூட்டர் அறிவும், புள்ளியியல் அறிவும் இருப்பது அவசியம்.
மேலும், தகவல் தேடுவதிலும், அதனை பல்வேறு கோணங்களில் பார்த்து ஆராய்ந்து இணைத்துப் பொருள் கொள்ளக்கூடிய ஆர்வம் இருக்க வேண்டும். முடிவு எடுப்பதற்கான திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தகவலை வைத்தே பல விவரங்களை விளக்கக்கூடியவராக இருக்க வேண்டும். முடிவெடுக்க உதவும் வகையில் அந்தத் தகவல்கள் இருக்க வேண்டும். கண்டுபிடிக்கும் முடிவை சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு எடுத்து சொல்லும் திறமையும் வேண்டும்.
டேட்டா அனலிஸ்ட்கள் நிறுவனத் தலைவர்களுடனும், இதரப் பிரிவு தலைமைப் பிரிவில் உள்ளவர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள். தொடர்ந்து தகவல்களைக் கண்காணிக்கவும், அந்த தகவல்களின் அடிப்படையில் முடிவெடுக்கவும், அதனை நிறுவனத்தின் நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவிப்பவராகவும் இருக்க வேண்டும். இதைத் தவிர, தங்களுடைய அறிவை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். புதிய டூல்களையும் தொழில்நுட்பத்தையும் கற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
டேட்டா அனலிஸ்ட்கள் டேட்டா சயின்டிஸ்ட், பிக் டேட்டா அனலிஸ்ட், பிசினஸ் அனலிஸ்ட், டேட்டா ஹேக்கர், கம்யூனிகேட்டர், டிரஸ்ட் அட்வைஸர், பிசினஸ் இன்டெலிஜன்ஸ், டேட்டா மைனிங் அனலிஸ்ட் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள். பல பெயரில் பயிற்சியும் வழங்கப்படுகிறது.
டேட்டா அனலிஸ்ட் கோர்ஸை நிறைய தனியார் நிறுவனங்கள் நடத்துகின்றன. தேசிய பங்குச் சந்தை நிறுவனமும் நடத்துகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் சென்னையில் உள்ள எம்எஸ்எம்இ நிறுவனமும் (The Micro Small and medium Enterprises Development institute (MSME DI) ஒரு மாதப் பயிற்சியினை வழங்குகிறது. இது தவிர, சென்னை ஐஐடி ஆன்லைன் மூலம் இலவச கோர்ஸையும் நடத்துகிறது. இந்த கோர்ஸில் சேர்ந்தும் கற்றுக்கொள்ளலாம்.
இன்னும் அதிகம் சம்பாதிக்க நினைக்கிற ஆசையும் அதற்கான அறிவுநுட்பமும் கொண்டவர்கள் டேட்டா அனலிஸ்ட் வேலைக்கு முயற்சிக்கலாமே!

கப்பல் படையில் மாலுமி வேலைவாய்ப்பு!
பணியின் பெயர்: மாலுமி பணி
கல்வித் தகுதி : 12-ம் வகுப்பு. இதில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடத்தை முதன்மையாகவும், வேதியியல், உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்களில் ஏதேனும் ஒன்றைப் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 1996, ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து 2000 ஆண்டு 31 ஜூலை தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். திருமணமாகி இருக்கக்கூடாது.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 19-12-2016.
மேலும் விவரங்களுக்கு : http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_53_1617b.pdf

டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் 745 வேலை வாய்ப்பு!
பணியின் பெயர்: இன்ஜினீயரிங் பணி
கல்வித் தகுதி: இன்ஜினீயரிங் டிப்ளமோ
வயது வரம்பு: 1996 ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து 2000 ஆண்டு 31 ஜூலைக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.400. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சார்ந்தவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் கட்டணம் ரூ.150 மட்டுமே.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15-12-2016.
மேலும் விவரங்களுக்கு: http://www.delhimetrorail.com/career.aspx