
டாக்டர் சங்கர சரவணன்
‘போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்’ சீசன் - 2 தொடரின் முதல் கட்டுரை இது. இந்தத் தொடரில் சமீபத்திய பொருளாதாரச் செய்திகள், மத்திய - மாநில அரசுகளின் திட்டங்கள், போட்டித் தேர்வு வினாக்களில் இடம்பெறும் பொருளாதாரக் கலைச்சொற்கள் என பல்வேறு விஷயங்கள் இடம்பெறும். இளங்கலை மற்றும் முதுகலை வணிகவியல், இளங்கலை மற்றும் முதுகலை பொருளாதாரம் படிக்கும் மாணவர்கள், போட்டித் தேர்வு எழுதத் தயாராகும் மாணவர்கள் இந்தத் தொடரை வாரம்தோறும் படித்துப் பயன்பெறலாம். பொருளாதாரம் பற்றி பொதுவாகத் தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கும் இந்தத் தொடர் நிச்சயம் பயன்படும்.

ரூபாய் - 1
‘ராமன் எத்தனை ராமனடி’ என்கிற மாதிரி, இந்தியாவின் நகரங்களும் பல பெயர்களில் பரிணமிக்கின்றன. நகரம், மாநகரம், பெருநகரம் என்கிற வகைகள் போதாதென்று மத்திய அரசு, பல்வேறு பெயர்களில் புதிய நகர மேம்பாட்டுத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. சமீப காலமாக பொலிவுரு நகரம், அம்ருத் நகரம், ஹிருதை என பலவிதமான நகர மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து நீங்கள் படித்திருக்கலாம்.
பொலிவுரு நகரங்கள் திட்டத்தை ஆங்கிலத்தில் Smart Cities Mission என்று குறிப்பிடுகிறார்கள். மத்திய அரசின் நகர மேம்பாட்டு அமைச்சகத்தால் (MoUD - Ministry of Urban Development) செயல்படுத்தப்படும் திட்டம் இது. மத்திய அரசு 100 பொலிவுரு நகரங்களை (Smart Cities) அறிவித்தது. பிற்பாடு இன்னும் சில நகரங்கள் சேர்க்கப்பட்டு, இப்போது 109-ஆக மாறியுள்ளது.
2015 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், மத்திய அரசின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று. இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு மொத்தம் ரூ.48,000 கோடியை ஒதுக்கியிருக்கிறது. இந்தத் திட்டத்துக்கென அடையாளம் காணப்பட்ட முதல் இருபது நகரங்கள் ‘கலங்கரை விளக்க நகரங்கள்’ (Lighthouse Cities) என்று அழைக்கப்படுகின்றன. அவை: சென்னை, கோயம்புத்தூர் (தமிழ்நாடு), கொச்சி (கேரளா), பெல்காம், தாவனகரே (கர்நாடகா), விசாகப்பட்டினம் (ஆந்திரா), பூனா, சோலாப்பூர் (மஹாராஷ்ட்ரா), புவனேஸ்வர் (ஒடிசா), சூரத், அகமதாபாத் (குஜராத்), ஜெய்ப்பூர், உதய்பூர் (ராஜஸ்தான்), போபால், ஜபல்பூர், இந்தூர் (மத்தியப் பிரதேசம்), லூதியானா (பஞ்சாப்), கவுகாத்தி (அசாம்), புதுடெல்லி ஆகும். பொலிவுரு நகரத் திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டத்தில் 13 நகரங்களும், மூன்றாவது கட்டத்தில் 27 நகரங்களும் என மத்திய அரசு பல நகரங்களை அறிவித்து வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நகரமும் மத்திய அரசு தரும் நிதி உதவியைக்கொண்டு தனக்குத் தேவையான சில அடிப்படை வசதிகளைச் செய்துகொள்ள முடியும். உதாரணமாக, டெல்லியில் 444 பொலிவுரு வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டன. புவனேஸ்வரில் நகர அறிவு மையங்கள் நிறுவப்பட்டன. அகமதாபாத்தில் சிறப்பு கல்வி அளிக்கும் முனிசிபல் பள்ளிகள் தொடங்கப்பட்டதோடு, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டன. தற்போது 98 பொலிவுரு நகரங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகியவையே தமிழகத்தின் பொலிவுரு நகரங்கள் ஆகும்.
நகரங்களை மறுசீரமைத்துப் புத்துயிரூட்ட (Rejuvenation) மத்திய அரசு தொடங்கியுள்ள ‘அம்ருத்’ என்ற திட்டத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ் 500 நகரங்கள் புத்துயிரூட்டப்படவுள்ளன. Atal Mission for Rejuvenation and Urban Transformation என்பதன் சுருக்கமே அம்ருத் (AMRUT). நம் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவாக பெயரிடப்பட்ட திட்டம் இது. ‘ஸ்மார்ட் சிட்டி’ குறித்து இனி யாராவது கேட்டால், இனி இந்தத் தகவல்களை எல்லாம் எடுத்துச் சொல்லி அசத்துங்கள்!

ரூபாய் 2
இறக்குமதி பற்றி தெரியும். ஆனால், ‘இறக்குமதிக் கவசம்’ (Import Cover) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.ஏ.எஸ். முதல்கட்டத் தேர்வில் இது குறித்த ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அந்தக் கேள்வி...
Which of the following best describes the term ‘Import Cover’ sometimes seen in the news?
A. It is the ratio of value of imports to the Gross Domestic Product of the Country
B. It is the total value of Imports of a Country in a year
C. It is the ratio between the value of Exports and that of Imports between two Countries
D. It is the number of months of Imports that could be paid for by a Country’s international reserves.
இந்தக் கேள்வியைத் தமிழில் பார்ப்போம்.
‘இறக்குமதிக் கவசம்’ (Import Cover) என்பதற்கான சரியான வரையறை பின்வருவனவற்றில் எது?
A. ஒரு நாட்டின் மொத்த இறக்குமதி மதிப்புக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதம்
B. ஒரு நாடு ஓர் ஆண்டில் செய்யும் இறக்குமதியின் மொத்த மதிப்பு
C. இரு நாடுகளுக்கு இடையேயான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மதிப்புகளின் விகிதம்
D. இறக்குமதி மாத எண்ணிக்கை அடிப்படையில் ஒரு நாட்டின் இறக்குமதிச் செலவை ஈடுகட்டும் அந்நியச் செலாவணிக் கையிருப்பின் மதிப்பு
இந்தக் கேள்விக்கான சரியான விடை D-தான். அதாவது, இறக்குமதிக் கவசம் என்பது இறக்குமதி மாத எண்ணிக்கை அடிப்படையில் ஒரு நாட்டின் இறக்குமதிச் செலவை ஈடுகட்டும் அந்நியச் செலாவணிக் கையிருப்பின் மதிப்பைக் குறிக்கும். இதுவே இறக்குமதிக் கவசத்துக்கான நடைமுறை வரையறை.
ஒரு நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு எத்தனை மாத இறக்குமதி செலவைச் சமாளிக்க போதுமானதாக இருக்கும் என்பதையே ‘இறக்குமதிக் கவசம்’ என்று பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். பொருளாதார வல்லுநர்களின் கருத்தின்படி, ஒரு நாட்டில் நாணய மதிப்பு நிலைத்தன்மையோடு (Stability of Currency) இருக்க வேண்டுமெனில், அந்த நாடு எட்டு முதல் பத்து மாதங்களுக்கான இறக்குமதிச் செலவை ஈடுகட்டும் அளவுக்கு அந்நியச் செலாவணிக் கையிருப்பைக் கொண்டிருக்க வேண்டும். அந்தக் கையிருப்புதான் ‘இறக்குமதிக் கவசம்’ ஆகும்.
உங்கள் பொருளாதாரச் சிந்தனையைத் தூண்ட ஒரு கேள்வி: Payment Bank என்பது வங்கிகளில் ஒரு வகை. இதைத் தமிழில் எப்படி அழைக்கிறோம், இந்த வகை வங்கியின் தன்மை என்ன?
இந்தக் கேள்விக்கு விடை தெரிந்தவர்கள் navdesk@vikatan.com என்கிற மின்னஞ்சலுக்கு உடனே அனுப்பலாம். சரியான விடை சொல்லும் முதல் இரு மாணவர்களுக்குப் பரிசு உண்டு.
(தேர்வு தொடரும்)