போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 2 - சுயநல அரசியல்வாதிகளும் சுரண்டல் முதலாளிகளும்!

டாக்டர் சங்கர சரவணன்

ஐ.ஏ.எஸ் முதல்கட்டத் தேர்வில் இடம்பெறும் இரண்டு தாள்களில் இரண்டாம் தாள் - குடிமைப்பணி அறிவுக்கூர்மை (Civil Service Aptitude Test - CSAT) குறித்தானது. ஐ.ஏ.எஸ் ஆகப் போகிறவர்களுக்குப் பல கோப்புகளைப் படித்துப் புரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டிய திறன் அவசியம். அந்தத் திறன், தேர்வர்களிடம் இருக்கிறதா என இந்தத் தேர்வில் சோதிக்கிறார்கள்.

இந்தத் தேர்வில் இடம்பெறும் எட்டு வகையான பகுதிகளில் மிக முக்கியமான பகுதி, ஆங்கிலத்தில் ‘subject comprehension’ என்று அழைக்கப்படும் பாடத்தைப் புரிந்துகொள்ளும்திறன். இந்தப் பகுதியில் பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அரசியல் அறிவியல், நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு அறிவுத் துறை சார்ந்த பத்திகள் ஆங்கிலத்தில் தரப்பட்டு, அவற்றின் கீழ் கேள்விகள் கேட்கப்படும். இந்தக் கேள்விகளுக்கானப் பதில் நேரடியாக இருக்காது என்பதைத் தேர்வர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தக் கேள்விகள், ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே அமைந்திருக்கும் என்பதால், தேர்வர்களுக்கு ஓரளவுக்காவது ஆங்கில அறிவு இருப்பது அவசியம். உதாரணமாக, 2016-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் பொருளாதாரம் சார்ந்து கேட்கப்பட்ட ஒரு பத்தியைக் கவனியுங்கள்.
By killing transparency and competition, crony capitalism is harmful to free enterprise, opportunity and economic growth. Crony capalisim, where rich and the influential are alleged to have received land and natural resources and various Licences in return for payoffs to venal politicians, is now a major issue to be tackled. One of the greatest dangers to growth of developing economies like India is the middle-income trap where crony captalism creates oligarchies that slow down the growth.
இதுதான் தரப்பட்ட பத்தி (Passage). இதைப் புரிந்துகொண்டு, பின்வரும் கேள்விக்குச் சரியான விடை அளிக்க வேண்டும்.
Which among the following is the most logical corollary to the above passage?
(a) Launching more welfare schemes and allocating more finances for the current schemes are urgently needed.
(b) Efforts should be made to push up economic growth by other means and provide Licences to the poor.
(c) Greater transparency in the functioning of the government and promoting the financial inclusion are needed at present.
(d) We should concentrate more on developing manufacturing sector than service sector.
இந்தக் கேள்விகளுக்குச் சரியான விடையளிக்க, Most Logical corollary என்ற தொடருக்கு அர்த்தம் தெரிந்திருக்க வேண்டும். இந்தத் தொடரைத் தமிழில் ‘தர்க்கரீதியான கிளை முடிவு’ அல்லது ‘தர்க்கரீதியில் மிகப் பொருத்தமான பின்முடிவு’ என்று மொழிபெயர்க்கலாம். எப்படி மொழிபெயர்த்தலும், இந்தத் தொடரின் அர்த்தம் நமக்குப் புரிபடுகிறதா என்பதே முக்கியம். இந்தப் பத்தி, முதலாளிகளுக்கும் மோசமான அரசியல்வாதிகளுக்கும் இடையேயான தொடர்பால் ஏற்படும் பொருளாதாரச் சுரண்டலைப் பற்றி பேசுகிறது என்று நீங்கள் புரிந்து கொண்டால், வெரிகுட். இந்தப் புரிதலைக் கொண்டு, தரப்பட்டுள்ள நான்கு கருத்துகளில் நாம் எடுக்கும் தர்க்கரீதியான முக்கிய முடிவு / தீர்வு எது என்பதைச் சொல்ல வேண்டும்.
இந்த நான்கு கருத்துகளில் “நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை அதிகரித்து, நிதி உள்ளடக்கலை (Financial Inclusion) மேற்கொள்வது என்ற கோட்பாட் டின்படி ஏழை எளிய மக்களையும் வங்கிச் சேவை உள்ளிட்ட முக்கிய நிதிச் சேவைக்குள் கொண்டுவருவது’’ என்னும் கருத்தே (அதாவது, வாய்ப்பு விடை - C) சரியான விடை.
மேற்கண்ட பத்தியைப் படிக்கும் போது Crony capitalism என்ற வார்த்தைக்குச் சரியான பொருள் தெரியாததால், சரியான பதிலைக் கண்டறிய முடியாமல் சிலர் தடுமாறி விடுகின்றனர். Capitalism (முதலாளித்துவம்) என்கிற சொல்லுக்குப் பொருள் புரிந்தாலே போதுமானது. venum என்கிற வார்த்தையை ‘விஷம்’ என்று புரிந்து கொண்டால், Venal politicians என்ற வார்த்தைக்கு மோசமான அரசியல்வாதிகள் என எளிதில் சொல்லிவிடலாம். இதுமாதிரியான கேள்விகளுக்கு விடையளிக்க, தரப்பட்ட பத்தி எந்தப் பிரச்னையைப் பற்றிப் பேசுகிறது என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டாலே போதும்.
தொடர்ந்து ஆங்கிலச் செய்திகள், கட்டுரைகளை வாசிப்பதன் மூலம், இந்தப் புரிந்துகொள்ளும் திறனை எளிதாக வளர்த்துக்கொள்ள முடியும்.
(தேர்வு தொடரும்)
படம்: சொ.பாலசுப்ரமணியன்
கேள்விக்கு என்ன பதில்?
கடந்த இதழில் Payment Bank என்பதற்கான தமிழ்ச் சொல் என்ன எனக் கேட்டிருந்தோம். பல நூறு வாசகர்கள் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லியிருந்தார்கள். Payment Bank என்பதற்கு ‘செலுத்துகை வங்கி’ என்ற சொல் ஓரளவுக்குப் பொருத்தமாக இருக்கும். மிகச் சிலரே சரியான பதிலைச் சொல்லியிருந்தார்கள். இந்த வகை வங்கிகளைத் தொடங்க, ரிசர்வ் வங்கி புதிதாக அனுமதி அளித்ததையும், இந்த வகை வங்கிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை டெபாசிட் வாங்க அதிகாரம் இருப்பதையும் நீங்கள் அறிந்துகொண்டிருக்கலாம். இந்த வங்கிகளால், வாடிக்கை யாளர்களுக்கு கடன் வழங்க இயலாது. இந்தியாவின் முதல் செலுத்துகை வங்கி ஏர்டெல் நிறுவனம். தற்போது வாடிக்கையாளர்களிடம் மிகப் பிரபலமாக உள்ள PayTM இந்த வகை வங்கியே.
இந்த வாரக் கேள்வி: ‘Base Erosion and Profit Shifting’ என்பதன் பொருள் என்ன? உங்கள் பதிலைத் தமிழில் எழுதி navdesk@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.