
டாக்டர் சங்கர சரவணன்
ஐ.ஏ.எஸ். தேர்வில், ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிப் புரிந்துகொள்ளும் பொருண்மைப் புரிதிறன் (Comprehension) பகுதியில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியைப் பார்ப்போம். கேள்விக்கானப் பத்தியை நீங்களே படித்துப் பதில் தர முயலுங்கள்.

பத்தி - 1
In the decade, the banking sector has been restructured with a high degree of automation and products that mainly serve middle class and upper middle class society. Today there is a need for a new agenda for the banking and non-banking financial services that does not exclude the common man.
இந்தப் பத்தியைப் படித்துப் பொருளை உள்வாங்கிக் கொண்டீர்கள் என்றால், கீழே உள்ள கேள்விக்குச் சரியான விடையை நீங்கள் தரவேண்டும்.
Which one of the following is the message that is essentially implied in the above passage?
(a) Need for more automating and more products of banks
(b) Need for a radical restructuring of our entire public finance system
(c) Need to integrate banking and non-banking institutions
(d) Need to promote financial inclusion
பள்ளியில் படிக்கிற காலத்தில் ஆங்கிலம் இரண்டாம் தாளில் கேட்கப்படும் பத்திப் புரிதிறன் கேள்விக்கு (Passage Comprehension), அந்தக் கேள்வியில் எந்த வார்த்தை வருகிறதோ, அந்த வார்த்தையைக் கூர்ந்து கவனித்து, பத்தியில் அதே வார்த்தை வரும் வரியை விடையாக எழுதித் தங்கள் புரிதிறனைக் காட்டியவர்கள் உண்டு.பத்தியில் சொல்லப்பட்ட விஷயம் புத்திக்குள் நுழையாதபோது வேறென்ன செய்ய முடியும்?
ஆனால், மேலே தரப்பட்ட கேள்விக்கு அப்படி விடை தர முடியாது. அப்படி அரைகுறையாக விடை தந்தால் பத்தியில் வங்கியின் Automation பற்றி குறிப்பிட்டிருப்பதால், விடை a-யைத் தவறாகத் தேர்வு செய்யக்கூடும்.

பத்தியில் கேட்ட கேள்விக்குச் சரியான விடை தரவேண்டும் என்றால் வாய்ப்பு விடைகள், b, c, d-ல் முறையே இடம்பெற்றிருக்கும் பொருளாதாரச் சொற்றொடர்களான Public Finance System (பொது நிதி அமைப்பு), வங்கிசாரா நிறுவனங்கள், நிதி உட்கொணரல் ஆகிய வார்த்தைகளுக்குத் தேர்வர்களுக்குப் பொருள் தெரிந்திருக்க வேண்டும். பத்தியைச் சரியாகப் படித்துப் புரிந்தபின்பு, பத்தியில் வங்கியில் தானியங்கி பயன்பாடு, பொதுத் துறை நிதியமைப்பைச் சீர்செய்தல், வங்கி மற்றும் வங்கிசாரா நிறுவனங்களை ஒருங்கிணைத் தல் ஆகிய சீர்திருத்தங்கள் வங்கித் துறையால் ஏற்கெனவே கொண்டு வரப்பட்டு விட்டன. இன்றைய முக்கியத் தேவை, சாதாரண மனிதனுக்கு வங்கிச் சேவையைக் கொண்டு செல்வதே என்ற பொருள் தொனிப்பது புலப்படும்.
சாதாரண மனிதனுக்கு (நாட்டின் கடைக்கோடி மனிதனுக்கும்) வங்கிச் சேவையைக் கொண்டு சேர்ப்பதைத்தான் ஆங்கிலத்தில் Financial Inclusion என்றும், தமிழில் ‘நிதி உட்கொணரல்’ என்றும் குறிப்பிடுகிறார்கள். எனவே, இந்தக் கேள்விக்கான பதில் d என்பதாகும். இந்தியப் பிரதமரின் ஜன் தன் யோஜனா இதற்காக ஏற்படுத்தப்பட்டதே.
(தேர்வு தொடரும்)
பொருளாதாரம் மற்றும் வணிகவியல் பாடங்களில் முதுநிலைப் பட்டம் பெற்றவர் களுக்கு மட்டுமே, தமிழக அரசின் தலைமைச் செயலக நிதித் துறையில் உதவிப் பிரிவு அலுவலருக்கான நேரடித் தேர்வு முறை (Direct Recruitment) பணி வாய்ப்பில் (குரூப்-II தேர்வு) சிறப்பிடமும், தகுதி வாய்ப்பும் உண்டு.