மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 6 - ஜி.எஸ்.டி - யால் சீனாவை முந்துமா இந்தியா?

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 6 - ஜி.எஸ்.டி - யால் சீனாவை முந்துமா இந்தியா?
பிரீமியம் ஸ்டோரி
News
போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 6 - ஜி.எஸ்.டி - யால் சீனாவை முந்துமா இந்தியா?

டாக்டர் சங்கர சரவணன்

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 6 - ஜி.எஸ்.டி - யால் சீனாவை முந்துமா இந்தியா?

டந்த இரண்டு வாரங்களாக நாம் அனைவருமே ஜி.எஸ்.டி பற்றியே பேசுகிறோம். எனவே, 2017-ம் ஆண்டு ஜுன் மாதம் நடைபெற்ற ஐ.ஏ.எஸ் முதற்கட்டத் தேர்வில் சரக்கு மற்றும் சேவை வரி பற்றிக் கேட்கப்பட்ட கேள்வி...

What is/are the most likely advantages of implementing ‘Goods and Services Tax (GST)’?

1. It will replace multiple taxes collected by multiple authorities and will thus create a single market in India.

2. It will drastically reduce the ‘Current Account Deficit’ of India and will enable it to increase its foreign exchange reserves.

3. It will enormously increase the growth and size of economy of India and will enable it to overtake China in the near future.

Select the correct answer using the code given below:

a) 1 only

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 6 - ஜி.எஸ்.டி - யால் சீனாவை முந்துமா இந்தியா?b) 2 and 3 only

c) 1 and 3 only

d) 1, 2 and 3

இந்தக் கேள்வியில் ஜி.எஸ்.டி கொண்டு வருவதன் மூலம் விளையும் நன்மைகள் என மூன்று கருத்துக்கள் கூறப்பட்டு, அவற்றுள் எவையெல்லாம் சரியானவை என்று கேட்கப்பட்டு உள்ளது. இனி, சொல்லப்பட்டுள்ள கருத்துக்களைக் கவனிப்போம்.

முதல் கருத்து... ஜி.எஸ்.டி வரி விதிப்பானது, பல்வேறு அரசு நிறுவனங்களால் வசூலிக்கப்படும் பல்வேறு வரிகளை மாற்றியமைத்து இந்தியாவில் ஒற்றைச் சந்தையை  உருவாக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. இந்தக் கருத்து சரியெனப் படித்தவுடன் நமக்குத் தெரிந்துவிடுகிறது. ஜி.எஸ்.டி விதிப்பால் வரும் நன்மைகளை விளக்கும்போது, ஜி.எஸ்.டி, நடப்பில் உள்ள சுமார் 15 மறைமுக வரிகளுக்கு மாற்றாக அமைகிறது என்ற செய்தி பரவலாகச் செய்தித்தாள்களில் இடம்பெற்றுள்ளது. மத்திய அரசு விதிக்கும் மதிப்புக் கூட்டு வரி (CENVAT), உற்பத்தி வரி எனப்படும் கலால் வரி (Excise duty), இறக்குமதி வரி எனப்படும் சுங்க வரி (Customs duty), மாநில அரசு விதிக்கும் மதிப்புக் கூட்டு வரி (STATE VAT), திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரி (Entertainment Tax), உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விதிக்கப்படும் சேவை வரி (Service Tax), விடுதிகளில் உள்ள உயர்தரமான தங்கும் அறைகளுக்கான சொகுசு வரி (Luxury tax), மாநிலங்களுக்கிடையே சரக்குகளை எடுத்துச் செல்வதற்கு விதிக்கப்படும் சரக்கு நுழைவு வரி, நுகர்பொருள் வழங்கலுக்காகப் பஞ்சாயத்து மற்றும் நகர அமைப்புகளால் வசூலிக்கப்படும் Octroi (Octroi என்பது பிரெஞ்சு சொல். அந்தச் சொல்லுக்கு ஆங்கிலத்தில் ‘To Grant’ அதாவது  ‘வழங்குவதற்கு’ என்று பொருள்.தமிழ் அகரமுதலி, Octroi வரியைத் தமிழில் ‘நகர்ச் சுங்க வரி’ என்று குறிப்பிடுகிறது) போன்ற பலவித வரிகளை ஜி.எஸ்.டி-யானது பதிலீடு செய்கிறது.

இப்போது இரண்டாவது கருத்துக்கு வருவோம்.. இந்தக் கருத்து, ஜி.எஸ்.டி நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைப் பெருமளவுக்குக் குறைத்து அந்நியச் செலாவணிக் கையிருப்பை அதிகரிக்க உதவுவதாகக் கூறுகிறது. இந்தக் கருத்து ஓரளவுக்கு உண்மையாக இருக்கக்கூடும் என்றாலும், இந்தக் கருத்தில் உள்ள ‘drastically’ என்ற வார்த்தை இந்தக் கருத்தின் உண்மைத் தன்மையைக் கேள்விக்குறிய தாக்குகிறது.

மேலும், வினாக்களுக்குத் தரப்பட்டுள்ள வாய்ப்பு விடைகளைப் பார்க்கும்போது முதல் மற்றும் இரண்டாம் கருத்துக்கள் மட்டும் இணைந்த வாய்ப்பு விடைகள் (1 and 2 only) தரப்படாததால், இரண்டாம் கருத்து ஓரளவுக்குத்தான் உண்மை என்ற முடிவுக்கு வரவேண்டும். ஒருவேளை 1, 2 ஆகிய இரண்டு கருத்துக்களும் சரியானவை என்ற அடிப்படையில் இந்த வினா அமைக்கப்பட்டு இருக்குமேயானால், இந்த வினாவை உருவாக்கியவர் இரண்டாவது கருத்தில் drastically என்ற வார்த்தையைத் தவிர்த்திருப்பார் என்பதை அனுபவமுள்ள தேர்வர்கள் உணர்ந்து கொள்வார்கள்.
மூன்றாவது கருத்து, ஜி.எஸ்.டி இந்திய பொருளாதாரத்தின் அளவையும், வளர்ச்சியையும் மிகப்பெரிய (enormously)அளவுக்கு அதிகப்படுத்தி, இந்தியாவானது சீனாவை மிகச் சமீப காலத்தில் முந்துவதற்கு வழிவகை செய்யும் என்று கூறுகிறது.

இந்தக் கருத்து ஏதோ ஜோசியக் குறிப்புப் போல் உள்ளது என்பதை வினாத்தாள் பயிற்சியில் உள்ள ஒரு மாணவர் உணர்ந்துகொள்ள முடியும். ஒரு வரி விதிப்பு மாற்றம், ஒரு நாட்டின் பொருளாதார அளவு மற்றும் வளர்ச்சியில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விடும் என்ற கருத்து ஒரு நேர் மறையான அபிப்பிராயமாக இருக்கலாமேயன்றி, 100 சதவிகித உண்மையான கருத்தாக இருக்க முடியாது. அதுவும் ஜி.எஸ்.டி அறிமுகத்தால் இந்தியப் பொருளாதாரம், மிகச் சமீப காலத்திலேயே சீனப் பொருளாதாரத்தைப் பின்னுக்குத் தள்ளி முந்திவிடும் என்ற கருத்து, அதீத வாக்கியமாகவே (Extreme statement) அமைகிறது.

எனவே, மூன்று கருத்துக்களையும் அலசி ஆராய்ந்ததில் முதல் கருத்து மட்டுமே முழுக்க முழுக்கச் சரியானது என்று முடிவுக்கு வருகிறோம். ஆகையால், இந்த வினாவுக்கு வாய்ப்பு விடை a) 1 only என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

I.A.S Preliminary பொதுஅறிவுத் தாளில் மேற்கண்ட பொருளாதாரக் கேள்வியைப்போல, வரலாறு, புவியியல், அறிவியல் தொழில்நுட்பம், பன்னாட்டு நிகழ்வுகள், அரசாங்கத் திட்டங்கள், இந்திய கலாச்சாரம், பன்னாட்டு நிறுவனங்கள் எனப் பல பரிமாணங்களில் அமைந்த 100 கேள்விகள் உள்ளன. ஆனால், அந்தக் கேள்விகளையெல்லாம் படித்து விடையளிப்பதற்குத் தரப்படும் நேரம் 120 நிமிடங்கள்தான். மேலும், தவறாக விடையளிக்கும் கேள்விக்கு நெகடிவ் மதிப்பெண் உண்டு. ஆகவேதான் ஐ.ஏ.எஸ் தேர்வு, பட்டதாரி மாணவர்களின் பொதுஅறிவுக்குச் சவால்விடும் மிகக் கடினமான தேர்வாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால், தெளிவான நோக்கத்தோடு, பாடத் திட்டத்தை நுணுக்கமாக உணர்ந்து, கடினமாக உழைத்துப் படித்து, முறையான பயிற்சியை ஒழுங்காக எடுத்துக்கொண்டால் இந்த மாதிரி கேள்விகளுக்கு விடையளிப்பது எளிதாகிவிடும். “அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும், பெருமை முயற்சி தரும்” என்னும் வள்ளுவரின் வாக்கியத்தை மனதில் பதித்துக்கொண்டால், ஜி.எஸ்.டி-யால் உயரும் காபி விலையைப்போல மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.

 (தேர்வு தொடரும்)

வரலாற்றில் சில வரிகள்...

சில சமயம், நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களின் படித்த படிப்புக்கு அல்லது விருப்பப் பாடத்துக்கேற்ப கேள்விகள் கேட்கப்படுவதுண்டு. இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐ.ஏ.எஸ் நேர்முகத் தேர்வுக்குச் சென்றார்கள். அவர்களுக்கான மாதிரி ஆளுமைத் தேர்வு, அரசுப் பயிற்சி மையத்தில் இலவசமாக நடத்தப்பட்டது. அந்தத் தேர்வில் மூத்த ஆட்சிப்பணி அதிகாரிகளோடு, நேர்காணல் வாரியத்தின் (Interview Board) உறுப்பினராகப் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது, ஜி.எஸ்.டி பற்றிய கேள்வி ஒரு மாணவரிடம் கேட்கப்பட்டது. அந்த மாணவர், அந்தக் கேள்விக்குச் சிறப்பாகப் பதில் சொன்னார். அந்த மாணவரின் விருப்பப் பாடம் வரலாறு என்பதால், தேர்வுக்குழுவில் இருந்த மூத்த அதிகாரி ஒருவர் சோழர் கால வரிகள் பற்றிக் கேட்டார். ஆனால், அந்த மாணவர் அந்தக் கேள்விக்குத் திருப்திகரமான பதிலை அளிக்க முடியவில்லை.

அவருக்கு பின்னர் வந்த மற்றொரு மாணவரிடமும் (இவரும் வரலாற்றை விருப்பப் பாடமாக எடுத்தவர்) சோழர் கால வரிகள் பற்றி கேட்கப்பட்டது. ஆனால், இந்த மாணவர் சற்று நினைவாற்றல் மிக்கவராக இருந்ததால், சில சோழர் கால வரிகள் பற்றிய சுவையான செய்திகளை நினைவுகூர்ந்தார். குறிப்பாக, குமர கச்சாணம் (முருகன்  கோயிலுக்கு செலுத்தப்பட்ட ஒரு பொன் வரி), கீழிறைப் பாட்டம் (சிறு வரிகள்), குசக்காணம் (குயவர்கள் செலுத்தி வந்த தொழில் வரி), வண்ணாரப் பாறை (துணி வெளுப்போர் பாறைகளில் துணியை காயவைப்பதற்காகச் செலுத்திய வரி), கண்ணாலக் காணம் (திருமணம் செய்யும்போது செலுத்தப்பட்ட வரி) எனப் பல வரிகள் பற்றி கூறினார்.

மேலும், இந்தத் தகவல்களை, வரலாற்றறிஞர் கே.கே. பிள்ளை எழுதி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள, தமிழக வரலாறு – மக்களும், பண்பாடும் என்ற நூலில் தமிழ் இணையக் கல்விக் கழக இணையதளத்தில் படித்ததாகவும் சொன்னார். இதனால் முந்தைய மாணவரைவிட இந்த மாணவர் அதிக முயற்சியும், பயிற்சியும், நினைவாற்றலும் உள்ள மாணவராக, நான் இருந்த நேர்காணல் வாரியத்தின் தலைவரால் மதிப்பிடப்பட்டார். படித்த விஷயங்களைச் சரியாகவும், சமயோசிதமாகவும், நினைவுக்கூரும்போதுதான் வெற்றி எளிதில் வசப்படும் என்பதைத் தெரிந்துகொண்டால், போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் இன்னும் ஆழமாகப் பயிற்சி பெற முடியும்!