மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 7 - விலைவாசி உயர்வுக்கு என்ன காரணம்?

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 7 - விலைவாசி உயர்வுக்கு என்ன காரணம்?
பிரீமியம் ஸ்டோரி
News
போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 7 - விலைவாசி உயர்வுக்கு என்ன காரணம்?

டாக்டர் சங்கர சரவணன்

நாம் டீக்கடையில் உட்கார்ந்து பேசும்போது இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி அலசி ஆராய்ந்து கருத்துச் சொல்வதற்கும், ஐ.ஏ.எஸ். தேர்வில் கேட்கப்படும் பொருண்மைப் புரிதிறன் குறித்த வினாவில், இந்தியப் பொருளாதாரம் பற்றிய கருத்தைப் படித்துப்புரிந்து விடை தருவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இதை உணர்ந்துகொள்வதற்கு அடுத்து வரும் பத்தியை நன்கு படித்துப் பார்த்து, விடை தர முயல்வோம்.

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 7 - விலைவாசி உயர்வுக்கு என்ன காரணம்?

India has suffered from persistent high inflation. Increase in administered prices, demand and supply imbalances, imported inflation aggravated by rupee depreciation and speculation - have combined to keep high inflation going. If there is an element common to all of them, it is that many of them are the outcomes of economic reforms. India’s vulnerability to the effects of changes in international prices has increased with trade liberalisation. The effort to reduce subsidies has resulted in a continuous increase in the prices of commodities that are administered.what is the most logical, rational and crucial message that is implied in the above passage?

(a)     Under the present circumstances, India should      completely avoid all trade liberlisation policies and all subsidies.

(b)     Due to its peculiar socio- economic situation, India is not yet ready for trade liberlisation process.

(c)     There is no solution in sight for the problems of continuing poverty and inflation in India in the near future.

(d)     Economic reforms can often create a high inflation economy

இந்தக் கேள்வி, 2015-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.ஏ.எஸ் முதல் கட்டத் தேர்வில் இரண்டாம் தாளான CSAT-ல் (Civil Service Aptitude Test) கேட்கப்பட்ட கேள்வி.

இந்தப் பத்தி,  இந்தியா அதிகப் பண வீக்கத்தால்  அவதிப்படுவது தொடர்பானது. இந்தியாவின் பணவீக்கத்துக்கான காரணங்கள் பற்றி இந்தப் பத்தியில் விளக்கப்பட்டுள்ளது. மேலும், பண வீக்கத்துக்கான காரணங்களின் பொது அம்சம் எது என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன், வணிக தாராளமயமாக்கல் காரணமாக சர்வதேச விலையில் ஏற்படும் மாற்றங்கள் இந்தியாவில் பணவீக்கத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், மானியங்களைக் குறைப்பதற்கு எடுக்கப்படும் தொடர் முயற்சிகள், நிர்வகிக்கப் படும் விலை முறையின் (Administred Price Mechnonism) கீழ் வரும் பொருள்களின் விலைவாசி உயர்வுக்குக் காரணமாவதும் விளக்கப்பட்டுள்ளது.

இந்தப்  பத்தியைப்  படித்துப்  புரிந்துகொண்டபின்  தரப்பட்டுள்ள நான்கு வாய்ப்பு விடைகளில், எந்த விடை அல்லது கருத்து தர்க்க ரீதியில் பெரும்பாலும் சரியானதாகவும் (most logically), பகுத்தறிவுக்கு உகந்ததாகவும் (rational) மற்றும் முக்கியமானதாகவும் (crucial) இருக்கும் என்று கேட்கப்பட்டுள்ளது. சரி இனி... வாய்ப்பு விடைகளை அலசுவோம்.

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 7 - விலைவாசி உயர்வுக்கு என்ன காரணம்?முதல் கருத்து, தற்போது உள்ள சூழ்நிலையில் இந்தியா, எல்லா வணிக தாராளமயமாக்கல் கொள்கைளையும் முழுமையாக தவிர்க்க வேண்டும்.  அதுமட்டுமின்றி, அனைத்து மானியங்களையும் தவிர்க்க வேண்டும். இப்போது இந்தக் கருத்து பகுத்தறிவுக்கு உகந்ததா என்று யோசிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, தர்க்க ரீதியாகவும்  சாத்தியப்படுமா  என்பதையும்  பார்க்க வேண்டும்.

‘‘நம்  நாட்டோட பொருளாதாரக் கொள்கையே தப்புங்க. தாராளமயமாக்கல்னு சொல்லி வெளிநாட்டு கம்பெனிகளை உள்ளே விட்டதுதான் தப்பு. அரசாங்கம் வெளிநாட்டு கம்பெனிக்குச் சாதகமா இருந்துகிட்டு, மானியங்கள்ல கை வைக்கிறாங்க’’ என்று சிலர் பேசுவதையும், எழுதுவதையும் பார்க்கலாம். அப்படிப் பேசுவது அவரது பேச்சுரிமை. ஆனால், இந்தக் கருத்தில் இடம்பெற்றுள்ள ‘All’ என்ற வார்த்தைதான்  தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மிக முக்கியம். நினைத்த மாத்திரத்தில் அனைத்து வகை தாராளமயமாக்கல்களைத் தவிர்ப்பது என்பதும் அனைத்து மானியங்களையும் நிறுத்திவிடுவது என்பதும் நடைமுறைக்கு ஒவ்வாதது, நடைமுறைச் சாத்தியம் இல்லாதது. எனவே, தர்க்க ரீதியாக பகுத்தறிவின் அடிப்படையிலும் முதல் கருத்தை ஏற்புடையதன்று என்பதால் நிராகரிக்கிறோம்.

அடுத்து, இரண்டாவது கருத்துக்கு வருவோம். இந்தியாவில் நிலவும் ஒருவித தனித்தன்மை வாய்ந்த சமூகப் பொருளாதாரச் சூழ்நிலையின் காரணமாக, இந்தியா இன்னும் வணிக தாராள மயமாக்கலுக்குத் தயாராகவில்லை. இந்தக் கருத்து தர்க்க ரீதியாகவும் பகுத்தறிவு வாதப்படியும் ஓரளவு ஏற்புடையதே. பன்னாட்டு நிறுவனங் களையும் உள்நாட்டுப் பெரு நிறுவனங்களையும் அனைத்து வர்த்தகத் துறைகளிலும் தாராளமாகச் செயல்பட அனுமதிக்கும்போது, சிறு வணிகர்கள் பாதிப்படையவே செய்கிறார்கள். ஜி.எஸ்.டி உள்பட எந்தப் புதிய சட்டம் கொண்டு வரப் பட்டாலும், சிறு வணிகத்தின் குரல்வளை நெரிக்கப்படுவதாகக் குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அரசும் அவ்வாறு எழும் குரல்களுக்கு செவிசாய்த்து பிரச்னைகளைத் தீர்க்க முற்படு கிறது. ஆனால், இந்த வினாவைப் பொறுத்தமட்டில், தரப்பட்டுள்ள பத்தியில் இருந்து நாம் பெறும் முக்கியக் கருத்து இதுதான் என்பதைக் கூறமுடியுமா என்று சற்று யோசிக்க வேண்டும். எனவே, மற்ற இரண்டு கருத்துகளையும் படிப்போம். அப்போதுதான் எந்தக் கருத்து மிக முக்கியமான கருத்து என்று முடிவுக்கு வரமுடியும்.

இப்போது மூன்றாவது கருத்தை எடுத்துக் கொள்வோம். பணவீக்கம் குறித்துக் கருத்து சொல்லும் சிலர், ‘‘எனக்குத் தெரிஞ்சவரைக்கும் நம்ம இந்தியாவுல வறுமைய ஒழிக்கறதுக்கும், விலைவாசியைக் கட்டுப்படுத்துறதுக்கும் அரசாங்கத்துக்கிட்ட எந்தத் திட்டமும் இருக்கிறதா  எனக்குத் தெரியலை’’ என்பார்கள்.

இது முற்றிலும் எதிர்மறையான கருத்து. நம்பிக்கை வறட்சியின் உச்சத்தில் அமைந்த கருத்து என்றும் கூறலாம்.

அடுத்து, நான்காவது கருத்து. இந்தக் கருத்து ‘‘பொருளாதாரச் சீர்திருத்தங்கள் கொண்டு வரும்போது, நாட்டில் விலைவாசிகள் உயர்ந்து, பணவீக்கம் அதிகரிக்கிறது’’ என்று கூறுகிறது.

இப்போது இந்த நான்கு கருத்துக்களையும் நம் பொதுப் புத்தியில் உரசிப் பார்த்தால், நான்காவது கருத்துதான் மிகவும் லாஜிக்கலாகவும், குடிமைப் பணியாளராக விரும்பும் ஒருவர் உணர்ந்துகொள்ள வேண்டிய பொருளாதார உண்மையாகவும், பகுத்தறிவு வாதத்துக்கு ஏற்றதாகவும் இந்தப் பத்தியில் இருந்து உணரப்படும் மிக முக்கியக் கருத்தாகவும் உள்ளது.

ஆகையால், நான்காவது கருத்து/வாய்ப்பு விடையை இந்த வினாவுக்கு ஏற்ற மிகப் பொருத்த மான விடை என உணரலாம். இரண்டாவது வாய்ப்பு விடையாக இடம்பெற்ற கருத்து ஓரளவுக்குப் பொருத்தமான விடையாக இருந்த போதிலும் நான்காவது விடையைப் போல், மிகப் பொருத்தமாக இல்லை. எனவே, நான்காவது கருத்தே இந்தக் கேள்விக்கான சரியான விடையாகும்.

போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் கொள்குறி வகைக் கேள்விகளில் சில சமயங்களில் இதைப் போல ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் பொருத்தமானது போல் தோன்றும். உதாரணமாக, இந்தக் கேள்வியில் இரண்டு மற்றும் நான்காவது கருத்துகள் சரியெனத் தோன்றுவதுபோல. அப்படிப்பட்ட தருணங்களில் பொருத்தமான இரண்டு விடைகளில் எது மிகப் பொருத்தமோ அதையே தேர்வு செய்ய வேண்டும்.

இந்த அறிவுரை வினாத்தாளிலேயே இடம் பெற்றிருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் ஒரு வினாவில் பொருத்தமானதாகத் தோன்றினால், அந்த வினா நம் அறிவுக்குச் சவால் விட்டு அமைக்கப்பட்டுள்ள கடினமான கேள்வி என்று எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, அந்தக் கேள்வியே குழப்பமானதாகவும் அரைகுறையாக அமைக்கப்பட்டிருப்பதாகவும் குறைகூறக் கூடாது. இது மாதிரியான குழப்பங்கள் ஏற்படாமல் இருக்க, எதைப் படித்தாலும் அதை ஊன்றிப் படிப்பது அவசியம்! 

 (தேர்வு தொடரும்)


படம்: எம்.விஜயகுமார்

விலைக் கொள்கையில் கலைச் சொற்கள்

1. நிர்வகிக்கப்படும் விலை முறை (Administred Price Mechanism) : சில சமயம் சில பொருள்களின் விலை, அவற்றின் இறக்குமதி மற்றும் பன்னாட்டுச் சந்தையில் அவற்றின் விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மக்களைப் பாதிக்காமல் இருக்கும் பொருட்டு, அந்த விலையில் அரசாங்கம் மானியம் வழங்கி தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. 1970-ல் தொடங்கி, 2004 வரை பெட்ரோல், டீசல் போன்ற பொருள்களின் விலையை அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. பின்னர் வெளிச் சந்தைக்கேற்ப இந்த விலைகள் மாறுபடுமாறு மாற்றியமைக்கப்பட்டன. ஆனால், இப்போதும் மாநிலங்களுக்கிடையே நிலவும் வரி வித்தியாசத்தின் அடிப்படையில், இந்தப் பொருள்களின் விலையிலும் வித்தியாசம் ஏற்படுவதைக் காண முடிகிறது.

2. கொள்ளை லாபத் தடுப்பு (Anti Profiteering) :
ஆங்கில செய்தித்தாள்கள் வாசிக்கும்போது, இந்த வார்த்தையை நீங்கள் பார்த்திருக்கலாம். Profiteering என்ற வார்த்தைக்குச் சட்டத்துக்கு விரோதமாகக் கொள்ளை லாபம் சம்பாதிப்பது என்பது பொருள். இதுபற்றிய சர்ச்சைகளை நீங்கள் அவ்வப்போது படித்திருக்கக்கூடும். உதாரணமாக, 2005-ல் மதிப்புக் கூட்டு வரி அறிமுகப்படுத்தப்பட்டபோது, அரசாங்கம் சில பொருள்களுக்கான வரியைக் குறைத்தது. ஆனால், சுமார் 13 உற்பத்தியாளர்கள் அவ்வாறு குறைக்கப்பட்ட வரியின் பலனை நுகர்வோருக்கு அளிக்காமல் சுமார் ரூ. 40 கோடி கொள்ளை லாபம் சம்பாதித்ததாக 2010-ம் ஆண்டில் வெளியான தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை (CAG Report) கூறுகிறது. இப்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ள ஜி.எஸ்.டி சட்டத்தின் 171-வது பிரிவு, இதுமாதிரியான கொள்ளை லாபத் தடுப்பு முறை குறித்து விளக்குகிறது. ஜி.எஸ்.டி அறிமுகத்தால் குறைக்கப்பட்ட வரிப் பலனை நுகர்வோருக்கு உற்பத்தியாளர்கள் கொண்டு சேர்த்தார்களா என்பதை ஐவர் குழு ஒன்று கண்காணிக்கும் என்று இந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளது.