மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 8 - பட்டியல் பார்த்து பதில் சொல்லுங்கள்!

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 8 - பட்டியல் பார்த்து பதில் சொல்லுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 8 - பட்டியல் பார்த்து பதில் சொல்லுங்கள்!

டாக்டர் சங்கர சரவணன்

‘படம் பார்த்து பதில் சொல்’ என்ற வகைகளைச் சார்ந்த கேள்விகளைப் பள்ளி நாள்களில் பார்த்து இருப்பீர்கள். அதைப் போல, ‘பட்டியல் பார்த்து பதில் சொல்லுதல்’ என்று ஒரு வகைக் கேள்வி இருக்கிறது. நீங்கள் எவ்வளவு தூரம் அறிவுக் கூர்மையுடன் இருக்கிறீர்கள், அதாவது, நீங்கள் எவ்வளவு அலெர்ட்டாக இருக்கிறீர்கள் என்பதைக் கண்டறிய இந்த வகைக் கேள்வி நல்லதொரு கருவியாகும்.   

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 8 - பட்டியல் பார்த்து பதில் சொல்லுங்கள்!

ஐ.ஏ.எஸ் தேர்வு உட்பட    யு.பி.எஸ்.சி-யால் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளில் இந்த வகைக் கேள்விகள் வருவதுண்டு. 23.07.2017 அன்று யு.பி.எஸ்.சி-யால் நடத்தப்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படைத் தேர்வில் (CRPF) கேட்கப்பட்ட ஒரு பட்டியல் கேள்விக் கீழே தரப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலைப் பார்த்துக் கீழே தரப்பட்டுள்ள மூன்று கேள்விகளுக்கும் நீங்கள் விடை அளிப்பதற்குத் தரப்படும் கால அவகாசம்  மூன்று  நிமிடங்கள்தான்.

நீங்கள் முதலீட்டாளராக இருக்கிறபட்சத்தில், கம்பெனிகளின் முதலீட்டு அறிக்கைகளைப் பார்த்து எந்தத் துறையில் முதலீடு செய்யலாம் என்பதை முடிவெடுக்க இந்த மாதிரி பட்டியல்களைப் படிப்பது மிகவும் உதவும். மேலே தரப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள விவரங்களின் சாரம்சத்தை உணர்ந்து, கீழே உள்ள கேள்விகளைக் கேட்டுப் பதிலளித்து, முக்கிய முடிவுகள் எடுக்கலாம். ஓகே, இப்போது பட்டியல், அதைத் தொடர்ந்து கேள்வி...

1. What is the percentage increase in investment in the Electrical sector from 2005-06 to 2009-10?


30%            40%   
50%             60%


2. During the given years, what is the average investment per year for the services sector (in Rupees Hundred Crore)?

490            550
580            670

3. During which one of the following years, was the total investment maximum?

2006-07        2007-08   
2008-09        2009-10


என்ன, கேள்விகளுக்குப் பதில் தயாரா?, மூன்று கேள்விகளுக்கும் சரியான விடை எது எனக் கண்டுபிடித்து விட்டீர்களா?

இந்தக் கேள்விக்கான பதில் ஒன்றும் கம்பசூத்திரம் இல்லை. 6, 7-ம் வகுப்பில் படித்த கூட்டல், கழித்தல், சதவிகிதம் மற்றும் சராசரிக் கணக்குகளை அடிப்படையைக் கொண்டதுதான். ஆனால், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் சரியான பதிலை அளிக்க வேண்டும் என்கிற நெருக்கடி வரும்போது தவறாக விடை அளித்து விடவும் நிறைய வாய்ப்பு உண்டு.

இப்போது முதல் கேள்விக்கு விடையைப் பார்ப்போம்.

பட்டியலில் உள்ள அனைத்து முதலீடுகளுமே 100 கோடி ரூபாய் மதிப்பில்தான் தரப்பட்டுள்ளன என்பதால், பட்டியலில் உள்ள எண்களை மட்டும் பார்த்தால் போதும். 100 கோடியை அந்த எண்ணோடுப் பெருக்கித் துன்பப்பட வேண்டியதில்லை. முதல் கேள்வியில், மின்துறை முதலீடு 2005-06-ம் ஆண்டில் ரூ.500 கோடியிலிருந்து,  2009-10-ம் ஆண்டில் ரூ.800 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது, முதலீட்டுத் தொகை ரூ.300 கோடி அதிகரித்துள்ளது. எனவே, 500 கோடிக்கு 300 கோடி என்றால் 100-க்கு எவ்வளவு எனக் கணக்கிட்டால், 2005-06-லிருந்து 2009-10-ல் முதலீடு எத்தனை சதவிகிதம் உயர்ந்துள்ளது என்பதற்கான விடை. அதாவது, 300-ஐ 500-ல் வகுத்து 100-ல் பெருக்கினால் 60% என்ற சரியான விடை கிடைக்கும். கேள்வி மிக எளிதானதுதான்.     

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 8 - பட்டியல் பார்த்து பதில் சொல்லுங்கள்!

ஆனால், யு.பி.எஸ்.சி தேர்வினை  ஒருமுறை எழுதிய பட்டதாரி மாணவர்கள்கூட இந்தக் கேள்விக்கு எப்படி விடையளிப்பது என்று தெரியாமல் திணறுவதும் உண்டு. காரணம், இந்தக் கணக்கு மனப்பாடம் செய்து எழுத முடியாத ஒன்று. தேர்வரின் புரிந்துகொள்ளல் (Understanding) மற்றும் அறிவுக் கூர்மைப் பயன்பாடு (Application of mind or intelligence) என்ற திறன்களைச் சோதிப்பது.

இரண்டாவது கேள்வி, சேவைத் துறையில் (Service sector) சராசரி முதலீடு ஆண்டுக்கு எவ்வளவு என்று அமைவதால், சேவைத் துறையின் ஐந்து முதலீடுகளையும் கூட்டி (420 + 480 + 500 + 600 + 700), அதனை ஐந்தால் வகுத்தால் சரியான விடையான 550 என்பது கிடைக்கும்.

மூன்றாவது கேள்வி, கொஞ்சம் கவனமாக அணுகவேண்டிய கேள்வி. பதற்றத்தோடு இந்த வினாவைப் படிப்பவர்கள், பட்டியலில் கடைசி வரிசையில் தரப்பட்ட விவரம் மொத்த முதலீடு எனத் தவறாக உணர்ந்து, 2008-09 என்று தவறாக விடையளித்துவிட வாய்ப்புண்டு. கேள்வியைச் சரியாக உணர்ந்தாலும்கூட அதாவது, கடைசி வரிசையில் இருப்பது இதர முதலீட்டு விவரங்கள்தான் என்று சரியாக உணர்ந்தாலும், ஒவ்வொரு ஆண்டுக்கும் மொத்த முதலீடு எவ்வளவு என்பதைத் தனித்தனியாகக் கூட்டிப் பார்த்து ஒப்பிடுவது, அதிக நேரம் பிடிக்கும் வேலை. அதைச் செய்தால் இந்தக் கேள்விக்கு விடையளிக்கவே மூன்று நிமிடங்கள் ஆகிவிடும்.

ஆனால், பட்டியலை விரைவான பருந்துப் பார்வை (Quick glance with an eagle’s eye) பார்த்து ஓராண்டைவிட அடுத்த ஆண்டு முதலீடு அதிகரித்து வருவதையும், அதுவும் குறிப்பாக, கடைசி இரண்டு ஆண்டுகளில் முந்தைய ஆண்டுகளைவிட சற்று அதிகமாக அதிகரித்திருப்பதையும் கண்டுகொள்ள முடியும்.

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 8 - பட்டியல் பார்த்து பதில் சொல்லுங்கள்!மேலும், 2005-06-ம் ஆண்டு கேள்வி வாய்ப்பு விடைகளிலேயே இல்லை என்பதால், அதைக் கண்டுகொள்ளவே தேவையில்லை. 2008-09 மற்றும் 2009-10 ஆண்டுகளை மட்டும் சற்று கூர்ந்து நோக்கினால், முதல் நான்கு துறைகளிலும் 2009-10-லேயே முதலீடு அதிகம் என்பதை உணரலாம். ஐந்தாவதாகத் தரப்பட்டுள்ள இதர முதலீடு என்கிற விவரத்தில் 2008-09 -ம் ஆண்டில் 2009-10-ம் ஆண்டைவிட 30 அலகுகள் முதலீடு அதிகம் இருந்தாலும், அதற்கு முந்தைய துறையான சுரங்கத் துறையில் 2009-10-ம் ஆண்டு 60 அலகுகள் அதிகரித்திருப்பதை உணர்ந்து, 2009-10-ம் ஆண்டுதான் சரியான விடையாக இருக்குமென விரைவாக முடிவுக்கு வரவேண்டும்.

பட்டியலைப் பார்த்து மிகக் குறைந்த காலத்தில் பதில் சொல்வது பயிற்சியினால் மட்டுமே பல மாணவர்களுக்கும் கைகூடும். எனவே, பல விதமான பட்டியலைக் கவனமாகப் படியுங்கள்.  பதில் சொல்லத் தயாராகுங்கள்!

(தேர்வு தொடரும்)

தொழில் துறை உற்பத்தி குறித்த கலைச் சொற்கள்!

எட்டு முக்கியத் தொழில் துறைகளின் வளர்ச்சிக் குறியீட்டு எண் (Index of Eight core industries) மத்திய தொழில் வர்த்தகத் துறை அமைச்சகத்தால் (Ministry of Commerce and industries) வெளியிடப்படுகிறது.      2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இந்தக் குறியீட்டு எண்ணைக் கணக்கிடுவற்கான அடிப்படை ஆண்டை 2004–05-லிருந்து 2011–12-ஆக இந்த அமைச்சகம் மாற்றியமைத்தது.

இந்தக் குறியீட்டு எண் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருள்கள் என எரிசக்தி சார்ந்த நான்கு முக்கியத் துறைகளோடு, மற்றொரு முக்கிய சக்தி துறையான மின்சாரம், வேளாண்மைத் தொழிலுக்கான உர உற்பத்தி, கட்டுமானத் தொழில் ஆதிக்கம் செலுத்துகிற எஃகு மற்றும் சிமென்ட் என எட்டுத் துறைகள் உள்ளன.

இந்தக் குறியீட்டைத் தவிர, அமைச்சகம், IIP (Index of Industrial Production) என்று சொல்லக்கூடிய தொழில் துறை உற்பத்தி குறியீட்டு எண்ணையும் வெளியிடுகிறது. அந்த மொத்தத் தொழில் துறை குறியீட்டு எண்ணில் இந்த எட்டுத் தொழில்களின் வெயிட்டேஜ் தற்போது சுமார் 38 என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.