போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 10 - Price - விலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் போட்டிச் சட்டம்!

டாக்டா் சங்கர சரவணன்
கடந்த 06.08.2017 அன்று, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் 2000 காலியிடங் களை நிரப்ப நடத்தப்பட்ட குரூப் – II A தோ்வை 5.5 லட்சம் போ் எழுதினா். 7.7 லட்சம் போ் விண்ணப்பித்து அவற்றில் 7.4 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, 5.5 லட்சம் போ் தோ்வு எழுதியுள்ளனா். அதாவது, ஒரே ஒரு இடத்துக்கு 275 தோ்வா்கள் போட்டி போட்டு இருக்கின்றனர். எனவே, இந்தத் தோ்வில் ஒரு கேள்விக்குத் தவறான விடை அளித்திருந்தாலும்கூட தோல்வியைத் தழுவ நேரிடலாம்.

இந்தத் தோ்வில் இடம்பெற்ற பொது அறிவுத் தாளில் கேட்கப்பட்ட பொருளாதார வினாக்கள் சிலவற்றை அலசுவோம். அவற்றுள் ஒரு கேள்வி, முற்றுரிமைத் தடைச் சட்டத்தை ரத்து செய்து கொண்டுவரப்பட்ட போட்டிச் சட்டம்/ Competition Act (2002) பற்றியது.
இந்தச் சட்டம் 2003-ல் 12-வது சட்டமாகக் கொண்டுவரப்பட்டது. 2007 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் இதில் திருத்தம் செய்யப்பட்டது. ஆனால், 2009 வரை எம்.ஆர்.டி.பி (MRTP) எனப்படும் முற்றுரிமை வா்த்தக நடவடிக்கைகள் கட்டுப்பாட்டுச் சட்டமும் (Monopoly Restrictive Trade Practices Act) நடப்பில் இருந்தது. 2009-ல் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின் படிதான் இந்தச் சட்டத்தைப் போட்டிச் சட்டம் முழுமையாகப் பதிலீடு (Replace) செய்தது.

நேரு பிரதமராக இருந்த காலம் தொடங்கி இந்தியாவில் தொழில் உற்பத்தியில் அரசும், தனியாரும் ஈடுபடும் கலப்புப் பொருளாதாரக் கொள்கை பின்பற்றப்பட்டு வந்தது. சில உற்பத்தித் தொழில்கள் அரசாங்கத்தின் வசமே இருந்தன. நாட்டின் சோசலிஸக் கொள்கைக்கு அது அவசியம் என்று நேரு கருதினார் 1956-ம் ஆண்டு, சென்னை ஆவடியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸின் 60-வது மாநாட்டில், இந்தியாவில் சமதா்ம சமுதாயத்தை அமைப்பது என்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
நேரு காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வந்த சமதா்மக் கொள்கையை இந்திரா காந்தியும் தொடா்ந்து பின்பற்றினார். தனியார் நிறுவனங்கள் முற்றுரிமைப் பெற்று (Monopolicy) வளா்வது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் நாட்டின் சோசலிஸக் கொள்கைக்கும் உகந்ததாக இருக்காது என மத்திய அரசு கருதியதால், 1964-ல் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.சி.தாஸ் குப்தா தலைமையில், முற்றுரிமை விசாரணைக் குழுவை அமைத்தது.

பொருளாதாரத்தில் தனியாரின் கைஓங்குவது குறித்து ஆராய்ந்து அளித்த அறிக்கையின் அடிப்படையில், 1969-ல் எம்.ஆர்.டி.பி சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்திய அரசியலமைப்பில் உள்ள அரசு நெறிமுறைக் கோட்பாடுகளின் முக்கிய நோக்கமான நலஅரசு (Welfare state) என்ற தத்துவத்தின் அடிப்படையில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1976-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 42-வது அரசமைப்புத் திருத்தத்தின் (42nd Constitutional Amendment) மூலம் இந்திய அரசமைப்பு முகவுரையில் (Preamble of Indian Constitution) இந்தியா இறையாண்மையுள்ள, மக்களாட்சி குடியரசு (Sovereign Democratic Republic) என்ற வாசகம், இந்தியா இறையாண்மையுள்ள சமதா்ம சமயச்சார்பற்ற மக்களாட்சி குடியரசு (Sovereign, Socialist, Secular, Democratic Republic) என்று திருத்தி அமைக்கப்பட்டது. முற்றுரிமை வா்த்தக நடவடிக்கைகள் கட்டுப்பாட்டு சட்டத்தில், 1984-ல் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி, தனியார் நிறுவனங்கள் விளம்பரங்கள் செய்வதற்குக்கூட சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.
ஆனால், 1991-ல் தாராளமயமாக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின், நாட்டின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு தாராளமாக அனுமதிக்கப்பட்டது. அரசு மட்டுமே ஈடுபடலாம் என ஒதுக்கிவைத்திருந்த உற்பத்தித் துறைகளும் தனியாருக்குத் திறந்துவிடப்பட்டன. தாராளமயம், தனியார்மயம் என்று வந்தபிறகு, அதிக மூலதனத்தையும், கட்டமைப்பு வசதியும் பெற்றிருந்த பெரும் தனியார் நிறுவனங்கள், சந்தை நிலவரத்துக்கேற்ப பல தொழில்களில் ஈடுபட ஆா்வம்காட்டின.
இந்தத் தருணத்தில் எம்.ஆர்.டி.பி சட்டத்தின் பொருத்தமின்மை பற்றிய விவாதங்கள் எழுந்தன. வசதியும், வாய்ப்பும்கொண்ட தனியார் நிறுவனங்களும், பல தொழில்களின் அனுமதிப்பும், அவைகளுக்கிடையே போட்டியை அதிகரிப்பதும் அவசியமாகிப் போனது. இதன் காரணமாக எம்.ஆர்.டி.பி சட்டத்தை மாற்றி போட்டிச் சட்டம் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது. நிறுவனங்களிடையே போட்டி நிலவும்போதுதான் நுகா்வோர்க்கு, தரமாகவும், விலை குறைவாகவும் பொருள்கள் கிடைக்கும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
போட்டிச் சட்டத்தின் முக்கிய நோக்கங்கள் வணிக நிறுவனங்களுக்கிடையே போட்டியை ஊக்குவிப்பதும், சந்தை முற்றுரிமையை ஒரு நிறுவனம் முறைகேடாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதுமாகும். வா்த்தகப் போட்டியில், அனைத்து நிறுவனங்களும் ஆரோக்கியமான வா்த்தகச் சூழலை ஏற்படுத்தும் நோக்கத்தையும் இந்தச் சட்டம் கொண்டுள்ளது.
இந்தச் சட்டம் தொடா்பான கலைச்சொற்களில் ‘கொன்று தின்னும் விலை’ அல்லது ‘இரையாக்கும் விலை’ அல்லது ‘வேட்டையாடும் விலை’ என்ற சொற்றொடா் சற்று சுவையானது. ஆங்கிலத்தில் இது ‘Predatory Pricing’ என்று அழைக்கப்படுகிறது.
எந்தவொரு வா்த்தக நிறுவனமும் சந்தையில் தனக்குப் போட்டியாளா்களை இல்லாமல் செய்யும் பொருட்டு, சந்தையில் தான் விற்கும் சரக்கு/வழங்கும் சேவைக்கான விலையை, அதற்கான அடக்க விலையைவிட குறைவாக நிர்ணயிக்கக் கூடாது. அவ்வாறு நிர்ணயித்து தனது போட்டியாளா்களைச் சந்தையிலிருந்து துரத்த நினைப்பது முறையற்ற வா்த்தக போட்டி ஆகும். எனவே, ஒரு நிறுவனம் ஒரு பொருளை மிகக் குறைந்த விலைக்கு வழங்கினாலும், அது அந்தப் பொருளின் அடக்க விலையைவிட அதிகமாகவே இருக்கும். நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியில் அவ்வாறு மிகக் குறைந்த விலையில் ஒரு நிறுவனம் ஒரு பொருளை வழங்கினால், அந்த விலைதான் அந்தப் பொருளின் அடக்கவிலை என்பதையும் நுகா்வோர்கள் அறிந்துகொள்ள முடியும்.
இந்தப் பின்புலத்தைச் சரியாகப் புரிந்து கொண்டவர்கள், இந்தக் கேள்விக்குச் சரியான பதில் தந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

திட்டக்குழு... கடைசி துணைத் தலைவா்!
குரூப் II-A தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் மற்றொரு கேள்வி,
இந்தியத் திட்டக்குழுவின் கடைசி துணைத் தலைவர் யார்?
a. மன்மோகன் சிங் b. நரேந்திர மோடி
c. அருண் ஜெட்லி d. மான்டேக் சிங் அலுவாலியா
2015 ஜனவரி 1 முதல் திட்டக்குழு (Planning Commission), நிதி ஆயோக் (NITI Aayog – National Institution for Transforming India) என மாற்றி அமைக்கப்பட்டுவிட்டதால், மேலே உள்ள கேள்வி இந்தியப் பொருளாதார வரலாற்றில் முக்கியப் பொது அறிவு கேள்வியாகிவிட்டது. மான்டேக் சிங் அலுவாலியா என்பதே மேலே உள்ள கேள்விக்கான சரியான விடை. 1950-ல் தொடங்கி 2015 வரை 65 வருடம் நீடித்திருந்த திட்டக்குழுவுக்கு 24 பேர் துணைத் தலைவர்களாக இருந்திருக்கின்றனர்.
அதன் முதல் தலைவர் குல்சாரிலால் நந்தா, கடைசித் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா. இருவருமே தலா பத்து ஆண்டுகள் திட்டக்குழுவுக்குத் துணைத் தலைவர்களாக இருந்துள்ளனர் திட்டக்குழுத் துணைத் தலைவர் பதவி, கேபினட் அமைச்சர் பதவிக்கு சமமான அந்தஸ்து கொண்டது. திட்டக்குழுவின் துணைத் தலைவர்களாக இருந்த மூன்று பேர் பிற்காலத்தில் இந்தியப் பிரதமராகி உள்ளனர். அவர்கள், குல்சாரி லால் நந்தா, நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆவர். திட்டக்குழுவின் துணைத் தலைவராக இருந்து பிற்காலத்தில் குடியரசுத் தலைவராக ஆனவர் பிரணாப் முகர்ஜி.
திட்டக்குழு துணை தலைவர்கள் பலர் பிற்காலத்தில் நிதியமைச்சர்களாகவும் ஆகியுள்ளனர். திட்டக்குழுவின் துணைத் தலைவராக குல்சாரி லால் நந்தா இருந்தபோதே, தமிழகத்தைச் சேர்ந்த வி.டி. கிருஷ்ணமாச்சாரியும், 1953 முதல் 1960 வரை அதே பதவியில் இருந்துள்ளார். வி.டி.கிருஷ்ணமாச்சாரியா அல்லது, டி.டி.கிருஷ்ணமாச்சாரியா என்கிற குழப்பம் உங்களுக்கு வரலாம். டி.டி.கே என்று அறியப்படும் இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி வேறு; இவர் வேறு. வி.டி.கே எனப்படும் வி.டி.கிருஷ்ணமாச்சாரி, கரூர் மாவட்டத்தில் உள்ள வாங்கல் என்ற ஊரில் பிறந்தவர் மூன்று வட்டமேசை மாநாடுகளிலும் பங்கேற்றவர். 1961 முதல் 1964 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.