மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 13 - நான்கு வகை பணப்புழக்கங்கள்!

போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 13 - நான்கு வகை பணப்புழக்கங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 13 - நான்கு வகை பணப்புழக்கங்கள்!

டாக்டா் சங்கர சரவணன்

பொருளாதாரச் செய்தி களைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதும்போது கலைச்சொல் சிக்கல்கள் இருப்பது எழுதுபவர் களுக்கும் படிப்பவர்களுக்கும் தெரியும். தமிழ், ஆங்கிலம் என இரண்டையும் நன்கு அறிந்தவர் களுக்கு சில சொற்களை ஆங்கிலத்தில் சொன்னால்தான் சட்டெனப் புரியும்.  

போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 13 - நான்கு வகை பணப்புழக்கங்கள்!

ஆங்கிலச் சொல்லுக்கேற்ற கலைச்சொல் தெரியாவிட்டால் நாம் சொல்லவரும் பொருளாதாரச் செய்தியைத் தமிழில் மொழிபெயர்த்துச் சொன்னால், ஆங்கிலத்தில் புரிந்ததைவிடவும், தமிழில் புரிந்துகொள்வது கடினமாகிவிடும்.

உதாரணத்துக்கு, ஆங்கிலச் செய்தித்தாள்களைப் படிக்கும்போது, liquid asset என்ற சொல்லும் liquidity என்ற சொல்லும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருவதைப் பார்த்திருப்போம்.  அந்தச் சொல்லுக்குப் பொருத்தமான தமிழ் சொல் என்ன? liquid asset என்பதை ‘ரொக்கச் சொத்து’ என்றும் liquidity என்பதை ‘ரொக்கத் தன்மை’ என்றும் பொதுவாக தமிழில் மொழி பெயர்க்கிறார்கள்.

ரொக்கம் என்பது உருது அல்லது இந்திச் சொல் என்கின்றன அகராதிகள். ‘இன்று ரொக்கம், நாளை கடன்’ என்று கடைகளில் எழுதப்பட்டு இருப்பதைப் பார்த்திருக்கலாம். Ready Cash என்பதைத்தான் ரொக்கம் என்கிறோம்.

போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 13 - நான்கு வகை பணப்புழக்கங்கள்!



தென் மாவட்டங்களில் வரதட்சணைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘நகை எவ்வளவு? ரொக்கம் எவ்வளவு?’ என்று கேட்பார்கள். அல்லது, ‘நகை எவ்வளவு போடுவீர்கள்? ரொக்கம் எவ்வளவு கொடுப்பீர்கள்?’ என்று கேட்பார்கள். இப்படி வெளிப்படையாகக்கேட்டால், வரதட்சணை  வழக்கு பாய வாய்ப்புண்டு. எனவே,  ‘காசோலையில் எவ்வளவு தருவீர்கள், ரொக்கமாக எவ்வளவு தருவீர்கள்’ என்று கேட்பதுண்டு. இந்தப் பேச்சுவழக்குகளை வைத்துக்கொண்டு liquidity என்பதற்கு ‘ரொக்கத் தன்மை’ என்ற சொல் பொருத்தமான கலைச்சொல்லாகக் கொண்டு பின்வரும் கேள்வியைப் புரிந்துகொள்ள முடியும். இந்தக் கேள்வி 2013-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் கேட்கப்பட்டது.

Consider the following liquid assets

1. Demand deposits with the banks

2. Time deposits with the banks

3. Savings deposits with the bank

4. Currency

The correct sequence of these assets in the decreasing order of liquidity is

a) 1 – 4 – 3 – 2

b) 4 – 3 – 2 – 1

c) 2 – 3 – 1 – 4

d) 4 – 1 – 3 – 2


மேலே தரப்பட்ட கேள்வியில், வங்கியில் வைக்கப்படும் டிமாண்ட் டெபாசிட், டைம் டெபாசிட், சேவிங்ஸ் டெபாசிட் மற்றும் பணம் ஆகியவற்றில் அவற்றின் ரொக்கத் தன்மை அல்லது ரொக்கமாகும் தன்மை அடிப்படையில் இறங்குமுகமாக அமைந்த சரியான வரிசை எது எனக் கேட்கப்பட்டுள்ளது.

கரன்சி என்பது ரொக்கமாகவே இருப்பதால், அது முதலில் வரும். டைம் டெபாசிட் என்பது குறிப்பிட்ட காலத்துக்கென்று அதிக வட்டி லாபம் கருதிச் செய்யப்படும் நிலை வைப்பு (Fixed Deposit) ஆகும். எனவே, அதுதான் மிகக் குறைந்த ரொக்கத் தன்மை உடையது. எனவே, சரியான விடை D என முடிவு செய்யலாம்.

ஆனால், மற்ற இரண்டு வகை டெபாசிட் களுக்கான ரொக்கமாகும் தன்மை குறித்துத் தெரிந்துகொள்வது நல்லது. டிமாண்ட் டெபாசிட்டின் ரொக்கமாகும் தன்மை, சேமிப்பு கணக்கின் ரொக்கமாகும் தன்மையைவிட அதிகம். செக் (Cheque) எனப்படும் காசோலை, Demand Draft எனப்படும் கேட்பு வரைவோலை ஆகியவை, டிமாண்ட் டெபாசிட்களில் அடங்கும். டிமாண்ட் டெபாசிட்களும் கிட்டத்தட்ட பணம் போன்றே கருதப்படுகின்றன.   

போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 13 - நான்கு வகை பணப்புழக்கங்கள்!

நாட்டின் பொருளாதாரத்தில் நடைபெறும் பணப் புழக்கத்தில் ‘Narrow Money’ எனப்படும் குறுகிய பணத்தில் பொதுமக்கள் கையில் இருக்கும் ரொக்கப் பணத்தோடு டிமாண்ட் டெபாசிட்களும் அடங்கும். ‘Broad Money’ எனப்படும் அகன்ற பணம் என்பது குறுகிய பணத்துடன் வங்கிகளில் உள்ள ‘Time Deposit’களையும் சேர்த்துக் குறிப்பதாகும்.

இந்திய ரிசர்வ் வங்கி 1968-க்கு முன்புவரை பணப்புழக்கத்துக்கான அளவீடாக கரன்சி மற்றும் டிமாண்ட் டெபாசிட்களை மட்டுமே கொண்டிருந்தது. இது, கீனிசிய பொருளாதாரத்தின் படி அமைந்த பணத்துக்கான குறுகிய வரையறை ஆகும். இந்த வரையறையை 1968 ஏப்ரலில் Freed Man கருத்தின்படி, Aggregate Monitory Resources (AMR) என மாற்றி அமைத்தது. இப்போதுள்ள, M1, M2, M3 M4 என நாலுவிதப் பணப் புழக்க வகைகள்  குறித்த கருத்தாக்கம் 1977 ஏப்ரல் முதல் ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டது. ‘நாலு காசு இருந்தால்தான் யாரும் மதிப்பார்கள்’ என்கிற மாதிரி, ரிசர்வ் வங்கியும் நாலு வகை பணப் புழக்கத்தை வரையறுத்துள்ளது.

இதில் M1 எனப்படும் குறுகிய பணம் குறித்தும் M3 எனப்படும் அகன்ற பணம் குறித்தும் மேலே பார்த்துவிட்டோம். M2 என்பது குறுகிய பணத்துடன் அஞ்சலகங்கள் மற்றும் வங்கி சேமிப்புக் கணக்கில் உள்ள சேமிப்பைக் குறித்தது. M4 என்பது M3-யோடு அஞ்சலகத்தில் உள்ள அனைத்து வகை டெபாசிட்களையும் சேர்த்துக் குறித்தது. M4 என்பதே பணப் புழக்கத்தைக் குறிக்கும் மிக அகன்ற முறையாகும்.

ஒவ்வோர் ஆண்டும், நாட்டின் பொருளாதார இலக்குகளை நிர்ணயிப்பதற்கு M3 எனப்படும் அகன்ற பணத்தையே ரிசர்வ் வங்கி ஆதாரமாகக் கொள்கிறது. இந்த நடைமுறை சுகுமாய் சக்கரவர்த்தி (Sukhamoy Chakravarty) கமிட்டியின் பரிந்துரையிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பணப் புழக்கத்தால் ஏற்படும் விலை உயர்வைக் கணக்கிடுதல், தேசிய வருமானம் கணக்கிடுதல் போன்றவையும் M3 எனப்படும் அகன்ற பணத்தின் அடிப்படையிலே மேற்கொள்ளப்படுகின்றன.

இதையெல்லாம் படித்துப் புரிந்துகொண்டபின் இந்தக் கேள்விக்கான பதிலை நீங்கள் கண்டு பிடிப்பதில் கஷ்டம் ஏதும் இருக்காதே.

(தேர்ச்சி பெறுவோம்)