மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் - 14 - வரி, வட்டி, வரவு, வருவாய், வருமானம்...

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் - 14 - வரி, வட்டி, வரவு, வருவாய், வருமானம்...
பிரீமியம் ஸ்டோரி
News
போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் - 14 - வரி, வட்டி, வரவு, வருவாய், வருமானம்...

இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?டாக்டா் சங்கர சரவணன்

பொருளாதாரச் செய்திகளைத் தமிழில் படிக்கும் மாணவர்களிடம் ஒருமுறை  வரி, வட்டி, வரவு, வருவாய், வருமானம் இவை ஐந்துக்கும்  பொருத்தமான ஆங்கிலச் சொற்களை சொல்லுமாறு கேட்டேன். ஒருவா்கூட ஐந்துக்கும்  பொருத்தமான தமிழ் சொற்களைக் கூறவில்லை. ஐ.ஏ.எஸ் தோ்வுக்குத் தயாராகும் மாணவா்கள் பொருளாதார விஷயங்களில் கருத்தாக்கத் தெளிவுடன் இருக்க வேண்டும். இதை ஆங்கிலத்தில் ‘Concept clarity’ என்பார்கள். இரண்டு, மூன்று ஆண்டுகளாகத் தோ்வுக்குத் தயாராகும் மாணவா்களிடம் இந்தக் கருத்தாக்கத் தெளிவு இல்லாமல் போகுமானால், அவா்கள் வெற்றிக்கு வெகுதொலைவில் இருக்கிறார்கள் என அா்த்தம்.  

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் - 14 - வரி, வட்டி, வரவு, வருவாய், வருமானம்...

உதாரணமாக, 2016-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தோ்வில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி...

Which of the following is/are included in the capital budget of the Government of India?

1) Expenditure on acquisition of assets like roads, buildings, machinery, etc.,

2) Loans received from foreign governments.

3) Loans and advances granted to the States and Union Territories.

Select the correct answer using the codes given below:

a) 1 only   b) 2 and 3 only

c) 1 and 3 only   d) 1, 2 and 3


இந்தக் கேள்விக்குச் சரியான விடையளிப்பதற்கு தோ்வர்கள் அரசாங்கத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை (Annual financial statement) குறித்தும், அதில் இடம்பெறும் மூலதன வரவு-செலவு கணக்கு (Capital Budget) மற்றும் வருவாய் வரவு-செலவுக் கணக்கு (Revenue Budget) ஆகியவை குறித்தும் அறிந்திருக்க வேண்டும். 

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் - 14 - வரி, வட்டி, வரவு, வருவாய், வருமானம்...இந்திய அரசமைப்பு உறுப்பு 112-ல் (Article 112 of Indian Constitution) ஆண்டு நிதிநிலை அறிக்கை என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது. பட்ஜெட் என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட வில்லை. ஆனால், ஊடகங்களில் பட்ஜெட் என்ற வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது. பொருளாதார நிபுணர்கள், பொதுமக்கள் நன்கு அறிந்த பட்ஜெட் என்ற வார்த்தையையே பரவலாகப் பயன்படுத்துகின்றனா்.

மூலதன பட்ஜெட் மற்றும் வருவாய் பட்ஜெட் ஆகிய இரண்டும் பட்ஜெட்டின் இரண்டு முக்கிய கூறுகளாகும். இந்த இரண்டு கூறுகளில் மூலதன பட்ஜெட்டைவிட வருவாய் பட்ஜெட்தான் நம் அன்றாட வாழ்க்கையோடு அதிக தொடா்பு உடையது. எனவே, வருவாய் பட்ஜெட்டில் வருகிற விஷயங்கள் குறித்து முதலில் பார்ப்போம்.

வருவாய் பட்ஜெட்டில், வருவாய் வரவு (Revenue Receipts), வருவாய் செலவு (Revenue Expenditure) ஆகிய இரண்டும் அடங்கும். வரவு என்றாலே வருவாய்தானே? வரவுக்கும், வருவாய்க்கும் வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா என்கிற கேள்வி நமக்கு வரும். இதற்குப் பதில், வருவாய் எல்லாம் வரவுதான். ஆனால், வரவு என்பது வருவாய் மட்டுமே அல்ல என்று  சொன்னால் கொஞ்சம் குழப்பம் வரும். எனவே, இதனைக் கொஞ்சம் விளக்குவோம்.

வரவு என்பது, வருவாயைவிட சற்று அகலமான பொருளுடையது. ஒருவா் பெறும் ஊதியம் என்பது அவருடைய வருவாய் ஆகும். ஆனால், மாதச் செலவை ஊதியத்துக்குள் அடக்க முடியாமல் கொஞ்சம் கடன் வாங்கினால், அந்தக் கடனும் வரவுதான். ஆனால், அது வருவாய் அல்ல. ஏனென்றால், அந்தக் கடனை அவா் திருப்பிச் செலுத்தியாக வேண்டும். பொதுவாக, திருப்பிச் செலுத்தத் தேவையில்லாத வரவுதான், வருவாய்  என்பது. ஆனால்,  கடன் என்ற வரவு அப்படிப்பட்டதல்ல, கடனுக்கு வட்டி கட்ட வேண்டும். கடன் வாங்கியவா் நாணயமானவராக இருந்தால், அதைத் திருப்பிச் செலுத்தியாக வேண்டும். எனவே, கடன் என்பது கடப்பாடுடன் கூடிய ஒரு வரவு (Receipt with a liability).

அரசாங்கத்தின் வருவாய் வரவு என்பது வரி வருவாய் (Tax Revenue), வரியல்லா வருவாய் (Non – Tax Revenue), இதர வரியல்லா வரவு (Other Non Tax Receipts) என மூன்று முக்கியக் கூறுகளைக் கொண்டது. வரி வருவாய் என்பது அரசாங்கத்தால் வசூலிக்கப்படும் நேரடி வரி (Direct Tax) மற்றும் மறைமுக வரி (Indirect tax) ஆகியவற்றை உள்ளடக்கியது. மத்திய அரசு வசூலிக்கும் நேரடி வரிக்கு உதாரணம், வருமான வரி (Income tax); மறைமுக வரிக்கு உதாரணம் எம்.ஜி.ஆா் நூற்றாண்டான 2017-ல், அவர் பெயருக்கு ஈடாகப் பிரபலமாக விளங்கும் மூன்றெழுத்து வார்த்தை யான ஜி.எஸ்.டி. 

வரியல்லா வருவாய் என்பது வட்டி வரவுகள் (Interest Receipts), பங்குத் தொகை (Dividend) மற்றும் லாபம் (Profit) ஆகியவற்றைக் குறிக்கும். இதில் வட்டி வருவாய் என்பது மத்திய அரசு, மாநில அரசுகளுக்கும், இதர அரசு நிறுவனங்களுக்கும் வழங்கிய கடனுக்குக் கிடைக்கும் வட்டியாகும். பங்குத் தொகை என்பது கூட்டு நிறுவனங்களில் அரசாங்கம் செய்துள்ள முதலீட்டுக்குக் கிடைக்கும் லாபப் பங்காகும். லாபம் என்பது அரசு நிறுவனங்களே நேரடியாக ஈடுபடும் தொழில் மூலம் கிடைப்பது. இதர வரியல்லா வரவுகளில் நாணயத் தயாரிப்பு மூலம் கிடைக்கும் வரவுகள், குடிமைப்பணி ஆணைய தோ்வுக் கட்டணம், அரசுக் கல்லூரிக் கட்டணம், போக்குவரத்து, தகவல்தொடா்பு, பாசனம் போன்றவற்றின் மூலம் பெறப்படும் வருவாய் போன்றவை அடங்கும். 
                                                                                                                                    
மூலதன பட்ஜெட்டில், மூலதன வரவு (Capital Receipts), மூலதனச் செலவு (Capital Expenditure) ஆகிய இரண்டும் அடங்கும். மூலதன வரவைக் கடன் மூலதன வரவு (Debt Capital Receipts), கடனில்லா மூலதன வரவு (Non-Debt Capital Receipts) என இரண்டாகப் பிரிக்கலாம். கடன் மூலதன வரவில் அகக்கடன் (Internal Debt), புறக்கடன் (External Debt) ஆகியவை அடங்கும். அகக்கடன் என்பது நிகரச் சந்தைக் கடன் (Net Market Loan), கருவூலப் பத்திரங்கள் (Treasury Bills), இதர அகக்கடன்கள் (Other Internal Debts) என மூன்று வகைப்படும்.  

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் - 14 - வரி, வட்டி, வரவு, வருவாய், வருமானம்...

அரசானது நிதி நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் கடன் பத்திரங்களை விற்று, சந்தைக் கடன் பெறுகிறது. இந்தச் சந்தைக் கடனின் முதிர்வுக்  காலமான 12 மாதங்கள் நிறைந்தவுடன் கடன் பத்திரங்ளை வாங்கிக்கொண்டு, கடனைத் திருப்பிச் செலுத்திவிடுகிறது. பெறப்பட்ட மொத்த சந்தைக் கடனுக்கும், திருப்பிச் செலுத்தப்பட்ட சந்தைக் கடனுக்கும் உள்ள வேறுபாடே நிகரச் சந்தைக் கடனாகும். சந்தைக் கடன் என்பது நீண்ட காலக் கடனாகும். இதற்கு வட்டி கிடையாது என்பதால், இதை பூஜ்ஜிய வட்டிப் பத்திரம் (Zero Coupon Bond) என்று அழைப்பார்கள்.

கருவூலப் பத்திரம் என்பது ஓராண்டுக்கும்  குறைவான முதிர்வுக் காலம் கொண்ட குறைந்த காலக் கடன் பத்திரங்கள் ஆகும். இவை 14 நாள், 182 நாள் அல்லது 364 நாள் முதிர்வுக் காலம் கொண்டவையாக வெளியிடப்படுகின்றன. இவை அரசாங்கத்தால் மத்திய வங்கிக்கும், பிற வங்கிகளுக்குமே விற்கப்படுகின்றன. இந்த வகை கருவூலப் பத்திரங்கள் தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன. அரசாங்கம் வெளியிடும் இந்த வகையான கடன் பத்திரங்கள், தங்கமுனைக் கடன் பத்திரங்கள் (Gilt Edged Securities) என அழைக்கப்படுகின்றன. இவை தவிர, சிறு சேமிப்பு மீதான கடன் பத்திரங்கள், நீட்டிக்கப்பட்ட கடன் பத்திரங்கள், வழிவகைக் கடன் என வேறு பல மூலதன வரவுகளும் உண்டு.

புறக்கடன்களில் பன்னாட்டு நிறுவனங்களான உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்றவற்றி லிருந்து பெறப்படும் பலதரப்பு கடன்களும், வெளி நாட்டு அரசுகளிடமிருந்து பெறப்படும் இரு தரப்பு கடன்களும் அடங்கும். இவை தவிர, இந்திய பொது நிதியில் (Public Account of India) இருப்பு வைக்கப்பட்டுள்ள சிறுசேமிப்பு நிதி, வருங்கால வைப்பு நிதி போன்றவற்றிலிருந்து அரசாங்கத்தால் பெறப்படும் புறக்கடன்கள், ‘இதரக் கடப்பாடுகள்’  (Other Liabilities) எனும் வகையின் கீழ் வருகின்றன.

கடனில்லா மூலதன வரவில் அரசின் சொத்துக் கள், அதன் பங்குகளை விற்பது, கொடுத்த கடனைத் திரும்பப் பெறுவது போன்றவற்றின் மீது பெறப்படும் மூலதன வரவுகள் அடங்கும். ஆனால், பொதுத் துறை நிறுவன பங்கு விலக்கல் மூலம் பெறப்படும் தொகை கடனல்ல; அது மூலதன வரவில் அடங்காது. பங்கு விலக்கல் தொகையை வரவு வைப்பதற்கு என்று தேசிய முதலீட்டு நிதி என்ற ஒரு சிறப்பு நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய முதலீட்டு நிதியும், இந்தியப் பொது நிதியும் தனித்தனியாக இருப்பு வைக்கப்படும் ஒரு வகை நிதியாகும். இந்த நிதியை இரும்புப் பாதை மூலதன முதலீடு உள்ளிட்ட சில சிறப்பு நோக்கங்களுக்காகவே பயன்படுத்த முடியும்.

மூலதன செலவு என்பது நிரந்தர சொத்துகளை உருவாக்குவதற்காகச் செய்யப்படும் செலவாகும். தொடா் வருமானத்தைத் தரும் சொத்துக்களை உருவாக்கும் செலவுகளும், மாநில அரசுகள் மற்றும் பஞ்சாயத்து நிறுவனங்களுக்கு அளிக்கப் படும் கடன்களும், மூலதனச் செலவுகளில் அடங்கும். இந்திய தணிக்கை பிரிவு 34-ன் கீழ் ஒரு செலவு மூலதன செலவா, இல்லையா என்பதைத் தீா்மானிப்பதற்கென சில நிபந்தனைகள் உள்ளன. அதன் அடிப்படையில் வணிக ரீதியாக பலன் தராத அதிகளவு செலவுகளும், மூலதனச் செலவாக அமைய வாய்ப்புண்டு. புதிய நகரமொன்றை உருவாக்குவது என்பது இந்த வகை செலவுக்குத் தக்க உதாரணமாகும். அதேபோல, தற்காலிக சொத்துகள் மீதான செலவுகளையும் மூலதனச் செலவாகக்கொள்ள இயலாது. மூலதன பட்ஜெட் விவரங்களை உங்கள் மூளையில் இருப்பு வைத்தபின் மேலே கேட்கப்பட்ட ஐ.ஏ.எஸ் கேள்விக்குச் சரியான விடை d) தான் என்பதைக் கண்டறிந்துவிட்டால் உங்கள் மூளை நல்ல மூலதனம் உள்ள மூளைதான்.

வரி, வட்டி, வரவு, வருவாய், வருமானம் இவை ஐந்திற்கும் பொருத்தமான ஆங்கிலச் சொற்கள் முறையே Tax, Interest, Receipt, Revenue, Income ஆகும். சரி, Credit என்பதைத் தமிழில் வரவு எனச் சொல்வதா, கடன் என்று சொல்வதா? இதற்கான பதிலை அடுத்த வாரம் பார்ப்போம்!

(வெற்றி பெறுவோம்)