மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 15 - கிரெடிட் கார்டு வரவா... செலவா?

போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 15 - கிரெடிட் கார்டு வரவா... செலவா?
பிரீமியம் ஸ்டோரி
News
போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 15 - கிரெடிட் கார்டு வரவா... செலவா?

டாக்டா் சங்கர சரவணன்

‘Credit’ என்ற வார்த்தை கடனைக் குறிக்கிறதா அல்லது வரவைக் குறிக்கிறதா என்ற கேள்வியை, கடந்த வாரம் வாசகா்களிடம் கேட்டிருந்தோம். Credit, Credit card, Credit rating போன்ற சொற்கள் பொருளாதாரத்தில் சாதாரணமாகப் புழங்குகின்றன.  

போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 15 - கிரெடிட் கார்டு வரவா... செலவா?

ஆக்ஸ்போர்டு அகராதி Credit என்ற பெயா்சொல்லை ‘‘எதிர்காலத்தில் பணம் செலுத்தப்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், நுகா்வோர் ஒருவா் பணம் செலுத்துவதற்குமுன்பே பொருள்கள் அல்லது சேவைகளைப் பெறும் திறன்” என வரையறுக் கிறது (the ability of a customer to obtain goods or services before payment, based on the trust that payment will be made in the future). எனவே, Credit என்பது எதிர்காலத்தில் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் என்றாலும், அப்போதைக்கு வரவுதான். அதனால்தான் கிரெடிட் கார்டு என்ற கடன் அட்டையை வரவு அட்டை என கௌரவமாகச் சொல்கிறோம்.

கிரெடிட் கார்டு மூலம் கிடைக்கும் கடன் பணம் கிடைக்கும்போது அது வரவாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும், பின்பு அந்தப் பணத்தை நாம்தான் திரும்பக் கட்ட வேண்டும். பிற்பாடு வட்டியுடன் அசலைக் கட்டும் தைரியம் இருப்பவர்கள் மட்டுமே கிரெடிட் கார்டு கடன் வாங்க வேண்டும்.

கிரெடிட் (Credit) என்ற வார்த்தை வினைச்சொல்லாகப் பயன்படும்போது, ஒருவரது கணக்கில் வரவு வைக்கப்படும் வரவுத் தொகையைக் குறிக்கிறது. (adding an amount of money to an account). அதனால்தான் காசோலை நம் கணக்கில் கிரெடிட் ஆகிவிட்டதா என்று ஆா்வத்துடன் பார்க்கிறோம்.

ஒரு நிதி நிறுவனம், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துமா, அவ்வாறு செலுத்துவதற்கு அந்த நிறுவனத்துக்குத் தக்க சொத்துகளோ, நம்பிக்கைத் தரக்கூடிய வருவாய்களோ இருக்கின்றனவா என்பதை ஆராய்ந்து சொல்லும் நிறுவனங்களைக் ‘கடன் செலுத்துத் திறன் மதிப்பீட்டு முகமைகள்’ என்று மிக நீளமாகத் தமிழிலும், ‘கிரெடிட் ரேட்டிங் ஏஜென்ஸிஸ்’ (Credit Rating Agencies, சுருக்கமாக CRA) என்று  ஆங்கிலத்திலும் சொல்கிறார்கள்.

இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கிரெடிட் மதிப்பீட்டு நிறுவனங்கள் குறித்து நீங்கள் அறிந்திருக்கக்கூடும். CRISIL, CARE, ICRA, FITCH & SMERA ஆகியவை இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கிரெடிட் ரேட்டிங் முகமைகள் ஆகும். இவற்றுள் கிரிசில் (CRISIL) இந்தியாவில் உள்ள மிக முக்கியமான கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சி. கிரிசில் நிறுவனம் தொழில் துறை, சேவைத் துறை, நிதித் துறை, சிறு மற்றும் நடுத்தர  தொழில்கள் ஆகியன பல துறைகளிலும் கிரெடிட் ரேட்டிங் செய்கிறது.

உலகளவில் புகழ்பெற்ற கிரெடிட் ரேட்டிங் நிறுனங்கள் பல உள்ளன. அவற்றுள் மூன்று பெரிய நிறுவனங்கள் என அழைக்கப்படு பவை ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் (Standard & Poor), மூடிஸ் ரேட்டிங் (Moody’s Rating) மற்றும் ஃபிட்ச் (FITCH).

போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 15 - கிரெடிட் கார்டு வரவா... செலவா?



கிரெடிட் என்று வரும்போது விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிரெடிட் பற்றி பேசவேண்டியது அவசியமாகிறது. கீழே தரப்பட்டுள்ள கேள்வியைக் கவனியுங்கள்.

Which of the following grants/grant direct credit assistance to rural households?

1) Regional Rural Banks, 2) National Bank for Agriculture and Rural Development, 3)     Land Develop ment Banks.

Select the correct answer using the codes given below:

a)    1 and 2     b)     Only 2

c)    1 and 3     d)    All of the these


இந்தக் கேள்வி 2013-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தோ்வில் கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கான  சரியான விடை c) 1 and 3.

நபார்டு என்று அழைக்கப்படும் வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சிக்கான தேசிய வங்கியானது விவசாயிகளுக்கு நேரடியாக கடன் வழங்குவ தில்லை. மாறாக, விவசாயிகளுக்குக் கடன்  தரும் மண்டல ஊரக வங்கிகளுக்கு (Regional Rural Banks) மறுநிதி வழங்குகிறது. இந்த மறுநிதி வழங்கலை ஆங்கிலத்தில் ‘Re-financing’ என்பார்கள். 

மண்டல ஊரக வங்கிகள் ஏற்படுத்தப்பட்ட தற்கான முக்கிய நோக்கம், விவசாயிகளுக்குக் கடன் வழங்குவதே. மண்டல ஊரக வங்கிகள் கிராமின் வங்கிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த வங்கிகள் தங்களுக்கான நிதி மூலதனத்தை ஊரக மற்றும் புறநகா்ப் பகுதியிலிருந்து கூடுமான வரை திரட்டிக் கொள்ளுமாறு பணிக்கப்பட்டு உள்ளன. மண்டல ஊரக வங்கிகள் சிறு, குறு விவசாயிகளுக்கும் (Small and Marginal farmers), விவசாய கூலித் தொழிலாளா்களுக்கும் (Agricultural labourers), கிராமப்புற கைவினைஞா்களுக்கும் (Rural Artisans) கடன் வழங்குகின்றன. மண்டல ஊரக வங்கிகள் திரட்டும் நிதி மூலதனத்துக்கும் வழங்கும் கடன்களுக்கும் இடையேயான நிதி வேறுபாட்டை, நபார்டு மறுநிதி வழங்கல் மூலம் சரிசெய்கிறது.

இந்தியாவில் ஊரகப் பகுதிகளில் வசிப்பவா் களுக்கு நீண்ட கால கடன் வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டவையே நிலவள வங்கிகள் (Land Development Banks) ஆகும். மற்ற வங்கிகள் விவசாயத்துக்கான குறுகிய காலக் கடன்கள் மட்டுமே வழங்குவதால், விவசாயிகள் வேளாண்மைத் தளவாடங்கள் (Purchasing of Agricultural machineries) வாங்குவதிலும், நிலத்தை நிரந்தரமாக மேம்படுத்துவதிலும் உள்ள சிக்கல் களைத் தீா்க்கும் பொருட்டு நீண்ட காலக் கடன் களை (Long term loans) வழங்கும் நிலவள வங்கிகள் ஏற்படுத்தப்பட்டன. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டு கால அவகாசத்தில் திருப்பிச் செலுத்தும் வசதியுள்ள கடனே, ‘நீண்ட காலக் கடன்’ எனப்படும்.

இந்தியாவின் முதல் நிலவள வங்கி 1920-ம் ஆண்டு பஞ்சாபில் ஜங் என்ற இடத்தில் ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும், நிலவள வங்கி அமைப்பில் முழுமையான முன்னேற்றம் 1929-ம் ஆண்டு சென்னையில் நிலவள வங்கி ஆரம்பிக்கப் பட்டபோதுதான் தொடங்குகிறது என்று            பொருளாதார வல்லுநா் நுபா்சிங், ‘இந்தியாவில் கூட்டுறவு வங்கிகள்’ (Cooperative Banks in India) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார். நிலவள வங்கிகள் வழங்கும் கடன் நீண்ட கால கடன் என்பதால், அதைத் திருப்பிச் செலுத்த சில தருணங்களில் விவசாயிகளுக்கு 20 முதல் 30 வருட காலம் அவகாசம்கூட வழங்கப்படுகிறது. 

இந்தியாவில் நிலவள வங்கிகளின் முக்கியத்து வத்தை 1989-ம் ஆண்டு அமைக்கப்பட்ட வேளாண் கடன், மறு ஆய்வுக் குழு (Agriculture Credit Review Committee (ACRC)) விளக்கியுள்ளது. நிலவள வங்கிகளின் அமைப்பு மாநிலத்துக்கு  மாநிலம் வேறுபடுகிறது. கேரளா, கா்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் விவசாயிகள் வீடுகள் கட்டுவதற்கும், இந்த வகை வங்கிகள் கடன் வழங்குகின்றன. அதனால் இந்த மாநிலங்களில் இவ்வகை வங்கிகள் மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிகள் (State Cooperative Agriculture and Rural Development Banks – SCARDBs) என்று அழைக்கப் படுகின்றன.

‘‘இந்திய விவசாயி கடனில் பிறக்கிறான்; தன் சந்ததிக்குக் கடனையே சொத்தாக விட்டுச் செல் கிறான்” என்று சொல்லப்படுவதுண்டு. இந்தப் பிரச்னைக்கான தீர்வுதான் என்ன?

(வெற்றி பெறுவோம்)


படம்: தி.குமரகுருபரன்