மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 20 - சரக்கு வர்த்தக ஊக்குவிப்பு ஒப்பந்தம்!

போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 20 - சரக்கு வர்த்தக ஊக்குவிப்பு ஒப்பந்தம்!
பிரீமியம் ஸ்டோரி
News
போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 20 - சரக்கு வர்த்தக ஊக்குவிப்பு ஒப்பந்தம்!

டாக்டா் சங்கர சரவணன்

2017-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தோ்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றைப் பார்ப்போம்.

1) Consider the following statements:

1. India has ratified the Trade Facilitation Agreement (TFA) of WTO.

2. TFA is a part of WTO’s Bali Ministerial Package of 2013.

3. TFA came into force in January 2016.

Which of the statements given above is/are correct?

(a) 1 and 2 only

(b) 1 and 3 only

(c) 2 and 3 only

(d) 1, 2 and 3  

போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 20 - சரக்கு வர்த்தக ஊக்குவிப்பு ஒப்பந்தம்!

இந்தக் கேள்விக்கு விடை என்ன என்பதைக் கடைசியில் பார்க்கலாம். வர்த்தக எளிதாக்கல் ஒப்பந்தம் அல்லது வர்த்தக ஊக்குவிப்பு ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் டி.எஃப்.ஏ (TFA) குறித்து முதலில் தெரிந்துகொள்வோம்.

2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில், மத்திய வர்த்தக அமைச்சகம் மற்றும் உலக வங்கி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டி.எஃப்.எஸ் ஒப்பந்த கருத்தரங்கில், அப்போதைய தொழில்(TFS) மற்றும் வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றுகையில், “டி.எஃப்.எஸ் ஒப்பந்தத்தை ஆங்கிலத்தில் ‘Trade Facilitation in Services Agreement’ என்கிறோம்.

2013-ம் ஆண்டு உலக வர்த்தக நிறுவனம், பாலி உச்சி மாநாட்டில் சரக்கு வர்த்தக ஊக்குவிப்பு ஒப்பந்தத்தை (Trade facilitation agreement in goods) நடைமுறைப்படுத்தியது. அதைத் தொடா்ந்து இந்தியா, சேவைத் துறைகளில் வர்த்தக ஊக்குவிப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுமானால் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் பணியாளா்கள் செல்வது எளிதாகும். 

போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 20 - சரக்கு வர்த்தக ஊக்குவிப்பு ஒப்பந்தம்!



சேவைத் துறையில் தகவல் பரிமாற்றச் செலவு குறையும். மேலும், வெளிநாட்டில் சென்று பணியாற்றும் இந்திய தொழிலாளா்களின் விசா தொடா்பான பிரச்னைகள் குறித்தும் டி.எஃப்.எஸ் ஒப்பந்தத்தின் மூலம் தீா்வு காண முடியும்.

எனவே, உலக வர்த்தக நிறுவனம் சேவைத் துறையில் வர்த்தகத்தை எளிதாக்கும் டி.எஃப்.எஸ் ஒப்பந்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார். இந்த ஒப்பந்தத்தை வெகு விரையில் நடைமுறைக்குக் கொண்டுவர உறுப்பு நாடுகளுடனான பேச்சு வார்த்தையை, உலக வர்த்தக நிறுவனம் விரைவுப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சா் அப்போது கோரிக்கை விடுத்தார்.

மேலும், 2014-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சரக்கு வர்த்தகம் தொடா்பான ஊக்குவிப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதம் போல் டி.எஃப்.எஸ் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் காலதாமதம் இருக்கக் கூடாதென்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத் துறையின் பங்கை 60% ஆகவும், நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில் 28 சதவிகிதத்தை சேவைத் துறையின் பங்களிப்பாகவும் பெறும் இந்தியாவின் வளர்ச்சிக்கு, சேவைத் துறை வர்த்தக ஊக்குவிப்பு ஒப்பந்தம் மிக மிக அவசியமானதாகும் என்பது பொருளாதார வல்லுநா்களின் கருத்து.

2016-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் நாள், உலக வர்த்தக நிறுவனத்தில் இந்தியா கொண்டு வந்த டி.எஃப்.எஸ் ஒப்பந்த தொடக்கத்துக்கான கருத்தாக்கக் குறிப்பு (Concept Note for an initiative on Trade Facilitation in Services) மிகவும் முக்கியமானது. உலக வர்த்தக நிறுவனத்தால் 2014-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சரக்கு வர்த்தக ஊக்குவிப்பு ஒப்பந்தம் (Trade facilitation agreement in goods) சிறப்பாகச் செயல்பட வேண்டுமெனில், சேவைத் துறையில் வர்த்தக ஊக்குவிப்பு ஒப்பந்தம் அவசியம் கொண்டுவரப்பட வேண்டும் என்பது இந்தியாவின் வாதம் ஆகும். 

அந்த ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதால், நாடுகளுக்கிடையே தொழிலாளா்கள் சென்று வேலை பார்ப்பதை ஊக்குவிக்கவும், அவ்வாறு வேலை பார்க்கும் தொழிலாளா்களுக்கு உரிய ஊதியம் கிடைப்பதையும் உறுதி செய்யமுடியும்.
இந்தியாவிலிருந்து பலபேர் வெளிநாட்டுக்குச் சென்று வேலை பார்ப்பதால், அவர்கள் உரிமையைப் பாதுகாப்பதில் இந்தியா பெரிதும் நாட்டம் கொண்டுள்ளது. மேலும், இந்த ஒப்பந்தத்தைச்  செயல்படுத்தினால் நாமும் மிகத் திறமையான வெளிநாட்டு பணியாளா்களைத் தேவையான இடங்களில் பயன்படுத்தி, நம் நாட்டின் உற்பத்தித் திறனைப் பெருக்க முடியும்.

2016-ம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதியன்று டி.எஃப்.ஏ ஒப்பந்தத்தை உலக வர்த்தக நிறுவனத்தில் இந்தியா அறிமுகப்படுத்தியது, இந்தியப் பொருளாதார வரலாற்றில் மிக முக்கிய நாளாகப் பார்க்கப்படுகிறது. அவ்வாறு, இந்தியா அந்த ஒப்பந்தத்தை உலக வர்த்தக நிறுவனத்தில் அறிமுகப்படுத்தும்போது, இந்தியாவுக்கு பல உறுப்பு நாடுகள் ஆதரவு அளித்தன.  

போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 20 - சரக்கு வர்த்தக ஊக்குவிப்பு ஒப்பந்தம்!

உலக வர்த்தக நிறுவனத்தில் இந்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்கும்போது, அந்த நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் வல்லுநா்கள் பின்வரும் மூன்று கருத்துகளை அவசியமாக வலியுறுத்தினர். அவை...

இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் மற்றும் பயன் ஆகியவை குறித்தும், இந்த ஒப்பந்தத்தின் ஆதரவு எல்லை குறித்தும்(Mandate for TFS), டி.எஃப்.எஸ்-ன் சிறப்பு மற்றும் வேறுபடுத்துதல் நிலைகள் குறித்துமான கருத்துகள் ஆகும்.

இந்த ஒப்பந்தம், உலக வர்த்தக நிறுவனம் வெளியிட்டுள்ள GATS (General Agreement on Trade and Services) எனப்படும் சேவைத் துறை வர்த்தகத்துக்கான பொது ஒப்பந்தம் என்பதை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும்.

இந்த ஒப்பந்தத்தைத்தான் விரைவில் உலக வர்த்தக நிறுவனம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மேலே குறிப்பிட்டுள்ளவாறு நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

இனி, நாம் தொடக்கத்தில் கண்ட ஐ.ஏ.எஸ் தோ்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு வருவோம். இந்தக் கேள்வியில் இடம்பெற்றுள்ள முதல் இரண்டு கருத்துகளே சரியானவை. இந்த ஒப்பந்தத்தை ருவாண்டா, சாட், ஓமன் மற்றும் ஜோர்டான் ஆகிய உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்டவுடன், 2017-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் நாள்தான் நடைமுறைக்கு வந்தது. 2014-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உலக வர்த்தக நிறுவனத்தின் 164 உறுப்பு நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள், அதாவது 109 நாடுகள் ஒப்புதல் தர வேண்டும் என்ற நிபந்தனை, இந்த நான்கு நாடுகள் ஒப்பந்தம் தந்த பின்புதான் பூா்த்தியானது.

2014-ல் உலக வர்த்தக நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு வர்த்தக ஊக்குவிப்பு ஒப்பந்தம், நடைமுறைக்கு வர மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கிறது. 2016-ல் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ள சேவை வர்த்தக ஊக்குவிப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு வர எவ்வளவு காலம் ஆகும் என்று காத்திருந்து கவனிப்போம்.

(தேர்ச்சி பெறுவோம்)