
டாக்டா் சங்கர சரவணன்
ஐ.ஏ.எஸ் தேர்வில் கேட்கப்படும் பல்வேறு கேள்விகளில் பொது நிதி மேலாண்மை (Public Finance Management) பற்றிய கேள்விகள் மிக முக்கியமானவை. உதாரணத்துக்குக் கீழே உள்ள இரண்டு கேள்விகளைக் கவனிக்கவும்.

All revenues received by the Union Government by way of taxes and other receipts for the conduct of Government business are credited to the
a) Contingency Fund of India
b) Public Account
c) Consolidated Fund of India
d) Deposits and Advances Fund
விடை (c) Consolidated Fund of India
(IAS: 2012)
The Authorisation for the withdrawal of funds from the Consolidated Fund of India must come from
a) the President of India
b) the Parliament of India
c) the Prime Minister of India
d) the Union Finance Minister
விடை (b) the Parliament of India
(IAS: 2012)
மேலே உள்ள இரண்டு கேள்விகளும் இந்தியாவின் திரள் நிதி (Consolidated Fund of India) தொடர்பானவை. இந்திய அரசமைப்பின் உறுப்பு 266-ல் (Article 266) திரள் நிதி பற்றிக் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசாங்கத்துக்கு வரும் வரி வருவாயும், இதர பிற வருவாய்களும் இந்தியத் திரள் நிதியில்தான் வரவு வைக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி இந்தத் திரள்நிதியிலிருந்து ஒரு பைசாவைக்கூட செலவளிக்க முடியாது.

ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் (Appropriation Act) இயற்றப்படுகிறது.
பட்ஜெட்டில் அடங்கியுள்ள செலவினங்களை இரண்டு வகைகளாகப் பிரித்துக் கூறுவார்கள். சாட்டப்பட்ட செலவினங்கள் (Charged Expenditure), வாக்கெடுப்புக்கு விடப்படும் செலவினங்கள் (Voted Expenditure) என்பவையே அந்த இரு செலவினங்களாகும்.
சாட்டப்பட்ட செலவினங்களை, இந்திய திரள்நிதியிலிருந்து செலவு செய்வதற்கு நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு விட வேண்டியதில்லை. பின்வரும் ஐந்து முக்கிய செலவினங்கள் அதில் அடங்கும்.
(அ) இந்திய குடியரசுத் தலைவர், இந்திய குடியரசு துணைத் தலைவர் ஆகியோரின் ஊதியங்கள் மற்றும் படிகள்
(ஆ) நாடாளுமன்ற அவைகளின் (லோக் சபா, ராஜ்ய சபா) தலைவர்களுக்கான ஊதியம் மற்றும் படிகள்
(இ) இந்திய அரசாங்கத்தின் கடன் பொறுப்புகள்
(ஈ) உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள், ஆடிட்டர் ஜெனரல் போன்றோரின் ஊதியம் மற்றும் படிகள். ஓய்வு பெற்ற நீதிபதிகளின் ஓய்வூதியங்கள்
(உ) ஏதாவது ஒரு நீதிமன்றத்தின் வாயிலாக வழங்கப்பட்ட தொகை அல்லது தீர்ப்பு ஆகியவற்றின் தொகை மற்றும் நாடாளுமன்றம் அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவை ஏற்று அறிவிக்கிற செலவினங்கள்.
இத்தகைய செலவினங்களை இந்திய திரள் நிதியிலிருந்து மேற்கொள்ள இந்திய அரசியல் அமைப்பே அனுமதி அளித்துவிடுகிறது. எனவே, இந்தச் செலவினங்களை மேற்கொள்ள நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த வேண்டியதில்லை. ஆனால், நாடாளுமன்றத்தில் இந்தச் செலவினங்கள் குறித்து விவாதம் நடத்துவதற்கு தடை ஏதுமில்லை.
மேற்குறிப்பிட்ட செலவினங்களில் அடங்காத பிற செலவினங்கள் அனைத்துக்கும் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் அனுமதி பெற்றாக வேண்டும். இந்த வாக்கெடுப்பு செலவினங்களைப் பொறுத்தமட்டில், தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை, உரிய மதிப்பீடுகளுடன் லோக் சபாவில் சமர்ப்பிக்கப்படுகிறது. அந்தக் கோரிக்கைகளை ஏற்பதற்கோ, முற்றிலுமாக மறுப்பதற்கோ அல்லது மதிப்பீடுகளைக் குறைப்பதற்கோ லோக் சபாவுக்கு அதிகாரம் உண்டு.
இவ்வாறு இந்திய திரள்நிதியிலிருந்து செலவளிப்பதற்கு, லோக் சபாவின் அனுமதி கோரி வைக்கப்படும் கோரிக்கைகளைத்தான் மானியக் கோரிக்கைகள் (Demands for Grants) என்று அழைக்கிறோம்.
மானியத் தேவையைப் பொறுத்து இத்தகைய கோரிக்கைகள் குடியரசுத் தலைவரின் பரிந்துரையைப் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு அமைச்சகமும் தனக்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு தனித்தனியாக மானியக் கோரிக்கை வைக்க வேண்டும்.
ஒவ்வொரு மானியக் கோரிக்கையிலும் தேவையான மானியங்களின் மொத்தத் தொகையோடு ஒவ்வொரு தலைப்பின் கீழும் செலவிடப்பட வேண்டிய தொகை பற்றிய முழு விவரங்களும் இடம்பெற வேண்டும்.
பட்ஜெட் விவாதத்தை, பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரித்துச் சொல்லலாம். ஒன்று, பொது விவாதம்; மற்றொன்று, குறிப்பிட்ட மானியக் கோரிக்கைகள் மீதான சிறப்பு விவாதங்கள். பொது விவாதத்தின்போது நாட்டின் நிதிநிலை நிலவரங்கள் குறித்தும் பட்ஜெட் செலவினங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். விவாதத்தின் முடிவில் நிதியமைச்சர் பதிலளிப்பார்.
இரண்டாவது, நிலையான சிறப்பு விவாதம் துறை சார்ந்து அமையும். அத்தகைய விவாதங்களின்போது, வெட்டுத் தீர்மானங்கள் (Cut Motions) கொண்டுவருவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை உண்டு.
வெட்டுத் தீர்மானங்களில் கொள்கை வெட்டு (Policy Cut), சிக்கன வெட்டு (Economy Cut) மற்றும் அடையாள வெட்டு (Token Cut) என மூன்று வகைகள் உண்டு.
அத்தகைய வெட்டுகள் குறித்தும் இந்தியக் குடியரசுத் தலைவரின் கட்டுப்பாட்டில் இருக்கும். அவசர கால நிதி (Contingency Fund of India) குறித்தும் அடுத்த வாரம் பார்க்கலாம்.
(தேர்ச்சி பெறுவோம்)
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பணி என்ன?
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (Madras Institute of Development Studies -MIDS) என்பது சமூகப் பொருளாதார மேம்பாடுகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் கல்வி நிறுவனமாகும். இந்த நிறுவனம், மால்கம் ஆதிசேஷய்யா மற்றும் அவரின் மனைவி எலிசபெத் ஆதிசேஷய்யா ஆகியோரால் 1971-ம் ஆண்டில் சென்னையில் தொடங்கப்பட்டது. மால்கம் ஆதிசேஷய்யா இதன் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்றார். 1977-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசு கூட்டாக இணைந்து, இந்த நிறுவனத்தை நடத்தியபோது, 1978-ம் ஆண்டில் மால்கம் ஆதிசேஷய்யா இதன் தலைவரானார். பின் பேராசிரியர்
சி.டி.குரியன் இதன் தலைவரானார். 2002-ம் ஆண்டு முதல் இந்தக் கல்விக் கழகம் தன்னாட்சி கொண்ட அமைப்பாகச் செயல்படுகிறது.
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேம்பாட்டுத் துறையில் சந்திக்கும் பிரச்னைகளைக் குறித்து ஆய்வுசெய்து, அதற்கான தீர்வுகளை வழங்குவதே இந்த நிறுவனத்தின் நோக்கம். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில், திட்டமிடல் மற்றும் வளர்ச்சி, மாநில – மத்திய அரசுகளுக்கான உறவுகள், பொருளாதாரப் பிரச்னைகள், பசி, சமத்துவமற்ற தன்மை, சமூக இயக்கங்கள், சாதிய மற்றும் மதம் தொடர்பான அரசியல் ஆகியவைகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. முழு நேர முனைவர் பட்டப் படிப்புகளும் இங்கு உள்ளன.