மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போட்டித் தேர்வில் பொருளாதாரம் - 23 - அதிகார பலம் கொண்ட தணிக்கை அதிகாரி!

போட்டித் தேர்வில் பொருளாதாரம் - 23 - அதிகார பலம் கொண்ட தணிக்கை அதிகாரி!
பிரீமியம் ஸ்டோரி
News
போட்டித் தேர்வில் பொருளாதாரம் - 23 - அதிகார பலம் கொண்ட தணிக்கை அதிகாரி!

டாக்டா் சங்கர சரவணன்

பொது நலன், உயர் விழுமியங்களை (Values) ஓங்கச் செய்தல், நாட்டின் இறையாண்மை, அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டுச் செயல்படுதல், ஆட்சியாளர்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாமல் தவிர்த்தல், நாட்டின் அரசமைப்பு மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துதல் போன்ற அம்சங்களைக் கருத்தில்கொண்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டம், தனிச் சிறப்புடைய சில அமைப்புகளை அரசமைப்பு நிறுவனங்களாக (Constitutional Bodies) ஏற்படுத்தியுள்ளது.  

போட்டித் தேர்வில் பொருளாதாரம் - 23 - அதிகார பலம் கொண்ட தணிக்கை அதிகாரி!

இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் தலைவர் (Comptroller and Auditor General of India), தேர்தல் ஆணையம் (Election Commission) மற்றும் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (Union   Public Service Commission) ஆகிய மூன்று அமைப்புகளும் அரசமைப்பு நிறுவனங்களுக்கு தக்க உதாரணங்கள் ஆகும். இந்த மூன்று அமைப்புகளில் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் தலைவரின் பணி, இந்திய பொது நிதி நிர்வாகத்தோடு தொடர்புடையது என்பதால், அந்தப் பதவிக்கான தனித்துவம், அதிகாரங்கள் மற்றும் பணிகள் குறித்துப் பார்ப்போம்.

இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் தலைவர்(Comptroller and Auditor General of India) குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்; இந்திய அரசமைப்புக்கு விசுவாசமாகவும், நாணயமாகவும் இருப்பேன் என்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார். இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் தலைவர்     (Comptroller and Auditor General of India) என்ற பெயா் நீளமாக இருப்பதால் சுருக்கமாக சி.ஏ.ஜி (CAG) என்போம். சி.ஏ.ஜி சுதந்திரமாகச் செயல் படுவதற்கும், ஆட்சித் துறையின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாமல் தவிர்ப்பதற்கும், இந்திய அரசமைப்பு இவருக்குப் பணிப் பாதுகாப்பையும் ஊதிய பாதுகாப்பையும் வழங்கி உள்ளது.

போட்டித் தேர்வில் பொருளாதாரம் - 23 - அதிகார பலம் கொண்ட தணிக்கை அதிகாரி!



சி.ஏ.ஜி.யின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது வரை. இவரைப் பதவிநீக்கம் செய்வது மிகக் கடினம். அதாவது, சி.ஏ.ஜி-யைப் பதவிநீக்கம் செய்வதற்கு, உச்சநீதிமன்ற நீதிபதியைப் பதவிநீக்கம் செய்வதற்கு ஒப்பான வழிமுறையைப் பின்பற்ற வேண்டும். சி.ஏ.ஜி மத்திய அல்லது மாநிலப் பதவி எதையும் ஏற்கக் கூடாது. இவரது ஊதியம், இந்தியத் திரள் நிதியிலிருந்து சாட்டப்பட்ட செலவினமாக வழங்கப்படுகிறது.  இவரது ஊதியம் உச்சநீதிமன்ற நீதிபதியின் ஊதியத்துக்குச் சமமானது.

கணக்காய்வுத் துறை, தணிக்கைத் துறை என இரு துறைகளுக்கு சி.ஏ.ஜி தலைவராவார். கணக்காயர் என்ற முறையில் இந்தியத் திரள் நிதியிலிருந்து மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் தொகைக்குச் சரியான கணக்கு உள்ளதா எனச் சரிபார்ப்பதுடன், நிதியானது முறையாகச் செலவிடப்பட்டதா, வரவு – செலவுக் கணக்குப் பதிவேடுகள் சட்டப்படிப் பராமரிக்கப் படுகின்றனவா என்பதையும் ஆராய்கிறார்.

இதேபோன்று, தணிக்கையாளர் என்ற முறையில் மத்திய, மாநில அரசுகளின் வரவு – செலவுக் கணக்குகளைத் தணிக்கை செய்கிறார். மத்திய, மாநில உதவி பெறும் அமைப்புகளின் கணக்குத் தணிக்கையையும் மேற்கொள்கிறார். எனவே, இந்திய கணக்காயர் – தணிக்கையாளர் இருமுனைக் கத்தியாகச் (Double edged knife) செயல்படுகிறார் என்று அரசியல் பொருளாதார வல்லுநா்கள் குறிப்பிடுவார்கள். 

போட்டித் தேர்வில் பொருளாதாரம் - 23 - அதிகார பலம் கொண்ட தணிக்கை அதிகாரி!

சி.ஏ.ஜி கணக்குத் தணிக்கை அறிக்கைகளைத் தயாரிக்கிறார். மத்திய கணக்குத் தணிக்கை அறிக்கையைக் குடியரசுத் தலைவரிடமும் மாநிலக் கணக்குத் தணிக்கை அறிக்கையை ஆளுநரிடமும் சமர்ப்பிக்கிறார்.

குடியரசுத் தலைவருக்கு சி.ஏ.ஜி சமா்ப்பிக்கும் இந்த அறிக்கை, மிக முக்கியமானது. மிகப் பிரபலமான 2ஜி வழக்கு சி.ஏ.ஜி அறிக்கையின் அடிப்படையில்தான் தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சி.ஏ.ஜி-யின் மத்திய மற்றும் மாநில அறிக்கைகளை முறையே மத்திய, மாநில சட்டமன்றங்கள் பரிசீலிக்கின்றன. உபரி வரியை உறுதிசெய்து சான்றிதழ் வழங்கும் பொறுப்பும் இவருக்கு உரியதாகும்.

நாடாளுமன்றத்தால் ஒதுக்கப்பட்ட பணம், ஒதுக்கப்பட்ட விஷயத்துக்காகத்தான் செலவிடப்பட்டதா என்பதை ஆராயும் நாடாளுமன்ற குழு, பொது கணக்குக் குழு (Public Accounts Committee - PAC) ஆகும்.

மத்திய, மாநில அரசுகள் எந்தப் படிவத்தில் வரவு செலவு கணக்கைப் பராமரிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது சி.ஏ.ஜி.

இவையன்றி, மாநில அரசுகளின் கணக்குகளைத் தொகுத்து, முறைப்படுத்திப் பராமரிக்கிறார். இந்தக் கணக்குப் பராமரிப்பு மற்றும் தணிக்கை முறை இரட்டைப் பணிமுறை ஆகும். இந்த இரட்டைப் பணிமுறை (கணக்கு வைப்பு, தணிக்கை) 1976-ம் ஆண்டு வரை நீடித்தது. இந்த முறையின் நன்மை தீமைகளையும், நடைமுறைச் சிக்கல்களையும் கருத்தில்கொண்டு மத்திய அரசு கணக்கு வைப்பையும், தணிக்கையையும் 1976-ல் பிரித்தது. அதன் பிறகு இவர் தணிக்கைத் தலைவராக மட்டும் இருந்து வருகிறார் என்றபோதிலும், சி.ஏ.ஜி-தான் மாநில அரசுகள் வரவு – செலவுக் கணக்கை முறையாகவும் சரியாகவும் வைத்துக் கொள்வதற்குப் பொறுப்பானவர் ஆவார்.

பிரிவு 148,  இந்திய கணக்காய்வு – தணிக்கைத் தலைவரின் செயல் சுதந்திரத்தைப் பற்றியது. இவர் மத்திய, மாநில பணப் பையைப் பாதுகாப்பதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த நிதிமுறையையும் கட்டுப்படுத்துவதோடு, அதன் பாதுகாவலராகவும் இருக்கிறார். இதன் காரணமாக, சி.ஏ.ஜி-யைப் பொது நிதியின் காவல்காரர் என்று அரசியல் பொருளாதார வல்லுநா்கள் குறிப்பிடுவார்கள்.

இந்திய நிர்வாக முறையை ஆய்வு செய்த பால் ஆப்பிள்பி (Paul H.Appleby) சி.ஏ.ஜி-யின் பதவியை நீக்கிவிட வேண்டும் என்று பரிந்துரைத்தார். எனினும், இந்தப் பதவியின் பயன் கருதி அரசியலமைப்புச் சட்ட அந்தஸ்து கொடுக்கப்பட்டது.