மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போட்டித் தேர்வில் பொருளாதாரம் - 24 - திருவள்ளுவர் பொருளாதார நிபுணரா?

போட்டித் தேர்வில் பொருளாதாரம் - 24 - திருவள்ளுவர் பொருளாதார நிபுணரா?
பிரீமியம் ஸ்டோரி
News
போட்டித் தேர்வில் பொருளாதாரம் - 24 - திருவள்ளுவர் பொருளாதார நிபுணரா?

டாக்டா் சங்கர சரவணன்

டந்த 24 வாரங்களாகப் போட்டித் தேர்வுகளில் கேட்கப்பட்ட பொருளாதாரக் கேள்விகள் பலவற்றுக்கு எப்படி விடையளிப்பது என்பதைப் பார்த்தோம். சில தேர்வுகளில் தேர்வர்கள், தங்கள் சொந்த விருப்பங்களின் அடிப்படையில் விடையளிக்கும்படி கேள்விகள் அமைவதுண்டு. அவ்வாறு கேள்விகள் கேட்கப்படும்போது தேர்வர்கள் தங்கள் புதிய சிந்தனையையும், தனித்தன்மையையும் வெளிப்படுத்தித் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.   

போட்டித் தேர்வில் பொருளாதாரம் - 24 - திருவள்ளுவர் பொருளாதார நிபுணரா?

கடந்த வருடம் ஐ.ஏ.எஸ் தேர்வின் இறுதிக்கட்டத் தேர்வான ஆளுமைத் தேர்வில் (Personality Test) கலந்துகொண்ட தேர்வர் ஒருவரிடம், அவர் பார்வையில் சிறந்த பொருளாதார அறிஞர்கள் சிலரைப் பட்டியலிடுமாறு கேட்டார்கள். தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுத்திருந்த அந்தத் தேர்வர் இந்தக் கேள்விக்கு, “காரல் மார்க்ஸ், ஆடம்ஸ்மித், திருவள்ளுவர்...” என்று பதிலளித்தார். இந்தத் தேர்வர் அளித்த பதிலில் இருந்த மூன்றாவது பெயரைக் கேட்டு, நேர்முகத்தேர்வுக் குழுத் தலைவர் வியப்பில் சற்றுப் புருவம் உயர்த்தினார்.

‘‘Is Thiruvalluvar an Economist...? Can you explain?’’ என்ற கேள்வி நேர்முகத் தேர்வுக் குழுத் தலைவரிட மிருந்து வந்தது. திருவள்ளுவரின் பொருளாதாரக் கோட்பாடு குறித்துத் தெளிவாக அந்தத் தேர்வர் படித்திருந்ததால், அந்தக் கேள்விக்கு அவரால் விரிவாக விடையளித்துத் தேர்வுக் குழுத் தலைவரிடமிருந்து நன்மதிப்பைப் பெற முடிந்தது.

போட்டித் தேர்வில் பொருளாதாரம் - 24 - திருவள்ளுவர் பொருளாதார நிபுணரா?



அறம், பொருள், இன்பம் என மூன்று பால்களைக்கொண்ட திருக்குறளில் பொருள்பால்தான் அதிக எண்ணிக்கையிலான அதிகாரங்களைக் கொண்டது. அரசாட்சி, நிர்வாகம் பற்றிய கருத்துகள் குறித்து திருவள்ளுவர் பொருள்பாலில் இடம்பெறும் குறள்களில் விரிவாகச் பேசியுள்ளார். ஐ.ஏ.எஸ் தேர்வை முதன்முதலாகத் தமிழில் எழுதி வெற்றி பெற்று, ஒடிசா மாநிலத்தின் நிதிச் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றி, தற்போது அந்த மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றும்  ஆர்.பாலகிருஷ்ணன், வள்ளுவரின் பொருளாதாரக் கோட்பாடு குறித்து, “தீதின்றி வந்த பொருள்” என்ற தலைப்பில் ஆற்றிய உரையை அடிப்படையாகக்கொண்டு மேலே குறிப்பிட்ட கேள்விக்கு அந்தத் தேர்வர் மிகச் சிறப்பாக விடையளித்து மதிப்பெண் பெற்றார்.

“அறம்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்.” 

இந்தக் குறளில் திருவள்ளுவர் “தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்” என்ற உண்மையை விளக்கியுள்ளார். அதாவது, நேர்மையான வழியைப் பின்பற்றி மற்றவர்களுக்குத் தீமை செய்யாமல் சேர்க்கப்படும் செல்வம்தான் ஒருவருக்குப் புண்ணியத்தையும் மகிழ்ச்சியையும் தரும் என்றும் பொருள் கொள்ளலாம். இந்தக் குறளை (குறள் எண்.754) ஜி.யு.போப் ஆங்கிலத்தில், “Their wealth, who blameless means can use aright, is source of virtue and of choice delight” என மொழிபெயர்த்துள்ளார்.  

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு.”

இந்தக் குறளுக்கு, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி, தன் உரையில், “முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்துக்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுகாத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்” என்று உரை எழுதியிருப்பதை யும் நினைவு கூர்ந்து, அந்தத் தேர்வர் விடையளித்தார்.  

போட்டித் தேர்வில் பொருளாதாரம் - 24 - திருவள்ளுவர் பொருளாதார நிபுணரா?

இந்தக் கருத்துகளால் திருக்குறளில் இடம்பெற்றுள்ள பொருளாதாரக் கருத்துகளைத் தெளிவாக அந்தத் தேர்வர் உணர்ந்திருப்பதையும் அதைத் தேர்வுக்குழுத் தலைவருக்குப் புரியும் வண்ணம் மிகச் சிறப்பாக, தக்க மேற்கோள்களோடு ஆங்கிலத்தில் எடுத்துக் கூறும் ஆற்றல் அந்தத் தேர்வரிடம் இருப்பதையும் அறிந்துகொண்ட நேர்முகத் தேர்வுக் குழுத் தலைவர், அந்தத் தேர்வருக்கு அதிக மதிப்பெண் வழங்கினார்.

தன் ஆளுமைத் தேர்வில் இந்தக் கேள்வியும், இந்தக் கேள்விக்கு, தான் அளித்த பதிலும்தான் இந்தியக் குடிமைப் பணியில்தான் நுழைவதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தது என்று அந்தத் தேர்வர் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட போது, நாம் கற்கும் ஒவ்வொரு விஷயமும் தேர்வில் வெற்றி பெற நமக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை நாம் தெளிவாக உணரலாம்.

ஆளுமைத் தேர்வுக்குச் செல்கிறபோது, தேர்வர்கள் எதிர்கொள்கிற வினாக்களைத் திறந்தவெளி வினாக்கள் (Open Ended Questions) என்பார்கள். திறந்தவெளி வினா ஒன்றுக்கு இதுதான் விடை என்று திட்டவட்டமாகக் கூற முடியாது. இதில் விடையளிப்பவரின் அறிவு ஆழத்தையும், அனுபவத்தையும் தனித்தப் பார்வையையும் சிந்தனையையும் தேர்வுக்குழு சரியாகக் கணித்து மதிப்பிடுகிறது.

ஐ.ஏ.எஸ் ஆளுமைத் தேர்வில் கேட்கப்படும் இந்த வகை வினாக்கள், பள்ளிப் பாட நூல் களிலேயே புதிய பாடத் திட்டத்தில் பெருமளவுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று சமூக ஊடகங்களில் ஆசிரியர்களும், கல்வி யாளர் களும் பகிர்ந்துவரும் செய்தி மிகவும் கவனிக்கத்தக்கது.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற போட்டித் தேர்வுகள் சரியான விடையைத் தெளிவாக நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றன. இந்தத் தேர்வுக்கு அனைத்துத் துறைகளைப் பற்றியும் அகலமாகப் படிக்கிற அதே நேரத்தில் ஆழமாகவும்  படித்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

இந்தத் தொடர் குறித்து உங்கள் கருத்துக்களைப் போட்டித் தேர்வில் பொருளா தாரம் என்கிற தலைப்பிட்டு navdesk@vikatan.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்! தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

(நிறைவு பெற்றது)