
பிசினஸ் ஜர்னலிசத்துக்கு பளிச் எதிர்காலம்!
பத்திரிகை உலகில் முக்கியமான இடம் பிசினஸ் ஜர்னலிசத்துக்கு உண்டு. இந்த பிசினஸ் ஜர்னலிசம் பற்றிய ஒருநாள் சர்வதேசக் கருத்தரங்கத்தை, சென்னை தி.நகரில் உள்ள ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் சசூன் மகளிர் கல்லூரியின் இதழியல் மற்றும் தகவல்தொடர்புக்கான முதுகலைத் துறை (PG Dept of Journalism and Communication) நடத்தியது.

இந்தக் கருத்தரங்கில், அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ராண்டெல் டி.ஸ்மித் பிசினஸ் ஜர்னலிசம் குறித்துச் சிறப்புரையாற்றினார். ‘‘பத்திரிகையாளராக வரவேண்டும் என இன்றைக்குப் பல இளைஞர்கள் விரும்புகிறார்கள். ஆனால், பிசினஸ் ஜர்னலிசம் தொடர்பான பத்திரிகையாளராக வரவிரும்புகிறீர்களா என்று கேட்டால், பலரும் யோசிக்கவே செய்கிறார்கள். பிசினஸ் ஜர்னலிசம் என்றாலே கம்பெனிகள் தொடர்பாகக் கணக்குவழக்குகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும், லாப நஷ்டக் கணக்கு பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கிறார்கள். இது தவறான எண்ணம். சாதாரண கணக்குப் போடத் தெரிந்தாலே பிசினஸ் ஜர்னலிசத்தில் ஜொலிக்க முடியும்’’ என்றார் ராண்டெல் டி.ஸ்மித்.
இந்தக் கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றினார் நாணயம் விகடனின் ஆசிரியரும், பதிப்பாளருமான டி.இ.மணவாளன். ‘‘இன்றைக்கு நமது நாட்டின் ஜி.டி.பி சுமார் 2.3 ட்ரில்லியன் டாலராக இருக்கிறது. அடுத்த 15 ஆண்டுகளில் இது 8 ட்ரில்லியன் டாலராக இருக்கும் என்கிறார்கள். இவ்வளவு பெரிய வளர்ச்சியை நம் நாடு அடையும் போது பிசினஸ் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும். இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை உலகுக்கு எடுத்துச் சொல்லும் வேலையை பிசினஸ் ஜர்னலிஸ்ட்டுகள்தான் செய்ய வேண்டும். தமிழில் பிசினஸ் பற்றிய செய்திகள் நிறைய வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். எனவே, பிசினஸ் ஜர்னலி சத்துக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது’’ என்றார் அவர்.
இது மாதிரியான கருத்தரங்கைத் தமிழகத்தின் ஒவ்வொரு கல்லூரியிலும் நடத்தலாமே!
- ஏ.ஆர்.கே