இந்தியாவில் நிலவும் பல சாதகமான சூழல் காரணமாக, அதிக லாபம் ஈட்டும் நோக்கில், தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. தமிழக அரசும் சமீபத்தில், புதிய தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதை ஊக்குவிக்கும் நோக்கில், பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியது. இதனால், பல்வேறு புதிய தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி படையெடுக்கத் துவங்கியுள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் தயாரிப்பு மையம் அமைய உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. ஐபோன் உதிரிப்பாகங்கள் தயாரிப்பு பணியை ஆப்பிள் நிறுவனம், டாடா எலக்ட்ரானிக் நிறுவனத்திடம் வழங்கியுள்ளதால், ஓசூர் பகுதியில் அமையவுள்ள நிறுவனத்தை டாடா கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் பணியாற்ற மொத்தமாக 60,000 பேர் வரை பணியமர்த்தப்பட உள்ளனர். முதல் கட்டமாக, ராஞ்சி மற்றும் ஹஜாரிபாக் பகுதியைச் சேர்ந்த 6,000 பழங்குடியின பெண்களுக்குப் பணி வாய்ப்பு வழங்கப்படும் என மத்திய தொலைதொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தொழிற்சாலையில், 60 சதவீதத்துக்கும் மேல் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் ஆப்பிள் நிறுவனம், செல்போன், கணினி உற்பத்தியிலும், விற்பனையிலும், கடந்த, 25 ஆண்டுகளுக்கும் மேலாக மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளது. மேலும், அடிக்கடி தனது புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியும், புதிய தொழில்நுட்பங்களை புகுத்தியும் தொழில்நுட்ப உலகை பிரம்மிப்பில் ஆழ்த்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
பெங்களூருக்கு அடுத்தபடியாக வளர்ச்சி எனும் நேர்கோட்டுப்பாதையில் அதிவேகத்தில் பயணித்துவரும் ஓசூரில், ஆப்பிள் நிறுவனம் அமைவது,ஓசூரின் தொழில் வளர்ச்சியின் ‘மைல் ஸ்டோன்’ என்றே கூறலாம். இதனால், இதர பன்னாட்டு நிறுவனங்களின் கவனமும் ஓசூர் பக்கம் திரும்பியுள்ளதாக தொழில் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆப்பிள் நிறுவனம் அமைவதால் ஓசூரில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்குமென, தமிழக மற்றும் கர்நாடக பகுதி இளைஞர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்தத் தொழிற்சாலை நிறுவி ஆட்களை பணிக்கு அமர்த்தும் வரையில் எவ்வித தகவல்களையும் வெளியில் சென்றுவிடக் கூடாது என்பதில் கறாரான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. என்னென்ன மாதிரியான பணிகளுக்கு 'ரெக்ரூட்மென்ட்' நடக்கும், என்னென்ன உதிரி பாகங்கள் தயாரிக்கப்படும், தொழிற்சாலையின் செயல்பாடு எப்படி இருக்கும் என விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என்று சொல்கிறார்கள்.
இந்தத் தொழிற்சாலை மூலம் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகினால் நம் நாட்டுக்கு நல்லதுதானே!