
ஐ.டி துறை
கடந்த இரு காலாண்டுகளாக ஐ.டி நிறுவனங்களில் இருந்து வேலையை விட்டுச் செல்பவர்களின் எண்ணிக்கை (Attrition) கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தப் பிரச்னையால் ஐ.டி நிறுவனங்களுக்கு என்ன சாதகம், என்ன பாதகம் என மனிதவள மேலாளரான பாலமுருகனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

அதிகரிக்கும் அட்ரிசன் விகிதம்...
“கொரோனாவுக்கு முன்பாக பல ஆண்டுகளாகவே இந்திய ஐ.டி துறையில் இருந்து வந்த மிகப் பெரிய பிரச்னை ஊழியர்கள் வேலைவிட்டுச் செல்வது! ஆனால், இன்று பல ஐ.டி நிறுவனங்களுக்கு இது பிரச்னையே இல்லை. மாறாக, பாசிட்டிவ்வாக நல்லதொரு வாய்ப்பாக மாறியிருக்கிறது. ஏனெனில் ஐ.டி துறையில் ஊழியர்களின் தேவை, வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஐ.டி நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது குறைந்து, வாய்ப்புகளைத் தேடி ஐ.டி ஊழியர்கள் வேலையிலிருந்து வெளியேறுவது அதிகரித்திருக்கிறது.
முன்னணி நிறுவனங்களின் நிலவரம்...
டி.சி.எஸ் நிறுவனத்தில் இதுவரை இல்லாத அளவாக அட்ரிசன் விகிதம் 11.9 சதவிகிதமாக (செப்டம்பர் காலாண்டு நிலவரப்படி) அதிகரித்துள்ளது. இந்த அட்ரிசன் விகிதத்தைக் கட்டுக்குள் வைக்க டி.சி.எஸ் அதிக அளவில் புதியவர்களைப் (Freshers) பணியமர்த்தி வருகிறது. அவர்களுக்குத் தேவையான பயிற்சியைக் கொடுக்கவும், அவர்களுக்கு தொழில்நுட்பம் குறித்தான திறனை வழங்கவும் அதிக முனைப்பு காட்டி வருகிறது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அட்ரிசன் விகிதம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 20.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது, கடந்த ஜூன் காலாண்டில் 13.9 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதை எதிர் கொள்ளும் விதமாக இந்த நிறுவனம் நடப்பு ஆண்டில் மொத்தம் 45,000 பேரை பணியில் அமர்த்தத் திட்டமிட்டுள்ளது.
விப்ரோவின் அட்ரிசன் விகிதம், செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 20.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது ஜூன் காலாண்டில் 15.5 சதவிகிதமாக இருந்தது. குறிப்பாக, 80% பேருக்கு சம்பள உயர்வை வழங்கியுள்ளது. தவிர, நடப்பு ஆண்டின் இறுதிக்குள் 12,000 ஃபிரஷர்களைப் பணியில் அமர்த்தத் திட்டமிட்டுள்ளது. கேம்பஸ் இன்டர்வியூ மூலம் 30,000 ஃபிரஷர்களைத் தேர்வு செய்யவும் திட்டமிட்டுள்ளது.
ஹெச்.சி.எல் டெக்னாலஜி நிறுவனத்தின் அட்ரிசன் விகிதம் செப்டம்பர் காலாண்டு நிலவரப்படி 15.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 11.8 சதவிகிதமாக இருந்தது. இதற்கிடையில் நடப்பு ஆண்டில் சுமார் 20,000 - 22,000 ஃபிரஷர்களைப் புதிதாக வேலைக்குச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது.

சம்பளம் இருமடங்கு அதிகரிப்பு!
கொரோனாவுக்கு முன்பு ஐ.டி துறை சார்ந்த படிப்புகளைப் படித்துவிட்டு, கல்லூரிகளில் இருந்து வெளியேறிய ஃபிரெஷர்களுக்கான ஆரம்ப சம்பளம் கிட்டத்தட்ட 20,000 ரூபாயாகத்தான் இருந்தது. ஆனால், தற்போது வேலையை விட்டுச் செல்பவர்களின் விகிதம் அதிகரித்ததன் காரணமாக, கடந்த இரு ஆண்டுகளில் புதியவர்களுக்கு (Freshers) வாய்ப்பு கிடைத்திருப்பதுடன், சம்பளம் கிட்டதட்ட இருமடங்கு அதிகரித்துள்ளது. அதனால் இந்தக் காலம் ஃபிரெஷர்களுக்கான பொற்காலம் என்றே சொல்லலாம்.
சிறிய கல்லூரி மாணவர்களுக்கும் வாய்ப்பு...
பொதுவாக, ஐ.டி நிறுவனங்கள் பெரும் கல்லூரிகளில் இருந்துதான் ஃபிரெஷர்களை வேலைக்கு அமர்த்தும். ஆனால், தற்போதைய நிலையில், ஐ.டி துறை சார்ந்த வேலைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, உலக அளவில் இந்தத் துறை சார்ந்த தேவைகள் அதிகரித்திருப்பது, ஏற்கெனவே வேலை செய்பவர்களில் வெளியேறும் விகிதம் அதிகரித்திருப்பது எனப் பல காரணங்களால் புதியவர்களைக் கூடுதலாகப் பணியில் அமர்த்த வேண்டிய கட்டாயம் ஐ.டி நிறுவனங்ளுக்கு ஏற்பட்டுள்ளன. இதன் மூலம் சிறு கல்லூரி மாணவர்களுக்கும் முன்னணி ஐ.டி நிறுவனங்களில் சேர வாய்ப்பு உருவாகியுள்ளது. அதே நேரத்தில், ஏற்கெனவே வேலை பார்த்து வரும் ஊழியர்கள், அதிக சம்பளத்தை ஏற்கெனவே பெற்று வருவதால், அவர்களைப் பணியில் இருந்து நீக்கவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
பயிற்சிக்கான செலவு மிச்சம்...
தற்போதைய நிலையில், ஃபிரெஷர்களுக்கான பயிற்சிகள் அனைத்தும், ஆன்லைன் மூலமாகவே நடப்பதால், நிறுவனங்களுக்கு செலவு மிச்சமாகிறது. பயிற்சி வழங்கு வதற்காக ஒரு குழுவை உருவாக்கத் தேவையில்லை. பயிற்சி வழங்குவதற்கான தொழில்நுட்பக் கட்டமைப்பை அலுவலகத்தில் அமைக்கத் தேவையில்லை. புதிதாகப் பணியில் சேருபவர்கள் அவரவர்களின் வீட்டில் இருந்த படியே ஆன்லைன் மூலமாகப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்வதால், பெரும் செலவு நிறுவனத்துக்கு மிச்சமாகிறது.
பொதுவாக, அக்டோபர் - டிசம்பர் காலத்தில் ஐ.டி நிறுவ னங்களில் வேலைக்கு எடுப்பது மந்தமாக இருக்கும். ஆனால், தற்போது எந்தவித மந்தமும் இல்லை. உண்மையில் அதிகரித்து வரும் தேவைக்கு மத்தியில் இன்னும் சில ஆண்டுகளுக்கு ஐ.டி ஊழியர்கள், ஃபிரெஷர் களுக்கு ஜாக்பாட்தான்.
வேலை நீக்கத்தைத் தவிர்க்க...
ஐ.டி ஊழியர்கள் எப்போதும் திறன் மேம்பாடு, காலத்துக்கேற்ற தொழில்நுட்பத்துடன் இருப்பது அவசியமாகும். அப்போதுதான் வேலையிலிருந்து தூக்கப் பட்டாலும், எளிதாக இன்னொரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர முடியும். எங்கு நிலையற்றத் தன்மை இருக்கிறதோ, அங்கு தான் வளர்ச்சி அதிகம் இருக்கும். எப்போது ஓர் இடத்தில் சௌகர் யமாக இருப்பதாக உணர்கிறீர் களோ, அன்றுடன் உங்கள் வளர்ச்சி முடிந்தது என்பதை ஐ.டி ஊழியர்கள் எப்போதும் மறக்கக் கூடாது. நீங்கள் போட்டி யிடுவது உலகின் மற்ற நாடு களுடன். அதனால், உங்கள் திறன் உலகத் தரத்தில் இருக்க வேண்டும். முடிந்தவரை சில காலம் ஆன்சைட் சப்போர்ட் டராக வெளிநாடு சென்று பணியாற்ற எப்போதும் தயாராக இருங்கள். இதனால் நல்ல வருமானம் கிடைப்பதுடன், துறை சார்ந்த விஷயங்களில் அப்டேட்டாகவும் இருக்க முடியும்’’ என்று பேசி முடித்தார் பாலமுருகன்!