
செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்
நீங்கள் கட்டாயம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்த முக்கியமான விஷயத்தை சட்டென மறந்து போயிருக்கிறீர்களா? உங்கள் சகபணியாளர்கள் அல்லது நண்பர்கள் மத்தியில் நீங்கள் வாதம் செய்துகொண்டிருக்கும்போது உங்களுடைய வாதத்துக்கு ஆதரவான கருத்தை யாரோ ஒருவர் சொல்ல, அதை நினைவில் வைத்துக் கொண்டு அடுத்து பேச வேண்டும் என்று மனதில் நினைத்தும், உங்கள் பேச்சு போகிற சுவாரஸ்யத்தில் அதை நினைவில் வைத்துக் கொள்ளாமல் கோட்டை விட்டுள்ளீர்களா?

வாகனம் ஓட்டிக்கொண்டு போய்க்கொண்டு இருக்கும்போது ஒரு சூப்பர் ஐடியா உங்கள் மூளையில் உதித்து இதை நிச்சயமாக செயல் படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைத்தபின், அந்த ஐடியா ஒட்டுமொத்தமாக மறந்துபோய் இருக்கிறதா? நீங்கள் ரசித்து படித்த புத்தகத்தில் இருந்து உங்களுக்கு உதவக்கூடிய ஒரு கருத்தையோ, தகவலையோ நினைவுகூர்வது உங்களுக்கு முடியாமல் போவது ஏன்?
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் உங்கள் பதில் என்ன? நாம் எதிர் கொள்ளும் விஷயங்கள் எந்தளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அவற்றை மூளையில் நிலைநிறுத்திக்கொள்வதிலும் சிக்கல்கள் அதிகரிக்கவே செய்கிறது. எக்கச்சக்கமான அளவில் விஷயங்களைத் தெரிந்துகொண்டு அறிவை வளர்த்துக்கொள்வதன் மூலம் நாம் என்ன சாதிக்கப்போகிறோம்? வெற்றி பெற்ற மனிதர்கள், சிறந்த மனிதர்கள், சிந்தனையாளர்கள் அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் சொன்ன பல கருத்துகளை நாம் வெறுமனே பதுக்கி வைத்திருக்கும் பதுக்கல்காரர்களாக இருக் கிறோம். இந்த நிலையை மாற்றும் நோக்கத்துடன் எழுதப்பட்டதுதான் இந்தப் புத்தகம்.
தகவல் திரட்டு சொத்து...
நீங்கள் பல்வேறு விதமான ஊடகங்கள் வாயிலாகப் படிக்கும், பார்க்கும், கேட்கும் பல்வேறு விதமான கருத்துகள் உங்களுக்கு நிச்சயமாக அதிக அளவில் நன்மை செய்வதாக இருக்கலாம். ஆனால், அவை எல்லாவற்றையும் உங்களால் கிரகித்துக்கொண்டு பின்பற்ற முடிகிறதா? உதாரணமாக, நீங்கள் இன்றைக்குப் படிக்கிற பிசினஸ் சம்பந்தப்பட்ட புத்தகங்களில் எத்தனை உங்களுக்கு உடனடியாக உபயோகமாக உள்ளன, நீங்கள் இப்போது கேட்கும் பாட்காஸ்ட்டுகளில் சொல்லப்படுபவற்றில் எத்தனை விஷயங்கள் இன்றைக்கே நீங்கள் பின்பற்றுகிறீர்கள், உங்களுடைய இ-மெயிலின் இன்பாக்ஸில் இப்போது இருக்கும் மெயில்களில் எத்தனை உடனடியாக உங்களுடைய கவனத்தைச் செலுத்த வேண்டிய ரகத்தில் இருப்பவை? மேலே சொன்ன அனைத்திலும் ஒரு சிலவே இன்றைக்கு உதவும் வகையிலானவையாக இருக்கும். பெரும்பாலானவை உங்களுக்கு எதிர்காலத்தில் ஏதாவது ஒரு சமயத்தில் உதவும் வகையாகவே இருக்கும்.

இப்படி எதிர்காலத்தில் உதவக்கூடிய வகையிலான விஷயங் களை சரியான முறையில் பேக்கேஜிங் செய்து நமக்கு நாமே நம்முடைய எதிர்காலத்துக்கு அனுப்பி வைக்கத் தெரிந்துகொள் வதன்மூலமே இவற்றில் இருந்து முழுமையான பலனைப் பெற முடியும். எதிர்வரும் காலத்தில் நம்முடைய வேலையை ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ள நினைக்கும் வேளையில், ஒரு விஷயம் குறித்து பிரசன்டேஷனைத் தர வேண்டிய சூழ்நிலையில், புதியதொரு தயாரிப்பை அறிமுகப் படுத்தும் வேளையில், புதியதொரு பிசினஸை ஆரம்பிக்கும் வேளையில் என நாம் எதிர்கொள்ளப்போகும் எதிர்கால சூழ்நிலைகள் பலவற்றிலும் அந்த வாய்ப்புகளை நம்முடைய முழுமையான லாபத்துக்காக உபயோகித்துக்கொள்ளும் பொருட்டு நமக்கு இப்போது கிடைக்கிற தகவல் திரட்டுகளைச் சேர்த்து வைத்து அந்தத் தகவல் திரட்டு சொத்தைப் பயன் படுத்திக்கொள்வது எப்படி என நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
‘பர்சனல் நாலெட்ஜ் மேனேஜ்மென்ட்...’
‘பர்சனல் நாலெட்ஜ் மேனேஜ்மென்ட்’ என்னும் நான் உருவாக்கியுள்ள இந்த நடைமுறை நமக்குத் தேவையான விஷயங்களை நாம் சரியான நேரத்தில் உபயோகித்துக்கொள்ள வழிவகை செய்துகொடுக்கும். இது நாமே நமக்கு இரண்டாவதாக மூளை ஒன்றை உருவாக்கிக்கொள்ளும் செயல்பாடு ஆகும். என்னதான் காலத்துக்கேற்ப விஷயங்கள் பலவும் மாறினாலும் ஒரு சில அடிப்படையான நியமங்கள் காலங்காலமாக என்றைக் கும் மாறாதவையாக இருக்கின்றன. அதுபோன்ற நியமங்களைக் கொண்ட நடைமுறைதான் இந்த பர்சனல் நாலெட்ஜ் மேனேஜ்மென்ட் என்ற நடைமுறையும் என்கிறார் ஆசிரியர்.
இரண்டாவது மூளையால் என்ன நன்மை..?
இந்த இரண்டாவது மூளையை உருவாக்குவதன் மூலம் பின்வரும் அனுகூலங்கள் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கடந்த காலத்தில் படித்த, சிந்தித்த, மேலெழுந்த வாரியாக பார்த்த விஷயங்களில் எதையும் ஒரு சில விநாடிகளிலேயே உங்களால் நினைவுக்குக் கொண்டு வர முடியும். உங்களுடைய அறிவை சிறப்பாகக் கட்டமைத்து நிர்வகிப்பதன்மூலம் உங்களுடைய புராஜெக்ட்டுகள் மற்றும் இலக்குகளை அடைய அவற்றை சிறப்பாக உபயோகிக்க முடியும்.
உங்களுடைய சிந்தனையில் உதித்த சிறப்பான விஷயங் களை மீண்டும் விரைவாகப் பெற்றிட உதவும். உங்களுடைய ஐடியாக்கள் மற்றும் உங்கள் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளின் பேட்டர்ன்கள் போன்றவற்றை இணைத்துப் பார்த்து தற்போ தைய வாழ்க்கையைவிட இன்னமும் சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும். உங்களுடைய வேலையை மற்றவர்களிடம் சுலபமாகவும் அதிக நம்பிக்கையுடனும் பகிர்ந்தளிக்க சிறப்பான நடைமுறையை உருவாக்கிக்கொள்ள முடியும். ஒரு வேலையைச் செய்யத் தேவையானவற்றைத் தேடுவதற்காகச் செலவிடும் நேரத்தைக் கணிசமாகக் குறைத்து வேலையைச் செய்வதற்கான நேரத்தை அதிகமாக்க உதவும்.
இந்த நடைமுறையை உபயோகிக்க ஆரம்பிக்கும் போது தகவல்களுடன் உங்களுடைய உறவானது மேம்படுவதுடன் டெக்னா லஜியைத் தகவல்கள் ஸ்டோ ரேஜ் செய்வதற்கான ஒரு மீடியமாகப் பார்க்காமல் சிந்திப்பதற்கான ஒரு கருவி யாகப் பார்க்க ஆரம்பிப் பீர்கள் என்கிறார் ஆசிரியர்.
குறிப்பெடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்...
‘‘இந்த நடைமுறையின் முதல்படியாக, குறிப்பெடுப் பது என்கிற பழக்கத்தை ஆரம்பிக்கச் சொல்கிறார் ஆசிரியர். நீங்கள் படிக்கும், கேட்கும் காணும் விஷயங் களில் முக்கியமானவை என்று தோன்றுவதை ஏதாவது ஒரு வடிவத்தில் குறிப்பெடுத்து வையுங்கள். இப்படி தொடர்ந்து குறிப் பெடுத்ததன்மூலம் நாள டைவில் உங்கள் அலுவலகப் பணி குறித்து எந்த ஒரு தகவல் தேவைப்பட்டாலும் உங்களையே அனைவரும் நாடி வர ஆரம்பிப்பார்கள். நாளடைவில் இந்தத் தகவல் திரட்டானது பெரிதாக, அதுவே ஒரு அறிவுசார் சொத்தாக மாறிவிடும். அப்போது நீங்கள் ஒரு அறிவுக்கிடங்காக மாறிவிடு வீர்கள். உங்களை ‘நாலெட்ஜ் பார்ட்னராக’ வைத்துக் கொள்ள பலரும் விரும்பு வார்கள்’’ என்கிறார் ஆசிரியர்.
டிஜிட்டலாக குறிப்பெடுக் கும்போது தனித்தனி பிரிவாக தலைப்புகள் கொடுத்து அந்தந்தத் தலைப்புகளின்கீழ் குறிப்புகள் சேகரிக்கப்பட்டு வகைப் படுத்தப்பட்டால், தேவையான சமயங்களில் அவற்றை சுலபத்தில் கண்டு பிடித்து உபயோகிக்க முடியும் என்று கூறும் ஆசிரியர், ‘‘மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் செய்த ஆய்வு ஒன்றில் சராசரி மனிதன் ஒருவர் ஆண்டொன் றுக்கு 76 மணி நேரம் என்ற அளவில் தொலைந்த குறிப்புகள் மற்றும் ஃபைல் களைத் தேடுவதில் செலவழிக் கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது என்ற கூடுதல் தகவலையும் தந்துள்ளார். இந்த டிஜிட்டல் ஸ்டோரேஜ் வசதியைத்தான் ஆசிரியர் ‘இரண்டாவது மூளை’ என்று குறிப்பிடுகிறார்.
நம் மூளையில் சேமிக்கும் தகவல்கள் தேவை ஏற்படும் போது எப்படி கணநேரத்தில் நமக்கு உதவியாக ஓடி வருகிறதோ, அதே போல் டிஜிட்டலாக நம்மிடம் இருக் கும் தகவல்களையும் சரியான முறையில் கையாண்டால் அதுவும் நமக்கு பேருதவியாக இருக்கும் என்கிறார் ஆசிரியர்.
உங்களுக்கு ஓர் உதவியாளர் தேவை என்று வேலைக்கு எடுக்கிறீர்கள். அவர் என்னென்ன வேலைகளை செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டுச் சொல்வீர்கள். மேலும், இந்த வேலைகளுக்கு எல்லாம் நீங்கள்தான் பொறுப்பு என்றும், இந்தந்த வேலைகளை இந்த அளவு தரத்துடன் செய்ய வேண்டும் என்றும் சொல்வீர்கள் இல்லையா? அந்தளவுக்கு நீங்கள் டெக்னாலஜியை (இரண்டாவது மூளையை) உபயோகித்துக்கொள்ள பழக வேண்டும் என்கிறார் ஆசிரியர்.
இரண்டாவது மூளையின் பணிகள்...
இரண்டாவது மூளை செய்ய வேண்டியவை என்னென்ன என்று பட்டியலிட்டுள்ளார்.
உங்களுடைய ஐடியாக்களை செம்மைப்படுத்துவது, உங்களுடைய ஐடியாக்களுக்கும் நிகழ்வுகளுக்கும் இடையே உள்ள தொடர்பைத் தெளிவாக்குவது, ஐடியாக்களை வளர்த்தெடுப்பது, உங்களுடைய தனித்திறனை தொடர்ந்து மேம்படச்செய்வது என்பவற்றுக்கு இந்த இரண்டாவது மூளையானது உபயோகமாக இருக்க வேண்டும் என்று சொல்லும் ஆசிரியர், இவற்றை எப்படி சாத்தியமாக்குவது என்றும் விளக்கியுள்ளார்.
‘‘இரண்டாவது மூளையைக் கட்டமைப்பதற்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன. சில சமயம், நீங்கள் கட்டமைத்துள்ள வழிமுறையானது மற்றவர்களுடைய பார்வையில் சிக்கலான ஒன்றாகக்கூட தெரியலாம். அதே சமயம், உங்களுடைய இரண்டாவது மூளை உங்கள் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவுகிறது எனில், அடுத்தவர் பார்வையில் அது எப்படி இருந்தாலும் நீங்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. இரண்டாவது மூளையை உருவாக்கி அதன் மூலம் பலன் பெற நினைத்தால், இப்போதே நீங்கள் குறிப்பெடுக்க ஆரம்பி யுங்கள்’’ என்று சொல்லி முடிக்கிறார்.
டெக்னாலஜியை நம் முன்னேற்றத்துக்கு உபயோகிக்க நினைக்கும் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது.