நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

தள்ளிப்போடும் குணத்தைத் தவிர்க்கும் வழிமுறைகள்!

செல்ஃப் டெவலப்மென்ட்
News
செல்ஃப் டெவலப்மென்ட்

ஒருவிதமான ஏக்கத்துடனும் பயத்துடனும் இருக்கும் நபரா நீங்கள்..?

‘‘முக்கியமான வேலைகளைக் கடைசி நேரம் வரை ஒத்திவைத்து அவசர அவசரமாக முடிக்கும் நபரா நீங்கள்..?

வீட்டிலும் பணியிடத்திலும் சீரற்ற செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை (Disorganized) கொண்டிருக்கும் நபரா நீங்கள்..?

எந்த ஒரு புராஜெக்ட்டில் நீங்கள் ஈடுபடும் போதும் கடைசி நேரத்தில் குற்ற உணர்ச்சி யுடனும், என்னவாகுமோ என்ற ஒருவிதமான ஏக்கத்துடனும் பயத்துடனும் இருக்கும் நபரா நீங்கள்..?

புத்தகத்தின் பெயர்: Do the Hard Things ஆசிரியர்: Scott Allanபதிப்பகம்: ‎Scott Allan Publishing
புத்தகத்தின் பெயர்: Do the Hard Things ஆசிரியர்: Scott Allanபதிப்பகம்: ‎Scott Allan Publishing

இந்தக் கேள்விகளில் ஏதாவது ஒன்றுக்கு நீங்கள் ‘ஆம்’ என்ற பதிலை கூறும் நிலையில் இருந்தால், தள்ளிப்போடுதல் என்பதை நீண்ட காலமாகக் கடைப்பிடித்துவரும் ஒரு நபராக நீங்கள் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

தள்ளிப்போடுதலைப் பழக்கமாகக் கொண்டி ருக்கும் உங்களால் நீங்கள் ஈடுபடும் எந்த ஒரு விஷயத்திலும் சீராகச் செயல்பட முடியவே முடியாது. இந்தக் குணத்தை முழுமையாகப் பெற்றுவிட்டபின், நீங்கள் உங்களுடைய வாழ்வில் எதையும் சரிவர நிர்வகிக்க முடி யாது. நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டிய கடின மான மற்றும் சுவாரஸ்யம் இல்லாத வேலையைச் செய்யாமல் கண்ணில் தெரியும் இலகுவான மற்றும் சுவாரஸ்யமான வேலையையே எப்போதும் செய்து கொண்டிருப்பீர்கள். ‘ஏன் அந்தக் கடினமான வேலையைச் செய்ய வில்லை’ என்று கேட் டால், ‘நான் ரொம்ப பிசி’ என்றோ, ‘நான் செய்யா விட்டால் வேறு யாராவது செய்வார்கள்’ என உப்புசப்பில்லாத காரணங்களைச் சொல்வீர்கள். தள்ளிப்போடும் பழக்கம் உங்கள் மனதில் ஆழமாக வேறூன்றிய பிறகு, ‘இந்தக் கடினமான முக்கியமான வேலையை முடிக்க வேண்டும்’ என்று நீங்கள் எத்தனை முறை நினைத்தாலும், அந்த வேலையை நீங்கள் செய்ய மாட்டீர்கள். இதனால் உங்கள் அலுவலகம், வீடு, பாத்ரூம் என எதிலும் எதுவும் தெளிவாக இல்லாமல், தாறுமாறாகவும் ஒரு துப்புரவற்ற நிலையிலுமே இருக்கும். இதையெல்லாம் சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களிடத்தில் மேலோங்கி நிற்கவே செய்யும். ஆனாலும், அதைச் சரிசெய்ய முயற்சி செய்யும்போது, தள்ளிப்போடும் குணம் உங்களை, வேலையை சரிவர செய்யவே விடாது.

கடினமானவற்றைத் தள்ளிப்போடுவது ஒரு நாள்பட்ட வியாதியாக உங்களுக்குள் உருவெடுத்துவிடும். இது மிகவும் மோசமான வியாதி என்று உங்களுக்குப் புரிந்தாலுமே அதிலிருந்து வெளியே வரவே முடியாமல் போய் அது உங்களை மூழ்கடித்துவிடும். ஏனென்றால், சட்டென்று தோன்றும் கவனச்சிதறல் கடினமான வேலையை தொடங்கவே விடாது. இதனால், உங்கள் திறமை பளிச்சிடும் அளவுக்கான காரியங்களைச் செய்ய விடாது உங்களை எதற்கும் லாயக்கற்றவராக மாற்றிவிடும்.

இந்த நிலையிலிருந்து மாற வேண்டும் எனில், என்ன செய்ய வேண்டும்? எப்போதுமே கடினமான வேலைகளையே முதலில் செய்து பழக வேண்டும். எப்படி கடினமான வேலைகளை விரும்பிச் செய்யும் மனநிலையைப் பெறுவது என்பதைச் சொல்வதுதான் இப்புத்தகத்தின் நோக்கம். இதில் கூறப்பட்டுள்ள நடைமுறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் தள்ளிப்போடுதலைத் தவிர்த்தல் எனும் போரில் உங்களால் நிச்சயம் வெற்றி பெற முடியும்’’ என்கிறார் ‘டு தி ஹார்டு திங்க்ஸ் (Do the Hard Things)’ எனும் புத்தகத்தின் ஆசிரியர் ஸ்காட் ஆலன்.

தள்ளிப்போடுதல் என்றால் என்ன?

“தள்ளிப்போடுதல் என்றால் என்ன என்ற கேள்விக்கு ஆராய்ச்சி யாளர்கள் கூறும் வரையறை ‘மோசமான விளைவுகளை அல்லது விரும்பும் விளைவுகளுக்கு எதிர்மறையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது தெரிந்திருந்துமே ஒரு செயலை அதைச் செய்ய வேண்டிய பொழுதில் செய்யாமல் ஒத்திவைத்தல்’ என்பதாகும்.

கட்டாயம் செய்ய வேண்டிய வேலை என்பது தெரிந்திருந்துமே ஏன் அதைச் செய்யாமல் விடுகிறோம் எனில், நமக்குப் பிடித்த / மகிழ்ச்சிதரும் வேலைகளைச் செய்துவிட்டு, இதைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தால்தான்.

உதாரணமாக, வீட்டை சுத்தம் செய்தே ஆக வேண்டிய நிலைமையில் வீடு இருக்கிற போதிலும், அதை விட்டுவிட்டு ஞாயிறன்று முழு நேரமும் டிவி பார்க்கிறோம். ‘வீட்டை சுத்தம் செய்யாவிட்டால் என்ன குறைந்துவிடப் போகிறது, இந்த ஞாயிறு இல்லா விட்டால் அடுத்த ஞாயிறு செய்துகொள்ளலாமே...’ என்று கேட்பீர்கள். வீட்டை இன்று சுத்தம் செய்யவில்லை எனில், நாளை செய்துகொள்ளலாம். அதனால், பெரிய நஷ்டம் இல்லை. ஆனால், உங்கள் எதிர்காலத்துக்கான நிதித் திட்டமிடுதலை இளம் வயதிலேயே செய்யாமல் தள்ளிப் போட்டால் 70 வயதுக்குப் பின்னாலும் சொற்ப சம்பளத் தில் கிடைக்கும் வேலைக்கு நீங்கள் செல்ல வேண்டியிருக்கும். பரவாயில்லையா’’ என்று கேட்கிறார் ஆசிரியர்.

தள்ளிப்போடும் குணத்தைத் 
தவிர்க்கும் வழிமுறைகள்!

ஏன் தள்ளிப்போடுகிறோம்?

“தள்ளிப்போடுதல் என்பது சொந்தச் செலவில், நாம் தோற்பதற்கு நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் சூனியம் தான். எல்லை தாண்டிய தள்ளிப்போடும் குணம் நம் வாழ்வில் தீவிரமான பாதிப்பையும் தீராத வலியையும் உருவாக்கிவிடுகிறது. தள்ளிப்போடுதல் எனும் குணத்தை ஒருவர் பெற முக்கியமான காரணி, மனதின் இன்றைய குதூகலத்தைப் பாதுகாக்க முனைவதேயாகும். இன்றைய இந்தக் குதூகலம் எதிர்காலத்தில் செய்ய வேண்டிய சாதனைகள் மற்றும் கிடைக்கவிருக்கும் நல்வாழ்வை இழக்க வைத்துவிடும் என்பதை நாம் உணர மறுத்து விடுகிறோம்.

நம்முடைய மூளை நீண்ட நாள்களுக்குப் பின்பு கிடைக்கும் வெகுமானங்களைவிட உடனடி யாகக் கிடைக்கும் வெகுமானங் களையே பெரிதும் விரும்புகிறது. எனவேதான், நீண்ட நாள்களுக்காக நாம் திட்டமிடும் இலக்குகளை அடையத் தேவையான நடவடிக் கைகளை நாம் இப்போது எடுக்கத் தவறுகிறோம். இதனால் நீண்ட நாள் இலக்குகளை ஒரு காலக் கெடுவுடன் நாம் தீர்மானித்த பின் அதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டுவிட்டு, மீண்டும் கால எல்லைகளை மாற்றி அமைத்து தள்ளிப்போடுதலையே மாற்றி அமைக்க முடியாத பழக்கமாக ஆக்கிக் கொள்கிறோம்.

தள்ளிப்போடுவதைத் தவிர்ப்பது எப்படி?

அதற்காக அன்றாட குதூ கலங்களை ஒரேயடியாக ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு ஞானியைப் போல் எதிர்கால நற்பலன் களுக்காக பாடுபட வேண்டும் என்று சொன்னால் அது முழுக்க முழுக்க நடைமுறைப் படுத்துவதற்கு சாத்தியம் இல்லாத ஒன்றாகிவிடும். அன்றாட குதூகலங்கள் மனிதர் களுக்குத் தேவையான ஒன்றே. அன்றாட குதூகலங்களும் தேவை. நீண்ட நாள் இலக்குகளுக்கான முயற்சிகளும் தேவை. இந்த இரண்டுக்கும் இடையே ஒரு சமநிலையை அன்றாடம் நாம் கொண்டு வந்துவிட்டால் அதைப் போன்று பலன்தரும் விஷயம் வேறேதும் இல்லை.

இதற்கு முதலில் செய்ய வேண்டிய ஒன்று ஏற்கெனவே தள்ளிப் போட்டதன் மூலம் நாம் உருவாக்கியிருக்கும் சேதாரம் குறித்த குற்ற உணர்ச்சியை விட் டொழிக்க வேண்டும். ‘ஆமாம், நான் இன்றுவரை தள்ளிப்போட்டு பல விஷயங்ளை சொதப்பி வைத்திருக்கிறேன்’ என்பதை முதலில் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அடுத்து, பயணத்தைத் தொடர வேண்டும்.

நீண்ட நாள் பழக்க மாயிற்றே, தள்ளிப்போடு வதை அவ்வளவு சுலபத்தில் தவிர்க்க முடியுமா என்று கேட்டால், முடியாதுதான். அதனால்தான் தள்ளிப் போடுவதைத் தவிர்க்கும் முயற்சியில் தோல்விகள் வரவே செய்யும்.

கீழே விழுந்து எழுந்து திக்கித் திணறித்தான் முன்னேற்றத்தை சந்திக்க வேண்டியிருக்கும். இதற்கு நாம் எந்தளவுக்கு நம்முடைய நோக்கத்தில் உறுதியாக (Determination) இருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

நம்முடைய நோக்கத்தில் எந்தளவுக்கு அதிக உறுதியுடன் இருக்கிறோமோ, அந்தளவுக்கு நாம் தள்ளிப்போடுவதைத் தவிர்க்க ஆரம்பிப்போம். செய்ய வேண்டியதைத் தவிர்த்தல் என்பது நமக்கு சுகத்தைத் தந்தாலுமே அந்த வேலைகள் மலைபோல் குவிய ஆரம்பிக்கும்போது அது நம் சக்தியை கணிச மான அளவு குறைத்துவிடுகிறது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒன்றை இங்கே நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். பயனளிக்கும் ஒரு விஷயத்தை நாம் செய்ய நினைகிறோம் எனில், அதை நாம் நம்முடைய முழுத் திறமையையும் உபயோகித்து செய்ய வேண்டுமே தவிர, ஏனோதானோ என்று செய்யக் கூடாது. ஏனென்றால், முழுத் திறமையையும் உபயோகித்து ஒரு விஷயத்தைச் செய்யும்போதே நம்மால் அதன் முழுப் பலனையும் பெற முடியும்” எனகிறார் புத்தகத்தின் ஆசிரியர்.

நம்மை நம்முடைய இலக்குகளை அடைய விடாமல் தோல்வியைத் தழுவச் செய்யும் பண்பைக் கொண்ட தள்ளிப்போடுதல் என்னும் குணத்தை முழுமையாகத் தவிர்க்க நினைக்கும் அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டிய புத்தகம் இது.

தள்ளிப்போடும் குணத்தைத் 
தவிர்க்கும் வழிமுறைகள்!

பயம், பயம், பயம்...

தள்ளிப்போடுதலுக்கு முழுமுதல் காரணங்களாக இருப்பது பயம். இந்தக் காரியத்தில் வெற்றிபெற மாட்டோமோ என்ற பயம், நம்முடைய பொறுப்பு (வெற்றி/தோல்விக்கான) இதில் அதிகமாயிற்றே என்ற பயம், இது இப்படி ஆகிவிட்டால் என்ற சந்தேகம், ஒரு விஷயம் குறித்து இப்படி செய்ய லாம் என்று முடிவெடுப் பதில் இருக்கும் பயம்... இப்படி பலவிதமான பயங்களே நம்மை ஒரு விஷயத்தை செய்வதைத் தள்ளிப் போட வைக் கின்றன. இந்த பயங் களைப் போக்குவதற்கு அந்தந்த விஷயங்களைத் தீவிரமாகப் பிரித்துப் பார்த்து எங்கெல்லாம் நமக்கு தடங்கல்கள் புலப்படுகிறதோ, அவற்றை எல்லாம் செம்மைப் படுத்திக்கொள்ள வேண்டும்.