
எதிர்காலத்தில் புதிய பிசினஸ் முயற்சியை மேற்கொள்ள நினைக் கும் அனைவரும் இந்தப் புத்தகத்தை அவசியம்...
''எதிர்காலம் குறித்த பயத்தாலும், நிகழ்காலத்தில் சூழ்ந்திருக்கும் சூழ்நிலைகள் குறித்த அளவு கடந்த ஏக்கத்தாலும் மனிதர்கள் மனதில் உருவாவதுதான் ‘நெகட்டிவ் திங்கிங்’ எனும் எதிர்மறை சிந்தனைகளாகும். எதிர்மறை யான சிந்தனைகள் (Negative thinking) என்பது எல்லா மனிதர்களின் வாழ்விலுமே ஏதாவது ஒரு காலகட்டத்தில் வந்துபோகவே செய்யும். இதைத் தவிர்க்கவே முடியாது. நேர்மறையான சிந்தனைகளே மனிதர்கள் உடல் மற்றும் மன நலனுக்கு சிறந்தது என்றும், அதன் பலன்கள் எண்ணற்றது என்றும் பல்வேறு வல்லுநர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். என்னதான் இருந்தாலுமே எதிர்மறை சிந்தனைகளில் இருந்து வெளியே வருவது மனிதர்களுக்கு சுலபமான காரியமாக இருப்பதே இல்லை.

நீங்கள் மனிதர்களின் சிந்தனை குறித்து ஆராயும் ஒரு நபர் என்றாலுமே உங்களால் அவர்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கை குறித்து கவலைப் படுகிறார்களா அல்லது எதிர்மறையான சிந்தனைகளை மனதில் கொண்டு இருக்கிறார்களா என்று பிரித்துப் பார்ப்பது சுலபமான காரியமாக இருக்காது என்பதுதான் இந்த விஷயத்தில் இருக்கும் கடுமையான சிக்கல். பணக்கஷ்டம், விவாகரத்து என்பது போன்ற வாழ்வின் பெரு நிகழ்வுகள் குறித்து, மனிதர்கள் கவலைப்படுவதைத் தவிர்க்கவே முடியாது என்றாலும், இது குறித்த எதிர்மறை சிந்தனை களிலேயே தொடர்ந்து நாம் ஆழ்ந்துவிட்டால் என்னவாகும்?
கரியர் மற்றும் புரொஃபஷனல் ரிலேஷன்ஷிப் போன்றவற்றை அது பெரிய அளவில் பாதிக்கவே செய்யும். இதனாலே நாம் எதிர்மறை சிந்தனைகள் குறித்து முழுமையாகப் புரிந்துகொள்வதும் அது எப்படி நம்முடைய வாழ்வை பாதிக்கிறது என்பது குறித்து அறிந்துகொள்வதும் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இதை முழுமையாகப் புரிந்துகொண்டால் மட்டுமே நாம் நம்முடைய மனநிலையைச் சீராக வைத்துக்கொண்டு தனிப்பட்ட மற்றும் கரியர் சார்ந்த சவால்களை சிறந்த முறையில் எதிர்கொண்டு வெற்றிபெற முடியும். அதுமட்டுமல்ல, நம்முடைய முன்னேற்றத்துக்கான பாதையில் நாம் எதிர்கொள்ளும் தோல்விகளை எதிர்த்து நிற்பதற்கும் அவற்றைக் கண்டு துவண்டுவிடாமல் மீண்டெழவும் இந்த வகை புரிந்துகொள்ளல் நமக்கு உதவியாக இருக்கும். இது குறித்த முழுமை யான தெளிவை ஏற்படுத்துவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்” என்று சொல்லி ஆரம்பிக்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.
எதிர்மறை சிந்தனைகள் என்றால்...
“முதலில், நாம் படும் அன்றாட கவலைகளுக்கும் எதிர்மறை சிந்தனைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நிகழ்வு, அனுபவம், மனிதர்கள் என எல்லா விஷயங்களிலுமே அதில் இருக்கக்கூடிய மோசமான அம்சங்களை மட்டும் குறித்து எப்போதும் சிந்திப்பது எதிர்மறை சிந்தனை என்பதாகும். தொடர்ந்து எதிர்மறை சிந்தனைகளைக் கொண்டிருக்கும் நபருக்கு நாளடைவில் நல்ல விஷங்கள் குறித்த எதிர்பார்ப்புகள் கணிசமான அளவில் குறைந்துபோக ஆரம்பிக்கும். ஏனென்றால், அவர்கள் கொண்டிருக்கும் எதிர்மறை சிந்தனைகள் அவர்களை ஒரு விஷயத்தில் இருக்கும் மோசமான நினைவுகளையே பார்க்க வைக்கும். இந்த மோசமான விஷயங்கள் குறித்த பார்வையானது ‘எதற்கு அதிகமான எதிர்பார்ப்பை வளர்த்துக்கொண்டு பின்னால் ஏமாற்றமடைவது’ என்ற எண்ணத்தை அவருடைய மனதில் வளர்த்தெடுக்கும்.
அதனால் எந்த ஒரு விஷயத்திலும் அதில் ஏற்பட வாய்ப்புள்ள நல்ல விளைவுகள் குறித்த அவர்களுடைய எதிர்பார்ப்பானது கணிசமான அளவு குறைந்து போய்விடும். தவிர, அவர்களுடைய தன்மானமும் தன்னம்பிக்கையுமே இதனால் நாளடைவில் கணிசமாகக் குறைந்துபோய்விடும். அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு தனக்கு இருக்கிறது என்பதை அவர்கள் உணர மறந்துவிடுவார்கள்.
மனஅழுத்தமே காரணம்...
எதிர்மறை சிந்தனைகள் பெரும்பாலும் மனச்சோர்வு காரணமாகவே உருவாகிறது. பொதுவாக, நம்மில் ஒவ்வொரு மனிதருக்கும் நேர்மறை மற்றும் எதிர்மறை சிந்தனைகள் ஒவ்வொரு நாள், சூழலுக்கும் மாறி மாறி வந்துகொண்டேயிருக்கும். மனஅழுத்தத்தில் இருக்கும் ஒருவருடைய உலகம் குறித்த பார்வையே தவறானதாக இருப்பதால், எதிர்மறை விஷயங்களே தொடர்ந்து அவருடைய கண்ணில் படும். இதனால் அவர்கள் தங்களை ஒரு தோல்வி அடைந்த நபராகவும், அன்புக்கும் வெற்றிக்கும் தகுதியற்ற நபராகவும் மனதுக்குள் நினைத்துக் கொண்டு செயல்பட ஆரம்பிப்பார்கள்.
இந்த உலகம் ரொம்பவுமே கொடூரம் மற்றும் பகைமை நிறைந்தது என்ற பார்வையிலேயே இருப்பார்கள். எதிர்மறை சிந்தனைகள் மற்றும் மன அழுத்தம் என்ற இரண்டும் இணையும் போது ஒருவர் அவர் குறித்த சுயமதிப்பீடுகளை செய்வதிலேயே குறைபாடுகள் உருவாக ஆரம்பித்துவிடும். இதில் ஒரு வருத்தப் படவேண்டிய விஷயம் என்னவென்றால், எதிர்மறை சிந்தனைகள் மன அழுத்தத்தின் காரணமாகவே உருவாகிறது என்பதை மனிதர்கள் உணர்ந்துகொள்ளாமல் போவதுதான்” என்கிறார் ஆசிரியர்.

தவறான வழிமுறைகள்...
“நெகட்டிவ் திங்கிங் ஏற்படுவதை சரிசெய்துகொள்ள பல்வேறு தவறான வழிமுறைகளை நாம் சரியானது என நினைத்துக்கொண்டு பின்தொடர்கிறோம். உதாரணமாக, எதிர்மறை சிந்தனைகளைக் கண்டுகொள்ளாமலும் அவற்றின் மீது கவனம் கொள்ளாமலும் இருத்தல் என்னும் நடைமுறையைப் பின்பற்றுவதாகும். இப்படிச் செய்வதன் மூலம் நமக்கு ஒரு தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கும். ஏனென்றால், எதிர்மறை எண்ணங்கள் நம் மனதில் வேரூன்றிவிடும் ரகத் திலானவை. இவற்றைக் கண்டுகொள்ளாமல் விட்டால் அவை நம்மை விட்டுப் போய்விடாது. கொஞ்ச நேரம் நம் கவனத்தை விட்டு விலகிச் சென்றுவிட்டு மீண்டும் மீண்டும் எட்டிப் பார்க்கவே செய்யும்.
ஒரு சிலர், வேலையிலோ, ஒரு பொழுது போக்கிலோ தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் நெகட்டிவ் திங்கிங்கில் இருந்து தப்பிக்க நினைப் பார்கள். இந்த வழியும் பிரச்னையை சரிசெய்யும் வழியில்லை. பிரச்னையை தற்காலிகமாக ஓரங்கட்டி வைக்கும் நடைமுறையே ஆகும்.
ஒரு சிலர் சில பழக்கங் களுக்கு அடிமையாகி அதன் மூலம் இதிலிருந்து தப்பிக்க நினைப்பார்கள். இதுவும் நிரந்தர தீர்வைத் தராது. மாறாகப் பல்வேறு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வாழ்வை சீர்குலைத்துவிடும்.
ஒரு சிலரோ நீண்ட நேரம் தூங்குவதன் மூலம் நெகட்டிவ் திங்கிங்கை விலக்கி வைக்க நினைப்பார்கள். இதுவும் மிக மிகக் குறுகிய காலத் தீர்வைத் தரும் ஒன்றே தவிர, பிரச்னைக்கு முழுமையான தீர்வைத் தராது.
பகிர்ந்துகொள்ளுங்கள்...
நெகட்டிவ் திங்கிங் நமக்கு வாழ்வின் மீது இருக்கும் பிடிமானத்தைக் குறைக்க வல்லது. இதிலிருந்து அனைவராலும் வெளி வர முடியும். சரியான நடைமுறைகளைப் பின்பற்றினால் நெகட்டிவ் திங்கிங்கில் இருந்து வெளியே வருவதுடன், நல்லதொரு தன்னம்பிக்கையுடன் நம்மால் செயல்பட முடியும்.
நம் உடலை நாம் எப்படி வைத்திருக்கிறோம் என்பதில் இருந்தே நெகட்டிவ் திங்கிங்கைப் போக்கும் மாற்று மருந்து என்பது ஆரம்பமாகிறது.
நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் இல்லாமல் தலையைக் கீழே போட்டும் வளைந்து நெளிந்தும் நம் நடை உடை பாவனைகள் இருந்தால், அதுவே நெகட்டிவ் திங்கிங் என்பது உருவாவதற்கான அடித்தளமாக அமைந்து விடுகிறது. எனவே, முதலில் பாடி லாங்குவேஜில் கவனம் செலுத்துங்கள்.
அதே போல, நெகட்டிவ் திங்கிங் என்பதற்கு நீங்கள் ஆட்பட்டால், உங்களுக்கு நம்பிக்கையான நபருடன் அது குறித்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
நம்மில் பெரும்பாலானோர் நம்முடைய எண்ணங்கள் குறித்து முழுமையாக மற்றவர்களிடத்தில் பகிர்ந்து கொள்வதில்லை. ஏனென் றால், நம்மைப் பற்றி அவர் என்ன நினைத்துக்கொள் வாரோ என்ற எண்ணத்திலும் அல்லது நம் பிரச்னையை அவர் மீது திணிக்கிறோமோ என்ற எண்ணத்திலும்கூட இப்படி நாம் இருக்கிறோம். அது தவறான ஒரு கோட்பாடாகும். நம் மனதில் இருப்பதை பகிர்ந்து கொள்வதன் மூலம் பிரச்னையில் இருக்கும் இன்னொரு கோணத்தை அவரால் நமக்கு புரிய வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அவரின் வாயிலாக நம் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைப்பதற் கான வாய்ப்பும்கூட இருக்கிறது. தவிர, உங்களுடைய பிரச்னை உங்களுக்குள்ளேயே கிடப்பதைக் காட்டிலும் இன்னொருவர் அதை தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறார் என்பதே ஆறுதல் தருவதாக இருக்கும்.
இரண்டாவதாக, உங்களுடைய மனதை சாந்தப் படுத்துவதற்கு என்று கொஞ்சம் நேரம் செலவிடுங்கள். நெகட்டிவ் திங்கிங் வரும்போதெல்லாம் அதை வேறு ஒரு கோணத்தில் ஆராய்ச்சி செய்ய முயலுங்கள். உங்களுடைய ஏக்கம் மற்றும் ஏமாற்றம் போன்ற வற்றால் வரும் உணர்ச்சிகளை உங்களுக்கு உதவும் ஏணிப்படிகளாக மாற்றியமைக்க முயலுங்கள்” என்று சொல்லும் ஆசிரியர் அதற்கான வழிமுறைகளையும் தந்துள்ளார்.
பல கேள்விகளுக்கு பதில்...
நெகட்டிவ் திங்கிங் என்பதைத் தவிர்ப்பது எப்படி, உங்களுடைய சிந்தனையின் மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுவந்து அது நெகட்டிவ்வாக மாறாமல் பார்த்துக்கொள்வது எப்படி, எந்த ஒரு விஷயம் குறித்தும் அதிகமாக சிந்தனை செய்யாமல் இருப்பது எப்படி, எது குறித்தும் பெரிதாகக் கவலைப் படாமல் இருப்பது எப்படி, பாசிட்டிவ்வாக இருப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்வது எப்படி என்பது போன்ற பல்வேறு விஷயங்களை யும் விளக்கமாகத் தனித் தனியான அத்தியாயம் மூலம் விளக்குகிறது இந்தப் புத்தகம்.
எதிர்காலத்தில் புதிய பிசினஸ் முயற்சியை மேற்கொள்ள நினைக் கும் அனைவரும் இந்தப் புத்தகத்தை அவசியம் ஒரு முறை படித்து நிச்சயம் பயன் பெறலாம்.