நடப்பு
தொடர்கள்
பங்குச் சந்தை
Published:Updated:

உங்கள் வாழ்க்கையை நீங்கள் விரும்பியபடி மாற்றி அமைப்பது எப்படி?

செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
செல்ஃப் டெவலப்மென்ட்

அட்வைஸ் தேவையில்லாமல் தருவதும் பெறுவதும் கூடாது..!

உங்கள் வாழ்க்கையில் ஏதாவது பெரிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று முயன்றிருக்கிறீர்களா? பள்ளியில் படிக்கும் போது அதிகமாக மார்க் எடுக்க வேண்டும், வீட்டை ஒழுங்குபடுத்தி சரியாக வைக்க வேண்டும், மாரத்தான் ஓட்டத்தில் ஓடநினைத்து அதற்காக உடலைக் கட்டுக் கோப்புக்குள் கொண்டு வர வேண்டும், ரிடையர்மென்ட்டுக்குப் பிறகு, வரப்போகும் தேவைக்காக செலவுகளைக் குறைத்து பணத்தைச் சேமிக்க வேண்டும்... என்றெல்லாம் மாறுதலை நீங்கள் உங்களுடைய வாழ்வில் கொண்டு வர நினைக்கும்போது அந்த மாற்றத்தைக் கொண்டுவரும் முயற்சியில் வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்து உங்களுக்கு எக்கச்சக்கமான அறிவுரைகள் இலவசமாகக் கிடைத்திருக்கும்.

புத்தகத்தின் பெயர்: How to Change
ஆசிரியர்: Katy Milkman
பதிப்பகம்:‎ Vermilion
புத்தகத்தின் பெயர்: How to Change ஆசிரியர்: Katy Milkman பதிப்பகம்:‎ Vermilion

அவற்றைக் கஷ்டப்பட்டு நடைமுறைப் படுத்தினாலுமே சுலபத்தில் நம் அனைவராலும் நாம் விரும்பிய மாற்றங்களை நம் வாழ்க்கையில் கொண்டு வர முடிவதேயில்லை. மருந்து சாப்பிட மறப்பதில் ஆரம்பித்து கோல் செட்டிங்குக்கு உதவும் தலைசிறந்த ஆப் டவுன்லோட் செய்த பின்னுமே மாற்றத்துக்கான ஒரு சிறு அடிகூட எடுத்து வைக்காத நிலையே தொடர்வதையும் நாம் நம் வாழ்வில் அன்றாடம் பார்க்கிறோம். தினசரி நினைவூட்டுதலுக்கான ஏற்பாடுகளைச் செய்து வைத்துக் கொண்டு செயல்பட்டாலுமே சில விஷயங்களைச் செய்ய முயற்சி செய்யாமல் நாம் தொடர்ந்து தள்ளிப்போட்டுக்கொண்டே போகிறோம்.

ஏன் இப்படி? இந்தக் கேள்விக்கான முதலாவது பதில், மாற்றத்தைக் கொண்டு வருவது கடினமானது. இரண்டாவது பதில், மாற்றத்துக்குத் தேவைப்படும் சரியான ஸ்ட்ராட்டஜியை நாம் கொண்டிருப்பதில்லை.

‘‘மாற்றத்தைக் கொண்டு வர நினைக்கும் ஒவ்வொருவரும் முதலில் செய்ய வேண்டியது, அவர்களுக்கு இருக்கும் சவால்களை எல்லாம் சீர்தூக்கிப் பார்த்து அதற்கேற்ப ஒரு ஸ்ட்ராட்டஜியை வடிவமைப்பது தான். இந்த ஸ்ட்ராட்டஜி நாம் ஒவ்வொருவருக்கும் மாறுபடவே செய்யும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஸ்ட்ராட்டஜி என்பது சாத்தியமில்லை. ஏனென்றால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான சவால்கள் இருக்கவே செய்யும்.

நீங்கள் மாற்றத்தைக் கொண்டு வர நினைக்கும்போது அதற்கான எதிரி வெளியே இல்லை. நம்முடைய மூளைக்குள்தான் இருக்கிறது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும் இந்த எதிரிகளை சமாளிக்க நம்மிடம் சரியான வழிவகைகள் கைவசம் இருக்க வேண்டும். இது குறித்த ஆராய்ச்சி செய்து அதன் முடிவுகளை வைத்தே இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளேன்.

இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் வழிகளை நீங்கள் கடைப்பிடிப்பதன் மூலம் உங்களுக்கு தொடர்ந்து சிறுசிறு வெற்றிகள் கிடைக்க ஆரம்பித்து, அவை நாள்பட பெரியதாக மாறி உங்களைத் தொடர்ந்து மாற்றங்களை உருவாக்குவதில் முன்னேற்றமடையச் செய்து நல்ல பல பலன்களைக் கொடுக்கும்’’ என்கிறார் இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியை.

மாற்றத்தைக் கொண்டு வர நினைக்கும் நீங்கள் அதற்கான முயற்சிகளை புதிய ஆரம்பங்களில் இருந்து எடுக்க ஆரம்பிக்கும் போதுதான் வெற்றிகரமாக அவற்றை நடைமுறைப்படுத்தி அதற்குண்டான பலன்களை அடைய முடியும். அதே போல, மாற்றத்துக்கான முயற்சியை மேற்கொள்ளும்போது அது நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிற மாதிரி, அந்த முயற்சிகள் சரிவர பலிக்காது போனால், நம் மனதில் நீங்காத சோர்வையும் ஏற்படுத்திவிடும் என்பதையும் மறந்துவிடக் கூடாது என்று ஆரம்பத்திலேயே எச்சரிக்கிறார் ஆசிரியை.

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்
செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

டிவியில் ஒரு சீரியல் பார்ப்பது, ஓ.டி.டி-யில் ஒரு வெப்சீரிஸ் பார்ப்பது என்பது போன்ற வாழ்வின் இன்றைய சூழலை அனுபவிப்பது என்பதற்கு உடனடியாகப் பிரியத்துடன் விழை வது மனித இயல்பாகும். ஏனென்றால், இவற்றின் பலன் நமக்கு உடனடியாகக் கிடைக்கிறது. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு மற்றொரு காரியத்தை நாம் கஷ்டப்பட்டு செய்து அதற்கான பலன் நமக்கு நீண்ட நாள்களுக்குப் பின் கிடைக்கும் எனில், நாம் அந்தக் காரியத்தை அதே போன்ற ஈடுபாட்டுடன் (வெப் சீரீஸ் பார்ப்பதில் இருக்கும் அளவுக்கு) செய்ய மாட்டோம் இதனாலேயே நாம் நீண்ட நாள் அடிப்படையில் நன்மைபயக்கும் விஷயங்களைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறோம். இதுபோன்று தள்ளிப்போடுவதைத் தவிர்க்க முதலில் நாம் கட்டுப்பட்டு இருக்க வேண்டிய சூழ்நிலைகளை நாமாகவே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார் ஆசிரியை.

உதாரணமாக, சேமிப்புக்கான இலக்கை அடைய வேண்டும் எனில், பணத்தைப் போட்டால் எடுக்க முடியாத சேமிப்புக் கணக்கு ஒன்றை உருவாக்கி, அதில் பணத்தைப் போடுவதைப் போன்ற காரியங்களைச் செய்ய வேண்டும். இப்படி பணம் போடப்படும் கணக்கில் இருந்து நாம் பணத்தை வெளியே எடுக்க முடியாது என்பதால் நம்முடைய சேமிப்பு இலக்கை நம்மால் சுலபத்தில் அடைய முடியும்.

இதே போன்ற மற்றொரு விஷயம் (நாமே உருவாக்கிக்கொள்ளும் கட்டுப்பட வேண்டிய சூழல்) நாம் கொண்டு வர விரும்பும் மாற்றம் குறித்து நம்மைச் சுற்றியிருப்பவர்கள் (உதாரணமாக, அடுத்த வருடத்துக்குள் என்னுடைய இந்தத் தகுதியை வளர்த்துக்கொள்வேன் என்பது போன்ற சபதங்கள்) முன்னால் வெளிப்படையாக நாம் சபதம் எடுத்துக்கொண்டு செயல்படு வதாகும். இதுபோன்று வெளிப்படையாக சபதம் எடுத்துக் கொண்டுவிட்டு அந்த விஷயத்தை நாம் செய்யாதுபோனால் அது அவமானம் என்று நினைத்து நாம் அந்தக் காரியத்தைத் தொடர்ந்து பின்பற்ற ஆரம்பிப்போம் என்கிறார் ஆசிரியை.

சில சமயம், நாம் பிசியாக இருப்பதால், நாம் கொண்டு வரத் திட்டமிட்ட மாறுதல்களை நம்மால் சுலபத்தில் கொண்டு வர முடியாமல்போகும். ஒட்டு மொத்தமாக மறந்து போகும் அளவுக்கு நாம் பிசியாக இருந்துவிடுவதற்கும் பல சமயம் வாய்ப்புள்ளது. இதனால் நாம் திட்டமிட்ட விஷயங்களைச் செய்வதற் கான நினைவூட்டல்களுக் கான ஏற்பாடுகளை நாம் செய்து வைக்க வேண்டும். நினைவூட்டல்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் போது நம்முடைய இலக்கு களை சின்னச் சின்னதாகப் பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்படி பெரிய இலக்கு களை நாம் சின்னச் சின்ன இலக்குகளாகக் கூறுபோட்டுப் பார்க்கும்போது நிச்சயமாக நம்மால் அவற்றை சுலபத்தில் நடைமுறைக்குக் கொண்டு வர முடியும்.

இப்படி சின்னச் சின்ன இலக்குகளாகப் பிரிக்கும் போது, நம்மால் சுலபத்தில் அவற்றை நடை முறைப்படுத்து வதற்கான செக் லிஸ்ட்களை யும் நம்மால் உருவாக்கிக் கொள்ள முடியும். இந்தவித செக் லிஸ்ட்கள் திட்டமிட்ட படி மாற்றங்களைச் செயல் படுத்த பேருதவியாக இருக்கும் என்கிறார் ஆசிரியை.

‘‘மாற்றங்களைக் கொண்டு வர மிகப் பெரும் தடையாக இருப்பது, நம்முடைய சோம் பேறித்தனம். அது ஏன் உருவாகிறது என்று பார்த் தால், கஷ்டமேபடாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நாம் வாழ முயல்வதால்தான். சோம் பேறித்தனம் நம்மிடம் குடிகொண்டுவிட்டால் நாம் எதையும் தேர்ந்தெடுத்து செய்ய வேண்டியதில்லை. இருக்கும் இடத்தில் அசை யாமல் சொகுசாக இருக்கலாம் என்ற மனநிலையை நாம் கொண்டிருப்போம்.

இதை மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்? நமக்கு சொகுசு எது என்பதை நாம் மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். அதாவது, நமக்கு சொகுசாக இருப்பது என்பது எதையாவது செய்ய முயற்சி செய்து அதனால் வரும் கஷ்டங்களை எதிர்கொள்வது என்ற நிலைக்கு நம்மை மாற்றி அமைத்துக்கொள்வதாகும்.

இன்னும் குறிப்பிட்டுச் சொல்லப்போனால், அசை யாமல் இருப்பது நமக்கு சொகுசான விஷயம் இல்லை. அசராமல் செயல்படுவதே நமக்கு சொகுசு நிலை என்ற மனநிலையை நாம் கட்டமைத் துக்கொண்டால் சோம்பேறித் தனம் என்பது நம்மை அண்டவே அண்டாது. இது ஒரு பிஹேவியரல் மாற்றம் தான். கொஞ்சம் முயன்றால் இந்த நிலையை நம் அனைவ ராலும் கொண்டு வர முடியும்’’ என்கிறார் ஆசிரியை.

அடுத்தபடியாக ஆசிரியை கூறுவது, நம்மால் நாம் நினைக்கும் மாற்றம் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை நாம் அவசியம் கொண்டிருக்க வேண்டும் என்பதை. நம்மால் முடியுமா என்ற சந்தேகம் நம்மிடத்தில் தோன்றினால் அதுவே மாற்றத்தைக் கொண்டு வருவதில் பெரியதொரு தடைக்கல்லாக உருவாகிவிடும்.

இது போன்ற நம்பிக்கை இழப்பு அல்லது நம்மால் இது முடியுமா என்ற கேள்வி நம்முள்ளே தோன்றும் போது நம்மைச் சுற்றியிருப்பவர்கள் நம்மைத் தேற்றுவதற்கு நிச்சயம் உதவுவார்கள். அதற்கு அவர்களுடைய உதவியை நாம் நிச்சயமாகக் கேட்டுப் பெறலாம். இதிலும் மிகவும் குளோஸாக இருப்பவர்கள் ரொம்பவுமே நமக்கு இந்த விஷயத்தில் உதவியாக இருப்பார்கள். அதே சமயம், தேவையில்லாமல் ஒருவருக்கு அட்வைஸ் தருவது தன்னம்பிக்கையை அவர் இழப்பதற்கு வழிவகை செய்துவிடும் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. எனவே, அட்வைஸ் தேவையில்லாமல் தருவதும் பெறுவதும் கூடாது என்கிறார் ஆசிரியை.

இதில் மற்றுமொரு விஷயம் என்னவெனில், மிகவும் குளோஸாக இருப்பவர்களைத் தாண்டி இது போன்ற விஷயங்கள் தெரியவரும்போது அது சோஷியல் பிரஷராக உருவெடுத்துவிடும். இது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும். ஏனென்றால், சோஷியல் பிரஷரின் மூலம் மாற்றம் கொண்டுவருவது கொஞ்சம் கடினமான விஷயமே என்கிறார் ஆசிரியை.

மாற்றங்களை நம் வாழ்வில் கொண்டு வருவதற்குத் தடையாக பெரும்பாலும் நம்முள்ளே இருக்கும் விஷயங்களே இருக் கிறது. அவற்றைக் கண்டறிந்து களைவது எப்படி என்பதைத் தெளிவுபடுத்துகிறது இந்தப் புத்தகம்.

பல்வேறு நிஜ வாழ்க்கை உதாரணங்களையும் ஆராய்ச்சி முடிவுகளையும் மேற்கோள்காட்டி எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம் மாற்றத்தை தங்களுடைய வாழ்வில் கொண்டு வர விரும்பும் அனைவரும் படித்துப் பயன்பெறலாம்.