நடப்பு
தொடர்கள்
பங்குச் சந்தை
Published:Updated:

பணி இடங்களில் மோசமான பாஸ்களை எதிர்கொண்டு முன்னேற்றம் காண்பது எப்படி?

செல்ஃப் டெவலப்மென்ட்
News
செல்ஃப் டெவலப்மென்ட்

பணிச்சூழலில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கான தீர்வு இதோ..?

கோவிட்-19-க்குமுன் தினமும் அலுவலகத்துக்குச் சென்று வேலை பார்த்தபோதும் சரி, கோவிட்-19-க்குப் பின் வொர்க் ஃப்ரம் ஹோம் என வீட்டில் இருந்து வேலை பார்த்தபோதும் சரி, பாஸ் மற்றும் சக பணியாளர்களால் பெண் ஊழியர்கள் பாடாய்ப்படுத்தப்படுகின்றனர். பாஸுடன் இருக்கும் இணக்கம் அல்லாத சூழலையும், சக பணியாளர்களிடம் இருக்கும் கோபத்தையும் அவர்களால் அவ்வளவு சுலபமாகக் கடந்து போய்விட முடியாது. அதனால் ஏற்படும் அவஸ்தையை யாரிடமும் பகிர முடியாமல் மனதுக்குள் புதைத்து நொந்துபோகும் பெண்கள் நிறைய பேர்.

புத்தகத்தின் பெயர்: How to Work Without Losing Your Mindஆசிரியர்: Cate Sevillaபதிப்பகம்:‎ Penguin Books Ltd
புத்தகத்தின் பெயர்: How to Work Without Losing Your Mindஆசிரியர்: Cate Sevillaபதிப்பகம்:‎ Penguin Books Ltd

இப்படி பாஸ்கள் மற்றும் சக பணியாளர் களால் உருவாக்கும் அழுத்தத்தால் மனமொடிந்து போகாமல், ஒரு பெண்ணாக வெற்றிகரமாகப் பணிபுரிவது எப்படி, இப்படிப்பட்டவர்கள் இடையே பணிபுரிந்து கரியரில் முன்னேற்றம் காண்பது எப்படி என்பதைச் சொல்லும் ‘ஹவ் டு வொர்க் வித் அவுட் லூசிங் யுவர் மைண்ட் (How to Work Without Losing Your Mind)’ என்கிற புத்தகத்தைதான் நாம் இந்த வாரம் பார்க்கப்போகிறோம். கேட் செவில்லா எனும் பெண்மணி எழுதிய இந்தப் புத்தகம், இது மாதிரியான பிரச்னைகளில் இருந்து பெண்கள் மீண்டுவருவதற்கான நடைமுறைகளைத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது.

பணிச்சூழலில் பெண்கள்...

‘‘பெரும்பாலான கரியர் அட்வைஸ் புத்தகங்கள் ஆண்களுக்கான தீர்வுகளைத் தருகின்றன என்பதாலேயே, பெண்களுக்கான அட்வைஸ்களுக்குத் தேவை அதிகமாக இருக்கிறது. பணியிட நடைமுறைகள் என்பது பெரும்பாலும் பெண்களுக்கு சாதகமாக இல்லை.

பணி செய்யும் உலகமானது பெண்களை வேறு வழியில்லாமல் சகித்துக்கொள்வதைப் போன்ற மனநிலையில் இருக்கிறதே அன்றி, முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை. ஆண்களால் கட்டமைக்கப்பட்ட பணியிடங்கள் பெண்களை வருக வருக என்று வரவேற்றாலுமே, சரிசமமாக நடத்துவதற்கு எக்கச்சக்கமான தயக்கத்தைக் கொண்டிருக்கவே செய்கிறது’’ என்கிறார் புத்தகத்தின் ஆசிரியை.

‘‘ஒரு மிகப்பெரிய லட்சியத்தை வைத்துக்கொண்டு அதற்காக கடுமையாக உழைத்து சாதனை புரிய முயற்சி செய்யும்போது வருகின்ற மனச்சோர்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. சாமான்ய பெண்ணாக வாழ முயற்சி செய்யும்போது பாஸ் மற்றும் சக பணியாளர்களால் மனச்சோர்வு நமக்கு உருவாகிறது எனில், அது நிச்சயம் தேவையற்ற ஒன்றுதானே. ஒரு சிலரால் மட்டுமே இது போன்ற மனச்சோர்வு உண்டாக்கும் விஷயங்களை சுலபமாகக் கடந்துபோக முடியும்.

பணியிடத்தில் உருவாகும் இந்த அழுத்தமானது பணியிட நண்பர்/ நண்பிகளிடம் இருந்து உங்களை விலகி இருக்க வைப்பதுடன், குடும்ப உறவுகளிலிருந்துமே சற்று விலகி இருக்க வைத்துவிடும் வல்லமை கொண்டது’’ என்கிறார் ஆசிரியை.

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்
செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

பிரச்னைக்கான காரணம்..?

“முதலில் ஏன் நம்முடைய பாஸால் / சக பணியாளர்களால் நமக்கு பிரச்னை உருவாகிறது என்று பார்ப்போம். குறைவான தகுதியுடைய மற்றும் சரியான வகையிலான பயிற்சி ஏதும் இல்லாத மேனேஜர்களிடத்தில் நாம் வேலை பார்க்கிறோம். இதுவே நமக்கு நிறைய எதிர்மறை பாதிப்புகளை உருவாக்கி நம்மை சிறப்பாகப் பணிபுரியவிடாமல் செய்கிறது.

நச்சுத்தன்மை அதிகமிக்க பணியிடச் சூழல் என்பது அகங்காரம், பொறாமை, மனநிலை சிதைவு, கொதித்தெழுதல் போன்ற எதிர்வினைகள் மற்றும் வினையூக்கிகளின் காரணமாக எல்லைகள் இல்லாத அளவுக்கு வெகுவிரைவாக விரிவடைந்து விடுகிறது. நிறுவனங்கள் ஒரு பொய்யான, பாதுகாப்பு உணர்வை நமக்கு உருவாக்கித் தந்து நாமெல்லாம் ஒரு குடும்பம் மாதிரி செயல்பட வேண்டும் என்ற நம்பிக்கையை ஊட்டுவதன் மூலம் அதை நம்பி நாம் உயிரைக் கொடுத்து வேலை செய்ய ஆரம்பிக்கிறோம். அப்படிச் செய்யும் வேளையில், மேனேஜர் மற்றும் சகபணியாளர்களின் சுயரூபம் வெளிபட்டால்நம் மனது ஒடிந்துபோய் நாம் மன அழுத்தத்தில் சிக்கிக் கொள்கிறோம்.

பெண் பணியாளர்களைப் பொறுத்தவரை, ஆண்களைவிட சம்பளத்தைக் குறைவாக வாங்கிக்கொண்டு வேலை செய்யும் சூழ்நிலையில் இருந்தாலுமே, தாய்மை அடைந்தபின் அவர்களுக்குக் கிடைக்கும் பணி ரீதியான (நிறுவன மற்றும் தனிமனித ரீதியிலான) சப்போர்ட் என்பது பெரும்பாலும் மிக மிகக் குறைவாக இருப்பதால் இந்த வித மனச்சோர்வு என்பது உருவாகிறது.

மோசமான ஒரு பாஸைக் கொண்டிருப்பதைவிட கொடூர மான விஷயம் ஒன்றில்லை. பணியாளர்கள் வேலையை விட்டுப் போவதில்லை. பாஸை விட்டே போகின்றனர் என்கின்றன ஆய்வு முடிவுகள். லண்டனில் உள்ள ஓர் உளவியல் நிபுணர், தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களில் (20 - 40 வயதுள்ள) 80% பேர் தங்களுடைய பாஸுடன் சரியான அலுவல்ரீதியான உறவைக் கொண்டிராமல் இருப்பவர்களே என்கிறார். அதிலும் தங்களுக்கு வேண்டியதைக் கேட்க முடியாமலும், தங்கள் மீது திணிக்கப்படும் விஷயங்களை வேண்டாம் என்று கூற முடியாமலும் இருப்பதாலேயே அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்களாம்.

மோசமான பாஸ்களின் அடாவடிகள்...

மோசமான பாஸ்கள் செய்யும் அடாவடிகள் பல வகை. வருட இறுதியில் பணியாளர் குறித்த மதிப்பீடுகளைச் செய்யும் வேளையில் பெண்களை மதிப்பீடு செய்யும்போது மதிப்பெண்ணைக் குறைப்பது, ஒருவர் ஈடுபட்டிருக்கும் புராஜெக்ட்டானது தோல்வி அடைய வேண்டும் என்கிற எண்ணத்தில் எந்தவித ஒத்துழைப்பையும் தராமல் இருப்பது, ஒரு பணியாளரை மற்ற பணியாளர்களுடன் இணையவிடாமல் (சோஷிய லாகவோ, உடன் அமர்ந்து வேலை செய்ய விடாமலோ) இருப்பது போன்ற காரியங் களை மோசமான பாஸ்கள் செய்யத் தவறுவதில்லை’’ என்கிறார் ஆசிரியர்.

‘‘பெரும்பாலான சமயங் களில் ஒரு பெண்மணி எந்த அளவுக்கு பணிச்சுமையுடன் இருக்கிறார் என்பதையே மற்றவர்களுக்குத் தெரியாமல் ரகசியமாக வைத்திருக்கும் சூழ்நிலையை உருவாக்கி வைத்திருப்பதில் மோசமான பாஸ்கள் கைதேர்ந்தவர் களாக இருப்பார்கள்.

அலட்சியப்படுத்துதல், நேருக்குநேர் பேச மறுத்தல், ஒரு சிலருக்கு வேண்டுமென்றே மதிப்பும் மரியாதையும் சலுகைகளையும் அளித்தல், அலுவலக நேரம் தாண்டியும் போன் செய்து வேலை குறித்து தொந்தரவு செய்தல், எல்லா வேலைகளையுமே அவசரம், மிக அவசரம் என்கிற நிலையில் கூறுதல், அடிக்கடி அப்-டேட்டுகளைக் கேட்டல், வேலையை எப்படி செய்ய வேண்டும் என்பதை ஸ்டெப்-பை-ஸ்டெப்பாகக் கூறுதல், மோசமான வார்த்தைகளைப் பேசுதல், புகார் அளித்தல், எப்போதும் புகார் சொல்பவர் என உங்களைத் தரக்குறைவாகப் பேசுதல், அவருக்கு எதிராக புகார் கூறினால் மூர்க்கத்தன மாகத் திருப்பி அடித்தல் போன்றவையும் மோசமான பாஸ்களின் குணமே’’ என்கிறார் ஆசிரியை.

பாஸுடன் பேச்சு வார்த்தை நடத்துங்கள்...

‘‘எல்லா மோசமான பாஸ்களையுமே கையாள் வதற்கென ‘ரெடிமேட்’ வழி என்று எதுவும் கிடையாது. மோசமான பாஸை எதிர்கொண்டு சமாளிக்க செளகர்யம் அல்லாத விஷயங்கள் பலவற்றையும் செளகர்யமானவையாகப் பார்த்து, நீங்கள் பழகிக் கொள்ள வேண்டியிருக்கும். இதற்கு பொறுமையும் பணிவும் எக்கச்சக்கமாகத் தேவைப்படும். ஏனென்றால், உங்களுடைய பிரச்னை குறித்து, நீங்கள் உங்களுடைய மேனேஜரிடம்தான் பேச வேண்டியிருக்கும். அந்தப் பேச்சுவார்த்தையானது மிகவும் கடினமானதாக இருந்துவிடவும் வாய்ப்பு உள்ளது. எனவே, இது போன்ற பேச்சுவார்த்தையை நடத்தத் தேவையான திறமையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எப்படி இந்தவித பேச்சு வார்த்தையை அணுகுவது என்ற தெளிவு அவசியம். இதைச் சொன்னால் அவர் என்ன நினைத்துக் கொள்வாரோ, இதற்கு என்ன மாதிரியான எதிர்வினை யாற்றுவாரோ என்பது போன்ற கற்பனை அனுமானங் களைத் தவிர்த்துவிட்டு பேச வேண்டும்.

நீங்கள் மனதைப் படிக்கும் வித்தை தெரிந்தவரல்ல. எனவே, எதனால் இந்தப் பேச்சுவார்த்தையை நீங்கள் நடத்த வேண்டியிருக்கிறது என்பதற்கான காரணங்களை எல்லாம் கணிக்க முயலக்கூடாது. அதே போல், நீங்கள் நடத்தும் பேச்சுவார்த்தையானது தீர்வுகளைக் கூறும்படி இருக்க வேண்டுமே தவிர, வெறுமனே பிரச்னைகளைப் பட்டியலிடுகிற மாதிரி இருக்கக் கூடாது. இதற்கெல்லாம் மேலாக, நீங்கள் நேர்மையாகவும் எள்ளளவும் போலித்தனம் இல்லாமலும் பேச வேண்டும்’’ என்கிறார் ஆசிரியை.

எதிர்கொள்ளும் வழிமுறைகள்...

பணியிடத்தில் நிலவும் பொறாமையை எப்படி சமாளிப்பது, உழைத்துக் களைத்துப்போகாமல் பணியிடத்தில் எப்படி முன்னேற்றத்தை அடைவது, அகங்காரம் என மற்றவர்கள் நினைத்துக்கொள்ளாத அளவுக்கு சரியான எல்லைகளை வகுத்துக்கொண்டு எப்படி செயல்படுவது, நம்முடைய எதிர் பார்ப்புகளுக்கேற்ற திட்டங்களை எப்படி வகுத்துக் கொள்வது, மோசமான வேலையை எப்போது, எப்படித் தூக்கி எறிவது என்பது போன்ற பெண் களுக்கான பணியிட ரீதியான விஷயங்களுக்கு சரியான விளக்கங் களையும் நடைமுறை களையும் பல்வேறு நிஜவாழ்க்கை உதாரணங்களுடனும் ஆராய்ச்சி முடிவுகளைக் கொண்டும் தனித்தனி அத்தியாங்களில் இந்தப் புத்தகத்தில் ஆசிரியை தந்துள்ளார்.

பணி வாழ்க்கையில் பெண்கள் அதிகம் ஈடுபட்டு வருகிற இன்றைய சூழ்நிலையில், அதில் ஜெயிக்க நினைக்கும் அனைத்துப் பெண்களும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது!