
சூப்பர் ஸ்டார்கள் எப்படி உருவாகிறார்கள்..?
திறமை எல்லா இடங்களிலும் இருக்கிறது. வெற்றி பெறத் தேவையான மனப்பாங்கு தான் இல்லை என அதிரடியாக ஆரம்பிக்கிறது ‘இம்பாக்ட் பிளேயர்ஸ்’ (Impact Players) என்கிற நாம் இந்த வாரம் பார்க்க இருக்கும் புத்தகம்.

மூன்று வகை பணியாளர்கள்...
நிறுவனப் பணியாளர்களில் திறமையானவர் களின் மத்தியில் மூன்று விதமான நபர்கள் இருப்பார்கள். அதிக மதிப்பு கூட்டுதலையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் அளவுக்குச் செயல்படுபவர்கள்; திறமையான மற்றும் அந்தத் திறமைக்கேற்ற வேலையைச் செவ்வனே செய்துவிட்டுச் செல்பவர்கள்; திறமையான, அதே சமயத்தில் அந்தத் திறமைக்குச் சற்றுக் குறைவான வேலைகளை மட்டுமே செய்து விட்டு கம்மென்று இருக்கும் நபர்கள். இதில் முதல் இரண்டு பிரிவினரைப் பற்றி குறிப்பாக, அவர்களுக்கு இடையே இருக்கும் வித்தியாசங்கள் பற்றி விலாவாரியாகப் பேசுகிறது இந்தப் புத்தகம்.
விளையாட்டுப் போட்டிகளில் நீங்கள் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கலாம். இக்கட்டான சூழ்நிலையில் டீமின் கோச் ஒரு விளையாட்டு வீரரை முன்நிறுத்தி சூழ்நிலையை எதிர்கொள்வார். பல சமயங்களில் அந்த வீரரை முன்நிறுத்தியதால் அந்தக் குழுவுக்கு வெற்றி கிடைக்கும். இந்த மாதிரி கோச்சுகள் முன்னிறுத்தத் துணியும் வீரர்களையே ‘இம்பாக்ட் பிளேயர்’ என்கிறோம்.
சிறந்த திறமை கொண்டவர்களில் ஒரு சிலர் மட்டுமே எப்படி இக்கட்டான சூழ்நிலைகளில் பரிமளிக்கின்றனர், அப்படிப் பரிமளிக்கும் அளவுக்கு ஒருவர் எப்படி தன்னைத் தயார் படுத்திக்கொள்வது என்பதைச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
மதிப்பு கூட்டும் கலை...
திறமையானவர்களில் சிலருக்கு மட்டுமே தங்களின் மதிப்பைக் கூட்டிக்கொள்வது என்பது கைவந்த கலையாக இருக்கிறது. நிறுவனத்தில் நடக்கும் நிகழ்வுகளை அவர்கள் கூர்ந்து கவனிக்கின்றனர். அதனாலேயே அசாதாரண சூழ்நிலைகளிலும் நடக்க வேண்டிய காரியங்களை சுலபமாக நடத்தி முடித்து முத்திரை பதிக்கின்றனர்.
இப்படி பல முக்கியமான காரியங்களை நடத்தி முடிப்பதன் மூலம் அவர்கள் வெறுமனே நிறுவனத்துக்கு அனுகூலமான விஷயத்தை மட்டும் செய்துவிடுவதில்லை. அவர்கள் செய்த காரியத்தைப் பார்க்கும் ஏனைய திறமையான பணியாளர்களும் இதே போன்ற தகுதியைத் தாங்களும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுவதன் மூலம் நிறுவனத்துக்கு அதிக பலனை உருவாக்கித் தருகின்றனர்.
இது போன்ற அசாதாரண சூழ்நிலைகளிலும், அதிக ரிஸ்க் இருக்கும் சூழ்நிலைகளிலும் நிறுவனத்தின் நிர்வாகிகள் இது போன்ற நபர்களை மட்டுமே சுலபமாக நம்பி களமிறக்கு கின்றனர். வெறுமனே திறமையாக வேலை பார்ப்பது வேறு; முத்திரை பதிப்பது வேறு என்பதை இந்த மாதிரியான நபர்கள் தெளிவாகப் புரிந்து வைத்துக்கொண்டுள்ளதே இதற்குக் காரணமாக இருக்கிறது.

சூப்பர் ஸ்டார்கள் எப்படி உருவாகிறார்கள்?
இரண்டு சமமான திறமைகொண்ட நபர்கள் ஒரு பிரிவில் பணியாற்றும்போது ஒருவர் பிரகாசிக்கவும், மற்றொருவர் சாதாரணமாகத் தெரியும்படியான சூழல் இருக்கிறது. பிரகாசிக்கும் நபருக்கும் அவருடைய நிர்வாகிக்குமே எப்படி இந்த மேஜிக் நடக்கிறது என்பதில் ஒரு தெளிவான புரிந்துகொள்ளல் இருக்காது.
நிர்வாகிக்கு இது போன்று பிரகாசிக்கும் சூப்பர் ஸ்டார்கள் அதிகம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது மட்டுமே தெளிவாகப் புரியும். எப்படி சூப்பர் ஸ்டார்கள் உருவாகிறார்கள் என்பதை அந்த நிர்வாகியால் விவரித்துச் சொல்லத் தெரியாது.
இந்தச் சாதனையாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த நினைப் பவர்கள். அதற்கான தீராத தாகம் கொண்டிருப்பவர்கள். ஒருவர், சிறந்த பங்களிப்பைத் தரும் நபராக இருக்க என்ன செய்கிறார், எது அவரை ஒரு நிறுவனத்தில் செல்வாக்கு மிக்க நபராக உருவாக்குகிறது, திறமையானவர்களுக்கும் அவர்களில் ஒருவராக இருக்கும் தாக்கத்தை உண்டு பண்ணக்கூடிய அளவிலான நபர்களுக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்கள் என்னென்ன, நிறுவனத்தில் பதவிகள் எதுவும் இல்லாமல் ஒரு பணியாளராக மட்டுமே இருக்கும்போதும் எப்படி நிறுவனத்தின் முக்கியமான முடிவுகளில் பங்கேற்பவராகவும், நிறுவனம் முழுவதும் அவருக்கு ஒத்துழைப்பு தருமாறும் அவர் உருவெடுக்கிறார் என்பது போன்ற கேள்விகளுக்கு விடைகள் தெளிவாகத் தெரிவதில்லை.
திறமையாளர்கள் யார்..?
அடோப், கூகுள், நாசா, சேல்ஸ்ஃபோர்ஸ், எஸ்.ஏ.பி (SAP), ஸ்ப்ளங்க், ஸ்டான்ஃபோர்டு ஹெல்த் மற்றும் டார்கெட் போன்ற நிறுவனங்களில் பணிபுரிகிற (பல்வேறு நாடுகளில்) 170 நிர்வாகிகளிடம் அவர்களின்கீழ் பணிபுரிந்தவர்களில் யார் தனிச் சிறப்பான (Extraordinary) பங்களிப்பைச் செய்பவர் என்று கேட்டோம்.
பின்னர், அவர் எப்படி அவருக்கு அளிக்கப்பட்ட பணியை அணுகுவார், அவர்களுடைய பணியைப் பற்றி எந்த மாதிரியான எண்ணம் கொண்டிருக்கிறார்கள், எதை அவர்கள் செய்வார்கள், எதை அவர்கள் செய்ய மாட்டார்கள், ஏன் அவர்கள் செய்யும் காரியங்கள் மிகவும் மதிப்பு மிக்கவை யாகப் பார்க்கப்படுகிறது என்று கேட்டோம்.
இது போன்ற அதீத பங்களிப்புச் செய்யும் நபர்கள் குறித்து மட்டுமல்ல, அவர்களின் கீழ் பணிபுரிந்த ஏனைய திறமையாகப் பணிபுரியும் நபர்கள், திறமையானவர்களாக இருந்தும் அவர்களுடைய திறமைக்குக் கீழான பங்களிப்பைத் தந்தவர்கள் என்ற மூன்றுவிதமான நபர்கள்) குறித்தும் கேட்டோம்.
இதையும் தாண்டிய ஒரு கேள்வியாக, உங்களின்கீழ் பணிபுரிபவர்கள் செய்யும் எந்தக் காரியம் உங்களை மகிழ்ச்சி அடையச் செய்கிறது, எந்தக் காரியம் உங்களை விரக்தி அடையச் செய்கிறது என்றும் கேட்டோம். இந்த ஆராய்ச்சியின் மூலம் நான் கண்டறிந்த விஷயங்களையே இந்தப் புத்தகத்தில் தந்துள்ளேன் என்று சொல்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியை.
திறமை Vs அதீத தாக்கம்...
திறமையானவர்கள் சாதாரண சூழ்நிலையில் சிறப்பாகச் செயல்படுவார்கள் எனில், அதீத தாக்கத்தை உண்டு பண்ணக்கூடிய நபர்கள் சிக்கலான சூழ்நிலைகளில் மிகவும் சிறப்பாகச் செயல்படு பவர்களாக இருப்பார்கள். இதுவரைக்கும் பார்த்த பிரச்னை களைத் திறமையானவர்கள் சுலபமாகக் கையாள்வார்கள் எனில், அதீத தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நபர்கள் மிகச் சாதாரணமாகக் கையாளும் கலையைக் கற்று வைத்திருப்பார்கள்.
பணி குறித்த இவர்களுடைய பார்வையின் கோணமே வேறு மாதிரியாக இருக்கும். உதாரண மாக, அலுவலகத்தின் வெளியே பக்கத்தில் இருக்கும் பார்க்கில் இருந்துவரும் தேனீக்களின் தொல்லை அதிகமாக இருக்கிறது எனில், அனைவரும் பயந்து ஓடுவார்கள். இவர்களோ, தேனி வருகிறது எனில், அதைப் பொழுது போக்காக வளர்க்க ஏற்பாடு செய்யும் மனப்பாங்கைக் கொண்டிருப்பார்கள்.
நிறுவனம் கஷ்டத்தில் இருக்கிறது. இதேபோன்ற நிலைமை தொடர்ந்தால் மூட வேண்டியிருக்கும் என்ற சூழலில் எப்படியும் மூடப்போகிறோம் எனில், நாம் ஏன் சில ரிஸ்க்குகளை எடுத்து வெற்றி அடையச் செய்ய முயற்சி செய்யக் கூடாது என்று கேட்கும் மனநிலையில் இருப்பார்கள். தாக்கத்தை ஏற்படுத்தும் நபர்களுடைய செயல்பாடுகள் மற்றவர்களை விட சற்று மாறுபட்டதாகவே இருக்கும்.
தனித்துவம் வாய்ந்தவர்கள்...
குறிப்பாக, ஐந்து விஷயங்களில் இவர்கள் மற்ற திறமையானவர் களைவிட மாறுபட்டவர்களாக இருக்கின்றனர். ஏனையவர்கள் தங்களுக்குத் தரப்பட்ட வேலையை மட்டும் திறம்பட செய்யும்போது இவர்கள் எடுத்த காரியத்தை முடிக்கத் தேவை யான வேலைகள் அனைத்தையும் சரியாகச் செய்கின்றனர். ஏனையவர்கள் ஒரு காரியத்தை எப்படிச் செய்ய வேண்டும் என்று யாராவது சொன்னால்தான் செய்வார்கள்.
ஆனால், இவர்களோ செல்ல வேண்டிய திசையைத் தீர்மானித்து தாங்களாகவே பயணிக்க ஆரம் பிப்பவர்களாக இருப்பார்கள். பிரச்னைகள் வந்தால் மற்றவர்கள் அதை மேலதிகாரிகளிடம் சொல்லிவிட்டு காத்திருக்க முயலும்போது, இவர்கள் பிரச்னைகளைச் சமாளித்துச் செய்ய வேண்டிய காரியத்தை முடித்துவிட்டுப் போகிறபோக்கில் தங்களுடைய நிலையையும் ஸ்திரப்படுத்திக் கொள்வார்கள்.
மாற்றத்தை நிர்வகிக்கவும் மாற்றத்தின் தாக்கத்தைக் குறைக் கவும் மற்றவர்கள் முயலும் சூழ்நிலையில், தாக்கத்தை ஏற்படுத்தும் நபர்கள் முழுமையாக மாறக் கற்றுக்கொண்டு, அந்த மாற்றத்துக் கேற்ப மொத்தமாக மாறிவிடும் தன்மையைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.
புதிய வேலைகள் மற்றும் பொறுப்புகள் வரும்போது ஏனையவர்கள் அதை மற்றுமொரு சுமக்க வேண்டிய சுமையாக ஏற்றுக்கொள்ளும் சூழலில், தாக்கத்தை ஏற்படுத்தும் நபரோ அதையும் தாண்டிய வேலைகளுக்கு எப்போதுமே திட்டமிடுவதன்மூலம் கையில் இருக்கும் மற்றும் புதிதாகத் தரப்படும் வேலையின் சுமை என் திறனை ஒப்பிட்டுப் பார்க்கையில் மிகவும் குறைவு என்கிற மனப்பாங்கில் செயல்படுவார்கள்.
மேலே சொன்ன குணாதிசயங்களைப் பெற்று அதை நம்முள்ளே வளர்த்தெடுப்பது எப்படி என்பதைப் பல்வேறு நிஜவாழ்க்கை உதாரணங்களுடன் தெள்ளத் தெளிவாக எளிய நடையில் விளக்குகிறது இந்தப் புத்தகம்.
தாக்கத்தை ஏற்படுத்தும் நபர்களைப் பணிக்கு ஆள் எடுக்கும் நிலையிலேயே எப்படிக் கண்டறிந்து தேர்ந்தெடுப்பது, தாக்கத்தை உருவாக்கக்கூடிய நபர்களை எப்படி வளர்த்தெடுப்பது, இது போன்ற நபர்களைக் கொண்ட குழுவை எப்படி நிர்வகிப்பது, எப்படி தொடர்ந்து வெற்றி பெறுவது என்பதைப் பற்றியெல்லாம் இந்தப் புத்தகத்திலிருந்து நீங்கள் தெளிவாகக் கற்றுக் கொள்ளலாம்.
பணியிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்த நினைக்கும் அனைவரும் ஒருமுறை கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது.