நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பணியாளர்கள் வேலையை விட்டுப் போக மோசமான மேனேஜர்தான் காரணமா..?

மேனேஜர்...
பிரீமியம் ஸ்டோரி
News
மேனேஜர்...

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

நிறுவனங்களில் ஆரம்ப நிலை பணியாளர்களில் 70% பேர் தங்கள் மேனேஜர் குறித்து அதிருப்தியுடன் இருப்பதாகவே கூறுகின்றனர். சற்றும் தகுதி இல்லாத நபர், தவறான தேர்வு என்றே 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மேனேஜர்களைப் பணியாளர்கள் வர்ணிக்கின்றனர்” என்று சொல்லும் ‘Managin People’ என்ற புத்தகத்தின் ஆசிரியர், மோசமான நிர்வாகி யார், அவர் தன்னை எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும் என விளக்குகிறார்.

புத்தகத்தின் பெயர்:
Managing People
ஆசிரியர்:
Simon Birkenhead
பதிப்பாளர்:
Penguin Business
புத்தகத்தின் பெயர்: Managing People ஆசிரியர்: Simon Birkenhead பதிப்பாளர்: Penguin Business

புதிய பதவிக்குரிய தகுதி...

“பெரும்பாலான பணியாளர்கள், ஒரு மோச மான மேனேஜர் உருவாக்குகிற சூழ்நிலையே பணியை விட்டு விலகுவதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது. மோசமான பணியிடச் சூழல் என்பதை உருவாக்கும் மேனேஜரே அவர்களுடன் பணிபுரியும் தனிநபர்கள் மற்றும் பணியாற்றும் நிறுவனங்களின் முன்னேற்றத்துக்கான பாதையில் செல்வதற் கான செயல்பாடுகளை முடக்கிப் போடுவதில் முக்கியப் பங்கை வகிக்கிறார்.

ஒரு நிறுவனத்தில் புதிதாக மேனேஜராக வரவிருக்கும் ஒருவருக்கு தற்போதுள்ள திறமை, மனப்பாங்கு மற்றும் பணியிட நடத்தை என்பது போன்ற குணாதிசயங்கள் போது மானதா என்று பார்க்கப்படுவதில்லை. 500 நிர்வாகிகள் இடையே நடத்தப்பட்ட ஆய்வொன்றின் முடிவில், 44% பேர் புதிய பதவிக்கு தாங்கள் முழுவதுமாகத் தயாராக வில்லை என்றும், 87% பேர் எங்களுக்கு இன்னும் அதிக மான பயிற்சி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர் என்பதே இதற்கான சான்றாகும்.

மனிதர்களை நிர்வகிப்பது எப்படி என்பது ஒருவரின் உள்ளுணர்வில் இருந்தோ, பொதுப் புத்தியில் இருந்தோ, ஒரு நிர்வாகி கற்றுக் கொள்ளக்கூடிய விஷயம் இல்லை. நடப்பில் நாம் பார்க்கும் அதிக அளவிலான மோசமான நிர்வாகிகளே (மேனேஜர்கள்) இதற்குச் சான்றாக விளங்குகின்றனர். ஒரு நிர்வாகியாக நீங்கள் உருவாக்கும் மதிப்புக் கூட்டலைவிட அதிகப்படியான சேதாரத்தை நிறுவனத்தில் உருவாக்காமல் செயல்படுவது, தலைசிறந்த செயல்பாட்டைக் கொண்டிருப்பது எப்படி மற்றும் ஒரு நிர்வாகியாக உங்களின் கீழே பணிபுரிபவர்கள் திருப்தியுடன் இருப்பதற்கான சூழலை உருவாக்குவது எப்படி என்பதைச் சொல்வதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்’’ என்கிறார் ஆசிரியர்.

பணியாளர்கள் வேலையை விட்டுப் போக மோசமான மேனேஜர்தான் காரணமா..?

மூன்று பெரும் பிரிவுகள்...

மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது இந்தப் புத்தகம். முதலாவது பிரிவில், “மேனேஜர் ஆகிவிட்டோம் என்பதுடன் நின்றுவிடாமல் ஒரு தலைசிறந்த மேனேஜராக இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டியது மிக மிக அவசியம். இப்படிப்பட்ட எண்ணத்துடன் செயல்பட ஆரம்பித்தால் மட்டுமே பெரும்பாலான மேனேஜர்கள் செய்யும் தவறுகளைத் தவிர்த்து, உங்களுடன் பணிபுரியும் குழுவினரின் நம்பிக்கைக்கு சீர்குலைவு ஏற்படுத்தாமல், மன அழுத்தத்தை உருவாக்காமல், நிறுவனக் காலாசாரத்தையும் சீரழிக்காமல் உங்களால் ஒரு நிர்வாகியாக வெற்றிகரமாகச் செயல்பட முடியும்” என்று சொல்லி, அதற்கான காரணங்களை விளக்கமாகச் சொல்கிறார் ஆசிரியர்.

இரண்டாவது பிரிவில், ‘‘ஒரு சிறந்த நிர்வாகியாகச் செயல்பட நினைக்கும் ஒருவர், உடனிருக்கும் பணியாளர் களிடம் சிறந்த பங்களிப்பைப் பெற ஊக்கமளித்தல், எதிர் பார்ப்புகளை உருவாக்குதல், அவர்களுடைய வளர்ச்சிக்கு வித்திடுதல், நல்ல கலாசாரத்தை நிறுவி அதை வளர்த்தெடுத்தல், நிர்வாக ரீதியிலான தகவல் பரிமாற்றத்தை சரியாகச் செய்தல் என்ற ஐந்து விஷயங்களை அடிப்படை யாகக்கொண்டே செயல்பட வேண்டியிருக்கும்” என்கிறார் ஆசிரியர். மூன்றாவது பெரும் பிரிவில் நிர்வாகிகளுக்குத் தேவைப்படும் இருபது அதிமுக்கிய விஷயங்களைப் பட்டிய லிட்டுள்ளார்.

மகிழ்ச்சியான சூழல் முக்கியம்...

“பணியாளர்களின் மனநிறைவே நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கு அடிப்படை. பொதுவாக, மனிதர்கள் மாற்றத்தை எதிர்கொள்ளத் தயங்குபவர்கள். ஆனாலும், அவர்கள் ஏன் பணியை விட்டு விலகி, வேறு வேலைக்குச் செல்லும் மாற்றத்தை ஏற்றுக்கொள்கின்றனர்? சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றைக் காரணமாகக் கூறினாலும், நிஜத்தில் வேறாக உள்ளது.

வேலையை விட்டுச் செல்லும் பணியாளர்களின் இடையே நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 12% பணியாளர்களே சம்பள உயர்வே காரணம் என்று கூறியுள்ளனர். அதே ஆய்வில் பங்கேற்ற நிர்வாகிகளில் 89% பேர், சம்பளமே வேலையை விட்டுப் போகக் காரணமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். இது என்ன மாதிரியான நகைமுரண் என்று பார்த்தீர்களா? இதனாலேயே ஒருவர் சிறந்த நிர்வாகியாகத் திகழ வேண்டும் எனில், பணியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதிலேயே அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிறேன்’’ என்கிறார் ஆசிரியர்.

“ஒரு நிர்வாகியாக நீங்கள் உங்களுடைய குழுவுக்கு மிக மிக முக்கியமான நபர் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஒரு சிறந்த நிர்வாகி அவருடைய குழுவில் இருக்கும் சராசரி திறமை கொண்ட பணியாளர்களைக் கொண்டேகூட தலை சிறந்த செயல்பாட்டை உருவாக்கும் வல்லமை கொண்டவராக இருப்பார். அதே சமயம், ஒரு மோசமான நிர்வாகி அவருடைய குழுவில் மிகச் சிறந்த பணியாளர்களைக் கொண்டிருந்தபோதும் சராசரிக்கும் குறைவான செயல் பாட்டையே கொண்டிருப்பார்.

யார் மோசமான நிர்வாகி..?

மோசமான நிர்வாகி என்பவர் மூன்று குணாதிசயங்களைக் கொண்டிருப்பார்.

1. பணியிடத்தில் அவருடைய பெர்சனாலிட்டி.

2. பணியிடத்தில் அவர் வேலை செய்யும் முறை.

3. அவருடைய அனுபவம் என்ற மூன்று பெரும் பிரிவுகளி லேயே மோசமான ஒரு நிர்வாகியின் குணாதிசயங் களைப் பிரிக்கலாம்.

யாரும் எக்கேடு கெட்டுப் போங்கள், எனக்கு வேலையாக வேண்டும் என்ற தொனியில் செயல்படுதல், கோபதாபம், எகிறி அடித்தல், அழுகை போன்றவற்றை வெளிப்படுத் துதல், சர்வாதிகாரியைப்போல் செயல்பட்டு அழுத்தம் கொடுப் பதையே ஒரு நிர்வாக நெறிமுறை யாகக் கொண்டு செயல்படுதல், பணியாளர்களை இழிவுபடுத்து தல், முரட்டுத்தனமான செயல் பாடுகள், எதற்கும் வம்புவழக்கு செய்தல் போன்றவை பெர்சனா லிட்டி பிரிவில் அடங்கும்.

என்ன நடக்கிறது என யாருக்குமே தெரியாத சூழலில் வைத்திருத்தல், என்ன முடி வெடுத்தார்கள், எது முக்கியம் என்பது யாருக்கும் புரியாமல் வைத்திருத்தல், எல்லாவற்றையும் மறந்துவிட்டு கடைசி நேரத்தில் மற்றவர்களை இதைச் செய், அதைச் செய் என்று ஏவுதல், எதற்கும் எப்போதும் முடிவே எடுக்காமல் அனை வருடைய உற்பத்தித் திறனும் பாதிக்கும் அளவுக்குச் செயல் படுதல், வேலையைப் பகிர்ந் தளிக்கும் போது எதை எதிர் பார்க்கிறோம் என்று தெளிவுபடுத்தாமல் அனைவரின் முயற்சிகளையும் வீணடித்தல், யாரையும் எதற்கும் நம்பாமல் என்ன செய்ய வேண்டும் எப்படிச் செய்ய வேண்டும் என்று பட்டியல் கொடுத்தல், தொடர்ந்து என்ன ஆயிற்று என்று நச்சரித்தல், யாராவது செய்யும் பணியில் திணறினால் உடனடியாகக் களத்தில் வரிந்து கட்டிக்கொண்டு இறங்கி செயல்பட்டு அந்தக் காரியத்தை முடித்து அவர்களை எதையுமே கற்றுக்கொள்ள விடாமல் செய்தல், வெற்றிகளுக்கு தன்னைச் சொந்தக்காரன் என்று காட்டிக்கொண்டு தோல்விகளுக்கு குழுவைக் காரணம் காட்டுதல், எல்லா அதிகாரத்தையும் குவித்து வைத்துக்கொண்டு குழுவினரின் திறமையை மொத்தமாக வீணடித் தல் போன்றவை பணியிடத்தில் வேலை செய்யும் முறை என்பதன் கீழ் அடங்கும்.

எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளித்து தன்னுடன் பணிபுரி பவர்களைச் சிந்திக்கவிடாமல் மழுங்கடித்தல், சிறந்த ஐடியா களை உருவாக்கும் திறமையைக் கொண்டிருந்தும் எதிலும் தொடர்ந்து சிரத்தையுடன் செயல் படாமல் செய்ய வேண்டிய விஷயங்களின் முன்னுரிமைகளை அடிக்கடி மாற்றியமைத்து சரியான ஸ்ட்ராட்டஜியை செய் யாமல் குழப்புதல், வேகமாகச் செயல்பட்டால் வெற்றி என்ற சூழ்நிலையிலும் தன்னுடைய பரிபூரணவாதி (perfectionist) என்ற குணாதிசயத்தை சற்றும் விட்டுத் தராமல் பிடிவாதமாய் இருந்து காரியத்தை முற்றிலுமாகக் கெடுத் தல், தான் சும்மா இருந்தாலே போதும், குழுவினர் சாதித்துக் காட்டுவார்கள் என்பது புரிந்தும், தேவையே இல்லாமல் அவர்களுடைய பணியில் தலையைவிட்டு செயல்பாட்டைக் குலைத்தல் போன்றவை அனுபவம் அல்லது அனுபவ மின்மை பிரிவின்கீழ் வரும்” என்கிறார் ஆசிரியர்.

சிறந்த நிர்வாகியாக மாறுங்கள்...

“சிறந்த நிர்வாகியாக இருக்க ஓர் ஊக்குவிக்கும் நப ராகவும், என்ன எதிர்பார்க்கிறோம் என்பதைத் தெளிவு படுத்திவிட்டு காரியங்கள் சரியாகப் போகிறதா என்பதை டிராக் செய்யத் தெரிந்து வைத்திருத்தல், பணியாளுக்குத் தேவையான பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்தும், பர்ஃபாமன்ஸ் என்பதை ஒரு கலாசாரமாக வளர்த்தெடுக்கும் வண்ணம் செயல்படுதல், குழுவினருடன் செய்யும் தகவல் பரிமாற்றத்தைத் தெளிவானதாக வைத்திருத்தல் போன்றவையே அதிமுக்கிய விஷயங்கள்” என்று சொல்லும் ஆசிரியர், இவற்றை எப்படி வளர்த்துக்கொள்வது என்பது குறித்து விளக்கமாகக் கூறியுள்ளார்.

“நீங்கள் ஒரு சி.இ.ஓ-வாகவோ, தொழில் அதிபராகவோ இருந்தாலுமே நிர்வாக குழுவுக்கும் பங்குதாரர்களுக்கும் நீங்கள் ஒரு பணியாளரே என்பதை நினைவில் கொண்டீர்கள் எனில், இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது உங்களுக்குப் புரிந்துவிடும்” என்று சொல்லி புத்தகத்தை முடிக்கிறார் ஆசிரியர்.

சிறந்த நிர்வாகியாக விரும்பும் அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய புத்தகம் இது.