தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

மற்றவரின் மனம் அறியும் ‘மைண்ட் ரீடிங்’ உத்திகள்!

செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
செல்ஃப் டெவலப்மென்ட்

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

சாதாரணமான உரையாடல்களோ, மிக முக்கியமான ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தைகளோ எதுவானாலும் எதிரே இருப்பவர் நிஜமாகவே மனதில் என்ன நினைக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டால் அது போன்று பயனளிக்கும் தலைசிறந்த விஷயம் வேறு எதுவும் இல்லை எனலாம். எதிரே இருப்பவர் என்ன சொல்கிறார் என்பதை விட்டுவிட்டு, அவர் நிஜமாகவே மனதில் என்ன நினைக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க உதவும் நடைமுறைகளை சொல்வதுதான் ‘மைண்ட் ரீடர்’ எனும் நாம் இந்த வாரம் அறிமுகப்படுத்தும் புத்தகத்தின் நோக்கமாகும்.

புத்தகத்தின் பெயர்: 
Mindreader
ஆசிரியர்: David J.Lieberman
பதிப்பகம்:‎ Rodale Books
புத்தகத்தின் பெயர்: Mindreader ஆசிரியர்: David J.Lieberman பதிப்பகம்:‎ Rodale Books

ஃபால்ஸ் பாசிட்டிவ்...

நீங்கள் ஒரு விஷயம் பற்றிப் பேசும்போது கால்களை இணைத்துக்கொண்டும் கைகளைக் கட்டிக்கொண்டும் ஒருவர் அமர்ந்திருந்தால் அவருக்கு நீங்கள் பேசும் விஷயத்தில் ஒப்புதல் இல்லை அல்லது எதிர்கருத்துடன் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளலாம் என்கின்றனர் பாடி லாங்குவேஜ் குறித்த பழைய நடைமுறைகளைச் சார்ந்த வல்லுநர்கள்.

‘‘இந்தவித விளக்கத்தில் தவறேதும் இல்லை, என்றாலும் பல சமயங்களில் தவறான புரிதல்களை உருவாக்கக்கூடிய சூழல்கள் (false positives) இன்றைய உலகில் உருவாகியுள்ளது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, ஜில்லென்று குளிரூட்டப் பட்ட ஓர் அறையில் கைவைக்கும் வசதி இல்லாத இருக்கையில் அமர்ந்திருக்கும் ஒருவர் எப்படி உட்கார்ந்திருப்பார்? பெரும்பாலும் காலை இணைத்துக்கொண்டும் கையைக் கட்டிக்கொண்டும்தானே? ஒருவர் அமர்ந்திருக்கும் சூழலால் வேறு வழியில்லாமல் இவ்வாறு அமர்ந்திருக்க நாமோ அவர் நம்முடைய கருத்துடன் ஒத்துப்போக வில்லை என்று நினைப்பதை ‘ஃபால்ஸ் பாசிட்டிவ்’ என்கிறேன்.

அதே போல், கண்ணைப் பார்த்துப் பேசாவிட்டால் அதில் உண்மை இல்லை என்கிறோம். இன்றைக்குத் திருட்டுத்தனம் செய்ய எத்தனிக்கும் அனைவருக்கும் இது நன்றாகத் தெரியும். எனவே, அவர்கள் கண்ணைப் பார்த்து பொய் சொல்லும் கலையில் கைதேர்ந்தவர்களாக உருவெடுத்துவிட்டார்கள். இதனால்தான் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற நடைமுறை ஒன்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது’’ என்று வலியுறுத்தும் ஆசிரியர், முற்காலத்தில் செய்ததைப்போல், ஒரே ஒரு முறை சந்தித்துவிட்டு, இவர் நல்லவர், இவர் கெட்டவர் என்றெல்லாம் இன்றைக்குக் கணித்துவிட முடியாது. இது போன்று பல்வேறு விஷயங்கள் இன்றைக்கு மாறிவிட்டபடியால் பண்டைய ஸ்டீரியோ டைப் நடைமுறைகளெல்லாம் இன்றைய சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாமல் போய்விட்டது’’ என்கிறார் ஆசிரியர்.

எப்படிச் சொல்கிறார் என்பது முக்கியம்...

கோவிட் 19-க்கான முகக்கவசங்களும் பாதிக்கும் மேற்பட்ட கூட்டங்கள் வீடியோ கான்ஃப்ரன்ஸிங்கிலும் நடத்தப்படும் இந்தக் காலகட்டத்தில் பழைய பாடி லாங்குவேஜ் குறித்த நடைமுறைகள் பெரிய அளவில் நமக்கு உதவாமல் போய்விடு கிறது. நேரடியாக ஆட்களிடம் பேசாமல் இ-மெயில் மெசேஜ்கள், மற்றொருவரிடம் செய்த சாட் உரையாடல்கள், ரெக்கார்டு செய்யப்பட்ட வாய்ஸ்மெயில் பேச்சுகள் போன்றவற்றிலிருந்துகூட அதைப் பேசியவர் என்ன மாதிரியான நிஜமான மனநிலையில் இருக்கிறார் என்பதைக் கண்டறிய உதவும் டெக்னிக்குகள் இந்தப் புத்தகத்தில் தரப்பட்டுள்ளன.

உரையாடல்களின்போது ஒருவர் என்ன சொல்கிறார் என்பதைவிட அதை எப்படிச் சொல்கிறார் என்பதிலேயே அவருடைய மனவோட்டத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியும். அலுவலகத்தில் நீங்கள் ஒரு பிரசன்டேஷன் செய்கிறீர்கள். முடிந்தவுடன் உங்கள் சக பணியாளர் ஒருவர் உங்களிடம் வந்து ‘உங்கள் பிரசன்டேஷன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது’ என்று சொன்னால், அது மனமாரப் பாராட்டுதல். ‘நைஸ் பிரசன் டேஷன்’ என்றோ, ‘ரொம்பவும் ரிசர்ச் செய்திருப்பீர்கள்’ என்றோ சொன்னால், அது வெறுமனே உங்களை மகிழ்விக்க சொல்லும் வாசகங்கள் ஆகும்.

மற்றவரின் மனம் அறியும் ‘மைண்ட் ரீடிங்’ உத்திகள்!

என் கார், அந்த கார்...

பேச்சு என்பது சரி. எழுத்தில் இதை எப்படி கண்டறிவது? போலீஸில் கார் தொலைந்துவிட்டது என்று புகார் தருபவர்கள் என் கார், என் கார் என்று வரிக்கு வரி எழுதுவதற்கும், அந்த கார், அந்த கார் என்று வரிக்கு வரி குறிப்பிடுவதற்கும் நடுவே உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொண்டால், அது உண்மையான புகாரா அல்லது போலி புகாரா என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

அதே போல் ஒரு குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபர் அவர் குறித்து குறிப்பிடுகையில் ‘நான்’ என்றும், குற்றம் செய்த நபர் பற்றிச் சொல்லும்போது, ‘அவன்’ என்றுமே கூறுவார்கள். உதாரணமாக, ‘என்னை காருக்குள் தள்ளினான்’ என்பார்களே தவிர, ‘நாங்கள் காரில் ஏறினோம்’ என்று சொல்லவே மாட்டார்கள். ‘போகிற வழியில் பெட்ரோல் போட ஒரு பங்கில் நிறுத்தினான்’ என்பார்களே தவிர, ‘வழியில் காரை நிறுத்தி பெட்ரோல் போட்டோம்’ என்று சொல்ல மாட்டார்கள்.

தப்பு பண்ணிட்டேனா, இல்லை, தப்பு நடந்துடுச்சா?

ஒரு வார்த்தையை வைத்து ஒருவருடைய உண்மைத் தன்மையை எடை போட முடியுமா என்று நீங்கள் கேட்கலாம். அது எடை போடுதலின் ஆரம்பப்புள்ளி ஆகும். ‘என் பேனாவை அவருக்குக் கொடுத்தேன்’ என்பதற்கும் ‘அவருக்கு பேனா தந்தது நான்தான்’ என்பதற்கும் பெரிய அளவிலான வித்தியாசம் வந்துவிடுகிறது.

இதையெல்லாம் விடுங்கள். உங்களுடைய டெய்லர் ‘நான் உங்கள் சட்டையைத் தைக்கும்போது சிறு தவறு செய்துவிட்டேன்’ என்று சொல்வதற்கும் ‘சட்டை தைக்கும்போது சிறு தவறு நடந்துவிட்டது’ என்று சொல்வதற்கும் இடையே அவர் அந்தத் தவறு குறித்து ஏற்றுக் கொள் ளும் பொறுப்பு மற்றும் படுகிற வருத்தம் என்ற இரண்டும் தெளிவாகத் தெரிகிறது இல்லையா’’ என்று கேட்கிறார் ஆசிரியர்.

சந்தோஷமும் அலங்காரமும்...

இதற்கான ரூல்கள் என்று பார்த்தால், சந்தோஷமோ, வருத்தமோ, நேரடியாகச் சொல்லும்போது உண்மை யானதாகவும், அதிக அள விலான வார்த்தை அலங் காரத்துடன் கூறப்படும் போது போலியானதாகவும் இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நிஜமான, உணர்வுபூர்வமான எண்ணங்கள் எப்போதும் சாதாரண சொற் களின் மூலமே மனிதர்களால் வெளிப்படுத்தப்படுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை என்கிறார் ஆசிரியர்.

பெரிய பதவியில் இருப் பவர்கள் அவர்களைவிட குறைந்த பதவியில் இருப்பவர் களிடம் பேசும்போது நான், என்னை மற்றும் என் என்ற வார்த்தைகளைக் குறை வாகவே பயன்படுத்து வார்கள். உதாரணமாக, ‘என்ன பேசுகிறீர்கள் நீங்கள்?’ என்பதற்கும், ‘நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை’ என்பதற்கும் இடையே உள்ள வித்தியா சத்தைப் பாருங்கள். எதை உங்களுடைய பாஸ் அடிக்கடி கூறுவார்’’ என்று கேட்கிறார் ஆசிரியர்.

உண்மையைக் கண்டறிவது எப்படி?

சொல்லும் வார்த்தையில் இருந்து உண்மை மற்றும் பொய்யைக் கண்டறிவது எப்படி என்பது குறித்து தனியான ஓர் அத்தியாயத்தில் விளக்கியுள்ள ஆசிரியர், உண்மையைச் சொல்வதற்கு குறைவான எனர்ஜியும் பொய்யைச் சொல்வதற்கு அதிக எனர்ஜியும் செல விடப்படும்.

பொய் சொல்லும் ஒருவர், ‘நான் ஏற்கெனவே கூறியபடி...’, ‘நான் ஏற்கெனவே சொல்லிய பதிலின்படி...’ என்று தன் பொய்யான கதையை ஒன்று சேர்த்துக் கோர்வையாக சொல்ல முயல்வார் என்கிறார். பொய் சொல்பவர் உரையாடலை சீக்கிரமாக முடிக்கவும், உண்மை சொல் பவர் எப்பாடு பட்டாவது நீட்டி முழக்கி தன் நிலைப் பாட்டை விவரித்துச் சொல்ல வும் முயல்வதை வைத்தே உண்மை எது, பொய் எது என்று நீங்கள் கண்டு பிடித்துவிடலாம் என்கிறார் ஆசிரியர்.

அதே போல், அலுவலகத் தில் பணிபுரியும் ஒருவர், ‘இதை எனக்கு செய்து தராவிட்டால் (பதவி உயர்வு, சம்பள உயர்வு, ஒரு புராஜெக்ட் என) நான் வேலையை விட்டு போய்விடு வேன்’ என்கிறார்.

அவருடைய நிலைப்பாடு என்ன? மனதில் இருக்கும் எண்ணம் என்ன என்று ஆராய்ந்தால், அவர் பணியில் இருக்கவே விரும்புகிறார். கேட்பது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருக்கிறது. பொய்யான மிரட்டலையே அவர் நிர்வாகத்திடம் விடுக்கிறார். கேட்பது கிடைக்காது என்பது திண்ணமாகத் தெரிந்தால், அவர் ஒன்றுமே சொல்லாமல் வேலையைப் பார்க்கத் தொடங்கி விடுவார்’’ என்று சொல்கிறார் ஆசிரியர்.

அதே போல், பொய் சொல்பவர்கள்தான் எக்கச் சக்கமான டேட்டாக்களைக் கோர்த்து பேசி அவர்களுடைய நிலைப்பாட்டை உறுதி செய்ய முயற்சி செய்வார்கள் என்று சொல்லும் ஆசிரியர், உண்மை சொல்பவர்களோ முகத்தில் அடித்தாற்போல் அவர்கள் நிலைப்பாட்டை சொல்லிவிடுவார்கள் என்கிறார்.

சூழ்ச்சி, கபட நாடகம் மற்றும் ஏமாற்று வேலை போன்றவற்றை எப்படிக் கண்டறிவது என்பது குறித்தும் விளக்கமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம். நாம் இன்று வாழும் உலகம் குழப்பம் நிறைந்ததாகவும் கணிக்க முடியாததாகவும் இருக்கிறது. இந்த மாதிரியான சூழல் நிலவும் உலகில் நல்லது, கெட்டது என்பதைத் தெரிந்துகொள்ள நாம் முழுக்க முழுக்க நம்மைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

இந்தப் புத்தகம் அதற்கான பல்வேறு உத்திகளை நமக்கு விளக்கமாகச் சொல்கிறது. பல்வேறு எளிய உதாரணங்களுடன் எதிரே இருப்பவரின் மனதில் இருப்பது என்ன என்பதை எப்படி தெரிந்துகொள்வது என்பதற்கான நடை முறைகள் குறித்து மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்து எழுதப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம்.

அனைவரும் இந்தப் புத்தகத்தை ஒருமுறை கட்டாயம் படித்துப் பயன் பெறுவது அவசியம்!