
உற்பத்தித் திறனை அதிகப்படுத்திய ‘பவர் அவர்...’
இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்துவது ‘பவர் ஹவர்’ எனும் புத்தகத்தை. இது, எப்படி உங்களுடைய இலக்குகளை நோக்கி கவனமாகப் பயணித்து உங்களுக்கு மிகவும் பிடித்தமான வாழ்க்கையை வாழ்வது என்பதைப் பற்றிச் சொல்கிறது. இந்தப் புத்தகத்தின் ஆசிரியை ‘பவர் ஹவர்’ என்ற பெயரில் ஒரு பிரபலமான பாட்காஸ்ட் செய்து வருகிறார். தொழில்ரீதியாக இவர் ஒரு ஃபிட்னஸ் கோச்.

‘பீக் அவர்’, ‘கோல்டன் ஹவர்’ அல்லது ‘பவர் ஸ்டார்’, ‘பவர் லஞ்ச்’ என்பதெல்லாம் நமக்குத் தெரியும். அது என்ன, ‘பவர் ஹவர்..?’
எந்த வேலையாக இருந்தாலும், அதை காலம் தாழ்த்தாமல் உரிய நேரத்தில் செய்யத் தொடங்குவதன்மூலம் கிடைக்கும் பலனைத் தான் ‘பவர் ஹவர்’ என்கிறார் ஆசிரியர்.
ஒரு மரத்தை நடுவதற்கான சிறந்த நாள் எது என்று கேட்டால், இன்றுதான் என்பார்கள். செடியை இன்று நடலாம், நாளை நடலாம் என்று சும்மா இருந்துவிட்டு, பிற்பாடு, என்றைக்கோ அந்த வேலையைச் செய்திருக்கலாமே என்று நினைப்பது ‘பவர் ஹவ’ரை வீணாக்குவதுதான் என்கிறார் ஆசிரியை.
நேரத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
முதலில் உங்கள் நேரத்தை நீங்கள் எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள்? பணத்துக்கு ஈடான ஒன்றாகவா, பணத்தைவிட மதிப்பு குறைந்த ஒன்றாகவா அல்லது பணத்தைவிட அதிக மதிப்பான ஒன்றாகவா என்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்கள். உங்கள் வாழ்க்கையில் பணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், செலவழிக்கலாம், மீண்டும் ஈட்டலாம். இந்த எதுவுமே நேரத்தில் சாத்தியம் இல்லை என்கிறார் ஆசிரியை.
நேரத்தை நீங்கள் மற்றவர்களுக்குப் (நிறுவனம், நண்பர்கள், குடும்பம் என) பிரித்துக் கொடுத்தே வாழ வேண்டியிருக்கும். அந்த நிலையில், உங்களுக்கென நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியம். அந்த நேரத்தை எப்படி உருவாக்குவது, எப்படி பயனுள்ளதாக உபயோகித்து பலன் பெறுவது என்பதை பல்வேறு நிஜவாழ்க்கை உதாரணங்களுடன் விளக்கியுள்ளார் ஆசிரியை.
உற்பத்தித் திறனை அதிகப்படுத்திய ‘பவர் அவர்...’
ஓர் ஆண் குழந்தைக்குத் தாயான இந்தப் புத்தகத்தின் ஆசிரியையும் அவரின் கணவரும் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளத் திட்ட மிட்டிருந்தனர். ஆனால், இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள முயலும்போது இயற்கையான கருத்தரித்தல் சாத்தியமில்லை என்று மருத்துவர் சொல்ல, ஐ.வி.எஃப் முறையில் கருத்தரித்தாராம். ஒரு கட்டத்தில் திடீரென அந்தக் கருவும் கலைந்துபோக, மருத்துவர்கள் இனி குழந்தைப்பேறுக்கு வாய்ப்பில்லை என்று கைவிரித்துவிட்டார்கள்.
எல்லாம் முடிந்துவிட்டது என்ற வருத்தத்தில் இருந்தபோது, திடீரென்று ஒரு நாள் பெரியதொரு மல்ட்டி நேஷனல் நிறுவனம் நடத்தும் 26 மைல் தூர மாரத்தான் ரேஸில் ஓடுவதற் கான அழைப்பு வந்தது. ஒரு மாறுதலாக இருக்குமே என்று கேட்டவுடன் ஆசிரியையும் ஒப்புக்கொண்டார். மாரத்தானில் ஓட கடுமையான பயிற்சி தேவை. பள்ளிக்குச் செல்லும் சிறு வயதுப் பையனையும் கவனித்துக்கொண்டு, அதே சமயத்தில் எட்டு நபர்களுக்கு ஃபிட்னஸ் கோச்சாகவும் இருந்துகொண்டு, மாரத்தானில் ஓடுவதற்கு பயிற்சி செய்வது சாத்தியமா என்கிற சந்தேகம் இருந்தாலும், அதற்காகத் திட்டமிட ஆரம்பித்தார்.
மாரத்தானில் வெற்றிகரமாக ஓடுவதற்குத் தினமும் குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் பயிற்சி வேண்டும். அப்படியெனில், காலை அவருடைய மகன் எழுந்துகொள்வதற்கு முன் அந்தப் பயிற்சியை செய்து முடித்தாக வேண்டும். அப்படி எழுந்து ஓட ஆரம்பித்த பிறகு, அவருடைய வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடப்பதைப் பார்த்து அதிசயித்துப் போனாராம் ஆசிரியை. அந்தக் கூடுதல் ஒரு மணி நேரத்தால் (‘பவர் ஹவர்’) நிகழ்ந்த மாற்றங்கள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
‘‘இந்த ‘பவர் ஹவர்’ என்பது உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போட வல்லது. இன்றைக்கு வெல்னஸ் இண்டஸ்ட்ரி யில் ஒரு பிரபலமான கோச்சாகவும், ஒரு பிராண்ட் கன்சல்டன்ட் ஆகவும், மோட்டிவேஷனல் பேச்சாளராகவும், உலக அளவில் 14 நாடுகளில் மாரத்தான் ஓட்டம் ஒடியவளாகவும், ஆப்பிள், பர்க்லேஸ், ஏ.எஸ்.ஓ.எஸ் உள்ளிட்ட உலகின் மிகப் பெரிய நிறுவனங்களின் பணியாளர்களிடையே உரையாற்றிய பெருமையைக் கொண்ட நபராகவும் நான் இருப்பதற்கு முக்கிய மான காரணி இந்த ‘பவர் ஹவர்’தான்.
உங்கள் வேலையை முதலில் முடித்துக்கொள்ளுங்கள்...
இன்றைய பரபரப்பான உலகின் இரைச்சலில் (தேர்ந்தெடுக்க எக்கச்சக்கமான விஷயங்கள், புதிய ஐடியாக்கள் என) நாம் தொலைந்து போய்விடுகிறோம். பிழைப்பை ஓட்டுவதே பலருக்கும் மிகப் பெரிய பிரச்னையாக இருக்கிறது. ஆனால், ஒவ்வொருவருக்கும் ஓர் ஆசை இருக்கவே செய்கிறது. மாரத்தான் ஓட வேண்டும், ஒரு பிசினஸ் ஆரம்பிக்க வேண்டும், புத்தகம் எழுத வேண்டும் என்பது போன்ற கனவுகள் ஒவ்வொரு வரிடத்திலும் இருக்கவே செய்கிறது. ஆசையெல்லாம் சரி. நேரம் எங்கே இருக்கிறது என்பதுதான் அனைவரிடமும் இருக்கிற மிகப் பெரிய கேள்வி. பெரியதோ, சிறியதோ உங்களுடைய இலக்கு எத்தகையதாக இருந்தாலும் ‘பவர் ஹவர்’ என்பது நீங்கள் மற்றும் உங்களுடைய இலக்கு என்ற இரண்டை யும் உள்ளடக்கியதேயாகும் என்கிறார் ஆசிரியை.
ஒவ்வொரு நாளும் பொழுது புலர்ந்துவிட்டது எனில், வாட்ஸ்அப், இ-மெயில், முடிக்க வேண்டிய வேலைகள், குழந்தைகளைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு எனப் பல வேலைகள் நம்முன்னே வரிசை கட்டி நிற்கின்றன. இதனால்தான் பொழுது புலர்வதற்குள்ளாகவே நமக்கான விஷயங்களை நாம் செய்து முடித்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களுக்காக நம்முடைய நேரம் மற்றும் எனர்ஜியை செலவழிப் பதற்கு முன்னால் நமக்காக கொஞ்சம் ஒதுக்கி செலவு செய்வது நிச்சயமாக நாளடை வில் மிகப்பெரிய அளவிலான பலனைத் தரும் என்கிறார் ஆசிரியை.

காலம்தாழ்த்தும் கெட்ட பழக்கம்...
காலையில் அலாரம் அடிக்கும்போது ‘ஸ்நூஸ் பட்டனை’ அழுத்துவது எந்த அளவுக்கு உங்களுக்கு பாதக மாக அமையும் என்பது தெரியுமா? ‘ஸ்நூஸ் பட்டனை’ அமுக்குவதன்மூலம் ஒரு நாளை எதிர்கொள்வதை பத்து நிமிட நேரம் தள்ளிப் போடுகிறீர்கள். ஒரு செயலை தள்ளிப்போடுகிறீர்கள் எனில், அந்தச் செயலை செய்வதில் பிடித்தம் இல்லாமல் இருக் கிறீர்கள் என்றுதானே அர்த்தம்?
உங்களுக்குப் பிடித்த இடத்துக்கோ, காரியத்துக்கோ செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். எந்த அளவுக்கு முனைப்பாக செயல்படுவீர்கள்; விறுவிறுவென்று எழுந்து கிளம்பிவிடுவீர்கள் இல்லையா? இலக்குகள் இருக்கிறது. எழுந்திருக்க மனமில்லை எனில், இலக்குகள் பிடித்த மானவையாக இல்லை என்று தானே அர்த்தம் எனக் கிண்ட லாகக் கேட்கிறார் ஆசிரியை.
பரபரப்பாக எழக் கற்றுக் கொள்ளுங்கள்...
ஒவ்வொரு நாளும் படுக்கையில் இருந்து எழும்போது பரபரப்பாக எழுவது முன்னேற்றத்துக்கான ஒரு தலைசிறந்த வழியாகும். நீங்கள் சாதாரணமாக எழுந்து கொள்ளும் நேரத்துக்கு ஒரு மணிநேரம் முன்னதாக துள்ளிக் குதித்து எழுந்து உங்களுடைய இலக்கை நோக்கிப் பயணிப்பதற்கான செயல்களைச் செய்து பாருங்கள். வெற்றி என்பது மிக அருகே இருப்பது உங் களுக்குப் புரிய ஆரம்பிக்கும். இப்படிச் செய்வதன் மூலம் நம்முடைய சக்தி என்பது எல்லைக்குட்பட்டது என்ற நிலையான மனநிலையில் இருந்து முயன்றால், நம்மால் முடியாத விஷயமே இல்லை என்ற வளர்ச்சி மனநிலைக்கு நீங்கள் மாறுவீர்கள் என்கிறார் ஆசிரியை.
கேங்க்ஸ்டர் மாறியது எப்படி?
தெற்கு லண்டனில் ஒரு கேங்க்ஸ்டர் கூட்டத்தில் உறுப்பினராக இருந்த கார்ல் லோக்கோ (Karl Lokko) என்பவருடைய உண்மைக் கதையை முதல் அத்தியாயத்தில் சொல்லி ‘பவர் ஹவ’ருடைய முக்கியத் துவத்தை விளக்குகிறார் ஆசிரியை. ஒரு கேங்க்ஸ்டராக ஜெயில் அல்லது சாவு என்ற இரண்டே சாய்ஸ்களைக் கொண்ட நிலையில் இருந்த கார்ல், எப்படி தன்னுடைய வாழ்க்கையில் மாறுதலைக் கொண்டுவந்து, இன்றைக்கு ஒரு முக்கியமான புள்ளியாக (ஒரு கட்டத்தில் பிரின்ஸ் ஹாரி, ட்யூக் ஆஃப் சசெக்ஸ்க்கு (Duke of Sussex) ஆலோசகராகவும், ரிச்சர்டு பிரான்சன் எனும் பிரிட்டிஷ் பில்லியர் மற்றும் தொழில் அதிபர் நடத்திவரும் கேங்க்ஸ்டர்களுக்கு மறுவாழ்வு சாரிட்டி நடவடிக்கைகளில் ஈடுபட்டும் இருந்துள்ளார்) மாறி யிருக்கிறார் என்பதை விளக்கமாகச் சொல்லியுள்ள ஆசிரியை இதுதான் பவர் ஹவரின் மகத்துவம் என்கிறார்.
சோதனை அடிப்படையில் நேரத்தைச் செலவு செய்வது...
பவர் ஹவரான ஒவ்வொரு நாள் காலையின் முதல் மணி நேரத்தை எப்படி மிகவும் உபயோகமானதாக மாற்றிக்கொள்வது என்பது குறித்து கடைசி அத்தி யாயத்தில் விளக்கமாகச் சொல்லியுள்ளார் ஆசிரியை, பவர் ஹவரை கவனத்துடன் உபயோகித்து நம்முடைய குறைபாடுகள் பலவற்றையும் சரிசெய்துகொள்ள முடியும் என்று ஆணித்தரமாகச் சொல்கிறார். மேலும், ஒரே மூச்சில் ‘பவர் ஹவரை’ முழுமையான பலனுடையதாக உபயோகிக்க முடியாவிட்டாலுமே ‘டிரையல் – அண்ட் - எரர்’ (முயற்சி செய்து அதில் வரும் தவறுகளைத் திருத்திக்கொண்டோ/மாற்றி அமைத்தோ செயல்படுதல்) என்ற அளவில் கொஞ்சம் கொஞ்சமாக நம்மால் மாற்றி மாற்றி காரியங்களைச் செய்து, எது நமக்கு மிகவும் சிறந்தது என்பதைக் கண்டறிந்து அதன்படி நடக்க முடியும் என்கிறார்.
எப்படி வேண்டுமானாலும் உங்களுடைய முதல் ஹவரை செலவு செய்யுங்கள். ஆனால், எப்படி செலவு செய்யப்போகுறீர்கள் என்று திட்டமிட்டு செலவழியுங்கள் என்று கூறுகிறது இந்தப் புத்தகம்.
அனைவருக்கும் சமமான ஒன்றாகிய 24 மணி நேரத்தில் உங்களுக்கு மட்டும் ஒரு மணி நேரம் எக்ஸ்ட்ரா வாக கிடைத்தால், அதை எப்படி செலவு செய்வீர் கள் என்ற கேள்விக்கு உங்கள் பதில் என்ன என்கிற அறிவுரையுடன் முடிவடைகிறது இந்தப் புத்தகம்.