பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

வெற்றிகரமான வாழ்க்கைக்கு உதவும் உரையாடல் கலை..!

செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
செல்ஃப் டெவலப்மென்ட்

குழப்பம் நிறைந்த உரையாடல்... தீர்வுதான் என்ன...?

சிக்கலான சூழ்நிலைகளில், குழப்பமான தருணங்களில் பேசித் தீர்ப்பது என்பதுதான் நம்மிடம் பிரதானமாக இருக்கிறது. பேசுவது, உரையாடுவது என்பது அற்புதமான ஒரு கலை. இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் உரையாடல் கலையைக் கற்றுத்தருகிறது.

புத்தகத்தின் பெயர்: The Art of Conscious Conversations
ஆசிரியர்: Chuck Wisner
பதிப்பகம்: ‎ Berrett-Koehler Publishers
புத்தகத்தின் பெயர்: The Art of Conscious Conversations ஆசிரியர்: Chuck Wisner பதிப்பகம்: ‎ Berrett-Koehler Publishers

தீர்வு தந்த பேச்சு...

பேசுவது, கேட்பது மற்றும் பரஸ்பர கருத்து பரிமாற்றம் செய்வது மூலம் பெரிய அளவிலான முன்னேற்றத்தைப் பெறுவது எப்படி என்பதைக் கற்றுத்தரும் நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது இந்தப் புத்தகம். 25 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சிறிய நிறுவனத்தில் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பணிபுரிந்துகொண்டிருக்கும்போது நடந்த நிகழ்விலிருந்து புத்தகத்தை ஆரம்பிக்கிறார்.

“இந்த நிறுவனத்தின் பார்ட்னர் ஒருவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி அன்றாட வியாபாரத்தில் ரகளை கட்டிக்கொண்டிருந்தார். நிறுவனத்தில் பொறுப்பில் இருக்கும் அனைவரும் முயற்சி செய்தும் நிலைமை சரியாகவில்லை. அந்தச் சூழ்நிலையில் லிண்டா ரெய்ட் என்னும் ஒரு பெண்மணி கன்சல்டன்ட்டாக வந்தார். அவர் எங்களுடைய நிறுவனம் மற்றும் பார்ட்னரின் பிரச்னைகள் குறித்து குறைந்த காலத்தில் புரிந்து கொண்டு தன்னுடைய சாதுரியமான உரையாடல்கள் மூலம் எங்கள் பிரச்னைக்கு தீர்வு சொன்னார்.

மிகச் சரியான தீர்வு என்பது அந்தப் பெண்மணியின் சாதுரியமான பேச்சால் மட்டுமே உருவானது. சாதுரியமான உரையாடலின் பெரும்பலனை அன்று கண்கூடாகக் கண்ட நான் அன்றிலிருந்து இதுகுறித்த ஆராய்ச்சியில் இறங்கியதன் விளைவுதான் இந்தப் புத்தகம்” என்கிறார் ஆசிரியர்.

குழப்பம் நிறைந்த உரையாடல்...

“நான் ஒரு ஆர்க்கிடெக்ட்டாக இருந்தேன். ஆர்க்கிடெட்டின் வாழ்க்கை பிரச்னைகளால் ஆனதாகவே இருக்கும். கட்டுமானத்தில் இருக்கும் அத்தனை பிரச்னைகளையும் எங்களுடைய டேபிளுக்குக் கொண்டு வந்துவிடுவார்கள். இதில் அனைவருக்குமே நான் யார் தெரியுமா என்ற ஈகோ எக்கச்சக்கமாக இருக்கும். ஏனென்றால் பெற்றுள்ள அனுபவம், சம்பாதித்திருக்கும் பணம் போன்றவற்றால் ஈகோ இல்லாமல் இருந்தால்தான் ஆச்சர்யப்பட வேண்டும் என்ற சூழல். அப்போது ஒரு பிரச்னைக்காக கட்டுமான சைட்டில் நடந்த மீட்டிங்கில் அடிதடியே நடந்துவிட்டது. எல்லோரையும் விலக்கி விட்டுவிட்டு அலுவலகத்துக்குத் திரும்பி வந்து நிதானமாக யோசித்தேன்.

மீட்டிங்கில் பங்கேற்றவர்கள் அனைவருமே அவர்களுடைய துறையில் அதிதிறமைசாலிகள். எல்லோருக்கும் புராஜெக்ட்டை நன்றாக முடித்து பெயர் வாங்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் இருந்தது. ஆனால் அவர்களுக்கென்று ஒரு சுயநல அஜெண்டா, கவலை மற்றும் காரணம் இருந்தது. இது போன்ற பல மீட்டிங்குகளைக் கடந்து வந்தபோதிலும் சண்டை சச்சரவு என்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. இந்த முறை சண்டை போட்டு பின்னர் சமாதானம் ஆனபிறகு, இனி இது போன்ற சண்டைகளைப் போடக் கூடாது என்று சங்கல்பம் செய்துகொண்டு செயல்பட ஆரம்பிக்கிறோம். ஆனாலும், அடுத்த புராஜெக்ட்டில் வேறு ஏதாவது ஒரு பிரச்னையில் கைகலப்பு நடந்தேவிடுகிறது.

இதற்கெல்லாம் உரையாடல்களில் இருக்கும் குழப்பங்கள்தான் காரணம். இதுபோன்ற குழப்பங்களைத் தவிர்ப்பது எப்படி என்று நமக்கு பள்ளி கல்லூரிகளில் கற்றுத்தரப்படுவதேயில்லை. இதைப் புரிந்துகொண்டால் வாழ்க்கை சுலபமாகிவிடும் என்று நாம் நினைப்போம். அது என்ன என்று கூறுவதுதான் இந்தப் புத்தகம்.

மாறும் மனநிலை...

ஓர் உரையாடல் என்பதில் நம்முடைய பங்களிப்பானது தண்ணீரில் இருக்கும் மீனைப்போன்றது. மீனுக்கு தான் தண்ணீரில் இருக்கிறோம் என்பதே தெரியாது என்பார்கள் அதேபோல்தான். நாம் உரையாடலின்போது அடுத்தவர்களும் இதில் சமபங்கில் பங்கேற்கின்றனர் என்பதை முழுமையாக மறந்துவிட்டு உரையாடுகிறோம். நாம் சொல்லும் வார்த்தை எந்தெந்த கோணங்களில் எல்லாம் பார்க்கப்பட வாய்ப்பிருக்கிறது என்பதைப் பற்றி எள்ளளவும் சிந்திக்காமல் ஒரு ஆட்டொபைலட் மோடிலேயே நாம் உரையாடல்களில் பங்கேற்கிறோம். மனிதனுடைய மனநிலை சட்டென்று மாறக்கூடியது. காலையில் மனைவி தந்த காபியின் சுவையை ரசித்துக் குடித்து பாராட்டிக் கொண்டிருக்கும்போது, பாஸிடம் இருந்து ‘உடனே புறப்பட்டு வா’ என்ற மெசேஜ் வந்தால் என்னவாகும். சீக்கிரமாகப் போக வேண்டும் என்ற படபடப்பு நிலைமைக்கு மனநிலை மாறி, ‘இப்படி மசமச என இருக்காதே. டிபனை சீக்கிரமாய் செய்து முடி’ என்று சொல்லி சண்டை மனநிலைக்கு நம்முடைய உரையாடல் மாறிவிடுகிறது இல்லையா? இதுதான் பிரச்னையே” என்கிறார் ஆசிரியர்.

“அலுவலகத்திலும் இதே நிலைதான். ‘எங்கய்யா போய் தொலைஞ்சீங்க? இருந்திருந்து அந்த ஆளுக்கா யூனியன் எலெக்‌ஷனில் ஓட்டு போட்டாய்?’ என்பது போன்ற எரிச்சலான சூழ்நிலையில் கேட்கப்படும் கேள்விகள் எல்லாமே நிதானமாக யோசித்தால் ஏன் இப்படி நாம் பேசினோம் என்று நினைக்கும் அளவுக்கான உரையாடல்கள்தான்” என்கின்றார் ஆசிரியர். இது போன்ற உரையாடல்களில் நமக்கு நாமே குழியைத் தோண் டிக்கொள்ளும் ரீதியிலான நடைமுறைகளை மாற்றிக்கொள்வது எப்படி என்பதைத்தான் இந்தப் புத்தகம் சொல்லித் தருகிறது.

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்
செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

நான்கு வகை உரையாடல்கள்...

“நம்முடைய உரையாடல்களே நம்மைச்சுற்றி இருக்கும் இந்த உலகம் நம்மை வெற்றிப்படியில் ஏறவைக்கவும், குப்புறத்தள்ளி குழிபறிக்கவும் காரணமாக அமைந்துவிடுகிறது.

இத்தனை முக்கியத்துவம் நிறைந்த உரையாடல்கள் குறித்து நாம் முழுமையான புரிதலுடன் செயல்பட வேண்டியது வெற்றியைப் பெற அவசியமாகிறது. உரை யாடல்கள் நான்கு வகைப் படும். கதை சொல்வது போன்ற உரையாடல்கள், ஒத்துழைத்து உதவும் ரீதியி லான உரையாடல்கள், புதிய படைப்புகளை (கிரியேட்டிவ்) உருவாக்குவதற்கான உரை யாடல்கள் மற்றும் பொறுப்பு சம்பந்தப்பட்ட உரையாடல் கள் என்பதுதான் இந்த நான்கு வகை.

நான்கு வகை உரையாடல்கள்...

கதை சொல்லுதல் என்ற வகையில் நாம் நம்புகின்ற அல்லது மற்றவர்கள் நம்புகின்ற கதையை சொல்வது / கேட்பது என்ற இரண்டுமே நடக்கலாம். இதில் நாம் உலகத்தில் என்ன எதிர்பார்க்கிறோம் மற்றும் உலகத்துக்கு நம்மை எப்படிக் காட்டிக்கொள்ள நினைக் கிறோம் என்ற இரண்டும் வெளிப்படும். இதில் நம்முடைய உணர்வுகள், நமக்குத் தெரிந்த உண்மை கள் மற்றும் நம்முடைய கருத்துகள் என்ற மூன்றுமே பரிமாறப்படும்.

ஒத்துழைத்து உதவும் வகையிலான உரையாடல்களில் நம்முடைய கருத்துக்கும் எண்ணத்துக்கும் இருக்கின்ற எதிர்ப்புகள், மற்றவர்களின் எண்ணத்துக்கு நம்மிடம் இருக்கிற எதிர்ப்புகள், அவற்றை நாம் ஏற்றுக் கொள்ளுதல், நம்முடைய எண்ணத்தை மாற்றிக் கொள்ளுதல், நம்முடைய எதிர்ப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளுதல், ஏற்கெனவே கேட்கவே மறுத்துக்கொண்டிருக்கும் விஷயங்களைக் கேட்பதற்கு உண்டான சூழல் உருவாகுதல் போன்றவை சார்ந்த விஷயங்கள் பரிமாறப்படும்.

கிரியேட்டிவ் உரையாடல்களில் நம் சிந்தனை விரிவாகி புதிய விஷயங்கள் பூப்பதற்கான நடைமுறைகள் பரிமாறப்படும். மூளையின் இடதுபுறமும் வலதுபுறமும் இந்த வகை உரையாடல்களில் உயபோகிக்கப்படும். கற்றல் மற்றும் நம்முடைய உள்ளுணர்வுடன் ஒப்பிட்டுப் பார்த்தல் என்ற இரண்டையும் உபயோகித்து கிரியேட்டிவ் வான விஷயங்கள் உருவாக்கப் படுவதற்கான உரையாடல்கள் இவை.

இந்த வகை உரை யாடல்கள் நிகழும்போது நாம் வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் முழுமையான கவனத்தைக் கொண்டு, என்ன சொல்லப்படுகிறது என்பதைக் கேட்டு, உணர்ந்து, ஒப்பிட்டு அதன்படி நடக்க முயற்சி செய்து நம்முன்னே வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும்.

பொறுப்பு தொடர்பான உரையாடல்களில் முழுக்க முழுக்க நடவடிக்கைகளே இருக்கும். ஒவ்வொரு நாளும் இந்த வகை உரையாடல்களையே நடத்துகிறோம். நம்மை அறியாமலேயே நாம் பல்வேறு வகை கமிட்மென்டுகளைக் கொடுத்து விடுவதில் வல்லவர்களாக இருக்கிறோம். ஒரு சமையலைச் செய்துதருகிறேன் என்பது முதல் முக்கியமான கான்ட்ராக்ட் வரையில் நாம் செய்யும் எல்லாமே பிராமிஸ்கள்தான்.

இந்த வகை பிராமிஸ்களே நம்முடைய அன்றாட செயல்பாடுகளை நிர்ணயம் செய்கின்றன என்பதால் மிகவும் கவனத்துடன் இவ்வகை உரையாடல்களில் ஈடுபட வேண்டும். இந்த வகை பிராமிஸ்களே யார், எதை, எங்கே, எப்போது, எப்படி செய்யப் போகிறார்கள் என்பதை நிர்ணயிப்பதால் இந்த வகை உரையாடல்களில் நாம் மிகவும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த நான்குவகை உரையாடல்களும் பார்வைக்கு தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டாலுமே, நடைமுறையில் ஓர் உரையாடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட வகை இணைந்து இருக்கவே செய்யும்” என்கிறார் ஆசிரியர்.

இந்த உரையாடல்களில் கவனிக்க வேண்டியவை என்னென்ன, எப்படி இந்தக் கலையில் தேர்ச்சி பெறுவது என்பது குறித்தெல்லாம் தனித்தனி அத்தியாங்களாக இந்தப் புத்தகத்தில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

உரையாடல்கள் எந்த அளவுக்கு கவனத்துடன் நடத்தப்படுகிறதோ அந்த அளவுக்கு நம்முடைய வாழ்வை மகிழ்ச்சியானதாகவும், அமைதியானதாகவும், மாற்றும். எனவே, உரையாடல்கள் குறித்து அத்தனை விளக்கத்தையும் ஒருங்கே சொல்லியிருக்கும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை படித்துப் பயன் பெறலாம்.