பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

உங்களைத் தலைசிறந்த தலைவராக உயர்த்தும் 8 பண்புகள்..!

தலைமைப் பண்புகள்...
News
தலைமைப் பண்புகள்...

தைரியமான தலைவர்கள் எப்படிப்பட்ட பண்புகளைக் கொண்டிருப்பார்கள்..?

இன்றைய காலகட்டம் சுவாரஸ்யமும் குழப்பமும் நிறைந்ததாக இருக்கிறது. இப்படி சுவாரஸ்யமும் குழப்பமும் நிறைந்த, நிலையானத்தன்மை சற்றும் இல்லாத காலகட்டத்தில் தன்னுடன் பணிபுரியும் பணி யாளர்களை மேற்பார்வை செய்து, நிர்வகித்து வேலை வாங்க வேண்டிய சூழலிலேயே தொழில் நிறுவனத்தை நடத்தி வரும் நிர்வாகி கள் இருக்கிறார்கள். கோவிட் 19-ன் ஆரம்பக் காலத்தில், ‘‘சாதாரணமாக நாங்கள் ஒரு வருடத்தில் எடுத்த முடிவுகளை ஒரே மாதத்தில் எடுக்க வேண்டியிருந்தது’’ என்று கூறினார்கள். வாழ்க்கை ஒரே சமயத்தில் இலகுவானதாகவும் கடினமானதாகவும் கொண்ட முரண்பாடாக இருக்கிறது. நிறுவனத்தை நடத்திவரும் நிர்வாகி ஒருவர் இந்த முரண்பாடுகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கான நடைமுறை டிப்ஸ்களைத் தருவதற்காகவே எழுதப்பட்டது தான் இந்த வாரம் நாம் பார்க்க இருக்கும் ‘தி எய்ட் பாரடெக்ஸஸ் ஆஃப் கிரேட் லீடர்ஷிப்’ என்கிற புத்தகம்.

புத்தகத்தின் பெயர்:
The Eight Paradoxes of 
Great Leadership 
ஆசிரியர்:
Tim Elmore
பதிப்பாளர்:
HarperCollins
புத்தகத்தின் பெயர்: The Eight Paradoxes of Great Leadership ஆசிரியர்: Tim Elmore பதிப்பாளர்: HarperCollins

சி.இ.ஓ-களின் மனநிலை...

இன்றைக்குத் தொழில் நிறுவனங்களை நடத்துபவர்கள் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறார்கள் எனில், VUCA (Volatile, Uncertain, Complex, Ambiguous) என்கிற மனநிலையில்தான் இருக்கிறார்கள். Vuca என்பதற்கு என்ன அர்த்தம்? வெகுவேகமாக மாறும் தன்மை, நிச்சயமற்ற தன்மை, சிக்கலான தன்மை மற்றும் தெளிவற்ற பல பொருள்களைக் கொண்டிருக்கும் தன்மை என்கிற நான்கு விதமான சூழலைப் பிரதிபலிக்கும் முதல் எழுத்துதான் இது. இந்தச் சொல் பிரதிபலிக்கும் சூழலில்தான் நாம் இப்போது வாழ்ந்து வருகிறோம்.

அதாவது, நாம் ஒரு மாற்றத்தைக் கொண்ட சகாப்தத்தில் வாழவில்லை (Era of Change). சகாப்தத்தின் மாற்றத்தில் (Change of Era) வாழ்ந்து வருகிறோம் என்பதுதான் நிஜம். டிஸ்னி, ஹுலா, ஐ.பி.எம், லிங்க்டு-இன், ஊபர் ஈட்ஸ், சேல்ஸ்போர்ஸ் அண்ட் விலாசிட்டி, எம்.ஜி.எம், லாக்ஹீட் மார்ட்டின், நெஸ்ட்லே, ஃபோக்ஸ்வாகன், மாஸ்டர்கார்டு, டிமொபைல், ஹார்லி டேவிட்சன் என 2020-ம் ஆண்டில் எக்கச்சக்கமான சி.இ.ஓ-கள் பதவியை ராஜினாமா செய்தனர். இத்தனை பேரின் ராஜினாமாவுக்கும் காரணம், கோவிட்-19 அல்ல. கோவிட் 19-க்குப் பிறகு, தற்போது நிலவும் சூழலில் ஒரு சி.இ.ஓ-வாக இருப்பது மதிப்புமிக்க செயலா என்கிற கேள்விக்கு, ‘இல்லை’ என்கிற பதில் கிடைத்ததுதான் அவர்கள் பதவியைத் துறக்கக் காரணம்.

சிக்கல்களைச் சமாளிக்க முடியாத சூழல்...

எந்த மாதிரியான சூழலில் இன்று நாம் இருக்கிறோம்? நம்முடைய கலாசாரமும் சந்தையும் முற்றிலும் மாறிப்போய்விட்டது. தொழில்களின் ஆதாரமான அடிப்படை விஷயங்கள்கூட அதிவேகமாக மாறுவது, ஏராளமான பங்கேற்பாளர்களைக் கொண்டிருக்கும் சிக்கலான சூழ்நிலைகள், செயல்பாட்டில் சின்னதொரு குற்றம் குறை என்றாலுமே கிழித்து தோரணம் கட்டும் அளவுக்குக் கிளம்பிவிடும் பொதுமக்களின் எண்ணம், சாதாரண வைரஸ் ஒன்று மொத்த உலகத்தையும் நிறுத்தி வைக்கும் நிலைமை, டேட்டா தேவையான எல்லாவற்றையுமே தரவல்லது என்று நம்பும் மெத்தப் படித்த நபர்கள், சின்னச் சின்ன விஷயங்களையும் தொடர்ந்து ஆராயும் மனநிலை, தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயம் மற்றும் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் போன்ற அனைத்தும்தான் எதற்கு இவ்வளவு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும் என்கிற மனநிலைக்கு சி.இ.ஓ-களை சுலபத்தில் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது.

உங்களைத் தலைசிறந்த தலைவராக உயர்த்தும் 8 பண்புகள்..!
உங்களைத் தலைசிறந்த தலைவராக உயர்த்தும் 8 பண்புகள்..!

ஓர் உதாரணம் மூலம் இதை நன்கு புரிந்து கொள்ளலாம். அமெரிக்காவில் ஒரு சட்டப் பல்கலைக் கழகத்தில் ஒரு பிரிவின் டீன் குறித்து அந்தப் பிரிவில் பணி புரியும் தலைசிறந்த பேராசிரியர் இருவர், அந்தப் பல்கலைக் கழகத்தின் தலைவரிடத்தில் புகார் அளித்தார்களாம். ‘‘டீனா இருப்பவர் எந்தவொரு விஷயத்திலும் முடிவெடுப்பதே இல்லை’’ என்ற புகாரை முன்வைத்தார்கள். அதை அமைதியாகக் கேட்ட தலைவர், ‘‘ஜென்டில்மேன், இங்கு இருக்கிற நான்கு டீன்களில் ஒருவர் பெரும் குடிகாரர்; மற்றொருவர், பெண்கள் விஷயத்தில் தகாத முறையில் நடக்கிறார்; இன்னொருவர், நிதி விவகாரத்தில் கொள்ளை அடிக்கிறார் என ஒவ்வொருவர் மீதும் ஒவ்வொரு விதமான புகார் வந்துள்ளது. அதையெல்லாம் பார்க்கும்போது, உங்களுடைய டீன் மோசமான விஷயங்களைச் செய்வதில்லை என்பதை ஒப்புக்கொள் கிறீர்களா? எனவே, உங்கள் டீனுடன் சண்டை போடாமல், அவருடன் அனுசரித்துச் செல்லுங்கள்’’ என்றாராம்.

மற்றவர்களுடன் ஒப்பிட்டால் ‘இவர் எவ்வளவு நல்லவர்...’ என்ற மனநிலையே இதுபோன்ற பதிலுக்குக் காரணமான ஒன்றாகும். இப்படி மோசமான புகார்களில் பலரும் சிக்கிக் கிடக்க, செயல்படாமல் இருக்கும் நபரே நல்லவர் என்று அனைவரும் சொல்லும் சூழலே உலகில் நிலவுகிறது. இதனாலேயே நிறுவனங்களும் அதன் தலைவர்களும் தொடர்ந்து ரிஸ்க்கை எடுப்பதைத் தவிர்த்து, டிஃபென் ஸிவ்வான ஸ்ட்ராட்டஜியையே தேர்வு செய்கின்றனர். ‘வருவது வரட்டும், ஒரு கை பார்த்துவிடுவோம்’ என்று அஃபென்ஸிவ்வான நடவடிக்கைகளை எடுக்கப் பலரும் நினைத்துக்கூட பார்ப்பதில்லை. இப்படிச் செயல்படுவதுதான் இன்றைக்கு கார்ப்பரேட் கலாசாரமாக ஆகிவிட்டது!

புதிய வரலாற்றுச் சூழல்...

இன்றைய நிலையில், லாபம் பார்க்காவிட்டாலும் பரவா யில்லை. நஷ்டப்படாமல் இருந்தாலே போதும் என்று நினைக்கிறார்கள் நிர்வாகிகள். இல்லையெனில், ஏற்கெனவே இருந்த நிர்வாகி என்ன ஸ்டைலில் நிறுவனத்தை நடத்தி னாரோ, அதே ஸ்டைலில் நடத்தினாலே போதும். எதை யாவது மாற்றப்போய் சிக்கலானால் யார் பதில் சொல்வது என்ற எண்ணத்தில் நிர்வாகிகள் செயல்பட ஆரம்பிக்கின்றனர். இதனாலேயே பல சமயங்களில் சராசரியான அல்லது செயல்படாத நிர்வாகிகளை நாம் எந்தவித விமர்சனமும் செய்யாமல் ஏற்றுக்கொள்கிறோம். இதனால், மனிதன்தான் வரலாற்றை உருவாக்குகிறான். வரலாறு மனிதனை உருவாக்கு வதில்லை என்ற எண்ணம் நம்முள்ளே ஓங்கி நிற்கிறது. ஆனால், பல சமயங்களில் வரலாறு, தலைவர்களை உருவாக் கியிருக்கிறது என்பதையும் நாம் உணர வேண்டும். முன்னேற்றம் என்பது தைரியமான, திறமை கொண்ட நபர்கள் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் மாற்றத் தைக் கொண்டு வர முயல்வதால் மட்டுமே நடக்கிறது. கோவிட் 19-க்குப் பின்னால் நாம் இருக்கும் சூழல் அது போன்ற வரலாற்றுச் சூழலே ஆகும். இந்த வரலாற்றுச் சூழலில் பல நல்ல தலைவர்கள் உருவாக வாய்ப்புள்ளது என்பதைப் புரிந்துகொண்டு நிறுவன நிர்வாகிகள் செயல்பட வேண்டும்.

நிலைமையைப் புரிந்துகொண்டு நடந்தால், தீர்வு கிடைக்கும்...

சிக்கலான ஒரு விஷயம், சிக்கலாக இருக்கிற பல விஷயங்களின் கூட்டமைப்பு என்ற இரண்டுக்குமான வித்தியாசத்தை நீங்கள் புரிந்துகொண்டீர்கள் எனில், முரண்பாடான குணாதிசயங்கள் இன்றைய சூழ்நிலையில் ஒரு நிர்வாகிக்குத் தேவை என்பது உங்களுக்குப் புரியும். ஒரு வகுப்பறையில் உள்ள போர்டில் எழுதப்பட்டி ருக்கும் கணக்கு ஒரு மாணவனுக் குப் புரியவில்லை என்று வைத்துக்கொள்வோம். ‘அரை மணி நேரம் நாம் தூங்கி எழுந்து கணக்கைப் பார்ப்போம்’ என்று அவன் வகுப்பறையிலேயே தூங்கி எழுந்து பார்த்தால், போர்டில் அதே சிக்கலான கணக்குதான் இருக்கும். ஆனால், விமான நிலையத்தின் கன்ட்ரோல் டவரில் விமானிகளுக்கு ஓடுதளத்தை ஒதுக்கும் ஒருவரின் முன்னால் எக்கச்சக்கமான விமானங்கள் வழிகாட்டுதலுக்காக இருக்கும்போது, ‘‘என்ன இது, இவ்வளவு சிக்கலாக இருக்கிறது. அரை மணி நேரம் தூங்கி எழுந்து பிரச்னையைக் கையாள்வோம்’’ என்று நினைத்தால் என்னவாகும்? அரை மணி நேரத்துக்கு முன் இருந்த சூழ்நிலையைவிட மிகவும் மோசமான சூழ்நிலையே இருக்கும். தொழிலை நிர்வகிக்கும் போதும் இதுபோன்ற சூழ்நிலை யைத்தான் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

தலைசிறந்த தலைமையின் 8 பண்புகள்...

சரி, தைரியமான தலைவர்கள் எப்படிப்பட்ட பண்புகளைக் கொண்டிருப்பார்கள்?

1. தலைசிறந்த தலைவர்கள் தைரியமாகவும் அதே நேரத்தில் பணிவாகவும் இருக்கிறார்கள்.

2. தலைசிறந்த தலைவர்கள் தங்களுடைய தொலைநோக்குப் பார்வையையும் அவர்கள் பார்க்கத் தவறியவற்றையும் சிறந்த வழியில் நிறுவனத்தின் முன்னேற் றத்துக்காக உபயோகப் படுத்திக் கொள்வதில் வல்லவர்களாக இருக்கின்றனர்.

3. தலைசிறந்த தலைவர்கள் வெளிப்படை யாக முன்னிற்கவும், தேவையான போது மறைந்து நிற்கவும் தெரிந்து வைத்துக் கொண்டுள்ளனர்.

4. தலைசிறந்த தலைவர்கள் பிடிவாத குணத்தையும் அதே நேரம் திறந்த மனதையும் (open minded) கொண்டவர்களாக இருக்க பழகியுள்ளனர்.

5. தலைசிறந்த தலைவர்கள் ஆழமாகப் பார்த்தால் நான் என்பதை முன்னிலைப்படுத்தி செயல்படுபவர்களாகவும் வெளிப்புறத்தோற்றத்தில் நாம் என்பதை இயல்பாக முன்னிலைப்படுத்தி செயல்படுபவர் களாகவும் இருக்கின்றனர்.

6. தலைசிறந்த தலைவர்கள் நல்ல ஆசிரியராகவும் நல்ல மாணவராகவும் இருக்க தெரிந்துகொண்டு உள்ளனர்.

7. தலைசிறந்த தலைவர்கள் அதிக தரத்தை எதிர்பார்ப் பவர்களாகவும் அதே சமயம் கருணையுடன் மன்னிப்பவர் களாகவும் திகழ்கின்றனர்.

8. தலைசிறந்த தலைவர்கள் சரியான நேரத்தில் செயல்படவும், சரியான நேரத்துக்காக காலவரையற்று காத்திருக்கவும் தெரிந்தவர்களாக இருக்கின்றனர். இந்த தகுதியைப் பெற வரலாற்றையும் எதிர்காலத்தையும் இணைத்துப்பார்த்து செயல்படும் பண்பை அவர்கள் கொண்டிருக்கின்றனர்.

மேலே சொன்ன எட்டுவிதமான முரண்பாடான பண்புகளே ஒரு தலைவரை எந்தவிதமான சிக்கலான சூழ்நிலையிலும் தலைசிறந்த வகையில் செயல்படும் தலைவராக ஆக்குகிறது. இந்த முரண்பாடான குணாதிசயங்களை நம்மிடத்தில் கொண்டுவருவது எப்படி என்பது குறித்து விளக்குகிறது இந்தப் புத்தகம். தற்போது நிலவும் சிக்கலான சூழ்நிலையில் சிறந்த தலைவராகச் செயல்படுவது எப்படி என்பதை எளிய நடையில் விளக்கும் இந்தப் புத்தகத்தை நிறுவன நிர்வாகிகள், பணியாளர்கள் என அனைவரும் படித்து பயன்பெறலாம்.