
செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்
'வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்’ என்று பலரும் சொல்லிக் கேட்டிருப்போம். ஆனால், வருத்தப்படுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி டேனியல் ஹெச் பிங்க் என்பவர் ‘தி பவர் ஆஃப் ரிக்ரெட்’ என்னும் புத்தகத்தில் விளக்கமாக எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தில் அவர் சொல்லியிருக்கும் முக்கியமான விஷயங்களைப் பார்ப்போம்.

நெகட்டிவ் Vs பாசிட்டிவ் எண்ணங்கள்...
நேர்மறை உணர்ச்சிகள் (பாசிட்டிவ் எமோஷன்ஸ்) மனிதனுக்கு மிகவும் அவசிய மான ஒன்று. அவை இல்லாவிட்டால், மனிதன் இந்த உலகம் தருகிற அழுத்தமான சூழலில் காணாமல் போய்விடுவதற்கான வாய்ப்புகளே அதிகமாக இருக்கின்றன. நல்லது நடக்கும் என்ற எண்ணம் மற்றும் நாம் படுகிற கஷ்டங்களுக்கு எல்லாம் விடிவு பிறக்கும் என்பது போன்ற பாசிட்டிவ் சிந்தனைகளே மனிதர்களைச் சாதிக்க வைக்கின்றன. நம்பிக்கை நம்முடைய உடல்நலத்தைச் சிறப்பாக இருக்க வைக்கிறது. மகிழ்ச்சி, நன்றியறிதல், நம்பிக்கை போன்ற எண்ணங்கள் நம்முடைய வாழ்வில் நலத்தை (well being) அதிகரிக்கச் செய்கிறது.
நம்மிடம் இருக்கும் எதிர்மறை எண்ணங் களைவிட அதிக எண்ணிக்கையிலான நேர்மறை எண்ணங்களே நம்மைத் தொடர்ந்து முயற்சி செய்ய வைக்கிறது என்கிறபோதிலும், ஒரேயடியாக நேர்மறை எண்ணங்கள் மட்டுமே நம்முள் பீரிட்டு எழுந்தால் என்னவாகும்? நம்முடைய தவறுகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ள அதுவே பெரிய அளவில் தடையாக நிற்கும். இது நம்முடைய வளர்ச்சியைத் தடுக்கும். இவை இரண்டும் இணைந்தால் நாம் நம்முடைய திறனுக்கேற்ற வளர்ச்சியை எட்ட முடியாமல் போகும். இதனாலேயே நம்முள் நேர்மறை எண்ணங்களும் எதிர்மறை எண்ணங் களும் ஒரு கலவையாய் சரியான விகிதத்தில் இருக்க வேண்டியது கட்டாயமாகிறது. இதனால்தான் மனிதர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் உதவியாக இருக்கின்றன’’ என்கிறார் ஆசிரியர்.
எதிர்மறை எண்ணங்களே நாம் பிழைக்க உதவியாக இருக்கின்றன. இது இல்லாமல் வெறுமனே நேர்மறை எண்ணங்கள் மட்டுமே நமக்கு இருந்தால் நம்முடைய வீட்டுக்கு நாமே தீ வைத்துப் பார்ப்போம். பாம்புக்கு பயப்பட மாட்டோம். நினைத்ததை எல்லாம் செய்ய முயல்வோம் இல்லையா? நெருப்பு மிகவும் பாதிப்பை உருவாக்கக்கூடியது என்பதா லேயே நாம் அதைக் கவனமாகக் கையாள் கிறோம். பாம்பு கடித்தால் இறந்துவிடுவோம் என்ற எதிர்மறை எண்ணம் மனதில் இருப்பதாலேயே பாம்பைப் பார்த்து பயப்படுகிறோம். கெட்டவிஷயங்கள் குறித்த வெறுப்பே அதில் சிக்காமல் இருக்க நமக்கு உதவுகிறது.
எதிர்மறை எண்ணங்கள் பலனுள்ளதாக இருந்தாலும், அவை அளவுக்கு அதிகமாகப் போனால் அவை நம்மை பலவீனப்படுத்தி முடக்கிப் போட்டுவிடவே செய்யும். அதே போல், எதிர்மறை எண்ணங்கள் மிக மிக குறைவாக நம்மிடத்தில் இருந்தால், அதுவும் நம்மை ஒரேயடியாய் ஆடவைத்து அழித்து விடும். எதிர்மறை எண்ணங்கள் (நெகட்டிவ் எமோஷன்ஸ்) நம்மிடம் அதிகமாகும்போது நமக்கு வருத்தம் தோன்றுகிறது’’ என்று பக்கா லாஜிக்குடன் இந்தப் புத்தகத்தை ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.
வருத்தம் குறித்து 70 ஆண்டுக் காலத்துக்கும் மேலாக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த ஆராய்ச்சி முடிவுகள் இரண்டு முக்கிய மான விஷயங்களை இந்த உலகுக்குத் தந்துள்ளது. முதலாவது விஷயம், வருத்தமே மனிதனை மனிதனாக இருக்கச் செய்கிறது. இரண்டாவது கண்டுபிடிப்பு, வருத்தமே நம்மை முன்னேற்றமடையச் செய்கிறது என்று சொல்லும் ஆசிரியர், இந்தப் புத்தகத்தை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்து எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தின் முதல் பிரிவு, மனித வாழ்வில் வருத்தத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதாக உள்ளது. இரண்டாவது பிரிவு, எதற்காக மனிதர்கள் வருந்துகிறார்கள் என்பது குறித்து அலசுகிறது. மூன்றாவது பிரிவு, நம்முடைய வருத்தத்தை மாற்றி அமைத்து வெற்றிக்கான பாதைக்கு உதவச் செய்வது எப்படி என்பது குறித்து விளக்கமாகச் சொல்கிறது.

வருத்தம் என்றால் என்ன?
வருத்தத்தை உணர்வது சுலபம். ஆனால், அதை விவரிப்பது கடினமான காரியம். ஒருவருடைய எண்ணம் அல்லது ஆசைக்கு எதிரான நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போது தோன்றும் விரும்பத்தகாத உணர்வே வருத்தம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். வருத்தம் என்பது ஒரு விஷயம் குறித்து முடிவெடுக்கும் நபர் அவர் எடுத்த அல்லது எதிர்பார்த்த முடிவுக்கும் நிஜத்தில் நடந்த முடிவுக்கும் (நிகழ்வுக்கும்) இடையே உள்ள வித்தியாசத்தின் அடிப்படையில் அமைவதாகும்.
வருத்தம் குறித்த ஆய்வில் பெரும்பாலானோர் சொன்னது, ‘‘எனக்குப் பிடித்த விஷயத்தைச் செய்யாமல் என் பெற்றோருக்குப் பிடித்த விஷயங்களைச் செய்ததால், எப்படியோ இருந்திருக்க வேண்டிய நான் இன்றைக்கு இப்படி இருக்கிறேன்’’ என்பதுதான். ‘‘நான் எனக்குப் பிடித்த விஷயத்தைச் செய்து, பெரிதாக முன்னேற்றம் காணவில்லை என்றாலுமே வருத்தப்பட்டிருக்க மாட்டேன்’’ என்கிற மனநிலையில் நாம் வாழ்வது முரண்பாடான எண்ணம்தான். உதாரணமாக, இப்படிச் சொல்லும் நபர் ஒருவேளை டைம் டிராவல் செய்ய வாய்ப்பு கிடைத்தால், எப்படி இருக்கும்? அவருக்குப் பிடித்த படிப்பை படித்த பின் தற்போதிருக்கும் நிலையிலேயே இருப்பதைப் பார்த்து, அவர் மகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் இருப்பார். ஏனென்றால், அவருக்குப் பிடித்ததைச் செய்து, சாதாரண நிலையில் இருப்பதைவிட பிடிக்காததைச் செய்து அதே நிலையில் இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
இதை இன்னோர் உதாரணத்தின் மூலம் விளக்குகிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர். பாப் மற்றும் டேவிட் என்ற இரண்டு சிறுவர்கள் பள்ளிக்கு சைக்கிளில் செல்கிறார்கள். போகும் வழியில் ஒரு குளம். அதை இடது புறமாகவும் சுற்றி பள்ளிக்குச் செல்லலாம். வலது புறமாகவும் சுற்றி பள்ளிக்குச் செல்லலாம். இரண்டு வழி களிலும் ஒரே அளவிலான தூரத்தையே கடக்க வேண்டும்.
எல்லா நாள்களிலுமே அந்த நீர்நிலை வரை ஒன்றாகச் சேர்ந்து வரும் இருவரில் நீர்நிலை வந்த பின்னால் பாப் வலது புறச் சாலையிலும், டேவிட் இடது புறச் சாலையிலும் சென்று பள்ளியை அடைவார்கள். ஒரு நாள் இரவு அடித்த காற்று மற்றும் மழையில் வலது புறம் உள்ள சாலையில் ஒரு மரம் கீழே விழுந்து கிடந்தது. பாப் வழக்கம் போல் வலது புறச்சாலையில் செல்லும்போது மரத்தின் கிளை விழுந்து கிடப்பதைக் கவனிக்காமல் கடக்க முயல தவறி சைக்கிளில் இருந்து கீழே விழுந்து அடிபட்டது. அன்றைக் கென பார்த்து டேவிட்டும் வலது புறச் சாலையிலேயே செல்ல அவனும் மரக்கிளை தடுமாறி கீழே விழ நேர்ந்தது.
இந்த இருவரில் அந்த விபத்து குறித்து யார் அதிக அளவில் வருத்தப்பட்டிருப்பார்கள் என்ற கேள்வியை, வருத்தம் குறித்து ஆராய்ச்சி செய்யும் ஆய் வாளர்கள் 7 வயதுக் குழந்தை களிடம் கேட்க அதற்கு அவர் களில் பெரும்பாலானவர்கள் கூறிய பதில் ‘டேவிட்’ என்பது தான்.
ஆனால், இதே கேள்வி ஐந்து வயதுக் குழந்தைகளிடம் கேட்கப் பட்டபோது அவர்களில் பெரும் பாலானோர் இருவருமே ஒரே மாதிரியான வருத்தத்தை அடைந் திருப்பார்கள் என்றே சொன்னார் கள். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
நம்முடைய வயது அதிகரிக்க அதிகரிக்க, நாம் பல்வேறு விஷயங் களுக்குக் காரணிகளைக் கண்டு பிடித்து பழிபோட பழகிக்கொள் கிறோம். என்னுடைய பெற்றோர் படிக்கச் சொன்னதால், இந்தப் படிப்பைப் படித்துவிட்டு இப்போது சீரழிந்துகொண்டிருக் கிறேன் என்று சொல்லும் நபர், டைம் டிராவலுக்குப் பின் குறைவாக வருத்தப்படுவது போல, கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தால், உங்கள் வருத்தம் பெரிதாகக் குறைந்துவிடும் என்கிறார் ஆசிரியர்.
எனக்கு வருத்தமே கிடையாது என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள். அது ஒரு வியாதிக் கான மனநிலை. மனிதன் சாதா ரணமாக இருந்தால், அவனுக்கு வருத்தம் என்ற ஒன்று கட்டாயம் இருக்கவே செய்யும். மனிதர்கள் தாங்கள் செய்யாமல் விட்ட விஷயம் குறித்து அதிக அளவில் வருத்தம் கொள்வார்கள். அதாவது, தன்னுடைய இயலாமை குறித்து மட்டுமே அதிகம் வருத்தப் படுவார்கள். சுற்றுச்சூழல் காரண மாக ஒருவரால் ஒரு விஷயத்தைச் சாதிக்க முடியாது போனால், அவருக்குப் பெரிய அளவில் அந்த சுற்றுச்சூழல் குறித்த வருத்தம் இருக்காது. இதனாலேயே நாம் நம்முடைய வாழ்க்கையை அடிக்கடி திரும்பிப் பார்த்து, நான் அதை அப்போது அப்படிச் செய் திருக்கலாம், இப்படிச் செய்திருக் கலாம் என யோசித்து யோசித்து பெரிய அளவில் கவலைப் படுகிறோம் என்கிறார் ஆசிரியர்.
எதற்காகவெல்லாம் வருத்தப்படுகிறோம்?
பொதுவாக, மனிதர்கள் எதைப் பற்றியெல்லாம் கவலைப்படுகிறார்கள், அதிகமாகக் கவலைப்படும் விஷயங்கள் என்னென்ன, குறைவாகக் கவலைப்படும் விஷயங்கள் என்னென்ன என்பனவற்றையும் ஆராய்ச்சிகள் வாயிலாகத் தெளிவாகக் கண்டறிந்து பட்டியலிட்டுள்ளார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.
‘‘வருத்தம் என்பது அது குறித்த கதை சொல்லப்படும் விதத்தில் இருக்கிறது’’ என்கிறார். அனைவருமே வருத்தப் படும் விஷயம் குறித்து ஒரு கதையைச் சொல்வோம். அந்தக் கதையில் நாம் கதாசிரியரா அல்லது பாத்திரமா என்று கேட்டால், பெரும்பாலானோர் சிந்தித்துச் சொல்வது, இரண்டுமே என்பதைத்தான். இந்த இரண்டு ரோல்களையும் செய்வதாலேயே வருத்தத்தை நம் அனுகூலத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்கிறார் ஆசிரியர். நம்முடைய வருத்தத்தையும் அதற்கான காரணியையும் கண்டுபிடித்து அதில் எவை எல்லாம் நம்முடைய கட்டுப் பாட்டுக்குள் இருப்பவை எனப் புரிந்துகொண்டு, அவற்றை நாம் திறம்பட நிர்வகித்தால் வருத்தத்தால் சிறந்த பலனைப் பெற முடியும்’’ என்று கூறி முடிக்கிறார் ஆசிரியர்.
பல்வேறு சுவையான ஆராய்ச்சிகளின் வாயிலாகக் கண்டறியப்பட்ட விஷயங்களை எளிய நடையில் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் கட்டாயம் ஒரு முறை படித்துப் பயன்பெறலாம்.