பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வேரைப் பலப்படுத்துங்கள்... உங்கள் வெற்றிக்கு வழி கிடைக்கும்!

செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
செல்ஃப் டெவலப்மென்ட்

ஒரு விஷயத்தை வேகமாகச் செய்து முடிக்க வேண்டுமெனில், அதற்கு முதலில் தேவையான விஷயம், பொறுமை..!

‘‘சமீப காலமாகவே பெரும்பாலான வாடிக்கையாளர்கள் என்னிடம் நல்லதொரு பிரேக்குக்காக மனது ஏங்குகிறது என்று சொல்கின்றனர். ‘வார இறுதியில் பிரேக் எடுத்துக்கொண்டு சென்றாலுமே அலுவலக மெயிலை நான் செக் செய்யத் தவறுவதேயில்லை. அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்றாலும், மனது அதைச் செய்ய சொல்லி கட்டாயப்படுத்துகிறது’’ என்றார் ஒருவர்.

இன்னொருவரோ, ‘அடுத்து செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை என்ற நிலை வந்தால் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. எதையோ இழந்ததைப் போன்ற மனநிலைக்கு ஆளாகிவிடுகிறேன்’’ என்றார்.

புத்தகத்தின் பெயர்: 
The Practice of Groundedness
ஆசிரியர்: Brad Stulberg
பதிப்பகம்:‎ Portfolio
புத்தகத்தின் பெயர்: The Practice of Groundedness ஆசிரியர்: Brad Stulberg பதிப்பகம்:‎ Portfolio

துணிச்சல் கொண்ட ஆளுமை...

‘‘இப்படிப் புலம்புகிறவர்கள் அனைவருமே சாதனையாளர்கள்தான். ஆனாலும், இவர் களுக்கு இப்படிப்பட்ட எண்ணம் ஏன் தோன்றுகிறது என்பது முக்கியமான கேள்வி.

இவர்கள் இதுவரையில் ஈடுபட்ட காரியங்களில் நல்லது, கெட்டது, விபத்து, குரோதம், துரோகம், கேலி, சண்டை என அனைத்தையும் கடந்து பலதடவை வெற்றி பெற்றவர்கள். ஆனாலும், வாழ்க்கை அவர்களை இழுத்தும் தள்ளியும் தூக்கி யெறிந்தும் விளையாடுவதாக உணர்கின்றனர். அவர்கள் வாழ்க்கை அவர்கள் கையில் இல்லை. எள்ளளவும் அவர்கள் கையில் சுதந்திரம் இல்லை என நினைக்கின்றனர்.

சரி, இந்தப் பரபரப்பான வேலை, இ-மெயில், சோஷியல் மீடியா போன்ற வேகமான வாழ்க்கையை விட்டு கொஞ்சம் ஒதுங்கி பிரேக் எடுப்போம் எனில், அதுவும் முடியவில்லை. இது போன்ற நிலைமையை எதிர்கொள்பவர்கள் ஆண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் புல்லட் ப்ரூஃப்பாகத் திகழவும், யாராலும் வெல்ல முடியாதவர்களாக இருக்கவும் விரும்புகின்றனர். பெண்களாக இருந்தால் அவர்கள் ஈடுபடுகிற எல்லா விஷயத்திலும் முக்கியத்துவம் பெற்றுத் திகழ வேண்டும் என்ற எண்ணத்துடனும், சாமான்யத்தில் சாதிக்க முடியாத அளவிலான கடினமான விஷயங்களை நம்மால் சுலபத்தில் செய்ய முடியவில்லையே என்கிற ஏக்கத்துடனும் இருக்கின்றனர். இந்தக் குணத்தை ‘துணிச்சல் கொண்ட ஆளுமை’ (Heroic Individualism) எனச் சொல்கிறோம்’’ என்று ஆரம்பிக்கிறார் ‘தி பிராக்டிஸ் ஆஃப் கிரெளண்டட்னெஸ்’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்.

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் தொழில் அதிபர்களுக்கும் கார்ப்பரேட் எக்ஸிக்யூட்டிவ்களுக்கும் பயிற்சி அளிப்பவர்.

வெல்ல முடியாத நபர் என்ற சிந்தனை...

“எதிலும் எங்கேயும் எப்போதும் நானே முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்றும், ஏதாவது ஓர் அளவுகோலைக் கொண்டு (பணம், புகழ், கார், பங்களா என) அளவீடு செய்யப்படும் விஷயங்களே வெற்றி என்றும் நினைத்துக்கொண்டு செயல்படுவதையே ‘துணிச்சல் கொண்ட ஆளுமை’ குணமாகும். வயது, நாடு, சாதி, மதம், இனம் என எல்லாம் தாண்டி, ஈடுபட்டிருக்கும் தொழில் என்கிற பேதம் ஏதும் இல்லாமல் மனிதர்கள் மத்தியில் நீக்கமற இந்த எண்ணம் நிறைந்துள்ளது.

மனிதனின் ஆரம்பநாள் முதலே வாழ்க்கை அவனை என்னதான் புரட்டிப்போட்டாலும் தான் ஒரு வெல்ல முடியாத நபர் என்று நினைப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளான். காலப்போக்கில் இந்த எண்ணமானது அழுத்தரீதியாக அதிகரித்துக்கொண்டே போகிறது. ‘துணிச்சல் கொண்ட ஆளுமை’ என்ற குணாதிசயமானது மனிதனை ‘உனக்கு இன்னும் அதிகம் வேண்டும்’, ‘உன் தகுதிக்கு இன்னும் சிறந்ததை எதிர்பார்’, ‘இன்னும் பாசிட்டிவ்வாக சிந்தனை செய்’, ‘இன்னும் செல்வம் சேர்’, ‘இன்னும் உன் செயல்பாட்டை செம்மைப்படுத்து’ என்பது போன்றவற்றுக்கான தூண்டுதல்களை உருவாக்குகிறது. இதில் பெரும்பாலானவை, நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு நிகழாமல் போவதால், நாம் நமது தேவைகள் பூர்த்தி அடையவில்லையே என்ற ஏக்கத்துடனும் ஒரு வெறுமையுடனும் வாழ ஆரம்பித்துவிடுகிறோம்.

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்
செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

கல்லூரியில் இருந்து படிப்பை முடித்து வெளியே வந்த மாணவராகட்டும், நல்ல வேலையில் சேர்ந்த மனிதராகட்டும், நல்ல பதவியில் இருப்பவராகட்டும், பணியின் கடைசிக் காலத்தில் ஓய்வுபெறும் கட்டத்தில் இருக்கும் மனிதராகட்டும் எந்த ஒரு மனிதரும் இது போன்ற உணர்வைக் கொண்டிருப்பதில் இருந்து தப்பிக்கவே முடியாது. சரி, இந்தப் பிரச்னையை ஒருவர் கொண்டிருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள் என்ன என்று பார்ப்போம். ஒருவித பதற்றநிலையில் இருப்பது, வாழ்வு தரும் அழுத்தத்தை உணர்ந்து இன்னும் வேகமாக முன்னேற வேண்டும் என்று புலம்புவது, எப்போதும் சிறிய அளவிலான கோபத்துடன் இருப்பது, மனச்சிதறலுடன் இருப்பது, எப்போதும் ஒருவித அயர்ச்சியுடன் இருப்பது, அவ்வப்போது வெறுமையாக உணர்வது, அடுத்து எதையாவது செய்து முன்னேற வேண்டும் என்ற சிந்தனையிலேயே இருப்பது போன்ற அனைத்துமே இந்தவகை பாதிப்பின் அறிகுறிகள்” என்கிறார் ஆசிரியர்.

ஒரு முறை ஆசிரியரும் அவருடைய நண்பரும் இதே போன்ற மனநிலையில் இருக்கும்போது கலிஃபோர்னியா ரெட் வுட் மரங்களை பார்த்துள்ளனர். நூறு அடிக்கும் மேலான அந்த மரங்கள் காற்று வெகுவேகமாக வீசும்போதும் பெரிய அளவில் பாதிப்பை அடையாமல் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்து வியந்த வேளையில்தான் இந்தப் புத்தகத்துக்கான கருவும் அதற்கான ஆராய்ச்சியும் ஆசிரியருக்குக் கிடைத்துள்ளது. நூறடி உயரமான மரம் அசால்ட்டாகக் காற்றை எதிர்கொள்வது எப்படி சாத்தியம் என்று பார்த்தால், அந்த மரத்தின் அடிவேர் தரையில் ஊடுருவிப் பதிந்து இருப்பதால்தான் என்பதைக் கண்டறிந்துள்ளார் ஆசிரியர். அதாவது, மரத்தின் மேல்பகுதி காற்றில் தாறுமாறாக ஆடும் போதும் கீழ்ப்பகுதி எந்த சலனமும் இல்லாமல் நிற்பதற்குக் காரணம், ஆழமாகப் பதிந்திருக்கும் வேர்களே என்பதைப் புரிந்துகொண்ட ஆசிரியர், அதிலிருந்து ‘துணிச்சல் கொண்ட ஆளுமை’ என்பதன் விளைவுகளை இணைத்துப் பார்த்துள்ளார்.

வேரை வலுவாக்குங்கள்...

“நாம் இதுநாள் வரை நம் வாழ்வில் பல அடி உயரத்தில் இருக்கும் கிளைகளைப் பற்றியே (வேலை, முன்னேற் றம், வசதி, வாய்ப்பு) கவலைப் பட்டு அவற்றை எப்படி வலுவாக்குவது என்பது குறித்து சிந்தித்து காலத்தை வீணாக்கி இருக்கிறோம். நாம் சிந்திக்க வேண்டியது, இந்தக் கிளைகளை வலு வேற்றுவது எப்படி என்பது குறித்தல்ல. மரத்தின் அடியில் இருக்கும் வேரை எப்படி வலுவாக்குவது என்பது குறித்துதான். மண்ணுக்குள் எந்த அளவுக்கு உறுதியாக வேரூன்றி மரம் இருக்கிறதோ, அந்தளவுக்கு அது காற்றைத் தாங்கும் சக்தியைப் பெறு வதுடன், எள்ளளவுகூட அசைந்து கொடுக்காமலும் இருக்கிறது.

அதேபோல்தான் மனிதர் களும். அடிப்படைக் கொள்கைகளை வலுவாக்கிக் கொள்ளாமல் சாதிப்பது எப்படி என்பது குறித்து சிந்திக்கிறோம். இதனாலேயே நம்மை ‘துணிச்சல் கொண்ட ஆளுமை’ என்ற நிலைக்கான அத்தனை அறிகுறிகளும் வந்து பற்றிக்கொள்கிறது.

அந்த நிமிடமே நானும், என் நண்பரும் என்னுடைய வாடிக்கையாளர்களும் எது குறித்து அல்லாடுகிறோம் என்பது எனக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது. நாம் அனை வருமே நம்முடைய அடித் தளத்தை உறுதியானதாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை மறந்துவிட்டு, நம் செயல்பாடுகளை வெற்றி கரமாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக் கிறோம். இதனாலேயே நாம் ஏக்கப் பெருமூச்சு விடும் நிலைக்குத் தள்ளப்படு கிறோம்.

உற்பத்தித்திறனை செம்மைப்படுத்துதல், வளர்ச்சி மற்றும் புகழ் என்பது போன்ற வலைகளில் நாம் சிக்கிக்கொண்டு அதிலிருந்து வெளியே வர முடியாமல் தவிக்கிறோம். இதனாலேயே நம்மால் நம்முடைய அடித் தளமான வேர் குறித்து சிந்திக்க நேரம் இருப்பதே இல்லை” என்கிறார் ஆசிரியர்.

இது குறித்த விரிவான ஆராய்ச்சிகளைச் செய்துள்ள ஆசிரியர், அதன் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் புத்தகத்தில் அடித் தளத்தை செம்மையாக அமைத்துக்கொள்ளும் ஆறு நடைமுறைகளைத் தந்துள்ளார்.

ஆறு நடைமுறைகள்...

“முதலாவதாக, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதையும், எங்கே செல்ல விரும்புகிறீர்கள் என்பதையும் தெளிவாகப் புரிந்துகொண்டு அதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, ‘இன்றைய பொழுது’ மற்றும் ‘இப்பொழுது’ என்ற அடிப்படையில் சிந்தனை மற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க வேண்டும். நாளை, அடுத்த வருடம் என்கிற ரீதியிலான சிந்தனையை மட்டுமே கொண்டிருந்தால் அது இன்றைய சூழ்நிலையை ஒட்டுமொத்தமாக மறக்கடித்துவிடும். மூன்றாவதாக, ஒரு விஷயத்தை வேகமாகச் செய்து முடிக்க வேண்டுமெனில், அதற்கு முதலில் தேவையான விஷயம், பொறுமை.

நான்காவது, எந்த ஒரு விஷயத்தில் ஈடுபடும்போதும் அதில் சிக்கல்களும் சோதனைகளும் வரும் என்பதை எதிர்பார்த்து, அதற்கேற்ப உங்கள் நிஜமான பலத்தை யும் நம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

ஐந்தாவதாக, உங்களைச் சுற்றி இருக்கும் நபர்களைக் கொண்ட சமுதாயத்தை (உறவு/நட்பு வட்டம்) வலு வானதாக ஆக்கிக்கொள்ள வேண்டும். ஏனெனில், எந்த ஒரு விஷயத்தில் ஈடுபடும்போதும், தோல்விகளோ இடைஞ்சல்களோ வந்தால், அதை எதிர்கொள்ள நம்மைச் சுற்றியிருக்கும் நபர்கள் பெரிய அளவில் உதவுவார்கள்.

ஆறாவதாக, நம் உடலை அதற்கான பயிற்சிகளை எடுத்து சரியாக வைத்துக் கொள்வதன்மூலம் நேரம் சார்ந்த இலக்குகள், கஷ்டமான பேச்சு வார்த்தைகள் போன்ற வற்றை சுலபமாகக் கையாள முடியும்” என்கிறார் ஆசிரியர்.

நம் வாழ்க்கை குறித்த ஏக்கம், துக்கம் மற்றும் கோபம் என்ற மூன்றும் நம் அனைவருக்கும் வந்து போகிற ஒரு விஷயமாக இருக்கிறது. இதைத் தவிர்த்து செம்மையான ஒரு வாழ்வை வாழ்வது எப்படி என்பதை ஆராய்ச்சி முடிவுகளை மேற்கோள் காட்டிச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை படித்துப் பயன் பெறலாம்.