
உளவியல் சார்ந்த புத்தகங்கள் பலவும் இதற்கான தீர்வுகளைக் கூறுகின்றன..!
நம்முடைய மனதில் பல்வேறு எண்ணங் களும் தோன்றி மறைகின்றன. ஏன் இவ்வளவு எண்ணங்கள் தோன்றுகின்றன, ஏன் உடனுக்குடன் அவை மறைந்து போகின்றன, ஏன் சில எண்ணங்கள் நமக்குள் அதீத பயத்தை உருவாக்குகின்றன என்பது போன்ற பல கேள்விகள் நம்மிடையே இருக்கின்றன.

ஒரு நாள் சந்தோஷமாக இருக்கிறோம்; அடுத்த நாளே சோகமாக இருக்கிறோம். சுலபத்தில் கோபப்படுகிறோம். கரியர், பிசினஸ், தனிப்பட்ட வாழ்க்கை எல்லாவற்றிலும் எதிர்கொள்ளும் சின்னச் சின்ன சவால் களுக்கான தீர்வுகளைக்கூட சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறுகிறோம். இவற்றை எல்லாம் சரிசெய்துகொள்ள முடியுமா?
சரியாகச் சிந்தித்து முடிவெடுத்தல் என்பது இதற்கெல்லாம் தேவையான தீர்வுகளைத் தரும். இந்த சரியாக சிந்திக்கும் கலையைக் கற்றுக்கொள்வது எப்படி, அப்படி கற்றுக்கொண்டாலுமே எப்படி நம்முடைய சிந்தனையின் தரம் உயர்ந்திருக்கிறது என்று கண்டுபிடிப்பது எப்படி?
உங்களுடைய வாழ்க்கைத்தரம் நாளடைவில் உயர்கிறது எனில், அதற்குக் காரணமாக இருப்பது, உங்கள் சிந்தனையின் தரம் உயர்ந்திருப்பதுதான் என்று அடித்துக் கூறமுடியும். நினைத்ததை செய்ய முடியாமல், எங்கோ சிக்கிக்கொண்டதைப் போன்ற உணர்வுடன் வாழ்ந்துகொண்டிருப்பதில் இருந்து மீண்டு சகஜமான சந்தோஷமான வாழ்க்கையை வாழ ஆரம்பித்தீர்கள் எனில், உங்கள் வாழ்க்கையின் தரம் உயர்ந்திருக்கிறது என்றுதான் அர்த்தம். இதற்கு உதவுவதுதான் ‘நேரான சிந்தனை’ என்ற இந்தப் புத்தகம் சொல்லும் நடைமுறை.
‘‘நேரான சிந்தனையை எப்போதும் கொண்டிருக்க வேண்டுமெனில், நாம் நம்முடைய உண்மை நிலையை முழுவதுமாக உணர்ந்து, கண்ணெதிரே உள்ள நிஜத்தை ஒப்புக்கொண்டு பார்த்து, மற்றவர் களின் பார்வையிலிருந்து அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டு செயல்பட வேண்டும். இப்படிச் செயல்படுவதன் மூலமே நம்மால் பிராக்டிக்கலான முடிவுகளை எடுக்க முடியும்.
நேரான சிந்தனைக்கு மிகவும் தேவையான ஒன்று எது தெரியுமா? நாம் ஒரு விஷயத்தை நம்புகிறோம் எனில், எதை நம்புகிறோம் என்பதைவிட, அதை எதனால் நம்புகிறோம் என்கிற கேள்வியைக் கேட்டு அது குறித்து ஆராய்ந்து அறிந்து தெரிந்துகொள்வதைத்தான். ஏனென்றால், நாம் ஒரு விஷயத்தை நம்புவது என்பது நம்முடைய அல்லது மற்றவர்களுடைய எண்ணத்தின் அடிப்படையிலேயே தவிர, அந்த விஷயம் குறித்த தரவுகளின் (data) அடிப்படையில் அல்ல. நம்முடைய சிந்தனைகள் பலனளிப்பவையாக இருக்க வேண்டும். அவ்வாறு பலனளிப்பவையாக இல்லாவிட்டால் அவை உபயோகமற்றவையாகவே இருக்கிறன. ‘நேரான சிந்தனை’ என்பது எப்போதுமே நமக்குப் பலனளிப்பதாக மட்டுமே இருக்கிறது’’ என்கிறார் ஆசிரியர்.
‘‘உங்களுடைய வாழ்க்கை உங்களுடைய சிந்தனைகளால் கட்டமைக்கப்படுவது என்பதால், சிந்தனையைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவருவது என்பது மிகவும் முக்கியமான தாகிறது. நாம் சிந்திக்கும் விதத்தை சிறப்பாக மாற்றி அமைத்துக் கொள்ள நம்மால் முடியும் என்பதால், நம்முடைய வாழ்க்கையில் சாத்தியம் இல்லாத விஷயங்கள் என்று எதுவுமே இல்லாது போய்விடும். இந்தக் கருத்துகளை நீங்கள் உளமார உணர்ந்து கொண்டீர்கள் எனில், அது உங்களுடைய வாழ்க்கையில் அனைத்தையும் மாற்றியமைத்துவிடும். இதனால்தான் அன்றாடம் நாள் முழுவதும் நீங்கள் எது குறித்து சிந்திக்கிறீர்களோ, அதுவாகவே ஆகிவிடுகிறீர்கள் என்கின்றனர் அறிஞர்கள். இதை மனதில் கொண்டே பல்வேறு அறிஞர்களும்,சிந்தனையாளர்களும் சிந்தனா சக்தியின் பலன் குறித்து விளக்கமாக எழுதியுள்ளனர். மேலும், நம்முடைய நடவடிக்கைகள் அனைத்தும் நம்முடைய சிந்தனைகளையொட்டியே இருக்கின்றன. இதனால் நம்முடைய நடவடிக்கைகளை (செயல்களை) நாம் மாற்றி அமைக்க வேண்டும் எனில், முதலில் நம்முடைய சிந்தனையை மாற்றி அமைக்க வேண்டும் இல்லையா’’ என்று கேட்கிறார் ஆசிரியர்.

‘‘மனிதனுடைய மூளையானது மனிதனுக்குக் கிடைத்துள்ள அதிமுக்கியமானதொரு கருவியாகும். ஏனெனில், இந்த உலகில் உள்ள பல்வேறு அற்புதங்கள் (தொழில்நுட்பங்கள் போன்ற) அனைத்தும் மனித மூளையை உபயோகித்து கண்டறியப் பட்டதேயாகும். இப்பேர்ப்பட்ட மூளையைப் பெற்றிருக்கும் நாம் அதை எப்படி சரியானபடி உபயோகிப்பது என்பதற்கான வழிமுறைகளைத் தெரிந்து வைத்துக்கொண்டு இருப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், நாம் இந்த விஷயத்தில் நடை முறைக்கு ஒவ்வாத (Impractical) மாதிரி இருந்துவிடுகிறோம் என்றுகூடக் கூறலாம்.
இதில் என்ன கொடுமை என்னவெனில், நாம் ஒவ்வொருவருமே நம்மை சிறந்த சிந்தனையாளர் என்று நினைத்துக்கொண்டு வாழ்கிறோம். ஆனால், இது குறித்த ஆராய்ச்சிகளோ மொத்தமாக எதிர்மறையான முடிவுகளையே காட்டுகிறது. ஏனென்றால், பெரும்பாலும் நம்முடைய சிந்தனையில் நூற்றுக்கணக்கான குறைகள் இருக்கின்றன. உளவியலில் இதை ‘cognitive bias’ என்பார்கள்.
முரட்டுத் துணிச்சல், உணர்வு வேகம் மற்றும் தேவையான தகவல் தரவுகள் இல்லாமல் முடிவெடுத்தல் போன்றவற்றையும் நாம் அடிக்கடி செய்கிறோம். உளவியல் சார்ந்த புத்தகங்கள் பலவும் இதற்கான தீர்வுகளைக் கூறுகின்றன. ஆனாலும், அவ்வகைத் தீர்வுகளை நடைமுறைப்படுத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே பெரும்பாலும் இருக்கின்றன. ஏனென்றால், அவை நடைமுறைக்கு உகந்ததல்ல. அதனாலேயே நடைமுறைக்கு உதவும் வகையிலான விஷயங்களைச் சொல்லும்படி, (தியரி, நிஜவாழ்க்கை உதாரணம் மற்றும் கதைகள் வாயிலாக) இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளேன்’’ என்கிறார் ஆசிரியர்.
‘‘உடம்பின் தசைகள் பயிற்சியால் எப்படி நல்ல ஸ்திரத் தன்மையைப் பெறுகிறதோ, அதே போல்தான் மூளையும். தொடர்ந்து அதற்குத் தரப்படும் பயிற்சி களின் வாயிலாகவே அதைப் பலமானதாக ஆக்கமுடியும்.
இந்தப் பயிற்சியானது வாழ்நாள் முழுக்க தொடர வேண்டிய ஒன்றாகும். ஏன் என்கிறீர்களா? ‘உடலை ஃபிட்டாக வைக்கப் போகிறேன்’ என்று சொல்லி நான்கு வருடங்கள் ஜிம்முக்குத் தொடர்ந்து போய்விட்டு அதன்பின் ஜிம் பக்கமே தலைவைத்துப் படுக்கா விட்டால் உடல் கட்டுக் கோப்பாக இருந்துவிடுமா, இருக்காது இல்லையா?
அதே போல்தான் மூளைக் கான பயிற்சியும். நாம் ஒரு விதமாக சிந்திக்க ஆரம்பித்து அந்தப் பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டோம் எனில், அந்தப் பாதையை விட்டு விலகவே மாட்டோம். பொதுவாக, புதிய விஷயங் களை பயத்தால் தவிர்க்கும் நாம் சிந்தனை விஷயத்தில் எக்கச் சக்கமான ஜாக்கிரதை உணர்வுடன் செயல் படுவோம். இன்னும் சொல் லப்போனால், மூளையைக் கசக்கி தீர்வுகாண நாம் முயலவே மாட்டோம்.
பரீட்சை போன்ற ஒரு சூழ்நிலையில் மட்டுமே மூளையைக் கசக்க வேண்டும் என்ற எண்ணத்தை நாம் அடிப்படையாகக்கொண்டே செயல்படுகிறோம். இதனாலேயே நேரான சிந்தனையை செய்வதற்கு சரியான பயிற்சி என்பது அவசியமாகிறது” என்கிறார் ஆசிரியர்.
“குழப்பத்தில் இருந்து தெளிவடைய நேரான சிந்தனையே நமக்கு உதவும்” என்று சொல்லும் ஆசிரியர்,
அதற்கு ஓர் உதாரணமாக அவருடைய அனுபவம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். லண்டனுக்கு வேலைக்குச் சென்ற அவர், ஆரம்பத்தில் ஒரு வீட்டை மூன்று மாதத்துக்கான ஒப்பந்த அடிப்படையில் எடுத்துத் தங்கினாராம். இரண்டு மாதத்தில் நல்ல தொரு பிளாட் வாடகைக்கு கிடைக்க, அந்த வீட்டின் லீஸை இரண்டு மாதத்தில் முடித்துவிட்டு புதிய வீட்டுக் குக் குடிபோகத் திட்ட மிட்டாராம். அவருடைய பெற்றோர்களும் வீட்டுக்கு குடி போவதால், ஊரிலிருந்து நிறைய லக்கேஜை ஒரு வேனில் போட்டு எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார் களாம்.
இந்த நிலையில் புதிய வீட்டின் உரிமையாளர் போனில் அழைத்து வீடு வாடகைக்கு தற்போது தருவதில்லை என்று சொல்ல, அவசரப்பட்டு ஏற்கெனவே இருந்த வீட்டைக் காலி செய்துவிட்டோமே என்று வருத்தப்பட்டாராம்.
போய்த் தொலைகிறார் என்று ஏர்பி.என்.பி-யில் வாடகை வீடு தேட, அந்த பிளாட் ஓனர் மனது மாறி மீண்டும் வீடு வாடகைக்கு தருகிறேன் என்றாராம். ‘‘முதல்நாள் மாலைக்கும் அடுத்த நாள் காலைக்கும் இடையே இருந்த வித்தியாசம் நேரான சிந்தனையை உருவாக்கிக் கொண்டது தவிர வேறில்லை இல்லையா’’ என்று கேட்கிறார் ஆசிரியர். குழப்பத்தில் கோபமும் எரிச்சலும், தெளிவில் நேரான சிந்தனையும் அதன் மூலம் தீர்வும் கிடைத்தது இல்லையா என்கிறார் ஆசிரியர்.
நவீன உலகில் சிந்திப்பதற்கென எக்கச்சக்கமான விஷயங்கள் இருக்கவே செய்கின்றன. இவற்றில் எது உங்களுடைய செயல்பாட்டு பழக்க வழக்கங்களை மாற்றவல்லது என்பதைக் கண்டறிந்து அதை மட்டுமே நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சொல்லும் ஆசிரியர், மூளைதனை சிந்திக்கச்செய்து அந்தச் சிந்தனையின் மூலம் புள்ளிகளை வைக்க வைத்து அந்தப் புள்ளிகளைக் கோடாக இணைப்பது எப்படி என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
சிந்திப்பதற்காக நேரம் எடுத்துக்கொண்டு அந்த சிந்தனையில் நம்முடைய மூளையையே சந்தேகப்பட்டு, சிந்தனையை மீண்டும் மீண்டும் பிரதிபலித்துப் பார்த்து நீங்கள் நீங்களாக (என்ன மாதிரியான நபராக நீங்கள் கற்பனையில் இருக்க விரும்புகிறீர்களோ அதுபோல் இல்லாமல்) இயங்க ஆரம்பிக்க இந்த நேரான சிந்தனை என்பது மிக மிக உதவும் என்று சொல்லும் ஆசிரியர், இப்படி நீங்கள் நீங்களாகவே இயங்க ஆரம்பித் துவிட்டீர்கள் எனில், நீங்கள் நேரான சிந்தனையைச் செய்ய ஆரம்பித்து விட்டீர்கள் என்று அர்த்தம் என்றும் கூறுகிறார்.
நேரான சிந்தனையை செய்வதன் மூலம் வெற்றிகரமாக வாழ்வது எப்படி என்பதை எளிய நடையில் பல்வேறு நிஜ வாழ்க்கை உதாரணங்களுடன் கூறும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒரு முறை படித்துப் பயன் பெறலாம்.