
வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் அனைவரும் இந்தப் புத்தகத்தை அவசியம்...
“உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த பெரியதொரு மாற்றத்தை நினைவுபடுத்திப் பாருங்கள். புதிய புராஜெக்ட், கரியர், புதிய இடத்துக்குப் புலம்பெயர்ந்து சென்றது, புதிய உறவுகளைப் பெற்றது என எதுவாக வேண்டு மானாலும் இருக்கலாம். நீங்கள் ஈடுபட்ட விஷயங்களில் எது கடினமாக இருந்தது, எது உங்களை அந்த விஷயத்தில் ஈடுபடத் தயங்க வைத்தது, ‘இந்த மாற்றம் வேண்டாமே’ என்று எது உங்களை நினைக்க வைத்தது?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்..? அந்த விஷயத்தில் ஈடுபடும்போது அப்போது இருந்த நிச்சயமற்ற தன்மை என்பதுதானே..?

சரி, உங்கள் வாழ்வில் மிகவும் முக்கியமான விஷயங்கள் என்பவற்றை எல்லாம் எப்படி அடைந்தீர்கள் என்று ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். அவை எல்லாம் நிச்சயமற்ற சூழல்களுக்குப்பிறகு நீங்கள் அடைந்த விஷயங்களாகவே இருக்கும்.
கடந்த காலத்தை விடுங்கள். இன்றைக்கு உங்கள் முன்னே இருக்கும் நிச்சயமற்றத்தன்மை கொண்ட விஷயங்கள் பலவற்றிலும் உங்கள் வளர்ச்சிக்கான வாய்ப்பு, உங்களுடைய புத்திசாலித்தனத்தை அதிகரித்துக்கொள்வதற்கான நுண்ணறிவு போன்றவை இருக்கவே செய்யும். எனவேதான், புதிய விஷயங்கள் உருவாவதற்கும் நடப் பதற்கும் முதலில் தேவையானது, நிச்சயமற்ற சூழலே” என்று சொல்லி ஆரம்பிக்கின்றனர் ‘Upside of Uncertainty’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்கள்.
நீங்கள் ஒரு மேனேஜர், படைப்பாளி, குழு தலைவர் அல்லது குழு உறுப்பினர், பெற்றோர் அல்லது திருமண வாழ்க்கையை இப்போதுதான் தொடங்கிய பார்ட்னர், ஒரு நிறுவனத்தை தலைமை ஏற்று நடத்துபவர் அல்லது இப்போதுதான் புதியதாக வேலைக்குச் சேர்ந்தவர், பள்ளி கல்லூரியில் படிக்கும் நபர் என யாராக இருந்தாலும் சரி, உங்கள் லெவலுக்கு நீங்கள் நிச்சயமறத்தன்மை கொண்ட பல சூழ்நிலைகளை எதிர்கொள்ளவே செய்வீர்கள். நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் நிச்சயமற்றத்தன்மை (uncertainty) என்பது எப்படி நம் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது என்பதைக் கூறும் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள பல விஷயங்களை சுருக்கமாகப் பார்ப்போம்.
ஏன் தயங்கி நிற்கிறோம்?
‘‘தெரியாத ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற பேரார்வமே மனிதர்களாகிய நாம் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளவும், கற்றுக்கொண்டதை வைத்து வளர்ச்சி அடையவும் உதவியாக இருக்கிறது. நாம் ஈடுபடும் தொழிலில் நாம் எதிர் கொள்ளும் நிச்சயமற்றத்தன்மை என்பது, அது குறித்து நாம் இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற பேரார்வத்தை நம் மனதில் தூண்டுவதாக அமைகிறது.
ஒரு செயலை அல்லது தொழிலை செய்யத் தொடங்கும்முன் அதில் நிச்சயமற்றதன்மை இருக்கும் சூழலில், ஒருவேளை இப்படி நடந்துவிடுமோ, அப்படி நடந்துவிடுமோ, இந்தக் காரணகாரியங்களால் இப்படி ஆகிவிடுமோ, அப்படி ஆகிவிடுமோ என்பது போன்ற பல கேள்விகள் நம் மனதில் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. நாமே அப்படி நினைக்க வில்லை என்றாலும், இப்படி எல்லாம் நடந்தால் என்ன செய்வது என்கிற கேள்வியை எழுப்பி, நம்மை சிந்திக்க வைக்க நம்மைச் சுற்றியிருப்பவர்கள் தவறுவதில்லை.
நாம் ஏன் இப்படி யோசிக்கிறோம் என்று கேட்டால், நிச்சயமற்றத்தன்மை கொண்ட சூழலை யாருமே விரும்ப மாட்டார்கள். அந்தச் சூழலை சமாளிக்க முடியாமல் தோற்றுப் போகவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக நினைத்து, அந்தச் சூழலுக்குள் செல்வதையே பலரும் தவிர்த்துவிடுவார்கள்.
ஆனால், இந்தச் சூழல் சிலருக்குக் கவர்ச்சிகரமாக இருக்க, அதில் குதித்து, ஒரே பாய்ச்சலில் வெற்றிகரமாகக் கடந்து சென்றுவிடுகிறார்கள். திறமையை அதிகரித்துக்கொள்ளுதல், புதிய விஷயங்களைக் கண்டறிந்து நடைமுறைப்படுத்துதல், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குதல் எனப் பல்வேறு விஷயங்கள் மூலமாக நிச்சயமற்றத்தன்மையை நாம் கடந்து சென்றுவிடலாம்.
ஆனால், நம்மில் பெரும்பாலானோர் நிச்சயமற்ற சூழலை எதிர்கொள்ளும்போது தயங்கி நின்றுவிடுகிறோம். ‘புதிதாகத் தொடங்கும் தொழிலில் பாதகமாக ஏதாவது நடந்துவிட்டால், நமக்கு எந்தளவுக்கு பாதிப்பு ஏற்படும்’ என்பது குறித்தே அதிகமாக யோசித்து பயப்படுவோம். ஒருவேளை, அந்தத் தொழில் நமக்கு சாதகமாக அமைந்துவிட்டால், அது நமக்கு எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்தும், அது போன்ற சூழலில் நாம் எப்படி இன்னும் சிறப்பாக நம் செயல்பாட்டை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் சிந்திக்கவே மாட்டோம்.
நாம் செய்யும் ஒரு செயல் பாசிட்டிவ்வாக முடிய வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிற அதே சமயத்தில், அந்த பாசிட்டிவ் நிகழ்வு நடந்தால் எப்படி அதை மேலும் சிறப்பானதாக மாற்றிக் கொள்வது என்பது குறித்த சிந்தனை நம்மிடம் அறவே இருக்காது. ஏனென்றால், நம்மில் பலரும் நிச்சயமற்ற சூழலில் இருக்கிற பாதகமான விஷயங்கள் குறித்து தீவிரமாக சிந்திக்கும் அளவுக்கே பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம் அல்லது பழகியுள்ளோம்.
ஒரு நிச்சயமற்ற சூழலை எதிர்கொள்ளும்போது என்னென்ன மாற்றங்கள் வரும், அந்த மாற்றங்களை நாம் எப்படி சமாளிப் போம், புத்தாக்கங்களை எப்படிக் கொண்டுவருவது என்பது குறித்தெல்லாம் நம்மில் பெரும்பாலானோர் கொஞ்சம்கூட சிந்திப்பதில்லை. நிச்சயமற்ற சூழலில் நிலவும் இது போன்ற சாதகமான விஷயங்கள் குறித்து சிந்தித்து, அந்தச் சூழலை நமக்கு உதவியாக மாற்றிக்கொள்ள முயல வேண்டும்” எனச் சொல்லும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள், எப்படி செயல் படுவது என்பது குறித்தும் விளக்கமாகச் சொல்லியிருக் கிறார்கள்.

நெகட்டிவ் விஷயங்களையும் பாருங்கள்...
“நிச்சயமற்ற சூழலில் இருக்கும் பாசிட்டிவ் விஷயங் களைப் பாருங்கள் என்று கூறியவுடன் நெகட்டிவ் விஷயங்களை அறவே பார்க்கத் தேவையில்லை; அவற்றை எல்லாம் கவனிக் காமல் இருப்பதே நல்லது என்று நாங்கள் சொல்ல வரவில்லை. பாசிட்டிவ் விஷயங்களை சிரத்தையோடு அணுகும் அதே நேரத்தில், நெகட்டிவ் விஷயங்களையும் கவனித்துச் செயல்பட வேண்டும் என்றே வலியுறுத்த விரும்புகிறோம்” என்று சொல்லும் ஆசிரியர்கள், “நீங்கள் எப்படிப்பட்ட கடினமான மற்றும் பரிதாப கரமான சூழ்நிலையில் இருந்தாலுமே இந்தப் புத்தகத் தில் கூறப்பட்டிருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி னால் நிச்சயமற்ற சூழலை ஒரே பாய்ச்சலில் தாண்டி வந்து விட முடியும்” என்று நம்பிக்கை தருகின்றனர்.
நிச்சயமற்ற சூழல் குறித்த பார்வையை மாற்றுங்கள்...
“நிச்சயமற்ற சூழல் குறித்து நம் மனதில் உருவாகும் பயத்தை எப்படிக் களைவது என்பது முக்கியமான கேள்வி. இதை நீங்கள் பார்க்கும் கோணத்தை மாற்றுவதுதான் நீங்கள் முதலாவதாகச் செய்ய வேண்டிய விஷயம்.
இயல்பாகவே நிச்சயமற்ற சூழல் மிகவும் மோசமானது என்ற எண்ணத்தையே நாம் கொண்டிருக்கிறோம். நிச்சய மற்ற சூழல் என்பது நிறைய, சாத்தியமான புதிய விஷயங்களைக் கொண்டி ருக்கும் ஒன்று என்கிற பார்வையை நமக்குள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஏனென்றால், பார்வையின் கோணம் மாறும்போது நம்முடைய திறமை மற்றும் எதிர்வினைக் கான பலன் அதிகரிக்கும்.
இது போன்ற மாற்றத்தை நாம் நம்முடைய பார்வையில் கொண்டு வருகிறபோது என்னவாகும்? இவ்வளவு புதிய வாய்ப்பு இருக்கிறதே... நாம் இன்னமும் கூடுதலாக முயற்சி செய்வோம். கூட்டணிகளை அமைத்துக் கொண்டு செயல்படுவோம் எனப் பல்வேறு வகையான புதிய யுக்திகளைக் கண்டறிந்து நாம் செயல்படுத்த ஆரம்பிப்போம்.
இப்படிப் பார்வையின் கோணத்தை மாற்றுவதன் மூலம் நாம் நிலைகுலைந்து போகமாட்டோம். சொல்லப் போனால், கூடுதலாக வலிமை பெறுவோம். இந்த விதமான சிந்தனை மாற்றத்தை நாம் கொண்டு வந்துவிட்டால் நிலையற்ற சூழலை நாம் எதிர்கொள்ளும்போது நமது மூளையானது சிவப்பு நிற சிக்னலைக் காட்டாமல், ‘வாய்ப்பிருக்கிறது முயற்சி செய்யுங்கள்’ என்ற பச்சை நிற சிக்னல்களைக் காட்ட ஆரம்பிக்கும்.
நிச்சயமற்ற சூழலில் என்னென்ன பாசிட்டிவ் விஷயங்கள் இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ள பேரார்வத்தை நீங்கள் கொண்டிருந்தால், உங்களால் வெற்றியை நிகழ்த்திக்காட்ட முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்குள் பிறக்கும். வெற்றிக்கான திறமைகளை அதிகரித்து, கூட்டணிகளை அமைத்து, கடுமையான சவால்கள் வந்தபோதும் சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள்’’ என்று கூறி முடிக்கிறார்கள் இந்தப் புத்தக ஆசிரியர்கள்.
நான்கு பெரும் பிரிவுகளாக...
நிலையற்ற சூழல் பற்றி சிந்திக்கும் கோணத்தை மாற்றுவது எப்படி, அந்தச் சூழலைப்பற்றி முழுமையாகப் புரிந்துகொள்வது எப்படி, அந்தச் சூழலுக்கு ஏற்ப செயல்படுவது எப்படி, எப்பேர்ப்பட்ட இடர்ப்பாடுகள் வந்தபோதிலும் தொடர்ந்து நம்முடைய எண்ணத்துக்கு ஏற்ப செயல்படுவது எப்படி என்ற நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது இந்தப் புத்தகம்.
தயங்கி நிற்பவர்களுக்கான புத்தகம்...
நிஜவாழ்க்கை சம்பவங்கள், பிரபலங்களின் அனுபவங்கள் (அவர்கள் பிரபலங்களாக இல்லாத போது நிச்சயமற்ற சூழல் ஏற்பட்டு, அதனால் பிரபலங்களான நிகழ்வுகள்), நிச்சயமற்ற சூழல் குறித்து செய்யப்பட்டுள்ள ஆராய்ச்சி முடிவுகள் என பல்வேறு விஷயங்களைக் கலந்து, படிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் வகையில் இந்தப் புத்தகம் எழுதப் பட்டிருக்கிறது.
வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் அனைவரும் இந்தப் புத்தகத்தை அவசியம் படித்துப் பயன் பெறலாம்.