
பயிற்சி
நாம் இன்று இன்டர்நெட் யுகத்தில் வாழ் கிறோம். இன்டர்நெட் நம் வாழ்க்கைக்குள் நுழைந்த பின் எத்தனை எத்தனை மாற்றங்கள்! ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ வந்தபின் இந்த மாற் றங்கள் இன்னும் அதிகரித்து விட்டன. வீட்டில் இருந்த படியே மக்கள் தாங்கள் விரும்பும் சேவைகளைப் பெறுவதற்காக வங்கிகளும், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற மற்ற நிறுவனங்களும் தினம் ஒரு டிஜிட்டல் சர்வீஸை அறிமுகம் செய்கின்றன. இன்றைய மில்லென்னியல் களும், ஜென்Z-களும் இந்தச் சேவைகளை மின்னல் வேகத்தில் செயல்படுத்தக் கற்றுக்கொள்கின்றனர்.

பின்தங்கும் சீனியர் சிட்டிசன்...
ஆனால், இதில் பின்தங்கு பவர்கள் சீனியர் சிட்டிசன் கள்தான். 2021 சென்செஸ் புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவில் இருக்கும் சீனியர் சிட்டிசன்களின் எண்ணிக்கை 13.8 கோடி. இது சீனாவைவிட சற்றே குறைவு. இன்று கூட்டுக் குடும்ப முறை குறைந்ததாலும், பல குடும்பங் களின் இளைய தலைமுறைகள் கல்வி மற்றும் பிழைப்பு தேடி அயல் நாடுகளுக்குச் சென்ற தாலும் நிறைய முதியவர்கள் தனித்து வாழும் நிர்ப்பந்தத்தில் உள்ளார்கள்.
இளைஞர்கள் அளவுக்கு தொழில்நுட்பத்தை இலகு வாகப் பயன்படுத்தும் திறமை (Tech Savvy) அவர்களிடம் இல்லை என்றாலும், இந்தத் தலைமுறை சீனியர்களும் சளைத்தவர்கள் அல்லர். தங்களால் இயன்ற அளவு டெக்னாலஜியை உபயோ கிக்க முற்படுகின்றனர்.
ஃபைனான்ஷியல் ஹெல்த் நெட் வொர்க்கின் சர்வேபடி, செல்போன் உபயோகிக்கும் சீனியர் சிட்டிசன்களில் 62 சதவிகிதத்தினர் ஸ்மார்ட் போன் உபயோகிக்கின்றனர். அவர்களில் 94 சதவிகிதத்தினர் அதைத் தினமும் பயன்படுத்துகின்றனர். சர்வமும் டிஜிட்டல் மயமாகிவரும் உலகில் கம்ப்யூட்டர் / போன்/ இன்டர்நெட் அறிவு இன்றியமையாதது என்று அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
இன்று சீனியர் சிட்டிசன் ஹோம், அஸிஸ்டட் லிவிங் என்று பல பெயர்களில் முதியோர் இல்லங்கள் பெருகி விட்டன. வசதிகளுக்குத் தக்கவாறு ஒரு நபருக்கு மாதம் ரூ.12,000 முதல் ரூ.1,00,000 வரை கட்டணம் வசூலிக்கப் படுகிறது.
உணவு தயாரிப்பு, வீட்டுப் பராமரிப்பு, டாக்டர் வசதி போன்றவற்றை இந்த இல்லங்கள் ஏற்றுக்கொள் கின்றன. ஆனால், மிக முக்கியமான பொருளாதார வேலைகளை சீனியர்கள் செய்தே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. இதில் அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் அநேகம். ஏனெனில், டிஜிட்டல் மய மாக்குதலை செய்யும் வங்கிகள், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற நிறுவனங்கள் புது செயலிகளை வடிவமைக்கும்போது சீனியர்களைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. அவர்கள் கவனம் எல்லாம் இன்று சம்பாதிக்கும் இளம் தலைமுறை மட்டுமே.

சீனியர்கள் சந்திக்கும் சவால்கள்...
கம்ப்யூட்டரையோ, செல்போனையோ பொருளா தார ரீதியாக உபயோகிக்க சீனியர்களுக்கு அதிகப் பயிற்சியும், அதிக நேரமும் தேவைப்படுகிறது. மறதியின் காரணமாக பாஸ்வேர்டுகள் நினைவில் இருப்பதில்லை; கை தவறுதலாக சில பட்டன்களைத் தட்டுதல், பார்வைக் குறைவு, கேட்கும் திறன் குறைவு போன்ற முதுமை சார்ந்த சிரமங்கள் செயலிகளை உபயோகிப்பதில் குளறுபடிகளை ஏற்படுத்துகின்றன. அதிலும், பல ஆப்கள் சிறிய வடிவிலான போன்கள் மூலமே கிடைப்பது சிரமத்தை அதிகப்படுத்துகிறது.
சோஷியல் மீடியாவில் உற்சாகமாக உலவும் சீனியர்கள்கூட, தங்கள் செயல்திறன் குறைவதை உணர்ந்து டிஜிட்டல் பேங்கிங் மற்றும் முதலீட்டு முறைகளை உபயோகிக்கத் தயங்குகிறார்கள். தங்கள் செயல்பாடுகளால் ஏதாவது நஷ்டம் விளைந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள்.
அவர்கள் இப்படிக் கவலைப்படுவதிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை. கன்ஸ்யூமர் ஃபைனான்ஷியல் புராட்டெக்ஷன் பீரோவின் தகவல்படி, சைபர் கிரைம் செய்பவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர் களையே குறிவைக்கிறார்கள். இதுபோன்ற காரணங் களால் வங்கிச் சேவை மேற்கொள்வதற்காக இன்டர்நெட் பேங்கிங் வசதி பெற்ற சீனியர்களில் 82 சதவிகிதத்தினர் அதிலிருந்து வெளியேறி, வங்கிக் கிளைகளை நாடுவதாக ஒரு சர்வே குறிப்பிடுகிறது.
டிஜிட்டல் கண்கள்
நமது கல்விக் கண்ணைத் திறந்த சீனியர் சிட்டிசன் களுக்கு, டிஜிட்டல் கண்ணைத் திறந்து வைக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட முறைகளைக் கையாளலாம்.
* முதலில் சீனியர்கள் உபயோகிக்கும் இன்டர்நெட் சர்வீஸ் அடிக்கடி பழுதாகாமல் வேலை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் அத்துடன் போராடி சலித்துப்போய், கைவிட நேரும்.
* கம்ப்யூட்டரில் எழுத்துகளை பெரிதாக்கிக் காட்டுவதும் சீனியர்களின் சலிப்பைக் குறைக்கும்.
* எடுத்த எடுப்பிலேயே பொருளாதார செயலி களுக்குச் செல்லாமல், போனில் / கம்ப்யூட்டரில், டாக்டர் அப்பாயின்ட்மென்ட் புக் செய்வது, ஊபர், ஓலா தளங்களில் கார் வாடகைக்கு எடுப்பது, ஆன்லைனில் மருந்துகள் ஆர்டர் செய்வது, ஆன்லைன் ஸ்ட்ரிமிங்கில் சினிமா பார்ப்பது, அவர்களுக்குப் பிடித்த சாலிடேர், சுடோக்கு, ஸ்க்ராபிள் அல்லது சொல்லி அடி போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்ற சிறு திறமைகளை வளர்ப்பதன் மூலம் அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கலாம்.
* நாம் வெளியூர் செல்லும்போது போனில் பேசாமல் ஸூம் டெக்னாலஜியில் ‘கனெக்ட்’ செய்து பேசுவது, ஜூமில் பாட்டு கிளாஸ், ஸ்லோக கிளாஸ், யோகா கிளாஸ் ஏற்பாடு செய்வது போன்ற செயல்கள் அவர்கள் செயல்பாடுகளை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்ல வாய்ப்பு உண்டு என்பது நிச்சயம்!

பொருளாதாரத் தளங்கள்
பொருளாதாரத் தளங்களுக்குச் செல்வதற்கு அவர்களுக்குத் தளங்களின் மீது நம்பிக்கை தேவை. இன்டர்நெட் ஒன்றும் திருடர்கள் நம்மை எதிர்நோக்கி பதுங்கி இருக்குமிடம் அல்ல என்று கூறும் அதே நேரம், தங்களைப் பற்றிய தகவல்களை எப்படி பாதுகாத்துக்கொள்வது என்றும் கற்றுத் தர வேண்டும். ஒரு நோட்டுப் புத்தகத்தில் தேவையான யு.ஆர்.எல்-கள், அங்கு செல்லும் பாதை போன்ற வற்றைக் குறிப்பெடுக்கப் பழக்கினால் அவர்கள் நம் துணையை எதிர்நோக்கும் தருணங்கள் குறையும். எந்திரத்தனமாக இல்லாமல், அவ்வப்போது பாடத்தை நிறுத்தி, கேள்விகள் கேட்பது கற்றலை மேம்படுத்தும். கீபோர்டை அவர்களே உபயோகிக்குமாறு ஊக்குவித்தல் திறனை வளர்க்கும். பயிற்சி, பயிற்சி, பயிற்சி ஒன்றே திறமையை வளர்க்கும் என்று அவர்கள் நமக்கு சிறுவயதில் கூறியதை நினைவுபடுத்தலாம்.
இப்படி சீனியர்களுக்குக் கற்றுத் தர நேரமும் பொறுமையும் இல்லாதவர்கள் சீனியர்களுக்காக ‘டிஜிட்டல் லிடரஸி வொர்க் ஷாப்பு’களை நடத்தும் ஹெல்ப் ஏஜ் இண்டியா போன்ற என்.ஜி.ஓ-கள், ஏஜ்வெல் ஃபௌண்டேஷன் போன்ற நிறுவனங்களில் சீனியர்களை சேரும்படி ஊக்குவிக்கலாம்.
சீனியர்களை டிஜிட்டல் உலகுக்கு வரவேற்பது அவர் களுக்கு மட்டுமல்ல, நமக்கும் நல்லது. இதனால் சீனியர்கள் பணத்தை இழக்காமல் தப்பிப் பதுடன், அவர்களின் வேலையை அவர்களே பார்த்துக்கொள்ள முடியும்!