
அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் அனைத்திலும் யுபிஎஸ்சி கேள்வித்தாள் வழங்கப்படவேண்டும் என்று 1950-ல் நாடாளுமன்றத்தில் குரலெழுப்பப்பட்டது.
2021-ல் நடந்த யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியாகின. 685 பேர் கொண்ட தேர்ச்சிப் பட்டியலில் வெறும் 27 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 3 அல்லது 4 பேருக்கு மட்டுமே ஐ.ஏ.எஸ் கிடைக்கக்கூடும். வழக்கமாக மொத்தத் தேர்ச்சி விகிதத்தில் 10% முதல் 15% வரை தமிழகத்தின் பங்களிப்பு இருக்கும். 2012-ல் 97 பேர் தேர்ச்சி பெற்றார்கள். 2013-ல் 150 பேர் தேர்ச்சி பெற்றார்கள். அதன்பிறகு படிப்படியாகச் சரிவு. 2020-ல் 36 பேர் தேர்ச்சி பெற்றார்கள். இவ்வாண்டு அது இன்னும் குறைந்திருக்கிறது.
முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று நிலைகளைக் கொண்டது யுபிஎஸ்சி தேர்வு. தமிழகத்தில், 40,000 முதல் 50,000 பேர் வரை முதல்நிலைத் தேர்வை எழுதுகிறார்கள். எவ்வளவு காலியிடங்கள் இருக்கின்றனவோ, அதைப்போல 12 மடங்கு மாணவர்கள் முதன்மைத் தேர்வுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். ஓரிடத்துக்கு 3 பேர் என்ற அளவில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இறுதியில் காலியிடத்துக்கேற்ப ஆட்களைத் தேர்வு செய்வார்கள்.

தமிழகத்தில் யுபிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அதிகரித்துவருகின்றன. சென்னை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் அரசும் பயிற்சி மையங்களை நடத்துகிறது. இருந்தும் ஆண்டுக்காண்டு தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
“இந்தியாவில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதுமிருந்து சுமார் 5 லட்சம் பேர் இந்தத்தேர்வை எழுதுகிறார்கள். ஆனால் வினாத்தாள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே இருக்கிறது. இந்த அநீதிதான் தமிழக மாணவர்களைப் பின்னுக்குத் தள்ளுகிறது” என்று சொல்லும், சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சிவராஜவேல் இன்னொரு காரணத்தையும் முன்வைக்கிறார்.

“2011-க்கு முன்பு முதல்நிலைத் தேர்வில் பொதுத்தாளில் 150 மதிப்பெண்களுக்கு 150 கேள்விகள் கேட்பார்கள். விருப்பப்பாடத்தில் 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். 2011-ல் விருப்பப் பாடத்தைத் தூக்கிவிட்டு CSAT (Civil Services Aptitude Test) என்ற பேப்பரைக் கொண்டுவந்தார்கள். அதில் கணிதமும் ஆங்கிலமும் மட்டுமே உண்டு. மிகுந்த புலமை பெற்றவர்கள் மட்டுமே ஆங்கிலக் கேள்விகளுக்கு பதில் எழுதமுடியும். நம் மாணவர்கள் கணிதக் கேள்விகளுக்கு சரியாக விடையளித்துவிடுகிறார்கள். ஆங்கிலம்தான் பிரச்னையாக இருக்கிறது. இதன்காரணமாக முதல்நிலைத் தேர்விலேயே பெரும்பாலானோர் வடிகட்டப்பட்டுவிடுகிறார்கள்.
இந்தி படித்த மாணவர்கள், ஆங்கிலத்தில் புரியவில்லை என்றால் இந்தியில் படித்துப் புரிந்துகொள்வார்கள். அதனால்தான் பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாணவர்கள் அதிகமாகத் தேர்ச்சி பெறுகிறார்கள். தமிழ் மற்றும் பிறமொழி மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி இது...” என்கிறார் சிவராஜவேல்.
CSAT பேப்பரில் 200க்கு 66 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே அந்த மாணவரின் பொதுஅறிவு பேப்பரைத் திருத்துவார்கள். அந்தவகையில் நுட்பமான கணிதமும் தேர்ந்த ஆங்கிலமும் இருந்தால் மட்டுமே அந்தத் தேர்வை எழுதமுடியும். ஒவ்வோராண்டும் இந்த பேப்பர் கடினமாகிக்கொண்டே போகிறது என்கிறார்கள்.
அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் அனைத்திலும் யுபிஎஸ்சி கேள்வித்தாள் வழங்கப்படவேண்டும் என்று 1950-ல் நாடாளுமன்றத்தில் குரலெழுப்பப்பட்டது. ‘யுபிஎஸ்சி நிறுவனத்தில் எல்லா மொழிகளிலும் நிபுணத்துவம் பெற்ற ஆள்கள் இல்லை. எனவே அது சாத்தியமில்லை’ என்று பதில் வந்தது. 70 ஆண்டுகள் கடந்தும் அதே கோரிக்கை முன்வைக்கப்படுவது பெரும் அவலம்.

“1990-களில் கார்த்திகேயன் என்பவரின் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து, தமிழக மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் பின்தங்குவதற்கான காரணங்களை ஆராய்ந்தார்கள். ஆங்கிலத்திறன் மோசமாக இருப்பதை ஒரு முக்கியமான காரணமாக அந்த கமிட்டி சுட்டிக்காட்டியது. இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்னும் நாம் அதே இடத்தில்தான் நிற்கிறோம். யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வை ஆங்கிலத்தில்தான் எழுதியாக வேண்டும். கேள்விகள் பாரா பாராவாக இருக்கும். அவற்றைப் படித்துப் புரிந்துகொண்டு பதில் எழுதவேண்டும். நிமிடத்துக்கு 120 வார்த்தைகளை வாசித்துப் புரிந்துகொள்ளவேண்டும். இதெல்லாம் செய்தித்தாள் படிக்கும்போதுதான் வரும். நம் மாணவர்கள் இந்தத் தேர்வுக்குத் தயாராகும்போதுதான் செய்தித் தாள்களையே தொட்டுப் பார்க்கிறார்கள்...” என்கிறார், போட்டித் தேர்வுப் பயிற்சி வல்லுநர் டாக்டர் சங்கர சரவணன்.
கடந்த ஆண்டு கன்னட இலக்கியத்தை எடுத்துத் தேர்வு எழுதிய 5 பேர் ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்றார்கள். அதேநேரம், தமிழ் இலக்கியத்தை எடுத்துத் தேர்வு எழுதிய ஒருவர் மட்டுமே தேர்ச்சி பெற்றார். சிவில் சர்வீஸ் பணிகளில் எல்லா மாநிலங்களுக்கும் பிராந்தியப் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் தேர்வு முறையில் யுபிஎஸ்சி மாற்றங்களைச் செய்வதுண்டு. அதுவும் தமிழக மாணவர்களின் பங்களிப்பு குறையக் காரணமாக இருக்கலாம் என்று ஒரு தரப்பில் சொல்கிறார்கள்.
“இவ்வாண்டு தமிழகம் மட்டுமன்றி, தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலுமே தேர்ச்சி விகிதம் குறைவாகவே இருக்கிறது. எழுத்துத்தேர்வைப் பொறுத்தவரை நம் மாணவர்கள் இன்னும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். முதல்நிலைத் தேர்வில் 250 மார்க்குக்கு 2 கட்டுரைகள் எழுதவேண்டும். கட்டுரைகள் எழுதும்போது முழுமையான செய்திகளை சுவைபட எழுதவேண்டிவரும். இந்த இடத்தில் நம் மாணவர்கள் பின்தங்குகிறார்கள். யுபிஎஸ்சி தேர்வை இளநிலைப் பட்டப்படிப்பு முடித்தவர்கள் எழுதலாம் என்று சொல்கிறோம். ஆனால் விருப்பப்பாடங்களின் தரம் முதுநிலைப் பாடங்களுக்கு இணையாக இருக்கும். ‘இன்டெப்த் அனாலிசிஸ்’ இருந்தால் மட்டுமே தீர்க்கமாக எழுதமுடியும்.
முன்பு ஐந்து முறை, ஆறு முறை தேர்வெழுதிச் சோர்ந்துபோகாமல் இலக்கைத் துரத்திப் பிடிப்பார்கள். இப்போது 2-3 முறைக்கு மேல் எவரும் முயல்வதேயில்லை. அல்லது டிஎன்பிஎஸ்சி, பேங்கிங் எக்ஸாம் எழுதி அதற்குள் நுழைந்து விடுகிறார்கள்” என்கிறார், சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் தலைவர் வைஷ்ணவி.
கொரோனாவால் கடந்த இரண்டாண்டுகளில் கோச்சிங் சென்டர்கள் சரிவர இயங்கவில்லை. பெரும்பாலும் ஆன்லைன் பயிற்சிகளே வழங்கப்பட்டன. இதுவும் தேர்ச்சி எண்ணிக்கை குறைய ஒரு காரணம் என்கிறார்கள்.

“மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் பிளேஸ்மென்ட் அதிகமாக இருக்கிறது. அதனால் பெரும்பாலான மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வு எழுத ஆர்வம் காட்டுவதில்லை. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் காலியிடங்களின் எண்ணிக்கை குறைவு. அதுவும் தேர்ச்சி விகிதம் குறையக் காரணமாக இருக்கலாம். ஆண்டுக்காண்டு CSAT தேர்வு கடினமாகிக் கொண்டே போகிறது. கோச்சிங் சென்டர்கள் பெரிய நகரங்களில் மட்டுமே இருக்கின்றன. இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் கோச்சிங் சென்டர்களை அரசு இன்னும் விரிவுபடுத்தினால் பலர் ஆர்வமாக வருவார்கள்...” என்கிறார், இவ்வாண்டு தமிழக அளவில் முதலிடம் பிடித்த ஸ்வாதி.
இதுகுறித்து தமிழக அரசு நடத்தும் அகில இந்திய சிவில் சர்வீஸ் கோச்சிங் சென்டரின் முதல்வர் தியாகராஜனிடம் உரையாடினேன்.
“தமிழக அரசின் பயிற்சி மையத்தைப் பொறுத்தவரை, முதல்நிலைத் தேர்வுக்கு 6 மாதங்கள் பயிற்சியளிப்போம். நிறைய தேர்வுகள் நடத்துவோம். இரண்டாண்டுகளாக கொரோனா காரணமாக அந்த அளவுக்குப் பயிற்சியளிக்க முடியவில்லை. இவ்வாண்டு முறைப்படி பயிற்சி நடக்கிறது. நிச்சயம் தேர்ச்சி எண்ணிக்கை அதிகரிக்கும்” என்றார்.
இந்தியாவிலேயே கல்விக் கட்டமைப்பில் முன்னிலையில் இருக்கும் மாநிலம் தமிழகம். சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தொடர்ந்து பின்தங்குவதன் காரணம் ஆராயப்பட வேண்டும். புதிய பாடத் திட்டங்களும் பாடநூல்களும் போட்டித்தேர்வுகளை மனதில் வைத்தே உருவாக்கப் பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனாலும் மாணவர்கள் பின்தங்குகிறார்கள். கற்றல், கற்பித்தல் முறைகளில் உள்ள குறைகள் களையப்பட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளிலும் வினாத்தாள் வழங்குவதற்கான அழுத்தத்தை மத்திய அரசுக்குத் தமிழக அரசு தரவேண்டும்.