Published:Updated:

உணவுப் பாதுகாப்பு அதிகாரி ஆவதற்கு எந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்? | Doubt of Common Man

உணவுப் பாதுகாப்பு

தமிழ்நாட்டில் ஊராட்சி ஒன்றியங்கள் அளவில் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் ஒருவர் வீதம் 385 உணவுப் பாதுகாப்பு அலுவலர்களும், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளுக்கு 199 உணவுப் பாதுகாப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

Published:Updated:

உணவுப் பாதுகாப்பு அதிகாரி ஆவதற்கு எந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்? | Doubt of Common Man

தமிழ்நாட்டில் ஊராட்சி ஒன்றியங்கள் அளவில் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் ஒருவர் வீதம் 385 உணவுப் பாதுகாப்பு அலுவலர்களும், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளுக்கு 199 உணவுப் பாதுகாப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

உணவுப் பாதுகாப்பு
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் தினேஷ் என்ற வாசகர், "தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையில் வேலை வாங்குவது எப்படி? உணவுப் பாதுகாப்பு அதிகாரி ஆவதற்கு எந்தத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
Doubt of common man
Doubt of common man

இந்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம் 2006 (34 of 2006) நாடு முழுவதும் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது. உணவு நிர்வாகம் மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுப் பணிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகவும், இரண்டு அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்படுத்தக் கூடியதாகவும் அமைந்திருந்தது. உரிமம் வழங்கும் நடைமுறை உட்பட பல்வேறு பணிகளில் இரு அமைப்புகளுக்கிடையே அதிகமான ஒருங்கிணைப்பு தேவையாக இருந்ததைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு இரு நிர்வாகங்களையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர முன் வந்தது. அதனைத் தொடர்ந்து, 'உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை' எனும் புதிய துறை உருவாக்கப்பட்டது.

உணவு
உணவு

உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள்

புதிதாக உருவாக்கப்பட்ட இந்தத் துறையில் அரசுச் செயலாளர் நிலையில் உணவுப் பாதுகாப்பு ஆணையாளர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு அடுத்த நிலையில், பொதுச் சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவக் கூடுதல் இயக்குநர் மூலம் உணவுப் பாதுகாப்பு இயக்குநர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர்களுக்குக் கீழாக, மூன்று துணை இயக்குநர்கள், ஒரு முதன்மைக் கணக்கு அதிகாரி, உடல் நல அலுவலர், தீர்ப்பாய அலுவலர் (நிலை 1), தீர்ப்பாய அலுவலர் (நிலை 2) இருவர், நிர்வாக அலுவலர் மற்றும் புள்ளியியல் அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் ஆணையாளர் அலுவலகத்தில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு, அங்கு தலைமை அலுவலர், பதிவாளர், தீர்ப்பாய அலுவலர் (நிலை 1) ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.

இந்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம் 2006-ன் கீழ் ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் மாவட்ட அளவிலான உணவு பாதுகாப்புக்கான நியமிக்கப்பட்ட அலுவலர்களாக (Designated Officers DOs) நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, தமிழ்நாட்டில் மாவட்டச் சுகாதார அலுவலர்கள் / மருத்துவ அலுவலர்கள் உணவு பாதுகாப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதேபோன்று, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம் 2006-ன் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட வருவாய் அலுவலர் (கூடுதல் மாவட்ட ஆட்சியர்) தீர்ப்பளிக்கும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம் 2006-ஐ நடைமுறைப்படுத்துவதற்காகத் தமிழ்நாட்டில் ஊராட்சி ஒன்றியங்கள் (Block) அளவில் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் ஒருவர் வீதம் 385 உணவுப் பாதுகாப்பு அலுவலர்களும், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளுக்கு 199 உணவுப் பாதுகாப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். தற்போதைய நிலையில் கிராமப் பகுதிகளில் உடல் நல ஆய்வாளர்கள் (Health Inspector), நகராட்சிப் பகுதிகளில் துப்புரவு ஆய்வாளர்கள் (Sanitary Inspector) ஆகியோர்களிலிருந்து தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்பெற்று உணவுப் பாதுகாப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

உணவு
உணவு

பயிற்சிகள்

இந்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம் 2006 குறித்து, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் வல்லுநர்களைக் கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்தில் நியமிக்கப்பட்டிருக்கும் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலருக்கு ஐந்து நாள்களும், தீர்ப்பாய அலுவலர்களுக்கு மூன்று நாள்களும் என்று சிறப்புப் பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் தவிர, அனைத்து உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கும் தனிப்பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

உரிமம் வழங்குதல்

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகளுக்கான விதிமுறைகள் 2011 இன் விதிகளின்படி, ஆண்டு வருவாய் ரூ.12 லட்சத்துக்கு அதிகமாகக் கொண்டிருக்கும் அனைத்து உணவு வணிக நிறுவனங்கள் / அமைப்புகள் மாநில அல்லது ஒன்றிய ஆணையத்திடம் உரிமம் பெற்றிட வேண்டும். பிற உணவு வணிகர்கள் / நிறுவனங்கள் / அமைப்புகள் பதிவுச் சான்றிதழைப் பெற்றிட வேண்டும். தமிழகத்தில், மாவட்ட அளவிலான உணவுப் பாதுகாப்புக்கான நியமிக்கப்பட்ட அலுவலர்கள் உரிமம் வழங்கும் அதிகாரிகளாகவும், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் அதிகாரிகளாகவும் இருந்து வருகின்றனர். 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் உணவு வணிகத்திற்கான உரிமம் பெறுதல் மற்றும் பதிவு செய்வதற்கான நடைமுறைகள் இணைய வழியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

உணவுப் பாதுகாப்பு அலுவலராவது எப்படி?

தமிழ்நாட்டில் தற்போது உணவுப் பாதுகாப்பு அலுவலர் பணிகளுக்குரியவர்களை தமிழ்நாடு அரசின் மருத்துவப் பணிகளுக்கான தேர்வு வாரியம் (Medical Services Recruitment Board - MRB) மூலம் தேர்வு செய்கிறது.

இப்பணிகளுக்கு இளநிலை உணவுத் தொழில்நுட்பம் (B.Tech - Food Technology), இளநிலைப் பால் தொழில்நுட்பம் (B.Tech - Dairy Technology), இளநிலை உயிரித்தொழில்நுட்பம் (B.Tech – Biotechnology), இளநிலை எண்ணெய்த் தொழில்நுட்பம் (B.Tech – Oil Technology), இளநிலை வேளாண் அறிவியல் (B.Sc – Agri), இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் (B.V.Sc.,), இளநிலை உயிர் வேதியியல் (B.Sc - Bio-Chemistry), இளநிலை நுண்ணுயிரியல் (B.Sc - Microbiology), முதுநிலை வேதியியல் (M.Sc – Chemistry) பட்டம் பெற்றவர்கள் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இளநிலை மருத்துவம் (M.B.B.S) பட்டம் பெற்றவர்கள் அல்லது இந்திய அரசால் இப்பணிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இணையான கல்வித்தகுதியைப் பெற்றிருக்கும் அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.

இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களில், எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, எம்பிசி (வ). எம்பிசி & டிஎன்சி, எம்பிசி, பிசி, பிசி முஸ்லீம் (SC, SC(A), ST, MBC(V), MBC & DNC, MBC, BC, BCM) பிரிவினர்கள் 59 வயதுக்கு அதிகமில்லாமல் இருக்க வேண்டும். மற்ற பிரிவினர்கள் (Others) 32 வயதுக்கு அதிகமில்லாமல் இருக்க வேண்டும். மற்ற பிரிவினர்களில் மாற்றுத்திறனாளிகள் 42 வயதுக்கு அதிகமில்லாமலும், முன்னாள் படைவீரர்கள் 48 வயதுக்கு அதிகமில்லாமலும் இருக்க வேண்டும்.

தேர்வு
தேர்வு

தமிழ்நாடு அரசின் மருத்துவப் பணிகளுக்கான தேர்வு வாரியம் உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்துத்தேர்வு / கணினி வழித் தேர்வு (Written examination / Computer Based Test) வழியாகத் தகுதியுடையவர்களைத் தேர்வு செய்கிறது. இரண்டு மணி நேரக் கால அளவில் நடைபெறும் இத்தேர்வுக்கான கேள்வித்தாள், ஆங்கிலத்தில் 200 கொள்குறி வகை வினாக்களைக் (Objective Type Questions) கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கான இத்தேர்வில் எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் குறைந்தது 30 மதிப்பெண்களையும், பிற பிரிவினர் 35 மதிப்பெண்களையும் பெற்றிட வேண்டும். இத்தேர்வில் தவறான விடைகளுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் எதுவுமில்லை.

தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பெற்று, அதன் பிறகு உணவுப் பாதுகாப்பு அலுவலர் பணிகளுக்குரியவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பதவிக்கு வாய்மொழியிலான நேர்காணல் எதுவுமில்லை. இப்பணிக்குத் தேர்வு செய்யப்படும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கு நிலை 13, ரூ.35900 – ரூ.113500 (Level-13 Rs.35900 - Rs.113500) எனும் சம்பள விகிதத்தில் சம்பளம் வழங்கப்படும்.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

Doubt of common man
Doubt of common man