லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

எந்தப் படிப்பு... யாருக்கு... எங்கே வேலை..? - ப்ளஸ் டூ மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைகள்!

மாணவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
மாணவர்கள்

‘பாகுபலி’ படம் பார்த்து அதில் பயன்படுத்தப்பட்டிருந்த தொழில்நுட்பத்தைப் பெரிதும் வியந்தீர்கள்தானே... அந்த பிரமாண்டத்தை நீங்களும் உருவாக்கலாம்... அதற்கு உங்களைத் தயார்படுத்தும் படிப்புதான் B.Voc மல்டி மீடியா அண்ட் அனிமேஷன்.

ப்ளஸ் டூ பொதுத் தேர்வுகள் நெருங்கிவிட்டன. தேர்வுகளுக்குத் தயாராகும் ஒவ்வொரு மாணவரின் மனதிலும் அடுத்தென்ன என்கிற சிந்தனையே பிரதானமாக இருக்கும். ப்ளஸ் டூ முடித்ததும் எந்தப் பாடப் பிரிவை எடுத்துப் படித்தால் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்ற கேள்வி பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் நிச்சயம் இருக்கும். ஆளாளுக்கு அட்வைஸை வாரி வழங்கு வார்கள். எது சரி, எது தவறு என்று முடி வெடுக்க முடியாமல் பெற்றோரும் பிள்ளை களும் குழம்புவார்கள். இந்தத் தவிப்பு, குழப்பம், பதற்றம் எதுவும் தேவையே இல்லை.

முதலில் உங்கள் பிள்ளைகளின் ஆர்வத்தை அறிந்துகொள்ளுங்கள். அதற் கேற்ப அவர்களை வழிநடத்துங்கள். விருப்ப மில்லாத படிப்புகளை உங்கள் சுயநலத் துக்காக பிள்ளைகள் மேல் திணிக்காதீர்கள். பிள்ளைகளின் திறமைகள் மீது நம்பிக்கை வைத்து கூண்டுகளைத் திறந்துவிடுங்கள். அவர்கள் சிறகு விரித்துப் பறக்கட்டும்... விரும்பியதைப் படித்து வெற்றியை எட்டட்டும்...

ப்ளஸ் டூவுக்கு பிறகு எந்தெந்தத் துறை களில் ஒளிமயமான வாய்ப்புகள் இருக் கின்றன, அவற்றில் உங்கள் பிள்ளைகளுக்கு ஏற்ற துறை எது... அதற்கான தகுதிகள் என்னென்ன... அந்தப் படிப்புக்கான வேலை வாய்ப்பு எப்படியிருக்கிறது... அந்தந்தத் துறை நிபுணர்கள் வழிகாட்டுகிறார்கள்.

 மோதிலால்
மோதிலால்

1. பி.இ ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் (B.E. Automobile Engineering)

இன்ஜினீயரிங் என்பது 12-ம் வகுப்பு முடித்த பெரும்பாலான மாணவர் களுக்கு இன்றும் கனவுத்துறையாகவே இருக்கிறது. இன்ஜினீயரிங் என்றதும் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங், சிவில் இன்ஜினீயரிங், மெக்கானிகல் இன்ஜினீயரிங் போன்ற வழக்கமான சில பிரிவுகள்தான் ஞாபகத்துக்கு வரும். ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் போன்ற படிப்புகள் ஏனோ பலருக்கும் தெரிவதில்லை அல்லது பெரும்பான்மையினரால் விரும்பப் படுவதில்லை. ஆனால், அதில் வேலைவாய்ப்புகள் ஏராளம்.

ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் குறித்த தகவல்களைப் பகிர்கிறார் சென்னை கேசிஜி தொழில்நுட்பக் கல்லூரியின் ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் துறைத் தலைவர் முனைவர் மோதிலால்...

எந்தப் படிப்பு... யாருக்கு... எங்கே வேலை..? - ப்ளஸ் டூ மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைகள்!
triloks

என்ன கற்றுக்கொள்ளலாம்?

``ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் என்பது மெக்கானிகல் துறையின் ஓர் அங்கம். இந்தப் படிப்பில் வாகனங்களின் உற்பத்தி, வடிவமைப்பு, செயல்பாடுகள் ஆகியவை குறித்து தெரிந்துகொள்ளலாம். அதாவது வாகனங்கள் பற்றி அ முதல் ஃ வரை அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம்.

இது நான்கு ஆண்டுக்கால படிப்பு. ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் என்றதும் வாகனத் தயாரிப்பு பற்றிய படிப்பு என்று தவறாகப் புரிந்து கொண்டு, பெண்கள் பெரும்பாலும் இந்தப் படிப்பில் சேர்வதில்லை. ஆனால், இந்தப் படிப்பை இருபாலினத்தவரும் படிக்கலாம். இந்தத் துறையில் வேலைவாய்ப்பு எப்படி இருக்குமோ என்ற பயத்தின் காரணமாகவும் பெண்கள் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கத் தயங்குகிறார்கள். அந்த பயம் தேவையில்லை. ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் இத்துறையில் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

இந்தியாவில் ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் படிப்பு குறிப்பிட்ட சில கல்லூரிகளில் மட்டுமே இருக்கிறது. அடிப்படையைக் கற்றுக்கொண்டால் இத்துறையில் அடுத்தடுத்த வளர்ச்சியும் முன்னேற்றமும் பெறலாம்.

தகுதிகள்: 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 40% மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எந்தப் படிப்பு... யாருக்கு... எங்கே வேலை..? - ப்ளஸ் டூ மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைகள்!
gorodenkoff
எந்தப் படிப்பு... யாருக்கு... எங்கே வேலை..? - ப்ளஸ் டூ மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைகள்!
gorodenkoff

என்ன வேலை... எங்கு?

ஆராய்ச்சியாளர்கள், தர நிர்ணய இன்ஜினீயர் (Quality engineer), டிசைன் இன்ஜினீயர், டெஸ்ட்டிங் இன்ஜினீயர் (Testing Engineer), தயாரிப்பு இன்ஜினீயர் (Production Engineer), மோட்டார் விளையாட்டு இன்ஜினீயர் (Motor Sport Engineer), எலெக்ட்ரானிக் இன்ஜினீயர் (Electronic Engineer in Automobile) எனப் பல அடையாளங்களுடன் மிளிரலாம்.

வாகன உற்பத்தித்துறை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை, வாகன வடிவமைப்புத் துறை, வாகன விற்பனைத்துறை மற்றும் வாகன இன்ஜின் உற்பத்தித்துறைகளில் வேலை கிடைக்கும்.

அரசு வேலையைப் பொறுத்தவரை, ஆட்டோ மொபைல் இன்ஜினீயரிங் படித்தவர்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், ரயில்வே துறை, போக்குவரத்துத்துறை போன்ற துறைகளில் வேலை கிடைக்கும்.

இத்துறையை முடித்தவர்கள் சுயதொழில் முனைவோராகவும் ஜெயிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.''

 ரவிச்சந்திரன்
ரவிச்சந்திரன்

2. பி.எஸ்ஸி ஏர் கிராஃப்ட் மெயின்டனென்ஸ் இன்ஜினீயரிங் (B.Sc Aircraft Maintenance Engineering)

யாருக்குதான் பறக்கப் பிடிக்காது... சிறு வயதில், உயரப் பறந்த விமானத்தை ரசித்த நாம், வளர்ந்த பிறகும் அதை அண்ணாந்து பார்க்கவும், அதில் பறக்க ஆசைப்படவும் செய்கிறோம்தானே... எப்போதோ ஒருமுறை விமானத்தில் பறப்பதைவிட, அந்த விமானத்தில் நீங்களே இன்ஜினீயராக வேலை பார்க்கலாம் என்றால் எப்படி இருக்கும்? ஏர் கிராஃப்ட் மெயின்டனென்ஸ் இன்ஜினீயரிங் படித்தால் அந்த ஆசை நிறைவேறும்.

இந்தப் படிப்பு குறித்து விளக்குகிறார் ஹிந்துஸ்தான் கல்லூரி (HIET – Aviation College) குழுமத்தின் ஏர் கிராஃப்ட் மெயின்டனென்ஸ் இன்ஜினீயரிங் துறையின் தர மேலாளர் ரவிச்சந்திரன்...

எந்தப் படிப்பு... யாருக்கு... எங்கே வேலை..? - ப்ளஸ் டூ மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைகள்!
baranozdemir

என்ன கற்றுக்கொள்ளலாம்?

``ஏர் கிராஃப்ட் மெயின்டனென்ஸ் இன்ஜினீயரிங் படிப்பில் விமானத்தின் பராமரிப்பு, விமான மேம்பாடு மற்றும் விமானத்தின் தரத்தை உத்தரவாதம் செய்தல் ஆகியவை குறித்துப் படிக்கலாம். இது உரிமம் பெற்ற ஒரு படிப்பு (Licensed course) மற்றும் சிவில் ஏவியேஷன் பொது இயக்குநரகத்தால் (DGCA-Directorate General of Civil Aviation) அங்கீகரிக்கப் பட்ட படிப்பும்கூட. மேலும், இந்தப் படிப்பு சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பால் (International Civil Aviation Organization) அங்கீகரிக்கப்பட்டதும்கூட. மூன்று ஆண்டுக்கால படிப்பில் ஆண், பெண் என இருபாலினத்தவரும் படிக்கலாம்.

தகுதிகள்: 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை கட்டாயமாகப் பயின்றிருக்க வேண்டும்.

ஒருவேளை டிப்ளோமா மாணவர்களாக இருந்தால் மெக்கானிகல், எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ஏரோநாட்டிக்கல் துறைகளில் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.

எந்தப் படிப்பு... யாருக்கு... எங்கே வேலை..? - ப்ளஸ் டூ மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைகள்!
shironosov

என்ன வேலை... எங்கு?

டெக்னீஷியன், ஏர் கிராஃப்ட் மெயின்டனென்ஸ் இன்ஜினீயர், ஏர் கிராஃப்ட் தர நிர்ணய இன்ஜினீயர் என படிப்படியாக உயரலாம்.

தேசிய மற்றும் சர்வதேச விமான நிறுவனங்கள், விமான பராமரிப்பு, பழுதுபார்க்கும் மற்றும் மாற்றியமைக்கும் நிறுவனங்கள் (Maintenance, Repair and Overhaul companies), விமான செயல்பாட்டு அமைப்புகள் (Operation Organizations), சிவில் பாதுகாப்பு படை (Civil Defence Forces) போன்ற இடங்களில் பணிபுரியலாம்.''

 கரிகாலன்
கரிகாலன்

3. பி.எஸ்ஸி. ஜியாலஜி (B.Sc. Geology)

நம்மைத் தாங்கும், நாம் வாழும் பூமியை பற்றி தெரிந்துகொள்ள உங்களுக்கு ஆர்வமா... அப்படியானால், நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய படிப்பு பி.எஸ்ஸி ஜியாலஜி. ‘என்னது பூமி பற்றி படிக்க ஒரு பிரிவா' என வியக்காதீர்கள்.

ஜியாலஜி படிப்பு குறித்து விளக்குகிறார் சென்னை மாநிலக் கல்லூரியின் ஜியாலஜி துறைத் தலைவர் முனைவர் கரிகாலன்...

``ஜியாலஜி என்பது பூமி மற்றும் அதன் அறிவியல் சார்ந்து கற்றுத்தரும் படிப்பு. இது மூன்று ஆண்டுக்கால படிப்பு. இதில் பூமியின் மேற்பரப்பு, பூமியின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள், பூமியின் வரலாறு, பூமியின் இயற்பியல் கூறுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

எந்தப் படிப்பு... யாருக்கு... எங்கே வேலை..? - ப்ளஸ் டூ மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைகள்!
Madrolly

ஜியாலஜியை பொறுத்தவரை இளங்கலை பட்டத்துடன் முதுகலை பட்டமும் படிப்பது மிகவும் சிறந்தது. 70% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் முடித்திருந்தால் இந்தத் துறையில் சிறந்த பணிகளில் அமரலாம். கடந்த 2002-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் ஜியாலஜி படிப்பில் சேரும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தகுதிகள்: 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களைக் கண்டிப்பாகப் படித்திருக்க வேண்டும். இந்தப் படிப்பிற்கு மெரிட் மற்றும் நுழைவுத்தேர்வு என இருவகையில் விண்ணப் பிக்கலாம்.

மெரிட் மூலம் விண்ணப்பிக்க 12-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். நுழைவுத்தேர்வு மூலம் இந்தப் படிப்பில் சேர, பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வு, CUET தேர்வு ஆகியவற்றை எழுதலாம்.

எந்தப் படிப்பு... யாருக்கு... எங்கே வேலை..? - ப்ளஸ் டூ மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைகள்!
wanderluster

என்ன வேலை... எங்கு?

புவியியலாளர் (Geologist), பெட்ரோலிய புவியியலாளர் (Petroleum Geologist), நீரியல் வல்லுநர்கள் (Hydrologists), கடல் புவியியலாளர் (Marine Geologist), பழங்கால புதைபடிவ ஆராய்ச்சியாளர் (Palaeontologist), பேராசிரியர், ஆராய்ச்சியாளர், நில அதிர்வு நிபுணர் (Seismologist), வானிலை ஆய்வாளர்கள் (Meteorologist) போன்ற அடையாளங்கள் உங்களுக்குக் காத்திருக் கின்றன.

மாநில அரசின் பொதுப்பணித்துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் ஆகியவற்றிலும், மத்திய அரசில் இந்திய புவியியல் ஆய்வு மையம், இந்திய சுரங்கம் மற்றும் அளவீட்டுத் துறை, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம், மத்திய பொதுப்பணித்துறை, மத்திய நிலத்தடி நீர் வாரியம், இந்திய அணு ஆராய்ச்சி மற்றும் கனிம நிறுவனம், இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஆகியவற்றிலும் வேலைவாய்ப்புகள் அமையலாம். இதுதவிர தனியார் நிறுவனங்களிலும், குவாரிகளிலும் வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.''

 அ.விமலா
அ.விமலா

4. B.Voc மல்டி மீடியா அண்ட் அனிமேஷன் (B.Voc Multimedia and Animation)

‘பாகுபலி’ படம் பார்த்து அதில் பயன்படுத்தப்பட்டிருந்த தொழில்நுட்பத்தைப் பெரிதும் வியந்தீர்கள்தானே... அந்த பிரமாண்டத்தை நீங்களும் உருவாக்கலாம்... அதற்கு உங்களைத் தயார்படுத்தும் படிப்புதான் B.Voc மல்டி மீடியா அண்ட் அனிமேஷன்.

இந்தப் படிப்பு குறித்து விளக்குகிறார் கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கம் மற்றும் வேலைவழிகாட்டித் துறைத் தலைவரும் பேராசிரியருமான முனைவர் அ.விமலா...

எந்தப் படிப்பு... யாருக்கு... எங்கே வேலை..? - ப்ளஸ் டூ மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைகள்!

என்ன கற்றுக்கொள்ளலாம்?

``B.Voc-ன் விரிவாக்கமே Bachelor of Vocation என்பது தான். மத்திய அரசு திறன் மேம்பாட்டுத் துறையின்கீழ் இந்தப் படிப்பு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. மல்டிமீடியா மற்றும் அனிமேஷன் படிப்பில் வீடியோ, படங்கள், எழுத்து உருக்கள் ஆகியவற்றை எப்படி உருவாக்குவது... கிராபிக்ஸ் படங்களைத் தயாரிப்பது எப்படி... படங்களுக்கு லைட்னிங் (lightening) செய்வது எப்படி... டெக்ஸ்ச்சரிங் (Texturing) செய்வது எப்படி போன்றவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.

இதுவும் மூன்று ஆண்டுக்கால படிப்புதான். இந்த மாணவர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டுத்துறை முதலாம் ஆண்டு இரண்டு தேர்வுகள், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுகளில் தலா ஒவ்வொரு தேர்வு வைத்து சான்றிதழ்கள் வழங்குகிறது. அதனால் படிப்பின் முடிவில், இந்த மாணவர்களின் கையில் டிகிரியுடன் சேர்த்து, அங்கீகரிக்கப்பட்ட நான்கு சான்றிதழ்களும் (Job-role certificate - Graphic Designer, Modeller, Rigging Artist, Animator) இருக்கும்.

தகுதிகள்: 12-ம் வகுப்பில் குறிப்பிட்ட குரூப்பை தான் படித்திருக்க வேண்டும் என்பதில்லை. எந்த குரூப் எடுத்துப் படித்திருந்தாலும், இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். ஆனால், 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்தப் படிப்புக்கு மாணவர்களை தகுதி அடிப்படையில்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் துறையில் முதுகலை படிக்க விரும்புபவர்கள், இளங்கலையில் எந்தத் துறையை வேண்டுமானாலும் தேர்வுசெய்து படித்திருக்கலாம். இந்த டிகிரியை பொறுத்தவரையில், இன்டர்ன்ஷிப்பின்போதே மாணவர்கள் மாதம் ரூ.15,000 வரை சம்பாதிக்கிறார்கள்.

எந்தப் படிப்பு... யாருக்கு... எங்கே வேலை..? - ப்ளஸ் டூ மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைகள்!

என்ன வேலை... எங்கு?

வலைதள டிசைனர் (Webpage designer), அனிமேஷன் மாடலர் (Animation Modeller), எடிட்டர், டிஜிட்டல் மார்க்கெட்டிங், கிராபிக் டிசைனர் என உங்களுக்கு விருப்பமான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.

சினிமாத்துறை, பொழுதுபோக்குத்துறை, விளம்பரத்துறை, கிராபிக் டிசைனிங் துறை, ஊடகத்துறைகளில் வேலைவாய்ப்புகள் நிச்சயம். படிப்பை முடித்த பலரும் தொழில்முனைவோர்களாகவும் கொடிகட்டிப் பறக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.''

எந்தப் படிப்பு... யாருக்கு... எங்கே வேலை..? - ப்ளஸ் டூ மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைகள்!

5. மாஸ்டர் ஆஃப் லா (Master of Laws)

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் அடிப்படை சட்டங்கள் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அதைத் தாண்டி மனித உரிமைகள், சமூக நலன் சார்ந்த, நீதித்துறையில் ஆர்வமுள்ளோர், சட்டத்துறையில் கால் பதிக்கலாம். சட்டப்படிப்பு என்றால் பி.எல் என்றிருந்த நிலை மாறி, இன்று அதில் ஏகப்பட்ட பிரிவுகள் வந்துவிட்டன. மாஸ்டர் ஆஃப் லாஸ் - LLM (Master of Laws) என்ற சட்டப்படிப்புக்கு சமீபகாலமாக இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. LLM குறித்து விளக்குகிறார் சென்னை பல்கலைக்கழகத்தின் லீகல் ஸ்டடீஸ் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் வேணுகோபால்...

எந்தப் படிப்பு... யாருக்கு... எங்கே வேலை..? - ப்ளஸ் டூ மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைகள்!

என்ன கற்றுக்கொள்ளலாம்?

``LLM என்பது முதுகலை சட்டப்படிப்பு. இந்தப் படிப்பில் மனித உரிமை சட்டம் தொடங்கி வணிக சட்டம் வரை அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம். இந்தத் துறையில் சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் (International Law and Organisation) மற்றும் அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் சட்டம் ஒழுங்கு (Constitutional Law and Legal Order) என இருவகை முதுகலை படிப்புகள் உள்ளன. இரண்டு ஆண்டுக்கால படிப்பான இதை ஆண், பெண் என இருபாலினத்தவரும் படிக்கலாம்.

தகுதிகள்: இந்தத் துறையில் முதுகலை படிக்க விருப்பமுள்ளவர்கள் கண்டிப்பாக இளங்கலை (மூன்றாண்டு / ஐந்தாண்டு) சட்டப்படிப்பை படித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முதுகலை படிப்புக்கு மாணவர்கள் மெரிட் மூலமும், நுழைவுத்தேர்வு மூலமும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எந்தப் படிப்பு... யாருக்கு... எங்கே வேலை..? - ப்ளஸ் டூ மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைகள்!

என்ன வேலை... எங்கு?

சிவில் நீதிபதி, அமர்வு நீதிபதி, பேராசிரியர், வழக் குரைஞர்கள், சட்ட அதிகாரிகள் என சட்டம் படித்தவர் களுக்கான வாய்ப்பு வாசல்கள் ஏராளம்...

சட்ட நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள், சர்வதேச அமைப்புகள் போன்றவற்றிலும், மேலும் அரசுத்துறையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களிலும் பணி புரியலாம்.''

 பிரகதி
பிரகதி

6. பி.ஏ இதழியல் (B.A.Journalism)

உலகம் தொடங்கி உள்ளூர் வரை நடக்கும் நிகழ்வுகள் மற்றும் செய்திகளை நமது உள்ளங்கைக்குள் கொண்டு வருவதில் ஊடகத்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது, ஒவ்வொரு நிகழ்வின் பின்னணியும் என்ன என சம்பவங்கள் தொடங்கி, மனிதர்கள் வரை தீராத தேடல் உள்ளவர்களுக்கு ஏற்ற துறை இதழியல்.

இதழியல் படிப்பு குறித்து விளக்குகிறார் சென்னை, டி.ஜி வைணவ கல்லூரியின் இதழியல் துறைத் தலைவர் முனைவர் பிரகதி...

எந்தப் படிப்பு... யாருக்கு... எங்கே வேலை..? - ப்ளஸ் டூ மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைகள்!

என்ன கற்றுக்கொள்ளலாம்?

``இதழியல் படிப்பில் செய்தித்துறை மற்றும் ஊடகத்துறை குறித்து முழுமையாகப் படிக்கலாம். செய்தி சேகரிப்பது எப்படி... சேகரித்த செய்தியை எப்படி எழுத வேண்டும்... Content Writing என்றால் என்ன... அதை எப்படி உருவாக்க வேண்டும்... ஒரு வீடியோ அல்லது பாட் காஸ்ட்டை (Podcast) எப்படி உருவாக்க வேண்டும்... அதற்கு எப்படியெல்லாம் தயாராக வேண்டும்... டாக்கு மென்டரி தயாரிப்பது எப்படி... செய்தி வாசிப்பது எப்படி... போன்றவை உள்பட ஊடகத்துறையின் அனைத்து விஷயங்களையும் இந்தப் படிப்பில் தெரிந்துகொள்ளலாம்.

அரசியல், சுற்றுச்சூழல், சமூகம், பெண்கள்நலம், ஆரோக்கியம், பொழுதுபோக்கு என இதழியல் துறையைத் தேர்ந்தெடுப்போருக்கு ஏராளமான ஆப்ஷன்கள் உள்ளன. மூன்று ஆண்டுக்கால படிப்பை ஆண், பெண் என இருபாலினத்தாரும் தேர்வு செய்யலாம். இந்தப் படிப்பை அஞ்சல் வழியிலும் படிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்தப் படிப்பு... யாருக்கு... எங்கே வேலை..? - ப்ளஸ் டூ மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைகள்!

தகுதிகள்: பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முதுகலை இதழியல் படிக்க விரும்புவோர், இளங்கலையில் இதழியல்தான் படித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. இளங்கலையில் எந்தத் துறையைத் தேர்வு செய்து படித்திருந்தாலும், முதுகலையில் இதழியல் படிக்கலாம். ஆனால், இளங்கலையில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன வேலை... எங்கு?

நிருபர், உதவி ஆசிரியர், பிழைத்திருத்துவோர், கன்டென்ட் ரைட்டர், வீடியோ ஜாக்கி, செய்தி வாசிப்பாளர், கார்ப்பரேட் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் எம்.சி (Master of Ceremonies), புகைப்படப் பத்திரிகையாளர் (Photo journalist), ஆசிரியர் (News Editor), கட்டுரையாளர் (Columnist), மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி ஆய்வாளர் (News Analyst), ரேடியோ ஜாக்கி, செய்தித் தொகுப்பாளர் என ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

செய்தித்தாள் அலுவலகங்கள், டிவி சேனல்கள், புகைப்பட நிறுவனங்கள், வானொலி நிலையங்கள், இதழ்கள், பத்திரிகை தகவல் பணியகம் (Press Information Bureau), செய்தி முகவர் (News Agencies), பத்திரிகைகள் மற்றும் வலைப்பதிவுகள், மக்கள் தொடர்பு அலுவலகங்கள், புத்தகம் மற்றும் நாவல், விளம்பர நிறுவனங்கள் என பணியிடக் களமும் மிகப் பெரிது.''

 ரவிச்சந்திரன்
ரவிச்சந்திரன்

7. பேச்சிலர் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் (Bachelor of Fine Arts)

ஓவியம், புகைப்படம், சிற்பம் என கலைகளின்மீது ஆர்வம் உள்ளவரா நீங்கள்... அப்படியானால், உங்களுக்கானதுதான் ஃபைன் ஆர்ட்ஸ் படிப்பு.

ஃபைன் ஆர்ட்ஸ் படிப்பு குறித்து விளக்குகிறார் சென்னை கவின் கலைக் கல்லூரியின் பேராசிரியர் ரவிச்சந்திரன்...

எந்தப் படிப்பு... யாருக்கு... எங்கே வேலை..? - ப்ளஸ் டூ மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைகள்!

என்ன கற்றுக்கொள்ளலாம்?

``ஃபைன் ஆர்ட்ஸ் கல்வி என்பது வண்ணக்கலை, காட்சி வழித் தகவல் தொடர்பு வடிவமைப்புத்துறை, சிற்பக்கலை, சுடுமண் துறை, ஆடை வடிவமைப்புத்துறை, பிரின்ட் மேக்கிங் ஆகியவை இணைந்த படிப்பு. இது ஒவ்வொன்றும் தனித்தனி இளங்கலை படிப்பு. இவற்றில் உங்களுக்கு விருப்பமான துறையைத் தேர்வு செய்து படிக்கலாம்.

இளங்கலை எனில் நான்காண்டு படிப்பு... முதுகலை எனில் இரண்டாண்டு படிப்பு. இதில் ஓவியம் தொடங்கி சிற்பங்கள் உருவாக்குவது வரை பெரும் பாலும் செயல்முறை வகுப்புகளே இருக்கும்.

தகுதிகள்: 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையாக டிப்ளோமா அல்லது டிகிரி படித்திருக்க வேண்டும். முதுகலை ஃபைன் ஆர்ட்ஸ் எனில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எந்தப் படிப்பு... யாருக்கு... எங்கே வேலை..? - ப்ளஸ் டூ மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைகள்!

என்ன வேலை... எங்கு?

மீடியா துறையில் டெக்னிகல் சார்ந்து இயங்கும் பணிகள், விளம்பர ஏஜென்சி துறை, சினிமா ஆர்ட் டைரக்‌ஷன் துறை, 2டி, 3டி துறைகள், வெப் மற்றும் மல்டிமீடியா துறைகள்... போட்டோகிராபி, ஒளிப்பதிவு , சிற்பக்கலை, ஆடை வடிவமைப்பு, அச்சு ஊடகத்துறை, கேம் டிசைனிங், கார்ட்டூனிஸ்ட், லே அவுட் டிசைனிங் என பல பிரிவுகளில் புகழ்பெறலாம். மாறி வரும் டிஜிட்டல் சூழலில் பல நிறுவனங்களில் ஃப்ரீலான்ஸ் செய்தும் சம்பாதிக்கலாம்.

கல்லூரிகளில் பேராசிரியர், பள்ளிகளில் ஓவிய ஆசிரியர்கள் என வேலை வாய்ப்புக்கான வெளி இதில் பெரிது.''

8. பேச்சிலர் ஆஃப் சோஷியல் வொர்க் (Bachelor of Social Work)

சுயநலமாக யோசிக்காமல் எப்போதும் பொதுநலம் சார்ந்து யோசிப்பவரா நீங்கள்... சமூக அமைப்பின் மேல் அக்கறை கொண்ட, சமூகம் சார்ந்து இயங்க நினைப்பவரா... உங்களுக்கானதுதான் சமூகப் பணியியல் படிப்பு.

சமூகப் பணியியல் குறித்த தகவல்களை வழங்குகிறார் சென்னை அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் சமூகப் பணியியல் துறையின் தலைவர் முனைவர் நேத்ராவதி...

எந்தப் படிப்பு... யாருக்கு... எங்கே வேலை..? - ப்ளஸ் டூ மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைகள்!

என்ன கற்றுக்கொள்ளலாம்?

``சமூகப் பணியியல் என்றதும் ஆதரவற்றோர்களை ஆதரிப்பது, உணவு இல்லாதவர்களுக்கு உணவு வழங்குவது என்றுதான் பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், இது சமூகக் கட்டமைப்பு சார்ந்த படிப்பு. இளங்கலையில் பொதுவான படிப்பாக இருந்தாலும் முதுகலை படிப்பில் மனிதவளம், மருத்துவம் மற்றும் உளவியல், சமூகக் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி என்று மூன்று தனித்துவமான பிரிவுகள் இருக்கின்றன. நீங்கள் தேர்வு செய்யும் துறைக்கேற்ப உங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தகுதிகள்: இளங்கலை சமூகப் பணியியலில் சேர 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சியும், முதுகலை எனில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

எந்தப் படிப்பு... யாருக்கு... எங்கே வேலை..? - ப்ளஸ் டூ மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைகள்!

என்ன வேலை... எங்கு?

இளங்கலை படித்தவர்கள் எனில் தனியார் அறக்கட்டளைகளில் புராஜெக்ட் ஒருங்கிணைப்பாளர்கள் அல்லது புராஜெக்ட் இணை ஒருங்கிணைப்பாளர் பணியில் சேரலாம்.

முதுகலை படித்தவர்களுக்கு அவர்கள் தேர்வுசெய்து படித்த தனித்துவ பிரிவின் அடிப்படையில் வேலைவாய்ப்புகள் இருக்கும். உதாரணமாக, மனித வளத்துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் எனில் நிறுவனங்களில் இருக்கும் மனிதவளத்துறையில் (ஹெச். ஆர்) வேலைவாய்ப்புகள் இருக்கும்.

மருத்துவம் மற்றும் உளவியல் பிரிவு படித்தவர் எனில் மருத்துவமனைகளில் ஆலோசனைகள் வழங்குவது, பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுவது போன்ற துறைகளில் வேலை பார்க்கலாம்

சமூகக் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி குறித்துப் படித்தவர்களுக்கு அறக்கட்டளைகளில் புராஜெக்ட் ஒருங்கிணைப்பாளர்கள் அல்லது புராஜெக்ட் மேலாளராக இயங்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.

இவை தவிர்த்து அரசின் சமூக நலத்துறைகளில் இயங்கும் வாய்ப்பு மற்றும் கல்லூரிப் பேராசிரியர் போன்ற வேலைவாய்ப்புகளும் இருக்கின்றன.''

 இ கெஜலெட்சுமி
இ கெஜலெட்சுமி

9. எம்.ஏ நாடகவியல் (MA Dramatic arts)

கலை இயக்கம், நடிப்பு, நாடக வடிவமைத்தல் என கலைத்துறையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? அப்படியானால் உங்களை மெருகேற்றிக் கொள்ள நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய படிப்பு நாடகத்துறை. இரண்டாண்டு முதுகலை பட்டப் படிப்பாக சில பல்கலைக்கழகங்களிலும், மத்திய அரசு நிறுவனங்களில் மூன்றாண்டு முதுகலை பட்டப்படிப்பாகவும் இது நடத்தப்பட்டு வருகிறது.

நாடகத்துறை குறித்தும் அடுத்து வரும் அருங்காட்சியியல் குறித்தும் விளக்குகிறார் புதுடெல்லி தேசிய நாடகப் பள்ளியின் நூலகர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர் இ.கெஜலெட்சுமி...

எந்தப் படிப்பு... யாருக்கு... எங்கே வேலை..? - ப்ளஸ் டூ மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைகள்!

என்ன கற்றுக்கொள்ளலாம்?

``எம்.ஏ நாடகவியல் முதுகலை பட்டப்படிப்பில் கலை இயக்கம், நடிப்பு, நாடகங்களை வடிவமைத்தல் மற்றும் நாடக ஒளி வடிவமைப்பு போன்றவை கற்றுத்தரப்படும். இந்திய பல்கலைக்கழகங்கள் பலவற்றில் இரண்டாண்டு முதுகலை பட்டப்படிப்பாக இது பயிற்றுவிக்கப்படுகிறது.

கலாசார அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் இந்தியாவின் ஒரே மத்திய அரசு நிறுவனமான இந்திய நாடகப் பள்ளியில் மூன்றாண்டு முதுகலை டிப்ளோமா பட்டப்படிப்பாக நடத்தப்படுகிறது. இந்தத் துறையில் நடிப்பு தொடங்கி கலை, நாடக இயக்கம், நாடக வடிவமைப்பு மற்றும் நாடக ஒளி வடிவமைப்பு போன்றவை கற்றுத்தரப்படும்.

தகுதிகள்: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

நாடகம் அல்லது நடிப்பு, நாடக உருவாக்கத்தின் பணிகளில் பங்கேற்பு அல்லது நாடகத்துடன் தொடர்புடைய அனுபவம் கட்டாயம் இருக்க வேண்டும். அதற்கான ஆவணங்கள் (Play poster, Invitation of play, Play brochure) இணைக்கப்பட வேண்டும். அத்துடன் நாடகத்துறை நிபுணர்களிடமிருந்து பரிந்துரை கடிதமும் இணைக்கப்பட வேண்டும்.

தனியார் பல்கலைக்கழகங்களில் இந்தத் துறை செயல்பட்டு வந்தாலும், அரசின் இந்திய நாடகப் பள்ளியில் ஆண்டுக்கு அகில இந்திய அளவில் 26 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இதில் செயல்முறை நுழைவுத் தேர்வுகள் இருக்கும். நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அரசின் இந்திய நாடகப் பள்ளியில் சேர இயலும்.

எந்தப் படிப்பு... யாருக்கு... எங்கே வேலை..? - ப்ளஸ் டூ மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைகள்!

என்ன வேலை... எங்கு?

சினிமா துறையில் ஆர்ட் டைரக்டர், லைட் டிசைனிங் எக்பெர்ட், ஸ்டேஜ் மேனெஜ்மென்ட் நிபுணர், ஓ.டி.டி தளங்கள் தயாரிப்பு பணி சார்ந்த வேலைகள், தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் என விருப்பமான பிரிவில் கால் பதிக்கலாம்.

அரசுத்துறையில் கல்லூரிகளில் பேராசிரியர், பள்ளிகளில் நாடக ஆசிரியர் மற்றும் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன.''

10. எம்.ஏ அருங்காட்சியியல் (MA Museology)

ஆசிய கலைகள், மேற்கத்திய கலைகள் மற்றும் இந்திய கலைத்துறையில் ஆர்வம் உள்ளவர் எனில் உங்களை மெருகேற்றிக்கொள்ள அருங்காட்சியியல் சரியான சாய்ஸ். இரண்டாண்டு முதுகலை பட்டப்படிப்பு சில பல்கலைக் கழகங்களிலும் மத்திய அரசு நிறுவனமான தேசிய அருங்காட்சியக நிறுவனத் தாலும் நடத்தப்பட்டு வருகிறது.

எந்தப் படிப்பு... யாருக்கு... எங்கே வேலை..? - ப்ளஸ் டூ மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைகள்!

என்ன கற்றுக்கொள்ளலாம்?

அருங்காட்சியியல் படிப்பு என்பது அருங்காட்சியகம் சார்ந்த நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கான ஒரு துறை. இதற்கான எம்.ஏ மியூசியாலஜி (MA Museology) முதுகலை பட்டப்படிப்பில் அருங்காட்சியக மேலாண்மை, இந்திய கலைகள், மேற்கத்திய கலைகள் மற்றும் ஆசிய கலைகள் போன்றவை கற்றுத்தரப்படும்.

பல இந்திய பல்கலைக்கழகங்களில் இரண்டாண்டு முதுகலை பட்டப்படிப்பான (MA Museology) பயிற்றுவிக்கப்படுகிறது. அரசின் கலாசார அமைச்கத்துக்கு கீழ் இயங்கிவரும் இந்தியாவின் ஒரே மத்திய அரசு நிறுவனமான இந்திய அருங்காட்சியக நிறுவனத்தில் (National Museum Institute) இரண்டாண்டு முதுகலை பட்டப்படிப்பாகவும் நடத்தப்படுகிறது.

எந்தப் படிப்பு... யாருக்கு... எங்கே வேலை..? - ப்ளஸ் டூ மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைகள்!

தகுதிகள்: சமூக அறிவியல் மற்றும் மனிதநேயம், கலை, அறிவியல் போன்ற துறைகளில் ஒன்றில் இளங்கலை பட்டம் அவசியம்.

அரசின் இந்திய பல்கலைக்கழகங்களில் இந்தத் துறை செயல்பட்டு வந்தாலும், அரசின் இந்திய அருங்காட்சியக நிறுவனத்தில் ஆண்டுக்கு அகில இந்திய அளவில் குறிப்பிட்ட மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இதில் செயல்முறை நுழைவுத்தேர்வுகள் இருக்கும். நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர். அதன் பின்னரே அரசின் இந்திய அருங்காட்சியக நிறுவனத்தில் சேர இயலும்.

என்ன வேலை... எங்கு?

அருங்காட்சியகக் காப்பாளர், கண்காட்சி வடிவமைப்பாளர், அருங்காட்சியக மேலாளர் எனப் பல பிரிவுகளில் மத்திய மற்றும் மாநில அரசு அளவில் வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளன.

கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் மத்திய அரசின் பெருவாரியான அமைச்ச கங்களின் பல்வேறு நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன.

 உமா மகேஷ்வரி
உமா மகேஷ்வரி

11. எம்.ஏ பொது நிர்வாகம் (M.A Public Administration)

நாட்டின் குடிமக்களாக அரசின் நிர்வாகம், அதிகாரம் ஆகியவற்றின் மீது நம் அனைவருக்கும் தனி மதிப்பும், மரியாதையும் உள்ளது. அந்த நிர்வாகத்தில் நீங்களும் இடம்பெற்றால்... அதற்காக உங்களைத் தகுதிப்படுத்தும் படிப்புதான் எம்.ஏ பொது நிர்வாகம்.

பொது நிர்வாகத்துறை படிப்பு குறித்து விளக்குகிறார் சென்னை பல்கலைக் கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறைத் தலைவர் பேராசிரியர் உமா மகேஷ்வரி...

எந்தப் படிப்பு... யாருக்கு... எங்கே வேலை..? - ப்ளஸ் டூ மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைகள்!

என்ன கற்றுக்கொள்ளலாம்?

``பொது நிர்வாகப் படிப்பில், மாணவர்கள் அரசு நிறுவனங்களின் செயல் பாடுகள் மற்றும் நிர்வாக இயந்திரங்கள் பற்றி படிப்பார்கள். குடிமக்களின் தேவைகளை உணர்ந்து அரசு நிர்வாகம் எப்படிச் செயல்படுகிறது என்பதையும் தெரிந்துகொள்வார்கள். மேலும், சமுதாய மற்றும் அரசியல் அமைப்புகள் குறித்து தெளிவாகவும், விரிவாகவும் தெரிந்து கொள்வார்கள்.

இரண்டு ஆண்டுக்கால படிப்பான இது, மாணவர்களுக்கு அரசு போட்டித் தேர்வுகளை எழுதுவதற்கும் பெரிதும் உதவியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தகுதிகள்: 12-ம் வகுப்பில் எந்த குரூப்பை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துப் படித்திருக்கலாம். மேலும், இளங்கலையில் எந்தத் துறை யில் வேண்டுமானாலும் படித்திருக்கலாம். இந்தப் படிப்பில் சேர மாண வர்கள் மெரிட் அல்லது நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எந்தப் படிப்பு... யாருக்கு... எங்கே வேலை..? - ப்ளஸ் டூ மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைகள்!

என்ன வேலை... எங்கு?

பொதுக்கொள்கை திறனாய்வாளர், வரி ஆய்வாளர், நிர்வாக அதிகாரிகள், ஆலோசகர், மாநகராட்சி அதிகாரிகள், செயலாளர்கள், தொகுதி வளர்ச்சி அலுவலர், சிவில் அதிகாரிகள், அரசு ஆலோசகர்கள் எனப் பல பணிகளில் திறமையை நிரூபிக்கலாம்.

வங்கிகள், சர்வதேச அமைப்புகள், அரசுத்துறைகள், அரசு சாரா அமைப்புகள் எனப் பணியிடங்களின் பட்டியலும் பெரிது.''

சிறகுகள் விரியட்டும்... எதிர்காலம் சிறக்கட்டும்...

ஆல் தி பெஸ்ட்!